பேருந்திலோ, தொடர்வண்டியிலோ அதிகபட்சம் அரைமணி நேரம் யாருடனாவது புதிதாக பேசிக்கொண்டு வந்தால் போதும், அடுத்த நிமிடம் "நீங்க எந்த ஆளுங்க...?" என்று கேட்டுவிடுவதுதான் பெரும்பாலான தமிழர்களின் வழக்கம்.
தங்கள் பெயருக்கு பின்னால் சாதி பெயரை போடும் வழக்கம் தமிழ்நாட்டில் தற்போது குறைந்துவிட்டதால் இப்படி சாதியை நேரடியாகவே கேட்டு தெரிந்து கொள்ளும் தவறான பழக்கம் நம் மக்களிடையே தோன்றியிருக்கலாம். இதோ இப்போது சங்கர் என்ற தலித் இளைஞரை சாதிக்கு பலி கொடுத்துவிட்டது தமிழ்நாடு. அண்மைக்காலங்களில் தமிழகத்தை உலுக்கிய "தலித் இளைஞர்களின்" கொலைகளில் இது மூன்றாவது கொலை.
இன்னும் சரியாக அதிகபட்சம் ஒரு வாரம் இதைப்பற்றி முகநூலிலும், வாட்ஸ் அப்பிலும் பேசிக்கொண்டிருப்போம். பேசிக்கொண்டே...... இருப்போம். அடுத்து தேர்தல் செய்திகள் வந்ததும் அதில் நடக்கும் களேபேரங்களை எல்லாம் விவாதிக்க கிளம்பிவிடுவோம். சங்கரின் கொலையும் இளவரசன், கோகுலராஜின் கொலையைப் போல் எளிதாக மறக்கப்படும். மறப்பது நமக்கு என்ன அத்தனை கடினமான செயலா? இல்லைதான், ஆனால் இந்த கொலையையும் மறப்பதற்கு முன்பு உங்களிடம் நீங்களே கேட்டுக்கொள்ள சில கேள்விகள் இருக்கின்றன.
உங்களிடம் என்றால் உங்கள் எல்லோரிடமும் தான். உங்களுக்கு கொஞ்சம் கூட சாதிப்பற்றே இல்லையென்றாலும் இந்த கேள்விகளை உங்களைப் பார்த்து கேட்டுக்கொள்ளுங்கள். ஏன் தெரியுமா? சங்கரின் மரணத்திற்கு யாரோ சிலர் மட்டும் காரணம் அல்ல நீங்களும், நானும், அதிகபட்சம் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த சிசிடிவி கேமராவைப் போன்ற நம் சமூகமும் தான் காரணம். அதனால் உங்கள் ரத்தத்தின் அணுக்களிலும், ஆழ்மனதின் கோடுகளிலும் புதைந்திருக்கும் உங்களுக்கு தெரியாமல் உங்களை ஆக்கிரமித்திருக்கும் அந்த சாதி வெறியிடம் இந்த கேள்விகளைக் கேளுங்கள்....!
முதலாவதாக சங்கரை தலித் இளைஞன் என்று குறிப்பிட்டிருந்தேன், அதை படித்த போது உங்களுக்கு ஏதேனும் வித்தியாசமாக தோன்றியதா, கண்டிப்பாக இருக்காது ஏனென்றால் நம் மொத்த தமிழ்நாடும் இதை தலித் இளைஞனின் மரணம் என்றுதான் கூறியது. இதுவே இந்த இடத்தில் "தேவர் சாதியை சேர்ந்தவர்கள் சங்கரை வெட்டிக் கொன்றனர்" என்று குறிப்பிட்டிருந்தால் உங்களுக்கு அந்த வாக்கியம் கண்டிப்பாக ஏதேனும் உறுத்தலை தந்திருக்கும். ஏன் தெரியுமா....நாம் இப்படியே பழகிவிட்டோம். தலித் என்ற வார்த்தையை பயன்படுத்துவதில் நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. மாறாக தேவர் என்றோ, கள்ளர் என்றோ, வன்னியர் என்றோ பயன்படுத்துவதில்தான் எல்லா பிரச்னையும்.இதுவரை யாரும் இந்த கொலை பற்றி எழுதும் போது சமூக வலைதளங்களில் தேவர் என்று குறிப்பிடவில்லை ஆனால் வரிக்கு வரி தலித் இளைஞன் என்ற வார்த்தை மட்டும் இருக்கிறது. இதுதான் நம்முள் ஊறியுள்ள சாதியின் முதல் அடையாளம், தலித் என்று குறிப்பிட்டால் பெரிதாக என்ன ஆகிவிடும் என்ற மானோபாவம், யார் என்ன செய்துவிடுவார்கள் என்ன நினைப்பு. அதே எண்ணம்தான் உங்களை தேவர் என்ற சொல்லை பயன்படுத்துவதில் இருந்தும் தடுக்கிறது. ஏதோ ஒரு பயமோ, பாதுகாப்பற்ற உணர்வோ, நமக்கு ஏன் வீண்
வம்பு என்ற எண்ணமோதான் இதற்கெல்லாம் காரணம். தவறு செய்த ஒரு சாதியின் பெயரைக் கூட குறிப்பிட முடியாத அந்த அச்சம்தான் இந்த கொலைக்கு முதல் காரணம்.
