நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஆட்கொல்லி புலியை, அதிரடி படை சுட்டுக்கொன்றுள்ளது. இதையடுத்து வீட்டுக்குள் முடங்கி கிடந்த பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள தேவர்சோலை பகுதியில் வசித்து வந்தவர் ஜார்கண்டை சேர்ந்த மதுவேரோன். வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த இவரை கடந்த 11ம் தேதி புலி தாக்கி கொன்றது. தலை மட்டுமே சிக்கியது. உடல் பாகங்களை வேட்டையாடிவிட்டது அந்த புலி. புலி ஊருக்குள் ஊருடுவிய தகவலால் மக்கள் பீதியடைந்தனர். தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர்.
புலி நடமாட்டம் காரணமாக கூடலூர் வுட்பிரையர், சசக்ஸ் பகுதியில் இன்று நடைபெறுவதாக இருந்த சுப்பிரமணியசாமி, பகவதி அம்மன் கோவில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. மக்களை பெரிதும் அச்சுறுத்தி வந்த ஆட்கொல்லி புலியை பிடிக்க வனத்துறையினர் அந்த பகுதியில் 30 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி வனத்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். 6 இடங்களில் பரண் அமைத்து புலியின் நடமாட்டம் உள்ளதா என்று கண்காணித்தனர். இதற்கிடைய பெண் புலியின் சிறுநீரை தெளித்தும், ஒலி பெருக்கிகள் மூலம் பெண் புலியின் உறுமல் சத்தத்தை எழுப்பியும் தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது உறுமல் சத்தத்துக்கு புதர் மறைவில் இருந்து பதில் சத்தம் வந்தது. ஆட்கொல்லி புலி அந்த பகுதியில் பதுங்கி இருப்பது என்பது உறுதியானது. எனவே மோப்ப நாய் ராணா வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் ராணா மூலம் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. இதற்கிடையே இன்று காலை தேவர்சோலை பகுதியில் புலியின் நடமாட்டம் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது தெரியவந்தது. இதையடுத்து தேவர்சோலை பகுதிக்கு வனத்துறையினரும், அதிரடிப்படையினரும் விரைந்தனர். புலியை மயக்க ஊசி போட்டு பிடிக்கும் முயற்சி தோல்வியடைந்ததையடுத்து, அதிரடிப்படையினர் அதை சுட்டு வீழ்த்தினர்.
8 நாட்களாக மக்களை பெரும் பீதிக்குள்ளாக்கிய புலி சுட்டு வீழ்த்தப்பட்டதால் மக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். இதனிடையே சம்பவத்தின்போது, அதிரடிப்படை வீரர்கள் இருவருக்கு துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment