பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முன்பாகவுள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் நேற்று நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழா்கள் பங்கேற்றுள்ளனர்.
நாடாளுமன்ற சதுக்கத்தின் முன்பாக நேற்று புதன்கிழமை பிற்பகல் 3:30 நிமிடம் தொடக்கம் மாலை 6:30 மணிவரை இக்கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
இதில் பிரித்தானியாவில் உள்ள சில அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பெருமளவிலான தமிழர்கள் பங்கேற்றனர்.
பிரித்தானிய பிரதமருடனான கேள்வி நேரம் நேற்று என்பதனாலும் நேற்றைய நாளில் பெருமளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு வருகை தருவார்கள் என்பதனாலும் நேற்றைய நாளினை கவனயீர்ப்பு போராட்டத்துக்கு தேர்ந்தெடுத்திருந்ததாக நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தவர்கள் தெரிவித்தனர்.
பிரித்தானியாவின் தற்போது நிலவும் குளிரான காலநிலையிலும் பெருமளவிலான மக்கள் கவனயீர்ப்பு நிகழ்வில் பங்கேற்றிருந்ததுடன் தம்முடன் பாடசாலை சிறுவர்கள் மற்றும் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தனர்.
மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டதாக இக்கவனயீர்ப்பு நிகழ்வு அமைந்தது.
- சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழின படுகொலையை தடுத்து நிறுத்துமாறு பிரித்தானிய அரசு வற்புறுத்த வேண்டுமென கோருவது
- இலங்கையில் தமிழர் தாயக பிரதேசங்களில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை பிரித்தானிய அரசு அங்கீகரிக்க கோருவது
- தமிழின எழுச்சிக்கு ஒத்துழைக்கும் தமிழக மக்களுக்கு நன்றி தெரிவிப்பது
ஆகியனவே அந்த மூன்று நோக்கங்கள் ஆகும்.
பிரித்தானியாவின் வெவ்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கவனயீர்ப்பு நிகழ்வில் பங்கேற்று தமது ஆதரவை வெளிப்படுத்தியதுடன் அங்கிருந்த மக்கள் மத்தியில் தமது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு பிரித்தானிய தமிழர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தினர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான கீத் வாஸ், தமிழர்களுக்கான அனைத்து கட்சிக்குழுவின் தலைவரான விரேந்திர சர்மா, சியோப்கெயின் மக்டொனா, சுசான் கிரைமர், அன்ரூ பெலிங், ரொம் பிரேக், ஜோன் ரையன், பரிகார்டினர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்வில் உரையாற்றினர்.
தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து பாண்ட் வாத்திய இசை முழங்கப்பட்டது.
இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு என தனியான தமிழீழ தனியரசு உருவாக்கப்பட வேண்டும் என்ற பிரித்தானிய தமிழர்களின் விருப்பம் இங்கு வெளிப்படுத்தப்பட்டது.
சிறிலங்கா அரசினால் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் தொடர்பாகவும் அங்குள்ள தமிழ் மக்களின் அவல நிலை தொடர்பாகவும் பிரித்தானிய மக்களுக்கு எடுத்து விளக்கும் வகையிலான துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
“இலங்கை தமிழர்கள் மீதான இனப்படுகொலையை நிறுத்து”
“தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி”
“தமிழ்நாட்டுக்கு நன்றி - பிரித்தானிய தமிழர்”
“சிறந்த தேசம் - தமிழ்நாடு”
“நன்றியுள்ள மக்கள் - தமிழீழ மக்கள்”
“அப்பாவி தமிழர்கள் மீதான குண்டு வீச்சை நிறுத்து”
“சிறிலங்கா ஒரு பயங்கரவாத அரசு”
”பிரித்தானியாவே சிறிலங்கா அரசு மீது பொருளாதார தடையை விதி”
”ஐ.நாவே சிறிலங்கா மீது ஆயுத தடையை விதி”
“ஐரோப்பிய ஒன்றியமே ஜீ.எஸ்.பீ. பிளஸ் - யுத்த நிதிக்கான வழி”
என ஆங்கிலத்தில் வைக்கப்பட்டிருந்த பதாதைகளின் வாசகங்கள் காணப்பட்டன.
ஆங்கிலம் மற்றும் தமிழில் பதாதைகள் வைக்கப்பட்டிருந்தன.
No comments:
Post a Comment