Thursday, September 17, 2015

பன்னாட்டு விசாரணை மட்டுமே நீதி வழங்கும் - ச.ராமதாஸ்

பன்னாட்டு விசாரணை மட்டுமே நீதி வழங்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும்

மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா. மனித உரிமை

ஆணையம் சார்பில் பன்னாட்டுக்குழு நடத்திய

விசாரணையின் அறிக்கையை ஆணையத்தின்

தலைவர் அல்- உசைன் தாக்கல் செய்திருக்கிறார்.

இலங்கையில் திட்டமிட்டே மனித உரிமை  மீறல்கள்

அரங்கேற்றப்பட்டன என்பதை விசாரணை அறிக்கை

தெள்ளத் தெளிவாக நிரூபித்திருக்கிறது.

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள்

குறித்து மட்டும் தான் விசாரணை நடத்தப்பட்டது

என்ற போதிலும், இதில் தெரியவந்துள்ள தகவல்களை

அடிப்படையாக வைத்தே இலங்கையில் இனப்

படுகொலை நடந்தது என்பதை நிரூபிக்க முடியும்.

இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் குண்டு

பாய்ந்த காயங்களுடன் ஆயிரக்கணக்கான தமிழர்கள்

சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைகள் மீது

சிங்களப்படையினர் குறி வைத்து ஏவுகணை மற்றும்

விமானத் தாக்குதல் நடத்தியது, விசாரணை  மற்றும்

சோதனை என்ற பெயரிலும் தமிழ் பெண்களை

பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கியது, போரின்

முடிவில் வெள்ளைக் கொடியேந்தி சரணடைய வந்த

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த

தலைவர்களான நடேசன், புலித்தேவன் ஆகியோர்

சிங்களப்படையினரால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்

பட்டது என அனைத்து போர்க்குற்றச்சாற்றுகளும்

ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கின்றன

என்று விசாரணை அறிக்கையில்

தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் போர்க்குற்றம் நடந்தது உண்மை,

அதற்குக் காரணமானோர் தண்டிக்கப்பட வேண்டும்,

இக்குற்றச்சாற்றுகள் குறித்து இலங்கை நீதிமன்றத்தில்

விசாரித்தால் நீதி கிடைக்காது என்று கூறியுள்ள மனித

உரிமை ஆணையம், இதுகுறித்து விசாரிப்பதற்காக

கலப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் என

அறிவித்திருப்பது தான் அதிர்ச்சியளிக்கிறது. உள்நாட்டு

விசாரணைக்கும், கலப்பு விசாரணைக்கும் பெரிய

வேறுபாடு கிடையாது. உள்நாட்டு விசாரணையில்

முழுக்க முழுக்க இலங்கை நீதிபதிகளே இருப்பார்கள்

என்றால், கலப்பு விசாரணையில் பாதியளவு இலங்கை

நீதிபதிகள் இருப்பார்கள் என்பது தான் உண்மை.

போர்க்குற்றச்சாற்று குறித்த நீதிமன்ற விசாரணையில்

ஒரே ஒரு இலங்கை நீதிபதி இருந்தால் கூட,

தமிழர்களைப் போலவே நீதியும் படுகொலை

செய்யப்பட்டு விடும்.  இதைத் தடுக்க இலங்கை

போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற

விசாரணை நடத்தக் கோரும் தீர்மானத்தை ஐ.நா.

மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் இந்திய அரசு

கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று

ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

No comments: