Monday, November 24, 2008

வன்னியில் சிறிலங்கா அரசை அம்பலப்படுத்தும் பேரணி

வன்னிக்கான உணவு, மருந்து மற்றும் எரிபொருட்களை தடுத்து மனித அவலத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ள சிறிலங்கா அரசை அம்பலப்படுத்தும் பேரணிகள் இன்று வன்னியில் நடைபெற்றன.

தருமபுரம், புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு ஆகிய இடங்களில் இப்பேரணிகள் இடம்பெற்றன.

பேரணிகளில் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டு தமது கண்டனக்குரல்களை எழுப்பினர்.


[படம்: புதினம்]


[படம்: புதினம்]


[படம்: புதினம்]

பேரணிகள் இன்று வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு தொடங்கின.

இதில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளருக்கு மனுக்கள் கையளிக்கப்பட்டன.

கிளிநொச்சி தருமபுரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டன முழக்கங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு தருமபுரம் பாடசாலையில் இருந்து பேரணியாகப் புறப்பட்டனர்.

கிளிநொச்சி அரச அதிபர் செயலகம் வரை அவர்கள் பேரணியாகச் சென்றனர். அங்கு கண்டனக்கூட்டம் வன்னி மக்கள் நலன் பேணும் அமைப்பினர் தலைவர் நா.அரசரத்தினம் தலைமையில் நடைபெற்றது.

கண்டன உரைகளை அமைப்பின் உறுப்பினர்களான சி.துரைசிங்கம், க.மகாதேவன், அ.வேளமாலிகிதன், கி.வேதவனம் ஆகியோர் நிகழ்த்தினர்.


[படம்: புதினம்]


[படம்: புதினம்]


[படம்: புதினம்]

வன்னியில் சிறிலங்கா படையினரின் ஒடுக்குமுறையால் மக்கள் படும் அவலம் தொடர்பிலான மனு கிளிநொச்சி அரச அதிபர் நா.வேதநாயகனிடம் கையளிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூனுக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒட்டுசுட்டானில் உள்ள சந்தியில் தொடங்கிய கண்டனப் பேரணி உதவி அரச அதிபர் செயலகத்தில் முடிவடைந்தது.

வன்னி மக்கள் நலன்பேணும் அமைப்பின் துணைத்தலைவர் சிவசிதம்பரம் தலைமையில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் கண்டன உரையை நெடுங்கேணி ஒட்டுசுட்டான் பொது அமைப்புகளின் ஒன்றியச் செயலர் நாகேந்திரராசா, மருதோடை பாடசாலை முதல்வர் நாகராசா ஆகியோர் நிகழ்த்தினர்.

இதிலும் மனு கையளிக்கப்பட்டுள்ளது.


[படம்: புதினம்]


[படம்: புதினம்]


[படம்: புதினம்]

Thursday, November 20, 2008

மாணவர் கூட்டமைப்பு தமிழ்நாடு முழுவதும் 14 நாட்கள் சுற்றுப்பயணம்

இலங்கையில் நடப்பது என்ன? என்று மக்களுக்கு விளக்கிக் கூறுவதற்காக தமிழ்நாடு முழுவதும் மாணவர் கூட்டமைப்பின் சார்பில் வேன் பிரசாரம் செய்யப்படுகிறது. இந்த சுற்றுப்பயணத்தை திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி கறுப்புக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழக மாணவர் கூட்டமைப்பின் சார்பில், இலங்கை தமிழர் நிவாரண நிதிக்கு ஆதரவு திரட்டியும், இலங்கையில் நடப்பது என்ன? என்று மக்களுக்கு விளக்கிக் கூறுவதற்காகவும் மாணவர்கள் வேன் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கி அடுத்த மாதம் 1 ஆம் நாள் வரை 14 நாட்களுக்கு கூட்டமைப்பின் தலைவர் எழிலன் தலைமையில் 15 பேர் சுற்றுப்பயணம் செய்கின்றனர்.

இதன் தொடக்க விழா சென்னை ராயப்பேட்டை வி.எம்.தெருவில் உள்ள பெரியார் படிப்பகம் முன்பு நடைபெற்றது.

இதில், நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி கலந்து கொண்டு கறுப்புக் கொடி அசைத்து சுற்றுப்பயணத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அவர் தனது உரையில் தெரிவித்துள்ளதாவது:

நம் நாடு நிலவுக்கு செயற்கைகோள் அனுப்பியதைப் பெருமையாகப் பேசுகிறோம். அதே நேரத்தில் ஈழத்தின் உண்மை நிலை என்ன? என்று நம்மால் முழுவதுமாக தெரிந்து கொள்ள முடியவில்லை.

இலங்கையில் உள்ள பத்திரிகைகள், ஊடகங்கள் அந்த நாட்டு அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் வெளியிடுகின்றன.

இலங்கையில் பள்ளிக்குப் போக வேண்டிய குழந்தைகள் பதுங்கு குழியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

போர் அறிவிப்பு செய்த பிறகு, பாதிரியார் ஒருவரை அவர் தங்கியிருக்கும் இடத்தை விட்டு செல்லுமாறு அரசு ஆணையிட்டது. அதையடுத்து அந்தப் பாதிரியாரும் மூட்டை, முடிச்சுகளை கட்டிக் கொண்டு போக புறப்பட்டார். அப்போது இரண்டு குழந்தைகள் அங்கு வந்தனர். அவர்களிடம் எனது நினைவாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி பாதிரியார் 2 பேனாக்களைக் கொடுத்தார்.

அந்தப் பேனாவை பெற்றுக்கொண்ட அந்தக் குழந்தைகள் பாதிரியாரிடமே அவற்றைத் திருப்பிக் கொடுத்தன. நாங்கள் உயிருடன் இருப்போமா அல்லது இருக்கமாட்டோமா என்று தெரியவில்லை. எனவே, வேறு ஊரில் உள்ள குழந்தைகளுக்கு இந்தப் பேனாவைக் கொண்டு போய் கொடுங்கள் என்று அந்தக் குழந்தைகள் கூறியுள்ளனர்.

எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களான குழந்தைகளின் உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை. இப்படியொரு நிலையை ஏற்படுத்தியிருக்கும் நாடு ஒரு நாடா?

தன் மக்களையே அழிக்கும் அநாகரீகத்தை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசு குரல் கொடுக்க வேண்டும். தமிழ் பேசும் பாவத்திற்காக அவர்களை அழிக்கிறார்கள். தமிழர்கள் என்பதற்காக இல்லாவிட்டாலும் அவர்களும் மனிதர்கள் என்பதற்காகவாவது குரல் கொடுக்க வேண்டும் என்றார் அவர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன், பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் சுற்றுப்பயணம் செல்லும் மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பினர்.

சுற்றுப்பயண வேனின் இருபுறங்களிலும் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையைச் சித்தரிக்கும் படங்கள் காண்போரின் கண்களை குளமாக்கும் வகையில் அமைந்துள்ளன.





பிரித்தானிய நாடாளுமன்றம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்: ஆயிரக்கணக்கான தமிழர்கள் பங்கேற்ப

பிரித்தானிய நாடாளுமன்றம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்:

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முன்பாகவுள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் நேற்று நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழா்கள் பங்கேற்றுள்ளனர்.

நாடாளுமன்ற சதுக்கத்தின் முன்பாக நேற்று புதன்கிழமை பிற்பகல் 3:30 நிமிடம் தொடக்கம் மாலை 6:30 மணிவரை இக்கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

இதில் பிரித்தானியாவில் உள்ள சில அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பெருமளவிலான தமிழர்கள் பங்கேற்றனர்.



பிரித்தானிய பிரதமருடனான கேள்வி நேரம் நேற்று என்பதனாலும் நேற்றைய நாளில் பெருமளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு வருகை தருவார்கள் என்பதனாலும் நேற்றைய நாளினை கவனயீர்ப்பு போராட்டத்துக்கு தேர்ந்தெடுத்திருந்ததாக நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தவர்கள் தெரிவித்தனர்.

பிரித்தானியாவின் தற்போது நிலவும் குளிரான காலநிலையிலும் பெருமளவிலான மக்கள் கவனயீர்ப்பு நிகழ்வில் பங்கேற்றிருந்ததுடன் தம்முடன் பாடசாலை சிறுவர்கள் மற்றும் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தனர்.

மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டதாக இக்கவனயீர்ப்பு நிகழ்வு அமைந்தது.

- சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழின படுகொலையை தடுத்து நிறுத்துமாறு பிரித்தானிய அரசு வற்புறுத்த வேண்டுமென கோருவது

- இலங்கையில் தமிழர் தாயக பிரதேசங்களில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை பிரித்தானிய அரசு அங்கீகரிக்க கோருவது

- தமிழின எழுச்சிக்கு ஒத்துழைக்கும் தமிழக மக்களுக்கு நன்றி தெரிவிப்பது

ஆகியனவே அந்த மூன்று நோக்கங்கள் ஆகும்.



பிரித்தானியாவின் வெவ்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கவனயீர்ப்பு நிகழ்வில் பங்கேற்று தமது ஆதரவை வெளிப்படுத்தியதுடன் அங்கிருந்த மக்கள் மத்தியில் தமது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு பிரித்தானிய தமிழர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தினர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான கீத் வாஸ், தமிழர்களுக்கான அனைத்து கட்சிக்குழுவின் தலைவரான விரேந்திர சர்மா, சியோப்கெயின் மக்டொனா, சுசான் கிரைமர், அன்ரூ பெலிங், ரொம் பிரேக், ஜோன் ரையன், பரிகார்டினர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்வில் உரையாற்றினர்.

தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து பாண்ட் வாத்திய இசை முழங்கப்பட்டது.

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு என தனியான தமிழீழ தனியரசு உருவாக்கப்பட வேண்டும் என்ற பிரித்தானிய தமிழர்களின் விருப்பம் இங்கு வெளிப்படுத்தப்பட்டது.



சிறிலங்கா அரசினால் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் தொடர்பாகவும் அங்குள்ள தமிழ் மக்களின் அவல நிலை தொடர்பாகவும் பிரித்தானிய மக்களுக்கு எடுத்து விளக்கும் வகையிலான துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

“இலங்கை தமிழர்கள் மீதான இனப்படுகொலையை நிறுத்து”

“தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி”

“தமிழ்நாட்டுக்கு நன்றி - பிரித்தானிய தமிழர்”

“சிறந்த தேசம் - தமிழ்நாடு”

“நன்றியுள்ள மக்கள் - தமிழீழ மக்கள்”

“அப்பாவி தமிழர்கள் மீதான குண்டு வீச்சை நிறுத்து”

“சிறிலங்கா ஒரு பயங்கரவாத அரசு”

”பிரித்தானியாவே சிறிலங்கா அரசு மீது பொருளாதார தடையை விதி”

”ஐ.நாவே சிறிலங்கா மீது ஆயுத தடையை விதி”

“ஐரோப்பிய ஒன்றியமே ஜீ.எஸ்.பீ. பிளஸ் - யுத்த நிதிக்கான வழி”

என ஆங்கிலத்தில் வைக்கப்பட்டிருந்த பதாதைகளின் வாசகங்கள் காணப்பட்டன.

ஆங்கிலம் மற்றும் தமிழில் பதாதைகள் வைக்கப்பட்டிருந்தன.



Saturday, November 08, 2008

மும்பையில் நடைபெற்ற ஈழத்தமிழர் ஆதரவு பட்டினிப்போராட்டம்

கடந்த அறுபது ஆண்டு காலமாக தொடர்ந்து சிங்கள இனவெறி அரசினால் பாதிக்கப் பட்டு, உரிமை மற்றும் உடமை இழந்து தவிக்கும் ஈழத்தமிழர்களின் மீது இராணுவ அடக்கு முறைகளைக் கையாளும் இலங்கை அரசின் நடவடிக்கைகளை நிறுத்தக் கோரியும்,இந்திய அரசு உடனடியாக தலையிட்டு இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு பாது காப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதை வலியுறுத்தியும்
மகாராஷ்ட்ரா மாநிலம் தானே பகுதியில் அடையாள உண்ணாவிரதம் தானே தமிழ் மன்றத்தின் சார்பில் நடைபெற்றது.
உண்ணாவிரத்தை தானே பகுதி தேசிய வாத கங்கிரசின் தலைவரும் மராத்திய மாநில மேலவை உறுப்பினருமான திரு ஜீதேந்திர அவாட் துவக்கி வைத்தார். முன்னதாக அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். உண்ணா நோன்பு நிகழ்வில் தானே தமிழ் மன்ற நிர்வாகிகள் ஏ. சித்தார்த்தன், பி.ஒய்.மணி, ஜாகிர் உசேன், ராஜா பால், தமிழ் இலெமுரியா ஆசிரியர் சு. குமணராசன், திமு.க செயலாளர்கள் த.மு.பொற்கோ, பொ. அப்பாதுரை, மராத்திய மாநில எழுத்தாளர் மன்ற தலைவர் பேராசிரியர் சமீரா மீரான், கொ. வள்ளுவன், ஆந்திர மகா சபை வி.ராவ், திருவள்ளுவர் மன்ற அமைப்பாளர் இராதகிருஷ்ணன், திராவிடர் கழக செயலாளர் பெ.கணேசன், தமிழ் காப்போம் இராஜேந்திரன் , பால்வண்ணன், மனித உரிமை இயக்க அமைப்பாளர் சங்கர் திராவிட், சிட்டிசன் பாரம் தலைவர் எஸ்.ஏ.சுந்தர், விடுதலை சிறுத்தைகள் இயக்க கு.இராஜ, துரை, சாத்தரசன் பட்டி சேசுராசு, ஆதி திராவிடர் மகாஜன சங்க தலைவர் அசோக் குமார், லாரன்ஸ், தானே தி.மு.க செயலாளார் கி.தனுஷ்கோடி, தமிழர் தேசிய இயக்க நாடோடித் தமிழன், திருமதி நங்கை குமணராசன், லிட்டில் பிளவர் ஆங்கில பள்ளி முதல்வர் திருமதி அமலா ஸ்டான்லி, குண சுந்தரி சித்தார்த்தன் தானே அலெக்சாண்டர் உட்பட நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றனர்.
ஈழத்தமிழர்களை ஆதரித்து நடை பெற்ற இப்போராட்டத்தை ஆதரத்து முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மனொஜ் சிந்தே, காங்கிரஸ் தலைவர் பாலகிருஷ்ண புர்னேகர் ஆகியோர் உரையாற்றினர். ஈழத்தமிழர் வரலாறு மற்றும் சிங்கள அரசின் தொடர்ந்த கொடுமகளை விளக்கி சு. குமணராசன், த.மு.பொற்கோ, ஜாகி உசேன், வெ.சித்தார்த்தன், எஸ்.ஏ.சுந்தர், அமலா ஸ்டான்லி ஆகியோர் உரையாற்றினர்.
இதற்கிடையில் ஈழத்தமிழர் பிரச்சினையில் சரியான அணுகுமுறையை மேற்கொள்வதை வலியுறுத்தியும் , இலங்கை அரசுக்கு இராணுவ உதவி அளிப்பதை நிறுத்தக் கோரியும் பிரதம அமைச்சருக்கு மனு ஒன்றும் தானே மாவட்ட ஆட்சியர் திரு எ.எல்.ஜாங்கிட் மூலம் கொடுக்கப் பட்டது. இம்மனுவை த.மு.பொற்கோ, சு.குமணராசன், அமலா ஸ்டான்லி, வெ.சித்தார்த்தன், ராஜாபால் மற்றும் ஜாகிர் உசேன் ஆகியோர் கலெக்டரை நேரில் சந்த்தித்து, நிலைமைகளை விளக்கி அளித்தனர்.
பட்டினி நோன்பை தானே சட்டமன்ற உறுப்பினரும் சிவசேனைத் தலைவருமான ஏக்நாத் சிந்தே முடித்து வைத்தார். உண்ணாநோன்பில் பங்கேறற அனைவருக்கும்பழச்சாறு வழங்கினார். இலங்கையில் நடைபெறும் கொடுமைகளைக் கண்டித்து நடைபெற்ற இப்போராட்டத்தை தி.மு.க. விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம், மனித நேய இயக்கம், காங்கிரஸ் கட்சி, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, மற்றும் அனைத்து தமிழ் அமைப்புகள் என அனவரும் ஒருமித்து ஆதரவு வழங்கியிருப்பது மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி,
தானே தமிழ் மன்றம்.

Thursday, November 06, 2008

வடமராட்சியில் காவியமான கடற்கரும்புலிகளின் வீரவணக்க நிகழ்வு

வடமராட்சியில் காவியமான ஏழு கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு
வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படை கொமாண்டோக்கள் மீது தாக்குதல் நடத்தி- இரண்டு படகுகளை மூழ்கடித்து- 20 படையினரை கொன்று வீரவரலாறான கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு மூங்கிலாறில் நடைபெற்றது.

மட்டக்களப்பு - அம்பாறை மாவீரர் மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை உடையார்கட்டு கோட்டப் பொறுப்பாளர் ஞானவேல் தலைமையில் வீரவணக்க கூட்டம் இடம்பெற்றது.


படம்: தமிழீழ தேசிய தொலைக்காட்சி


படம்: தமிழீழ தேசிய தொலைக்காட்சி


படம்: தமிழீழ தேசிய தொலைக்காட்சி

நிகழ்வில் வீரவரலாறான

கடற்கரும்புலி லெப். கேணல் பதுமன்

கடற்கரும்புலி லெப். கேணல் புலிக்குட்டி

கடற்கரும்புலி லெப். கேணல் கண்ணன்

கடற்கரும்புலி மேஜர் செந்தூரன்

கடற்கரும்புலி மேஜர் கலைமதி

கடற்கரும்புலி கப்டன் கொள்கைக்கோன்

கடற்கரும்புலி கப்டன் அகச்சேரன்

ஆகிய கரும்புலி மாவீரர்களில் இருவரின் வித்துடல்கள் ஏனையோரின் திருவுருவப்படங்களுக்கு ஈகச்சுடர்களை பெற்றோர், உறவினர்கள் ஏற்றினர்.


படம்: தமிழீழ தேசிய தொலைக்காட்சி


படம்: தமிழீழ தேசிய தொலைக்காட்சி


படம்: தமிழீழ தேசிய தொலைக்காட்சி

தொடர்ந்து பெற்றோர், உறவினர்கள், தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் எனப் பலரும் மலர்மாலைகளை சூட்டினர்.

வீரவணக்கவுரையை கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை நிகழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து மலர்வணக்கம் நடைபெற்றது.

தொடர்ந்து விசுவமடு மாவீரர் துயிலுமில்லத்தில் முழுப்படைய மதிப்புடன் வித்துடல்கள் விதைக்கப்பட்டன.

நடுகற்கள் திரைநீக்கம் செய்யப்பட்டன.

Saturday, November 01, 2008

கடற்புலிகள் அதிரடித் தாக்குதல்

வடமராட்சி கடற்பரப்பில் கடற்புலிகள் அதிரடித் தாக்குதல்: டோறா பீரங்கிப் படகு, ஹோவர்கிராப்ட் கலம் மூழ்கடிப்பு; நீருந்து விசைப்படகு சேதம்

யாழ். வடமராட்சி கிழக்கு குடத்தனை முதல் நாகர்கோவில் வரையான கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் டோறா பீரங்கிப் படகும் ஹோவர்கிராப்ட் எனும் மிதக்கும் கனரக கடற்கலமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் அதிரடித் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. நீரூந்து விசைப்படகு ஒன்று சேதமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

வடமராட்சி கிழக்கு குடத்தனை முதல் நாகர்கோவில் வரையான கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் 20 டோறா பீரங்கிப் படகுகளுடன் ஹோவர்கிராப்ட் கலம் நிலைகொண்டிருந்த போது அந்த அணி மீது இன்று சனிக்கிழமை அதிகாலை 5:15 நிமிடத்துக்கு கடற்புலிகள் அதிரடித் தாக்குதலை நடத்தினர்.


சிறிலங்கா கடற்படையினரிடம் உள்ள ஹோவர்கிராப்ட் கனரக கடற்கலம்


சிறிலங்கா கடற்படையினரிடம் உள்ள ஹோவர்கிராப்ட் கனரக கடற்கலம்

இத்தாக்குதல் வேளையில் சிறிலங்கா தரைப்படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்திய அதேவேளை, சிறிலங்கா வான்படையினரின் மிகையொலிவேகத் தாக்குதல் வானூர்திகளும் தாக்குதல் நடத்தியுள்ளன.

இவற்றுக்கு மத்தியில் சிறிலங்கா கடற்படையினருக்கு கடற்புலிகள் அழிவுகளையும் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளனர்.

இதில் கடற்படையினரின் டோறா பீரங்கிப் படகு ஒன்றும் தரையிறக்க கொமாண்டோத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ஏ-530 தொடரிலக்கத்தினைக் கொண்ட ஹோவர்கிராப்ட் கனரக கலம் ஒன்றும் விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. நீருந்து விசைப்படகு ஒன்று சேதமாக்கப்பட்டுள்ளது.

பெரும் இழப்புக்களையடுத்து சிறிலங்கா கடற்படையின் கலங்கள் காங்கேசன்துறைக்கு பின்வாங்கி ஓடிவிட்டன.

இம் மோதலில் கடற்புலிகள் தரப்பில் ஏழு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர். இவர்களுக்கு தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

வான் புலிகளுக்கு "நீலப்புலி", "மறவர்" விருது


வான் தாக்குதல்களை சிறப்பாக நடத்திய வான் புலிகளுக்கு "நீலப்புலி", "மறவர்" விருதுகள்: தேசியத் தலைவரால் மதிப்பளிப்பு
எதிரிகள் மீதான வான் தாக்குதலில் சிறப்பாகச் செயற்பட்ட வான் புலிகளின் வானோடிகளுக்கும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் போராளிகளுக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் விருதுகள் வழங்கி மதிப்பளித்துள்ளார்.

பிரத்தியேகமான இடமொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இந்த மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கத்தில் வவுனியா சிறிலங்கா கூட்டுப் படைத்தளத்தின் மீதான தாக்குதலில் வீரவரலாறான கரும்புலி மாவீரர்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சுடரேற்றி, மாலை சூட்டி வணக்கம் செலுத்தினார்.





தொடர்ந்து மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

இதில் விடுதலைப் புலிகளின் வான் புலிகளில் சிறப்பாகச் செயற்பட்ட குறிப்பாக சிறிலங்காவில் உள்ள களனிதிச அனல் மின் உற்பத்தி நிலையம் மீதான தாக்குதல் உட்பட சிறிலங்கா படைய பொருண்மிய இலக்குகள் மீதான தாக்குதல்களை ஐந்து தடவைகளுக்கு மேல் வெற்றிகரமாக நடத்திய வானோடிகளுக்கு "நீலப்புலி" என்னும் சிறப்பு விருதை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வழங்கினார்.





மூன்று தடவைகளுக்கு மேல் வெற்றிகரமாக தாக்குதல்களை நடத்திய துணை வானோடிகளுக்கு "மறவர்" விருதையும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வழங்கினார்.

அத்துடன் 09.09.2008 அன்று வவுனியா சிறிலங்கா கூட்டுப் படைத்தளம் மீதான தாக்குதலை நடத்திய வான் புலிகளின் வானோடிகளுக்கும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணிப் போராளிகளுக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சிறப்புப் பரிசில்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் தளபதிகள், பொறுப்பாளர்கள், கட்டளைத் தளபதிகள், போராளிகள் உட்பட பெருமளவிலானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.





Wednesday, October 29, 2008

சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதல்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் பாடசாலைக்கு அருகான மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். 11 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் 1,300 மாணவர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

பரந்தன் குமரபுரம் கிராமத்தில் உள்ள பரந்தன் இந்து வித்தியாலயத்துக்கு அருகான மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11:15 நிமிடமளவில் சிறிலங்கா வான்படையின் மிக் - 27 ரக வானூர்திகள் இரண்டு குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன.

மக்கள் செறிவாக வாழ்ந்து வரும் குடியிருப்பு மற்றும் போக்குவரத்து வீதியை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


[படம்: புதினம்]


[படம்: புதினம்]


[படம்: புதினம்]

சுமார் 1,300 மாணவர்கள் கல்வி கற்றுக்கொண்டிருந்த வேளையில் பரந்தன் சந்தை மற்றும் நகரம் செறிவான மக்களுடன் இயங்கிக்கொண்டிருந்த வேளையில் மக்களுக்கு அவலத்தையும் அழிவையும் ஏற்படுத்தும் வகையில் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தின.

இதில் வீதியால் சென்று கொண்டிருந்த மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பொதுமக்களின் எட்டு வீடுகள் அழிந்துள்ளதுடன் பத்து வீடுகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. வீடுகளில் இருந்த பொதுமக்கள் மூவரும், மாணவர்கள் மூவருமாக ஆறு பேர் காயமடைந்தனர்.

குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற போது பாடசாலை மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருந்தனர். வான்படையின் மிலேச்சத்தனமான குண்டுத்தாக்குதலால் மாணவர்கள் பதறி- அவலப்பட்டு- சிதறி ஓடினர்.


[படம்: புதினம்]


[படம்: புதினம்]


[படம்: புதினம்]

மாணவர் அவலப்பட்டு காப்பகழிகளுள்ளும் வெளியிலும் கதறி அழுதவாறு சிதறியோடினர். பாடசாலை வளாகத்திலும் வகுப்பறைகளிலும் குண்டுச்சிதறல்கள் வீழ்ந்துள்ளன. இதில் மாணவர்கள் காயமடைந்தனர்.

வான்படையின் குண்டுத்தாக்குதலினால் பரந்தன் நகரம் அவலப்பட்டு சிதறி ஓடியது.

திட்டமிட்டு சிறிலங்கா வான்படை மக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து இக்குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளது.

குண்டுத்தாக்குதலில் கிறிஸ்டி (வயது 16) எனும் மாணவனின் வாயில் குண்டுச்சிதறல் தாக்கியுள்ளதுடன் கனிஸ்டன், தனுசன் ஆகிய மாணவர்களும் காயமடைந்துள்ளனர்.


[படம்: புதினம்]


[படம்: புதினம்]


[படம்: புதினம்]

வீடுகளிலிருந்து காயமடைந்த சுகுமார் ரதி (வயது 47), பத்மசீலன் (வயது 37), வீ.காண்டீபன் (வயது 29) ஆகியோர் கிளிநொச்சி நகரில் இயங்கிவரும் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீதியில் சென்று கொண்டிருந்த நிலையில் கொல்லப்பட்ட மூன்று பேரும் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை. மேலும் ஐந்து பேர் பேர் சிறுகாயங்களுக்குள்ளாகினர்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் ஏற்பட்ட பெரும் எழுச்சி காரணமாக இராஜதந்திர அழுத்தங்களுக்கு அஞ்சி கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பொதுமக்கள் மீதான வான்தாக்குதலை இடைநிறுத்தி வைத்திருந்த சிறிலங்கா அரசு-

எக்காரணம் கொண்டும் மத்திய அரசுக்கு நெருக்கடியை தரமாட்டோம் என்று தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அறிக்கை விடுத்ததன் மூலம் தான் முன்னர் விதித்திருந்த பதவி விலகல் காலக்கெடுவிலிருந்து விலகியதனையடுத்து-

சிறிலங்கா அரசு பொதுமக்கள் மீதான வான் தாக்குதல்களை அதிகரித்துள்ளதாக கொழும்பு அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்।


புதினம்

Saturday, October 25, 2008

தென்னாபிரிக்காவில் ஈழத்தமிழர் ஆதரவு பேரணி

இலங்கையின் வடக்கு - கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இனப்படுகொலையை கண்டித்து தென்னாபிரிக்காவில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

பிரிட்டோரியா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உயர் பணிப்பாளர் பணிமனைக்கு முன்பாக அங்கு வாழும் தமிழர்கள் நேற்று வெள்ளிக்கிழமை இக்கண்டன கவனயீர்ப்பு நிகழ்வினை நடத்தினர்.

இந்நிகழ்வில் பல அமைப்புக்கள் சார்பாக அவற்றின் பொறுப்பளர்களும் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.





சிறிலங்கா இனவாத அரசு மேற்கொள்ளும் இனவெறிப் போரில் அப்பாவித் தமிழ் மக்கள் அநியாயமாக படுகொலை செய்யப்படுவது தொடர்பில் தென்னாபிரிக்க அரசாங்கம் அமைதிப் போக்கினைக் கையாள்வதைக் கண்டித்தும் இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மௌனப் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றமையைக் கண்டித்துமே இக்கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது.

'ஐக்கிய நாடுகள் சபையே உனது மௌனத்தைக் கலை"

'ஐநா உடனடியாகச் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவளி"

போன்ற முழக்கங்களை கவனயீர்ப்பு நிகழ்வில் பங்கேற்றோர் எழுப்பினர்.



நிகழ்வின் இறுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் பிராந்திய அதிகாரி டேவிட் ஜோன்சனிடம் மனு கையளிக்கப்பட்டது.

இரண்டாவது மனுவினை தென்னாபிரிக்க அரசாங்கத்தின் சார்பாக, வெளிவிவகாரத்துறையின் பிரதி இயக்குநர் சூஸ் இம்ரில்வாவும் வெளிவிகாரத்துறையின் தென் கிழக்காசியப் பிராந்தியத்திற்கான இணை இயக்குனர் காரி சிமித்தும் பெற்றுக்கொண்டனர்.

அங்கு கையளிக்கப்பட்ட மனுவில் கீழ் குறிப்பிட்ட நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

- ஈழத் தமிழர்களின் தாயகத்தில் றுவாண்டா போன்ற நிலைமையை உருவாகாமல் தடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை உடனடியான இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

- உடனடியான மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள வேண்டும்

- பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பிவைக்க அணுசரணை வழங்க வேண்டும்

- சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள கண்மூடித்தனமான இனப்படுகொலையை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பவேண்டும்

மனிதநேயப் பணியாளர்கள் உடடினடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுமதிக்கப்பட்டு, தங்குமிட வசதி உணவு வசதி இல்லாமல் அல்லலுறும் மக்களுக்கு உதவி மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்

என்பன மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.



நன்றி / புதினம்