நம் நாட்டில் பொது இடத்தில் எல்லோரும் "பார்க்கும் படி" கொலை செய்ய முடியும். ஆனால் அந்த கொலை செய்தவர்களின் சமூகத்தின் பெயரை மட்டும் பொதுவாக பேச முடியாது. தேவரை தேவர் என்று சொல்வதிலும், வன்னியரை வன்னியர் என்று சொல்வதிலும் உங்களுக்கு என்னதான் பிரச்னை இருக்கிறது. இந்த மனோபாவத்தை முதலில் கேள்வி கேளுங்கள். இந்த பயம்தான் நம் சாதிய முறைக்கு பெரிய தூண்.
ஆணாவக் கொலை, தமிழ் அகராதியில் சேர்க்கப்பட்ட ரத்தம் படிந்த புதிய சொல். கொளரவக் கொலைதான் ஆணவக் கொலையாகி இருக்கிறது. பிரச்னை இந்த சொற்பிரயோகம் மாற்றப்பட்டதில் இல்லை. நம்முடைய வேலையெல்லாம் இந்த வார்த்தையை மாற்றுவதில்தான் இருக்கிறதா என்பதுதான். கெளரவக் கொலை என்ற வார்த்தை பிரயோகத்தை மாற்றுவதால் எத்தனை பேர் திருந்திவிடுவார்கள். நம்முடைய இலக்கிலிருந்து நம்மை திசைதிருப்பும் செயல் இல்லையா இது. உண்மையில் கெளரவக் கொலை என்ற வார்த்தை உறுத்தலாக இருந்தால் அந்த வறட்டு கௌரவத்திற்கு எது காரணம் என்று தானே பார்க்க வேண்டும். இந்த வார்த்தையை மாற்ற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால் நீங்களும் இந்தப் பிரச்னையை கொஞ்சம் திசை திருப்புகிறீர்கள் என்று அர்த்தம். அது ஏன் என்று நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள். ஏனென்றால் வெறும் கௌரவக் கொலை என்ற வார்தையிலோ, ஆணவக் கொலை என்ற வார்த்தையிலோ இல்லை இந்த பிரச்னை. இது அதற்கெல்லாம் அப்பாற்பட்டது.
தமிழ்நாட்டில் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான். எந்த சாதியை எடுத்தாலும் அவர்கள் தங்களுக்கே உரித்தான ஓர் "ஆண்ட பரம்பரை" கதையை வைத்திருப்பார்கள்.எல்லா சாதிக்கும் ஒரு நீண்ட வீர வரலாறு இருக்கும். எல்லா தெருவிலும் தொங்கும் ஏதேனும் ஒரு வாழ்த்த வயதில்லை கட் அவுட்டிலோ, கண்ணீர் அஞ்சலி போஸ்டரிலோ பெயரின் பின் இணைப்பாக சாதிப் பெயர் இருக்கும். அதை இதுவரை நீங்கள் எந்த அசூகையும் இல்லாமல் கடந்து சென்றிருக்கிறீர்கள் தானே...? உங்கள் பகுதியின் உள்ளூர் சேனலில் மூன்று வயது சிறுவனின் பிறந்தநாளுக்கு "ஆண்ட பரம்பரை" பாடலை ஒளிபரப்பும் செயலை எதுவுமே கேட்காமால் தானே இருந்திருக்கிறீர்களா...?ஆம் என்றால் இந்த கொலைக்கு நீங்களும் ஒரு காரணம். உங்கள் வாழ்க்கை சாதியுடன் குடித்தனம் நடத்த எளிதாக பழகிவிட்டது என்று அர்த்தம். அப்படியென்றால் இந்த சாதியுடன் வாழ்ந்து பழகிய உங்கள் வாழ்க்கை முறையை கேள்வி கேளுங்கள். நான் ஏன் இந்த விளம்பரங்களையும், போஸ்டர்களையும் பற்றி எதுவுமே கேட்கவில்லை என்று உங்களுக்குள்ளேயே கேளுங்கள்.
இதோ தேர்தல் வந்தவிட்டது. எல்லா தொகுதிக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். கண்டிப்பாக எந்த தொகுதியிலும் திறமையின் அடிப்படையில் எல்லாம் வேட்பாளர்களை தேர்வு செய்யப் போவதில்லை. எதன் அடிப்படையில் வேட்பாளர் தேர்வு நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே, வேறென்ன சாதிதான். ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை சாதி ஓட்டுகளை கணக்கில் எடுத்து வேட்பாளரை அறிவித்துவிட்டு நல்லாட்சி தருவோம் என்று கூறும் கட்சிகளை என்றாவது கேள்விகேட்டு இருக்கிறீர்களா...? இல்லைதானே. மாறாக இதில் பலருடைய மனம் நம் வேட்பாளர் என்ன சாதி என்று தேடுவதில்தானே குறிக்கோளாக இருக்கிறது. சாதி பார்த்து வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருந்தாலும் உங்கள் அபிமான கட்சிக்கு வாக்களித்திருக்கிறீர்களா....? ஆம் அப்படியென்றால் உங்களுக்குள் கண்டிப்பாக சாதி அரசியல் மீதான் பலமான ஆதரவு இருக்கிறது. அது ஏன் என்று கண்ணாடியை பார்த்து உரக்கக் கேளுங்கள். சாதி படுகொலை பற்றி பதில் சொல்லாமல் செல்லும் தலைவர்களை நாம் எப்படி சகித்துக் கொண்டிருக்கிறோம் என்று கேளுங்கள்.
"நாய் நாய் உடனும், சிங்கம் சிங்கத்துடனும்தான் சேரணும் மாறி சேர்ந்தா உலகம் தாங்காது" - இது சங்கரின் படுகொலை செய்தியைத் தொடர்ந்து வந்து ஒரு முகநூல் பதிவு. இந்த பதிவை கண்டதும் அதிகபடசம் அவரை பிளாக் செய்தோ இல்லை அவரை திட்டி ஒரு பதிவு எழுதியோ உங்களது சாதிக்கு எதிரான மனோபாவத்தை காட்டிவிட்டீர்கள் என்றால் மன்னிக்கவும், உங்களுக்குள்ளும் சாதி லேசாக படர்ந்திருக்கிறது.
ஆம். உங்களால் முடிந்தது எல்லாம் அவ்வளவுதான் என்ற விட்டேந்தியான மனசு உங்களிடம் இருக்கிறது. சாதிக்கு தீனி போடும் மனசு அது. யார் நம்மளை என்ன செய்துவிட முடியும் என்ற எண்ணத்தை சாதிவெறியர்களுக்கு ஏற்படுத்தக் கூடிய மனசு அது. உங்கள் கேள்வியை அந்த பாழய்போன மனசிடமும் கேளுங்கள்.
இதோ அந்த கொலையாளிகளை பிடித்து உள்ளாடையுடன் புகைப்படம் எடுத்துவிட்டாகிவிட்டது. நம்முடைய கோவத்தை எல்லாம் அந்த புகைப்படத்தை பதிவிட்டு காட்டமாக எழுதித் தள்ளுவதிலேயே சரியாகிவிடும். இரண்டு நாள் கழித்து என்ன செய்வோம்? எதுவும் செய்ய மாட்டோம். சாதிய அமைப்புக்கு எதிரான கோவம் எல்லாம் அந்த புகைப்படத்தை ஷேர் செய்ததிலேயே நமக்கு குறைந்திருக்கும். அதன்பின் நாம் செய்ய என்ன இருக்கிறது. நம்மால் முடிந்தது எல்லாம் அதிகபட்சம் ஷேரும், லைக்கும்தான் என்றால் மன்னிக்கவும் சங்கரையும், கோகுல் ராஜையும், இளவரசனையும் கொன்றது நீங்கள்தான்.
நாயர் டீ கடை என்று போகிற போக்கில் சாதி பேசும், தனியார் பல்கலைக்கழகங்களில் எல்லாமே குறிப்பிட்ட சாதியினரே ஆசிரியர்களாக நியமிக்கப்படும், இந்திய கிரிக்கெட் அணியில் தமிழ்நாட்டில் இருந்து குறிப்பிட்ட சாதி மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும், பள்ளிக்கு கலர் பேண்ட் கட்டி செல்வதை எந்த பிரச்னையும் இல்லாமல் அனுமதிக்கும் செயல்களையெல்லாம் கேள்வியே கேட்காமல் கடந்து செல்லும் உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக சாதிக்கு எதிரான கேள்வியை உங்கள் சாதியிடம் இருந்து தொடங்குங்கள். திட்டுவது என்றால் முதலில் உங்கள் சாதியை திட்டுங்கள்.
சாதிகள் இல்லையடி பாப்பா என்பதை உங்கள் பாப்பாவிற்கு சொல்லிக்கொடுப்பதை விடுத்து உங்களுக்கே முதலில் சொல்லிக் கொடுத்து கொள்ளுங்கள். பாரதி இப்போது இருந்திருந்தாலும் அதைத்தான் செய்திருப்பார்.
-லோ.சியாம் சுந்தர்
(மாணவப் பத்திரிகையாளர்)
நன்றி - விகடன்.காம்
No comments:
Post a Comment