Sunday, November 22, 2015

தமிழர்களின் நல்லெண்ணத்தை இழக்கிறது இலங்கை அரசு: விக்னேஸ்வரன் எச்சரிக்கை!

இலங்கை சிறைக்குள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர் உயிரிழந்த சம்பவம், அந்நாட்டு அரசின் மீது தமிழர்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் குலைக்க வழிவகுக்கும் என்றும், இலங்கை அரசு தமிழர்களின் நல்லெண்ணத்தை இழக்கிறது என்றும் விக்னேஸ்வரன் எச்சரித்துள்ளார்.

இலங்கையில் விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்ட பிறகு 2009-ம் ஆண்டு முதல் ஏராளமான தமிழர்கள் உரிய விசாரணையின்றி சிறைகளில் அடைக்கப்பட்டனர். விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்து, பின்னர் சரண் அடைந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. நூற்றுக்கணக்கான பேர் சிறையில் அடைபட்டிருந்தாலும், அவர்களில் பெரும்பாலானோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து, தங்களை விடுதலை செய்யுமாறு சம்பந்தப்பட்டவர்கள் சிறைக்குள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்னைக்கு நவம்பர் 7-ம் தேதிக்குள் தீர்வு காண்பதாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா வாக்குறுதி அளித்திருந்தார். இதையடுத்து தமிழ் கைதிகள், தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர். ஆனால், நவம்பர் 7-ம் தேதி வரை அவர்கள் விடுவிக்கப்படவில்லை என்பதால் கடந்த சில நாட்களாக தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், ஒருவர் உடல்நலம் குன்றி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், அதிபர் மைத்ரிபால சிறீசேனாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், ''தமிழ் அரசியல் கைதிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை. இதன் காரணமாக அவர்கள், தங்களது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தப்படுத்துவார்களே தவிர, கைவிடமாட்டார்கள். சிறைக்குள் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். இத்தகைய சம்பவங்கள் இலங்கை அரசின் மீது தமிழர்கள் வைத்துள்ள நம்பிக்கையை குலைக்க வழிவகுக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

No comments: