Thursday, March 17, 2016

பாஜக கூட்டணியில் தேமுதிக இணையும்: முரளிதர ராவ் நம்பிக்கை

விஜயகாந்துடனான பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை. பாஜக கூட்டணியில் தேமுதிக இணையும் என்று நம்புவதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் கூறினார்.
சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியதாவது:
''திமுக, அதிமுக இரண்டுமே ஊழல் கட்சிகள். அவர்களுக்கு மாற்றாகத்தான் பாஜக இந்தத் தேர்தலை சந்திக்க உள்ளது. அதிமுகவுடன் பாஜக கூட்டு வைக்காது. திமுக , காங்கிரஸ் கூட்டணி தோல்வியை சந்திக்கும்.
234 தொகுதிகளிலும் பாஜக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி முடித்துள்ளோம். குற்றப்பின்னணி உள்ளவர்களை வேட்பாளராக நிறுத்த மாட்டோம்.
தேமுதிகவுக்கும் பாஜகவுக்கும் ஒரே மாதிரியான எண்ண ஓட்டங்கள்தான் உள்ளது. பாஜக தரப்பில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க மாட்டோம். தேவைப்பட்டால் முதல்வர் வேட்பாளரை ஏற்போம். விஜயகாந்த், தன்னை முதல்வர் வேட்பாளராக ஏற்க வேண்டும் என்று கருதினால், அதுபற்றி எங்களிடம் பேசலாம். அதை நாங்கள் பரிசீலிப்போம்.
தேமுதிக தலைமையை ஏற்பவர்கள் எங்களுடன் பேசலாம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியது நம்பிக்கை அளித்துள்ளது. விஜயகாந்துடனான பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை. பாஜக கூட்டணியில் தேமுதிக இணையும் என்று நம்புகிறோம்'' என்று முரளிதர ராவ் கூறினார்.

No comments: