Monday, November 30, 2015

ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் அனுமதி - பிரகாஷ் ஜவடேகர் உறுதி

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த விரைவில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் ஒன்றானது ஜல்லிக்கட்டு, தென் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் பொங்கல் மற்றும் கோயில் திருவிழாக்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக குற்றம்சாட்டி விலங்குகள் நலவாரியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து இந்த போட்டிகளை நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து தற்காலிக அனுமதி வழங்கப்பட்டு பல்வேறு கட்டுபாடுகளுடன் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன.

இதனிடையே கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து தடையை அகற்ற வேண்டும் என தமிழக அரசும், பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நவம்பர் 6ஆம் தேதி அன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜல்லிக்கட்டு இந்திய பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாகும். ஜல்லிக்கட்டை அனுமதிக்க விரைவில் சட்டதிருத்தம் கொண்டு வரப்படும். மேலும் மாட்டுவண்டி பந்தயத்தையும் மீண்டும் நடத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஜல்லிக்கட்டு தொடர்பாக சட்ட ரீதியான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல் பெறப்படும். பாரம்பரியமான விளையாட்டுகளை தடை செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுவதும் அதையடுத்து உச்ச நீதிமன்றம் சென்று அனுமதி வாங்குவதும் வழக்கமாக இருக்கிறது. எனவே இந்தாண்டு போட்டிகள் நடத்துவதற்கு விரைவில் அனுமதி வழங்க வேண்டும் என்பது ஜல்லிக்கட்டு நடத்தும் போட்டியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

No comments: