Thursday, March 17, 2016

சென்னையின் No. 1 அவலம்: தேவை 50 ஆயிரம்.... இருப்பதோ வெறும் ஆயிரம்!













சென்னை மாநகராட்சியின் மூலமாக கடந்த நான்கரை ஆண்டுகளில் 348 கழிவறைகளே கட்டப்பட்டுள்ளன என்று வேதனைப்படுகிறார் ‘தேவை’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இளங்கோ. சென்னை மாநகராட்சி இவருக்கு வழங்கிய விருதை இன்று (16-ம் தேதி) திருப்பி அளித்தார்.
சென்னை, வியாசர்பாடி பகுதியில் செயல்பட்டு வருகிறது 'தேவை' இயக்கம். சென்னை மாநகர மக்களின் கழிப்பிடம், குடியிருப்பு வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக இந்த அமைப்பு போராடி வருகிறது. குறிப்பாக தலித் மக்கள் அதிகம் வசிக்கும் வடசென்னைப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
விருதை திருப்பி அளித்தது குறித்தும், கடந்த நான்கரை ஆண்டுகளில் சென்னை மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்தும் பேசிய இளங்கோ, "சென்னையின் மக்கள் தொகை சுமார் 1 கோடி. இவ்வளவு மக்களுக்கு 50 ஆயிரம் கழிவறைகள் தேவைப்படுகின்றன. ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளில் 348 கழிவறைகளே சென்னை மாநகராட்சி மூலம் கட்டப்பட்டுள்ளன. மும்பையின் மக்கள் தொகை 1 கோடியே 35 லட்சம். அங்கு 80 ஆயிரம் பொதுக் கழிவறைகள் இருக்கிறது. ஆனால், இங்கு இந்த 348 கழிவறைகளையும் சேர்த்து சுமார் ஆயிரம் கழிவறைகளே உள்ளன. இருப்பதையும் இடித்து தள்ளி வருகிறார்கள்.
வியாசர்பாடி, டாக்டர் அம்பேத்கர் சாலையில் இருந்த கழிவறை, தனியார் கட்டுமானத்தின் வாசலில் இருப்பதாக கூறி அகற்றப்பட்டுள்ளது. இதேபோன்று பட்டாளம் மணிகூண்டுக்கு பக்கத்தில் இருந்த 60 ஆண்டுகள் பழமையான செல்வபதி செட்டியார் பூங்கா,  தனியார் கட்டுமானத்துக்காக இடித்து தள்ளப்பட்டிருக்கிறது. இதுகுறித்து சென்னை மாநகர மேயருக்கும், ஆணையருக்கும் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. பல இடங்களில் கட்டப்பட்ட கழிவறைகளும் பராமரிப்பின்றி இருக்கின்றன. இதுகுறித்து 10க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் சென்னை மாநகராட்சி மீது தார்மீக கோபம் எங்களுக்குண்டு.
இப்படி இருக்கும்போது, சென்னை மாநகராட்சியின் மூலம் எங்கள் சேவையை பாராட்டி கேடயமும், நற்சான்றிதழும் எங்கள் அமைப்புக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதை கடந்த திங்கட்கிழமை கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்கள். இந்த விருதுக்கு நாங்கள் விண்ணப்பிக்கவும் இல்லை. இதோடு, தேர்தல் விதிமுறை அமலில் இருக்கும்போது, முதல்வரின் படம் போட்ட கேடயத்தை கொண்டு வந்து கொடுத்துவிட்டு போயிருக்கிறார்கள். சென்னை மக்களின் நியாயமான தேவைக்களுக்காக பாடுபடாத இந்த மாநகராட்சி  கொடுக்கும் விருது எங்களுக்கு வேண்டாம். இதை திருப்பி அளிக்கிறேன்" என்றார்.
விருதை திருப்பி அளிக்க ரிப்பன் பில்டிங்கில் உள்ள மாநகராட்சி ஆணையர் அலுவலகத்துக்கு சென்றார் இளங்கோ. அங்கு பார்ப்பதற்கு நேரம் கேட்டும் தரப்படவில்லை.
இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள்,  ‘எங்களிடம் கொடுங்கள்; நாங்கள் கொடுத்துவிடுகிறோம்’ என்றனர். ஆனால், தர மறுத்துவிட்டார். ‘நீங்கள் வாங்கவில்லை என்றால், தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துவிடுகிறேன்’ என்றார்.
இதையடுத்து மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தின் வாசலில் கேடயம் மற்றும் நற்சான்றிதழை வைத்துவிட்டு சென்றார் இளங்கோ.

-த.ஜெயகுமார்

நன்றி - விகடன்.காம்

No comments: