Monday, February 29, 2016

கதறி அழுத சிறுமிக்கு பச்சை குத்திய கொடுமை

முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி சென்னையில் சிறுமி ஒருவருக்கு கையில் பச்சை குத்தப்பட்டது. வேதனையை தாங்க முடியாமல் சிறுமி கதறி அழுத சம்பவம் அமைச்சர்கள் முன்னிலையிலேயே நடந்துள்ளது மனித உரிமை ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
 
அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின பிறந்தநாளையொட்டி அதிமுகவினர் நலத் திட்ட உதவிகள், திருமணங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 23-ம் தேதி முதல்வரின் பிறந்தநாளையொட்டி,  வேளச்சேரி முருகன் திருமண மண்டபத்தில்,  668 பேரின் வலது கையில் முதல்வர் ஜெயலலிதாவின் உருவத்தை பச்சை குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி, விஸ்வநாதன், ஆர்.வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.
 
பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் முதல்வர் ஜெயலலிதா படத்தை பச்சை குத்திக்கொண்டனர். இதில் ஒரு சிறுமிக்கு ஜெயலலிதா உருவம் பச்சை குத்தப்பட்டது. அப்போது, பச்சை குத்திக் கொண்ட அந்த சிறுமி வலி தாங்காமல் அழும் வீடியோ தற்பொழுது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்கள் முன்னிலையிலேயே அந்த சிறுமிக்கு பச்சை குத்தப்பட்டுள்ளது தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
 
சிறுமிக்கு வலுக்கட்டாயமாக பச்சை குத்தப்பட்டதா என்ற சந்தேகத்தை மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்.  இது தொடர்பாக வழக்கு ஒன்று ரெடியாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அன்புமணி ஆகிய நான்...

சென்னை வண்டலூரில் நடைபெற்ற பாமக மாநாட்டில், அன்பு மணி 'ஹைடெக்' மணியாக காணப்பட்டார். வழக்கமாக போடியத்தில் உள்ள மைக் முன்னாள் நின்றுதான் அரசியல்வாதிகள் பேசுவார்கள். ஆனால் அன்பு மணியோ காதில் 'ஜாக் 'மைக் பொருத்திக் கொண்டு ஒரு கால்பந்து நடுவர் போல நடமாடிக் கொண்டே பேசினார்.
அவரது பேச்சின் சராம்சம் இங்கே: '' தமிழ்நாட்டில் எந்த கட்சி மாநாட்டுக்கும் இவ்வளவு கூட்டம் வந்தது இல்லை. இந்த கூட்டம் பாசத்தால் மட்டுமே வந்த கூட்டம். அத்தனையும் இளைஞர்கள் நிரம்பிய கூட்டம். மேடையில்தான் சிலர் வெள்ளை முடியுடன் இருக்கிறார்கள். ஆனால் கூட்டத்தில் அப்படிய வெள்ளை முடியுடன் யாரும் இல்லை. மாற்றத்தை தேடி வந்த கூட்டம் இது. தமிழத்தில் மாற்றம் வேண்டும். புதுமை வேண்டுமென்ற எண்ணத்தின் என்னை முதல்வராக தேர்வு செய்ய லட்சக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர். 

கடந்த 50 ஆண்டுகள் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் வாய்ப்பளித்துள்ளீர்கள். அந்த வாய்ப்பை இந்த முறை எனக்கு கொடுங்கள். 50 ஆண்டுகளில் திராவிட கட்சிகள் செய்யாததை அன்புமணி ஆகிய நான் 5 ஆண்டுகளில் செய்து முடிப்பேன்.அது மட்டுமல்ல நமது அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து இன்னொரு 50 ஆண்டுகளுக்கும் சேர்த்து என்னால் திட்டமிட முடியும். இது எங்களால் மட்டும்தான் செய்ய முடியும். இது ஆணவமான பேச்சு அல்ல. நம்பிக்கைமிகுந்த பேச்சு 

இந்த இடத்தில் நான் மகாத்மா காந்தியின் வாசகங்களை நினைவுப்படுத்த விரும்புகிறேன். முதலில் அவர்கள் உங்களை புறக்கணிப்பார்கள். அடுத்து ஏளனம் செய்வார்கள். அடுத்து உங்களை கடுமையாக எதிர்ப்பார்கள், கடைசியில் உங்ககளை ஏற்றுக் கொள்வார்கள்.  

கடந்த ஆண்டு சேலத்தில் நடந்த கூட்டத்தில் என்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்த போது ஏளனம் செய்தார்கள். இவர் முதல் அமைச்சரா? இவரால் முடியுமா? என்று கிண்டலடித்தார்கள். ஆனால் 32 மாவட்டங்களுக்கும் சென்று அனைத்து மக்களையும் மனம் தளராமல் சந்தித்தேன். எட்டு திசைகளிலும் 8 மண்டல மாநாடுகளை நடத்தி லட்சக்கணக்கான இளைஞர்களை பெண்களை கவர்ந்து இழுத்திருக்கிறோம்.

நாம் கடந்து வந்த பாதை சாதாரண பாதை கிடையாது. ராமதாஸ் அவர்களின் 34 ஆண்டு கால உழைப்பு. தொண்டர்களின் உழைப்பு இதற்கு பின்னால் இருக்கிறது.  இப்போது அவர்களுக்கு நம்மை கண்டு பயம் வந்து விட்டது. காந்தி சொன்ன வார்த்தை இப்போது நிறைவடையப் போகிறது. ஆம் அடுத்த இரண்டே மாதத்தில் நாம் வெற்றி பெறப் போகிறோம். 

தமிழகத்தில் 50 ஆண்டு காலத்திற்கு பிறகு ஒரு மாற்றம் நிகழப் போகிறது. ஒரு பக்கம் சாத்தான். இன்னொரு பக்கம் கடல். இருவருக்கும் மத்தியில் டாக்டர் என்ற வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. 35 வயதிலேயே பதவியை நான் பார்த்து விட்டேன். எனக்கு பதவி ஆசையெல்லாம் கிடையாது. 

தற்போதைய நிலையில் தேர்தல் களத்தில் வீர நடை போடும் ஒரே கட்சி பா.ம.கதான். திமுக அதிமுகவைத் தவிர வேறு யார் வேண்டுமானாலும் எங்களுடன் கூட்டணிக்கு வரலாம் என ராமதாஸ் கூறியிருக்கிறார். வந்தால் மகிழ்ச்சி... வராவிட்டால் மிக்க மகிழ்ச்சி. நாங்கள் மக்களை நம்பி களம் இறங்குகிறோம். மது விலக்கு வேண்டுமென்று கதறும் பெண்களை நம்பி இந்த முடிவை எடுத்திருக்கிறோம். 

இந்த தேர்தலில் 66 வயது நிரம்பிய திமுக தனித்து நிற்கத் தயங்குகிறது. 44 வயது அதிமுக தனித்து போட்டியிட பயந்து நிற்கிறது. யாராவாது வருவார்களா? என்று கருணாநிதி பார்த்துக் கொண்டிருக்கிறார். எதிரிகளே இல்லையென்று சொன்ன ஜெயலலிதாவை சுற்றி எதிரிகளாகத்தான் இருக்கிறார்கள். 

மதுவை விலக்குதான் முதல் கையெழுத்து 


தமிழகத்தின் முக்கிய பிரச்சினை மது. தமிழகத்தில் உள்ள  1 கோடியே 97 லட்சம் குடும்பங்களில் இந்த மதுவால் பாதிக்கப்படாத குடும்பமே இல்லை. தாத்தாவில் இருந்து பேரன் வரை அல்லது குடும்ப உறுப்பினர்கள் என யாராவது ஒருவர் நிச்சயமாக பாதிக்கப்பட்டிருப்பார். அதிக மது விற்பனை, கணவனை இழந்த பெண்கள் அதிகமான இருப்பது, குடி பழக்கத்தால் சாலை விபத்துக்கள், தற்கொலைகள் அதிகமாக நடப்பது என தமிழகம் எதிர்மறையான விஷயங்களில்தான் முதலிடத்தில் உள்ளது.
பல ஆண்டு காலமாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ராமதாஸ் மதுவை ஒழிக்கப் போராடி வருகிறார். பெண்கள், மாணவர்கள் மது குடிக்கத் தொடங்கினால் அடுத்த தலைமுறையே அழிந்து விடும். மதுவை ஒழிக்க வேண்டும் என்று போராடி வரும் ஒரே கட்சி பா.ம.கதான்.திமுகவின் முன்னோடிகள் பெரியார், அண்ணா ஆகியோர் மதுவை எதிர்த்தார்கள். ஆனால் இன்று தமிழகத்திற்கு மதுவை கொடுத்த கட்சியாக திமுக இருக்கிறது.

நான் முதல்வரானால் போடும் முதல் கையெழுத்தே மது விலக்கு கையொப்பமாகத்தான் இருக்கும். அதே வேளையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு கவுரவமான மற்றொரு வேலை வழங்கப்படும். மது அடிமைகளை மீட்க மறு வாழ்வு மையம் அமைக்கப்படும். சாதாரண மக்களின் பங்களிப்புடன் தமிழகத்தில் கள்ளச்சாரயம் ஒழிக்கப்படும். 

இன்னும் இரண்டு மாதங்கள் மட்டும் பொறுங்கள். மது விலக்கு கையெழுத்து போட்டு விட்டுதான் அடுத்த வேலையை பார்ப்போன். மது சமூகத்தின் ஒழுக்கக் கேடுகளுக்கு நமது முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும் ஒரு பிரச்னை. அதனால்தான் அதற்கு முதலில் முடிவு கட்ட வேண்டியது உள்ளது. 

தமிழகத்தின் வருமானத்தை பெருக்க அன்பு மணியின் திட்டங்கள்


தமிழகத்தில்  ஆற்றில் ஒரு யூனிட் மணல் எடுக்க ரூ.674 வசூலிக்கப்படுகிறது. வெளியே ஒரு யூனிட் மணலை ரூ. 7 ஆயிரத்துக்கு விற்கிறார்கள். 5 ஆயிரம் யூனிட் மணல் அள்ளினால் ஆயிரம் யூனிட்டுக்குதான் கணக்கு தருவார்கள். இதன் முலம் அரசுக்கு 20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. இதனை வருவாயாக மாற்றினால் தமிழகத்தின் பொருளாதார நிலை உயரும்.  

அடுத்து தாதுமணல் கொள்ளை. இதனை முறையாக செய்தால்  50,000 கோடி வருமானம் வரும். கிரானைட் கொள்ளையை தடுத்தால் 30,000 கோடி வருமானம் வரும். இவற்றையெல்லாம் முறைப்படுத்தினாலே ஒரு லட்சம் கோடி வருவாய் ஈட்ட முடியும். 

கள்ளச்சாராயத்தை ஒழிக்கத் தனியாக  டோல் ஃப்ரீ நம்பர் தருவோம்.  தமிழகத்தில் எந்த பகுதியில்  கள்ளச் சாரயம் விற்றாலும்  அந்த எண்ணில் புகார் அளிக்கலாம். புகார் உண்மையாக இருந்தால்ரூ.ரூ. 10 ஆயிரம் பரிசளிக்கப்படும். ரகசியம் பாதுகாக்கப்படும். அதே வேளையில் அந்த கிராம நிர்வாக அதிகாரி, போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கத்துக்குள்ளாவார்கள். 

டாஸ்மாக்கில்  82 பொறியியல் பட்டதாரிகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு கவுரவமிக்க மாற்று வேலைக்கு ஏற்பாடு செய்யப்படும்.  

தமிழகத்தில் 12 மது ஆலைகளில் திமுகவுக்கு 6 அதிமுகவுக்கு 3 சொந்தம். காங்கிரஸ் கட்சிக்கு 2 மது ஆலைகள் இருக்கிறது. மது விற்பனை மூலம் திமுகவுக்கு ஆண்டுதோறும் ரூ.16ஆயிரத் கோடி கிடைக்கிறது. மதுவை ஒழிப்பதாக சொல்லும் ஸ்டாலின்  மக்கள் மேல் உண்மையான அக்கறை இருந்தால் 6 மது ஆலைகளை மூட வைக்க முடியுமா? 

அன்புமணி பிடிவாதக்காரன். சொன்னால் செய்வான். நான் மதுவை ஒழிப்பேன். என்னால் மட்டும்தான் மதுவை ஒழிக்க முடியும் என்று ஆணவத்தில் சொல்லவில்லை. தைரியத்தோடு நம்பிக்கையோடு சொல்கிறேன்.


ஊழலை ஒழிக்க தீர்வு 


கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ஊழலின் மதிப்பு ரூ.70 லட்சம் கோடி. இதற்கு ஒரே தீர்வு. ஊழல் பெருச்சாளிகளான அதிமுக, திமுக வேண்டாம். ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா கொண்டு வரப்படும். சுயாட்சி அந்தஸ்த்துடன் அது செயல்படும். ஆண்டு தோறும் முதல்வர், அமைச்சர்கள் சொத்து மதிப்பு வெளியிடப்படும். ஊழல் செய்தவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். முதல் கூட்டத் தொடரிலேயே லோக் ஆயுக்தா கொண்டு வரப்படும். இதனால் முதல்வர் தவறு செய்தால் கூட தப்பிக்க முடியாது. லஞ்சம் கேட்டால் டோல்ப்ரீ எண்ணில் புகார் தரலாம். இதுவெல்லாம் நேரடியாக முதல்வரின் கட்டுப்பாட்டில் இயங்கும். 

கடந்த 50 ஆண்டுகளில் சீர்குலைந்து போய் கிடக்கும் நிர்வாகத்தை சுண்ணாம்பு அடித்து புதிய நிர்வாகமாக மாற்றுவேன். சுகாதரத்துறை அமைச்சராக இருந்த போது 40 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை வைத்து பணியாற்றியுள்ளேன். தமிழகத்தில் உள்ள நேர்மையான அதிகாரிகள் மண்டபத்தில் தண்டனை காலம் போல பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் ஆட்சியில் இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் நடக்காது. 

சட்டப்பேரவையில் என்ன நடக்கிறது? அம்மாவில் ஆரம்பித்து அம்மாவில் முடிகிறது. பாமக ஆட்சிக்கு வந்தால் ஜனநாயக முறைகள் கடைபிடிப்போம். எதிர்கட்சிகளுக்கு எங்களை விட அதிகமாக பேச வாய்ப்பு அளிப்போம். ஆட்டுக்குட்டி, மிக்ஸி தரமாட்டோம். கல்வி, வேலைவாய்ப்பு அளிப்பேன். தமிழக மக்களை தன்மானத்துடன் வாழ வைப்பேன்.
 
தமிழகத்துக்கு  திராவிடக் கட்சிகளால் எந்த நன்மையும் இல்லை. அதிமுக, திமுகவை ஒழியுங்கள் போதும். தமிழகத்தை முன்னேற்றபாதைக்கு அழைத்து செல்ல வேண்டுமென்ற ஆதங்கம் எனக்குள் இருக்கிறது'' என்று பேசினார். 

மறைந்தார் நகைச்சுவை நடிகர் குமரி முத்து

நகைச்சுவை நடிகரான 77 வயது குமரி முத்து, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை மைலாப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி (29 பிப்ரவரி) காலை குமரி முத்துவின் உயிர் பிரிந்தது. 

நடிகர் குமரி முத்து, 1978 -ம் ஆண்டு 'இவள் ஒரு சீதை' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முள்ளும் மலரும், ஊமை விழிகள், இது நம்ம ஆளு உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.
தனது வித்தியாசமான சிரிப்பினால், மக்களை சிரிப்பூட்டி பிரபல்யமானவர். ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்தவர், 1960களிலிருந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 4 தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களிலும்   குமரி முத்து நடித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் அரசியல் கட்சியான தி.மு.க.வில் தன்னை இணைத்து கொண்டு, நட்சத்திர பேச்சாளராகவும் திகழ்ந்தவர்.

ஆஸ்கர் மேடையில் அதிரவைத்த டிகாப்ரியோ

ந்த மாலைப் பொழுதில் மார்லன் பிராண்டோவின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன். உங்களிடம் ஒரு விஷயத்தை அவர் சொல்லச் சொன்னார். அதாவது, தாராள மனதுடன் வழங்கப்படும் இந்த விருதைப் பெற வருத்தத்துடன் அவர் மறுத்துவிட்டார். விருதை அவர் மறுக்கக் காரணம், திரைப்படத் துறையில் செவ்விந்தியர்கள் மோசமாக நடத்தப்படுவதுதான்!”  - இது மார்லன் பிராண்டோவின் பிரதிநிதியாக  ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற சாஷீனின் குரல்.
ஆம். உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆஸ்கர் விருதை புறக்கணித்த கலைஞன்,  'நான் ஏன் விருதை மறுக்கிறேன்...?' என்று எழுதிய நீண்ட கடிதத்தின் ஒரு சிறு பகுதி இது.  மார்லன், நமது முந்தைய தலைமுறையின் ஆதர்ச நாயகன். தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக, அவர் விருதை மறுக்கவில்லை... தன் நாட்டின் தொல்குடிகளான செவ்விந்தியர்கள், எப்படி நிஜத்திலும், திரையிலும் மோசமாக சித்தரிக்கப்படுகிறார்கள் என்று வருந்திய  கலைஞனின் கலகக்குரல்தான் அந்த கடிதம். உலகமே உற்று நோக்கிக்கொண்டிருந்த ஒரு விழா மேடையில், தன் தேசத்திற்கு எதிராக சுட்டு விரலை நீட்டிய உண்மையான கலைஞன் அவர். 

மார்லன் திரை நாயகன் மட்டுமல்ல... நிஜ நாயகனும் கூட.  ஒரு முறை லண்டன் நகரத்திற்கு படப்பிடிப்பிற்காக சென்றபோது, கருப்பின மக்களின் மெழுகுவர்த்தி பேரணி செல்வதை அறிகிறார். பல கருப்பின அப்பாவி மக்கள், எந்த குற்றமும் செய்யாமல் பல நாட்கள் லண்டன் சிறைகளில் வாடுகிறார்கள், அவர்களை விடுவிக்கக்கோரிதான் அந்த பேரணி. தான் உலகம் கொண்டாடும் நாயகன் என்ற எந்த மமதையும் இல்லாமல், உற்சாகமாக பேரணியில் கலந்து கொள்கிறார், கோஷமிடுகிறார். 

ஆம். மார்லன் அப்படிதான். உண்மை எப்போதும் எந்த அரிதாரமும் பூசி திரிவதில்லை. உண்மை உருமாறாதது, நிர்வாணமானது-  நாம் பார்க்க மறுத்தாலும். அது அங்கு அப்படியேதான் இருக்கும். அந்த உண்மையை பேசிய கலகக் கலைஞன் மார்லன். “நான் படங்களில் நடிப்பது, பணத்திற்காகதான்...” என்று உண்மையை உரக்க சொன்னவர் அவர். 

ஆஸ்கர் மேடையில் மீண்டுமொரு கலகக்குரல்:

நாம் எப்போதும் உண்மையை சந்திக்க தயங்குகிறோம்.  அந்த உண்மையை சந்திக்கும் பண்பு, நம் சிறு வயதிலிருந்தே துவங்கி விடுகிறது. தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி செல்லும் நாள் இன்னும் தள்ளிப் போகாதா என்று ஏங்குவது, விடுமுறையை கொண்டாட மட்டுமல்ல... விடைத்தாளை சந்திக்கவும் பயந்துதான். அதே பண்புதான் நம் வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது. முகத்தில் அறைந்தாற்போல் உண்மையை பேசுபவர்களை நமக்கு பிடிப்பதில்லை. இது தனி மனிதனின் குணம் மட்டுமல்ல, ஒரு சமூகத்தின், தேசத்தின் குணமாகவும் இதுதான் இருக்கிறது. தம் தேசத்திற்கு எதிராக யாராவது சுடும் உண்மையை பேசினால்,  அவர் மீது தேச விரோத முத்திரை குத்தப்பட்டு, விலக்கி வைக்கப்படுகிறார்.

பல ஆண்டுகள் காத்திருப்புக்குன் பின் உங்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த விருது கிடைக்கிறது. நாம் என்ன செய்வோம்...? இரண்டு சொட்டு கண்ணீர் விட்டு, விழா ஏற்பாட்டளர்களை புகழ்ந்து பேசுவோம். இல்லையென்றால், நாம் இந்த விருது வாங்க எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்று ஒரு கதை அளப்போம். எத்தனை பேர் நமக்கு கிடைத்த மேடையை, உலகம் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்னையைப் பற்றி பேச பயன் படுத்துவோம்...?

ஆனால்,  லியோனார்டோ டி காப்ரியோ பயன்படுத்தி இருக்கிறார்.  “நாம் ஆதரிக்க வேண்டும்-  புவி வெப்பமயமாதல் குறித்து உண்மையை பேசும் தலைவர்களை.  சூழலை  மாசுப்படுத்தும் மனிதர்கள் மற்றும் பெரும் நிறுவனங்களை ஆதரித்து பேசாத தலைவர்களை,  புவி வெப்பமயமாதலால் பாதிக்கப்படும்,  உலகம் முழுவதும் உள்ள பழங்குடி மக்களுக்காகவும்,  கோடான கோடி  ஏழைகளுக்காகவும் பேசும் தலைவர்களை, நாம் ஆதரித்து ஆக வேண்டும்.”

-  இது ஆஸ்கர் மேடையில் காப்ரியோ பேசியது. 

மேம்போக்காக பார்த்தால், இது சாதாரண விஷயமாக தோன்றலாம். ஆனால், பருவநிலை மாற்றத்தில் ஆதிக்கம் செலுத்தும், தொடர்ந்து கார்பன் உமிழ்வை குறைத்துக் கொள்ள மறுக்கும் அமெரிக்காவில் நின்று கொண்டு பேச ஒரு கலைஞனுக்கு மாபெரும் துணிச்சல் வேண்டும். 

புவி வெப்பமயமாதலை 2 டிகிரி செல்சியஸ் வரை குறைக்க வேண்டும், அதற்காக கார்பன் உமிழ்வை குறைத்துக் கொள்ள  வேண்டும் என்று ஐ.நா மன்றம் வலியுறுத்தியது. ஆனால்,  இதில் தன் பங்களிப்பை அமெரிக்கா போல வளர்ந்த நாடுகள் புறந்தள்ளி வந்தன. பல சுற்று பேச்சுவார்த்தைக்கு பிறகு, அண்மையில் தான் பாரிசில் நடந்த மாநாட்டில் கார்பன் உமிழ்வை குறைத்துக் கொள்ள முன்வந்து, அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் அந்நாடுகள் அதை செயல்படுத்துமா என்பது கேள்வி குறி...

இந்த சூழலில் காப்ரியோவின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகிறது. அவரின் பேச்சு தட்டையானது அல்ல.  மறைமுகமாக தன் நாட்டின் மீது தான் குற்றம் சுமத்துகிறார்.  

பேராசையின் அரசியல்:
ஆண்டுக்கு சுமார் மூன்று லட்சம் பேர் பருவநிலை மாற்றத்தால் இறக்கிறார்கள். முப்பது கோடி பேர் மறைமுகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விபரம். பருவநிலை மாற்றம் இயற்கையான நிகழ்வல்ல... அது ஒரு சிலரின் பேராசை, நிறுவனங்களின் பணத்தாசை, வளர்நத நாடுகள் தாங்கள்தான் அனைத்து நாடுகள் மீதும் ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்ற எண்ணத்தில், வரைமுறை இல்லாமல் செய்யும் ஆயுத உற்பத்தியும், அதன்  விளைவுகளும்தான் புவிவெப்பமயமாதல்.

இத்தகைய சூழலில் நாம் காப்ரியோவின் பேச்சை, மற்றுமொரு பேச்சாக கடந்து சென்றுவிட முடியாது... 

மார்லனின் உரைக்கு பின்புதான்,  செவ்விந்தியர்கள் மீது கவனம் குவிந்தது. அவர்கள் நலன் குறித்து பேச்சு எழுந்தது.  இப்போது, 43 ஆண்டுகளுக்கு பின்பு காப்ரியோ, விழா மேடையில் ஒரு கலகக் குரலை எழுப்பி உள்ளார். 

பாகிஸ்தான் ரசிகருக்கு தோனி கொடுத்த இன்ப அதிர்ச்சி!

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி, பாகிஸ்தானை சேர்ந்த தன்னுடைய தீவிர ரசிகரான பசீருக்கு,  போட்டிக்கான டிக்கெட் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
 
62 வயதான முகமது பசீர் தீவிர கிரிக்கெட் ரசிகர். பாகிஸ்தானை சேர்ந்தவராக இருந்தாலும் அவரது ஆதரவை தோனிக்கும் இந்திய அணிக்கு தொடர்ந்து வழங்கி வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா- பாகிஸ்தான் மோதியப் போட்டியை பார்க்க பசீருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. இதனையறிந்த தோனி அவருக்கு உதவியுள்ளார்.

இந்தநிலையில் 2015-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலும் அவர் தொடர்ந்து இந்திய அணிக்காகவும், தோனிக்காகவும் ஆதரவு அளித்து வந்தார். அவருக்கு பல எதிர்ப்பு வந்தாலும் அதை எல்லாம் அவர் கண்டு கொள்ளவில்லை.

இதனிடையே, ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் மோதியப் போட்டியைக் காண பசீருக்கு டிக்கெட் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் தோனி. இது குறித்து முகமது பசீர் கூறுகையில், ”இந்திய அணித்தலைவர் தோனி எனக்கு நேற்று முன்தினம் நடந்த போட்டிக்கான டிக்கெட் வழங்கினார். அதேசமயம் நான் அப்ரிடியிடம் கேட்கவில்லை. அவரிடம் நான் பேசமாட்டேன். அப்ரிடிக்கு பாகிஸ்தானில் ரசிகர்கள் இருக்கலாம். ஆனால் இந்தியாவில் இருக்க வாய்ப்பு இல்லை. எங்களது அணியில் ஒற்றுமை என்பதே கிடையாது” என்று கூறியுள்ளார்.

Wednesday, February 24, 2016

விஜயகாந்த்துடன் அமெரிக்க தூதர் சந்திப்பு

சென்னையில் உள்ள இந்தியாவிற்கான அமெரிக்கா துணை தூதர் பிலிப் மின், தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சென்று சந்தித்துப் பேசினார்.
கோயம்பேட்டில் உள்ள, தேமுதிக தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் போது அமெரிக்க துணை தூதரக அதிகாரிகள், தேமுதிகவின் சுதிஷ், சந்திரகுமார், பார்த்தசாரதி ஆகியோர் உடனிருந்தனர்.

மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக, அமெரிக்க துணை தூதரக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேர்தலையொட்டி, அரசியல் கட்சி தலைவர்களை சந்திப்ப‌து வாடிக்கை என்றும் அமெரிக்க தூதர அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

பாபா அணு ஆராய்ச்சி மையத்திற்கு புதிய இயக்குநர்

பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் அணு உலைத் திட்டக் குழுவின் இணை இயக்குநரும் பிரபல விஞ்ஞானியுமான திரு. கே. என் வியாஸ் இன்று மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டார். மத்திய அரசின் அணுசக்தித் துறை செயலாளரும் அணுசக்தி ஆணையத்தின் தலைவருமான டாக்டர் சேகர் பாசுவிடமிருந்து இந்தப் பொறுப்பை அவர் பெற்றுக் கொண்டார்.
வியாஸ் பாபா அணு ஆராய்ச்சி மைய பயிற்சிப் பள்ளியின் 22 -வது குழு பட்டதாரி ஆவார். பின்னர் அவர் இந்த மையத்தின் அணு உலைப் பொறியியல் துறையின் எரிபொருள் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு பிரிவில் பணியில் சேர்ந்தார். கடந்த 36 ஆண்டுகளில் திரு. வியாஸ் அணு உலை எரிபொருள் வடிவமைப்பு மற்றும் பகுப்பாய்வில் நீண்ட அனுபவத்தைப் பெற்றார். அதனை அடுத்து அணு உலை திட்டப் பிரிவின் தலைவராக அணு உலை அமைப்பு முறைகளின் வடிவமைப்பு மற்றும் பகுப்பாய்வு அனுபவத்தையும் அவர் பெற்றுள்ளார்.

தமிழிசையை சந்தித்த அமெரிக்க தூதர்

மரியாதை நிமித்தமாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை அமெரிக்கன் கவுன்சில் ஜெனரல் பிலிப்ஸ் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

Monday, February 08, 2016

14 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சிக்கிய சிறுத்தை

பெங்களூருவில் பள்ளி ஒன்றில் புகுந்த சிறுத்தையை 14 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர், வனத்துறையினர் பிடித்தனர்.


பெங்களூருவில் ஒயிட் ஃபீல்டு Whitefield அருகே காடுகுடி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், சிறுத்தை ஒன்று புகுந்ததைக் கண்ட காவலாளி, இது குறித்து பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் அளித்தார்.  இதையடுத்து பள்ளியின் சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டதில், அதில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகியிருந்தது. இதைத் தொடர்ந்து, சிறுத்தை புகுந்தது பற்றி வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்துவந்த வனத்துறை அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, பள்ளி வளாகத்திலிருந்து, ஓடிய சிறுத்தை சுவர் மீது எகிறிகுதித்து, அருகிலிருந்த புதருக்குள் சென்று ஒளிந்துகொண்டது. சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். பள்ளியிலிருந்து தப்பிச்சென்றபோது, சிறுத்தை தாக்கியதில் 9 பேர் காயமடைந்தனர். பீதியின் காரணமாக அப்பகுதி மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.
இரவு நேரம் ஆகியதால், சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரம்காட்டினர். இறுதியில், 14 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, துப்பாக்கியால் மயக்க ஊசி செலுத்தி, சிறுத்தையைப் பிடித்தனர். இதனால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்

இருவிதமான விலையில் இணைய சேவை: டிராய் மறுப்பு - பேஸ்புக்கிற்கு பின்னடைவு..

தொலைத்தொடர்பு நிறுவனங்கள், புதிய கட்டணங்களை அறிவிக்கும் முன் டிராயிடம் ஒப்புதல் வாங்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு வழிகாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் சேவைக்கு நிர்ணயம் செய்யும் கட்டணங்கள் குறித்து தொலைத்தொடர்பு வழிகாட்டு ஆணையமான டிராய் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதன்படி, பயன்படுத்தப்படும் இணையதளங்களுக்கு தகுந்தாற் போல், மாறுபட்ட கட்டணங்களை வசூலிக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

FREE BASICS என்ற அடிப்படையில், சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் FACEBOOK  இணையதளத்தை இலவசமாக பயன்படுத்தும் முறையை அறிமுகம் செய்தது. இது போன்ற பாரபட்சம் இருக்க கூடாது என்பதற்காகவே இந்த நடைமுறையை டிராய் அறிவித்துள்ளது.

Tuesday, February 02, 2016

new

users online

மியான்மரில் புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர்தொடங்கியது

மியான்மரில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் (என்.எல்.டி) 

பெரும்பான்மை பெற்ற புதிய நாடாளுமன்ற கூட்டத் தொடர் பிப்ரவரி முதல் 

தேதி தொடங்கியது.

இதன் மூலம் ராணுவம் மட்டுமே ஆட்சி செய்யும் நடைமுறை முடிவுக்கு 

வந்துள்ளது.

மியான்மரில் கடந்த 1962-ல் ஆட்சியை ராணுவம் கைப்பற்றி யது. சுமார் 

50 ஆண்டுகால சர்வாதி கார ஆட்சிக்குப் பிறகு 2011-ல் ஜனநாயகத்தை 

நோக்கி மியான்மர் திரும்பத் தொடங்கியது. இந் நிலையில் கடந்த நவம்பர் 

மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜன 

நாயக லீக் 80 சதவீத இடங்களை கைப்பற்றியது. இதன் மூலம் அரசு 

அமைக்கும் தகுதியை அக்கட்சி பெற்றது.

இந்நிலையில் அக்கட்சி பெரும் பான்மை பெற்ற நாடாளுமன்றம் நேற்று 

முதல் அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்கியது.

மியான்மரின் தற்போதைய அதிபர் தெய்ன் செய்ன் வரும் மார்ச் இறுதியில் 

பதவி விலகுவார் என்று தெரிகிறது. அதன் பிறகே தேசிய ஜனநாயக லீக் 

ஆட்சிப் பொறுப்பேற்கும்.

என்றாலும் நாடாளுமன்றத்தில் 25 சதவீத இடங்கள் ராணுவத்துக்கு 

ஒதுக்கப்பட்டுள்ளதாலும், பாது காப்பு, உள்துறை, எல்லை விவகாரங்கள் 

உள்ளிட்ட முக்கிய துறைகள் ராணுவத்தின் வசமே இருக்கும் என்பதாலும் 

ஆட்சியில் ராணுவத்தின் கட்டுப்பாடுகள் தொடரும்.

புதிய நாடாளுமன்றத்தின் தொடக்கப் பணிகளில், புதிய அதிபரை தேர்வு 

செய்யும் பணியும் ஒன்றாகும். இந்நிலையில் சூச்சியின் மகன்கள் பிரிட்டன் 

குடியுரிமை பெற்றவர்கள் என்பதால், அரசியல் சாசனப்படி சூச்சி அதிபராக 

பதவியேற்க இயலாது. என்றாலும் அவர் திரைமறைவில் இருந்து ஆட்சி 

நடத்துவார் என்று தெரிகிறது.

ஆட்சி மாற்றம் சுமுகமாக நடைபெறுவதற்காக ராணுவ உயரதிகாரிகளை 

சூச்சி சந்தித்து பேசியுள்ளார். இதில் தாங்கள் தலையிடப் போவதில்லை 

ராணுவ அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
=
பெட்ரோல் லிட்டருக்கு 4 பைசா விலை குறைப்பு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு காரண மாக பெட்ரோல் 

விலை லிட்டருக்கு 4 பைசாவும், டீசல் லிட்டருக்கு 3 பைசாவும் 

குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப 

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 4 

டாலர் வரை விலை குறைந்துள்ளது. இதையடுத்து, பெட்ரோல் லிட்டர் 

ஒன்றுக்கு ஒரு ரூபாய் 4 பைசாவும், டீசல் ஒரு ரூபாய் 53 பைசாவும் 

குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டர் ஒன்றுக்கு 

ஒரு ரூபாயும், டீசலுக்கு ரூ.1.50-ம் உயர்த்திவிட்டது. இதன் காரணமாக, 

எண்ணெய் நிறுவனங்கள் பெயர் அளவுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 4 

பைசாவும், டீசல் 3 பைசாவும் குறைத்துள்ளது. இந்த விலைக் குறைப்பு 

ஜனவரி 31 நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகளவில் குறைந்தும் 

மத்திய அரசின் கலால் வரி விதிப்பு காரணமாக அவற்றின் முழு பயனை 

வாகன ஓட்டிகளால் முழுமையாக அனுபவிக்க முடியாததால் அவர்கள் 

மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
=
இளைஞர்களுக்கான புதிய வீட்டுக் கடன் திட்டம்
இளைஞர்களுக்கான புதிய வீட்டுக் கடன் திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி 

அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, பேசிய அவ்வங்கியின் தலைமை பொதுமேலாளர் பி.ரமேஷ் 

பாபு, பாரத ஸ்டேட் வங்கி இளைஞர்களுக்கு உதவும் வகையில் ‘எஸ்பிஐ 

ப்ளக்ஸி பே’ என்ற வீட்டுக் கடன் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது. 

இதன்படி, 21 முதல் 45 வயதுக்குள் இருப்பவர்களுக்கு குறைந்தபட்சமாக 

ரூ.20 லட்சம் கடன் வழங்கப்படும். பெண்களுக்கு 9.50 சதவீதமும், 

ஆண்களுக்கு 9.55 சதவீதமும் வட்டி வசூலிக்கப்படும். இக்கடன் பெறுபவர்கள் 

முதல் ஐந்தாண்டுகளுக்கு வட்டி மட்டும் செலுத்தினால் போதும். அதற்கடுத்த 

3 ஆண்டுகளுக்கு வட்டி மற்றும் அசல் தொகையை செலுத்த வேண்டும். 

அதற்கடுத்த 3 ஆண்டுகளுக்கு கடன் மற்றும் அசல் தொகையுடன் கூடுதலாக 

5 சதவீதம் கடன் தவணை தொகையை சேர்த்து செலுத்த வேண்டும் என்று 

கூறினார்.

மேலும், இக்கடன் தொகையை திரும்ப செலுத்த 25 முதல் 30 ஆண்டுகள் 

என கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும் அதற்கு முன்பாகக் கூட 

கடன் தொகையை முழுமையாக செலுத்தலாம் என்றும், இக்கடன் திட்டம் 

குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.sbi.co.in என்ற இணையதளம் 

மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றும் ரமேஷ் பாபு கூறினார்.
=
திருப்பூரில் 1-ம் வகுப்பு மாணவன் பள்ளியில் கொலை

கடந்த ஜன.27-ம் தேதி காலை 7.40 மணிக்கு பள்ளி வேனில் மகனை 

அனுப்பி வைத்தோம். அடுத்த ஒரு மணி நேரத்தில் ’உங்கள் மகன் கீழே 

விழுந்து காயம் அடைந்து விட்டார்’ என பள்ளித் தரப்பில் இருந்து போன் 

வந்தது. பள்ளிக்குச் சென்று பார்த்தபோது, தனியார் மருத்துவ மனைக்கு 

அழைத்துச் சென்றுவிட்ட தாகத் தெரிவித்தனர். அதன் பின், அந்த 

மருத்துவமனைக்குச் சென்ற போது, மகன் அங்கு இல்லை. அரசு 

மருத்துவமனைக்கு கொண்டு சென்று விட்டதாக தகவல் அளித்தனர். அங்கு 

பரிசோதித்த மருத்துவர், எனது மகன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக என் மனைவி, ஆசிரியையை தொடர்பு கொண்ட போது, 

உரிய பதில் அளிக்கவில்லை. ஆசிரியர்கள் முன்கூட்டியே கவனித் திருந்தால் 

இதுபோன்ற ஒரு துயரச் சம்பவமே நிகழ்ந்திருக்காது. யாரிடமும் அதிர்ந்து 

பேசாத எனது மகனை இழந்துவிட்டு பெரும் துயரத்தில் வாழ்கிறோம்.

6 வயது சிறுவனை தாக்கிய, 12-வயது மாணவர் ‘பார்டர் லைன் 

டிஸ்ஆர்டரால்’ பாதிக்கப்பட்டவராக இருக்கலாம். ஒரு சிறிய அவமான 

வார்த்தை கூட, அவர்களது மனதை பெரிய அளவில் பாதிக்கச் செய்யும். 

‘தான்’ என்ற எண்ணம் அவர்கள் மனதில் எப்போதும் இருந்துகொண்டே 

இருக்கும். ஒரு குழந்தை மட்டும் இருக்கும் வீடுகளில், நிச்சயம் இந்த பாதிப்பு 

இருக்கும்.

‘தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது’ என்ற எண்ணம் ஒவ்வொரு 

செயல்பாட்டிலும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். குழந்தையின் 3 

வயதில் தொடங்கி 5 வயது வரை இந்த எண்ணம் வளர்ந்து கொண்டே போய் 

7 வயதில் ‘பர்சனாலிட்டி டிஸ்ஆர்டராக’ மாறும்.

அதுபோன்ற சூழலில், வளரும் குழந்தைகளை பெற்றோர் அவர்களுக்கு புரிய 

வைக்க வேண்டும். வன்முறை நிறைந்த வீடியோ கேம்ஸ்களை குழந்தை கள் 

விளையாட அனுமதிக்கக் கூடாது. இன்றைக்கு பெரும்பாலான வீடுகளில் 

தாய், தந்தை இருவருமே வேலைக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள். 

இப்படி வளரும் குழந்தைகள், சின்ன விஷயங்களுக் குக்கூட எளிதில் கோபம் 

அடையும், அழத் தொடங் கும். குழந்தை செய்வதெல்லாம் சரி என்ற எண் 

ணம் கூடாது. அடித்தால், அவனுக்கும் வலிக்கும், உனக்கும் வலிக்கும் 

என்பதை புரிய வைக்க வேண்டும். மதிய உணவைக் கூட, அனைவரும் 

பகிர்ந்து சாப்பிட வேண்டும். குழந்தைகள் குழுவாக விளையாடும்போது, 

வெற்றி தோல்வி பெறும்போது இதை உணர்வார்கள். வீடு மற்றும் 

சுற்றுப்புறங்களில் பகிர்தல் மற்றும் கூடி விளையாடுதலை பெற்றோர் 

கற்றுத்தர வேண்டும். அனைத்துப் பெற்றோரும் குழந்தைகள் நன்றாகப் 

படிக்கிறார்களா என்று பார்க்கிறார்கள். மாறாக, நற்பண்புகளுடன் 

வளர்கிறார்களா என்று பார்ப்பதில்லை.

வாரம் ஒரு நாளாவது, குழந்தைகளுடன் பேசி, மகிழ்ந்து அவர்களுடன் நேரம் 

செலவழிக்க பெற்றோர் முன்வர வேண்டும் என்றார்.
=
நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு ரூ.1.41 கோடி

பிரதமர் நரேந்திர மோடியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.1.41 

கோடியாக உள்ளது. இதில் 13 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய அசையா 

சொத்தின் மதிப்பு மட்டும் 25 மடங்கு அதிகரித்து ரூ.1 கோடியாகி உள்ளது.

மோடி 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி பிரதமராக பொறுப்பேற்றுக் 

கொண்டார். கடந்த நிதியாண்டின் இறுதி (31-3-2015) நிலவரப்படி 

மோடியின் சொத்து விவரங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. 

இதன்படி 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி ரூ.1.26 கோடி யாக 

இருந்த மோடியின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் ஒட்டுமொத்த 

மதிப்பு, 2015-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி ரூ.1.41 கோடியாக அதிகரித்தது. 

இதே காலத்தில் அவரிடமிருந்த ரொக்க தொகை ரூ.38,700-லிருந்து 

ரூ.4,700 ஆகக் குறைந்தது.

மோடிக்கு சொந்தமாக மோட்டார் வாகனம், கார், விமானம், படகு, கப்பல் என 

எந்த ஒரு வாகனமும் இல்லை. அவரது பெயரில் குஜராத்தில் மட்டுமே 

வங்கிக் கணக்கு உள்ளது. டெல்லியில் இல்லை. மோடி பெயரில் கடன் 

எதுவும் இல்லை.

சுமார் 45 கிராம் எடை கொண்ட 4 தங்க மோதிரங்கள் உள்ளன. இதன் 

மதிப்பு ரூ.1.19 லட்சம் ஆகும். இதுதவிர எல் அன்ட் டி இன்ப்ரா பத்திரங்கள் 

(வரி சேமிப்பு), தேசிய சேமிப்பு சான்றிதழ்கள் (என்எஸ்சி), ஆயுள் காப்பீட்டு 

பாலிசிகள் உட்பட அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.41.15 லட்சமாக 

இருந்தது.அசையா சொத்தைப் பொறுத்த வரை, குஜராத் மாநிலம் காந்தி 

நகரில் உள்ள ஒரு குடியிருப்பு சொத்தில் 4-ல் ஒரு பங்கு உரிமை இவருக்கு 

உள்ளது.

இதில் 169.81 சதுர அடி கட்டிடத்தை உள்ளடக்கிய 3,531.45 சதுர அடி 

நிலம் இவரது பங்கு ஆகும். இந்த சொத்தை 2002-ம் ஆண்டு அக்டோபர் 

25-ம் தேதி ரூ.1,30,488-க்கு வாங்கி உள்ளார். இதன் இப்போதைய உத்தேச 

சந்தை மதிப்பு ரூ.1 கோடி என்று இதில் கூறப்பட்டுள்ளது.
=
“சேர்க்கையின்போதே தலித் மாணவர்களுக்கு விஷமும் தூக்குக் கயிறும் 

கொடுங்கள்” : ரோஹித் வெமுலா  பல்கலைக்கழக துணைவேந்தருக்கு 

எழுதிய கடிதம்
=
பூநாரைகளின் புகலிடமாகும் சென்னை!

மேற்கத்திய நடன வகைகளில் ‘ஃப்ளெமங்கோ' எனும் ஸ்பானிய நடனம் பிரசித்தி பெற்றது. லத்தீன் மொழியில் ‘ஃப்ளெம்மா' (flamma) என்று ஒரு சொல் இருக்கிறது. ‘பற்றி எரியும் தீ ஜுவாலை' என்பது இதன் பொருள்.

அந்தத் தீ ஜுவாலை காற்றில் எப்படி அசைந்தாடுகிறதோ, அப்படியான அசைவுகளில் இந்த நடன வகை இருக்கும் என்ற காரணத்தாலோ என்னவோ, லத்தீன் மொழியின் வேர் வார்த்தையை வைத்துக்கொண்டு ‘ஃப்ளெமங்கோ' என்ற சொல்லை ஸ்பானிய மக்கள் உருவாக்கினர்.

அதே வேர் வார்த்தையிலிருந்து தோன்றிய ஒரு பறவையின் பெயரும் இந்த நடன வகையின் பெயரை ஒத்திருக்கிறது. அது ‘ஃப்ளெமிங்கோ!'. அழகுத் தமிழில் அது ‘பூநாரை'. 'பூ' என்ற சொல்லுக்குச் சிவப்பு என்ற அர்த்தமும் உண்டு. பூநாரைகளின் உடலில் மெல்லிய சிவப்பு நிறம் தென்படுவதைப் பார்க்க முடியும்.

பற்றி எரியும் தீ ஜுவாலையின் சூடு எப்படியோ, அப்படித்தான் தற்போது இந்தப் பறவை மற்றும் இதன் வாழிடங்களைப் பாதுகாப்பது குறித்த விவாதங்களும் மிகவும் சூடாக நடந்துகொண்டுள்ளன!

கடந்த 26-ம் தேதி சென்னையில் ‘மெட்ராஸ் நேச்சுரலிஸ்ட்ஸ் சொசைட்டி' அமைப்பால் ஒன்பதாவது ஆண்டாக ‘பறவை பந்தயம்' நடத்தப்பட்டது. அதன் நிறைவு விழாவில் கலந்துகொண்டு பேசிய மும்பையைச் சார்ந்த சூழலியலாளர் சஞ்சய் மோங்கா ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட்டார்.

‘காடுகளுக்கெல்லாம் இனிச் செல்லத் தேவையில்லை. இனிப் பறவைகளைச் சுலபமாகக் காண்பதற்குக் குப்பை மேடுகளேபோதும்!' என்பதே அது. அவர் அப்படிச் சொன்னதற்குக் காரணமிருக்கிறது.

மும்பையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ‘பூநாரைகள் திருவிழா' நடத்தப்பட்டு வருகிறது. பல வெளிநாடுகளிலிருந்து நாரைகள் ஆயிரக்கணக்கில் இந்தியாவுக்கு வலசை வருகின்றன. இவை வழக்கமாக டிசம்பர் முதல் மே மாதம்வரை தங்கியிருக்கின்றன.

80-களின் இறுதிவரைக்கும் ஒன்று அல்லது இரண்டு நாரைகள் வந்து செல்வதே அரிதாக இருந்தது. ஆனால், 90-கள் மற்றும் அதற்குப் பிந்தைய காலங்களில் இருநூறு, இரண்டாயிரம் என அதிகரிக்கத் தொடங்கிக் கடந்த ஆண்டு சுமார் 20 ஆயிரம் பூநாரைகள் மும்பைக்கு வலசை வந்து சேர்ந்தன.

“மும்பை தானே ஓடையின் சிறுகுடாவான ‘சூவ்ரி' என்ற இடத்தில் நிறைய சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. அவை வெப்பமான கழிவு நீரை ஓடையில் திறந்துவிடுகின்றன. அதன் காரணமாக ஓடை நீரில் நைட்ரேட், பாஸ்பேட் உள்ளிட்ட வேதிப்பொருட்களின் அளவு சமன்பட்டிருக்கும். இதனால் ‘பைட்டோப்ளாங்க்டன்' (மிதவை உயிரிகள்) தோன்றுகின்றன. இவைதான் நாரைகளின் முக்கியமான உணவு.

சுத்திகரிப்பு ஆலைகள் வருவதற்கு முன்பு சுத்தமாக இருந்த ஓடையில் நாரைகள் தென்படவில்லை. ஆனால் அந்த ஆலைகள் ஏற்படுத்தப்பட்ட பிறகு அவை வெளியிடும் மாசுபாட்டால்கூட, இப்படியொரு நன்மை ஏற்பட்டுள்ளது!” என்றார் சஞ்சய் மோங்கா.

இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியை ‘தானே ஓடை பூநாரை சரணாலயம்' என்று மகாராஷ்டிர அரசு அறிவித்தது. என்றாலும், பூநாரைகள் இங்கு வருவதற்கு மோங்கா சொல்லும் காரணம் அறிவியல்பூர்வமாகவும், அதிகாரப்பூர்வமாகவும் உறுதி செய்யப்படவில்லை என்று ‘பம்பாய் இயற்கை வரலாற்று கழக'த்தின் ‘இயற்கைக் கல்வி திட்ட' அலுவலர் அதுல் சாட்டே கூறுகிறார்.

சென்னையில் முதன்முதலில் பூநாரைகள் வரத் தொடங்கிய இடம் பள்ளிக்கரணை சதுப்பு நிலம். 2008-ம் ஆண்டில் பூநாரைகள் முதலில் வந்தன என்கிறார் ‘நேச்சர் ட்ரஸ்ட்' அமைப்பின் நிறுவனர் கே.வி.ஆர்.கே. திருநாரணன். அதன் பிறகு குறைந்த எண்ணிக்கையாக இருந்தாலும் ஒவ்வோர் ஆண்டும் பூநாரைகள் அங்குத் தென்பட்டுக் கொண்டுள்ளன.

கடந்த ஆண்டு பள்ளிக்கரணைக்கு அருகில் உள்ள, பள்ளிக்கரணை அளவுக்கு மாசுபடாத பெரும்பாக்கம் சதுப்பு நிலத்திலும் பெரிய பூநாரைகள் முதன்முறையாகத் தென்பட்டதாகக் கூறும் திருநாரணன், “இதற்கு முக்கியக் காரணம், அவற்றுக்குத் தேவையான உணவும் பாதுகாப்பும் கிடைப்பதுதான்” என்கிறார்.

கடந்த 2014-ம் ஆண்டு பெரும்பாக்கத்தின் 71.85 ஹெக்டேர் அளவு சதுப்பு நிலத்தை மாநில அரசு வனத்துறையிடம் ஒப்படைப்பதற்கான அரசாணையை வெளியிடப்பட்டது. இந்த நிலத்தில் எந்த வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என்பது விதி. ஆனால், இன்றுவரையிலும் அந்த இடத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் அளவை செய்து, நிலத்தைப் பிரித்துத் தரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த இடங்களைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டுமென சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். இந்நிலையில், பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தையொட்டி வளர்ச்சிப் பணிகளும் குப்பை கொட்டுவதும் அதிகரித்து வருவதாகப் புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.

அப்படியானால், மும்பையைப் போலப் பின்னோக்கிச் செல்கிறதா சென்னை?
====
10 லட்சம் கையெழுத்துக்களை திரட்டும் முயற்சியில் முருகனின் தாயார்

ராஜிவ் கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்யுமாறு கோருவதற்கு இலங்கையில் 10 லட்சம் கையெழுத்துக்களை திரட்டும் முயற்சியில் முருகனின் தாயார் ஈடுபட்டுள்ளார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட நிலையில் சிறையில் உள்ள முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யுமாறு கோருவதற்கு இலங்கையில் 10 லட்சம் கையெழுத்துக்களைத் திரட்டும் முயற்சியில் முருகனின் தாயார் வெற்றிவேல் சோமணி ஈடுபட்டிருக்கின்றார்.

கிளிநொச்சி மாவட்டம், பளை நகரில் செய்தியாளர்களிடம் திங்களன்று அவரே இந்தத் தகவலை வெளியிட்டிருக்கின்றார்.

25 ஆண்டுகளாக சிறையில் வாடும் தனது மகன் உள்ளிட்ட 7 பேரும் தங்களின் விடுதலைக்காக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டிருந்த போதிலும், இந்திய அரசாங்கமோ அதிகாரிகளோ அவற்றை கவனத்தில் கொள்ளாதிருப்பதனால் அவர்கள் பெரிதும் கவலை அடைந்திருக்கின்றார்கள் என்று முருகனின் தாயார் சோமணி கூறினார்.

ஒரு நாட்டைச் சேர்ந்த ஒருவர் மற்றுமொரு நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால், சொந்த நாட்டு மக்கள் அவருக்காகக் குரல் கொடுப்பது உலக வழக்கம் என்று கூறிய அவர், அந்த வகையில் இலங்கையில் உள்ளவர்கள் முருகன் உள்ளிட்டவர்களின் விடுதலைக்கு உதவ முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

10 லட்சம் பேர் இலங்கையில் கையெழுத்திட்டால், அவற்றை உள்ளடக்கி ஒரு கருணை மனுவை இந்திய அரசிடம் சமர்ப்பித்து, தனது மகன் முருகன் உள்ளிட்டவர்களை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார்.

இலங்கையில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள், முருகனின் பள்ளியில் ஒன்றாகக் கல்வி கற்றறவர்கள் என பலதரப்பட்டவர்களும் தனது முயற்சிக்கு உதவி புரிய முடியும் என்றும் முருகனின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.
--