Sunday, November 15, 2015

126 மீனவர்கள் தமிழகம் வந்தனர்!

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 126 தமிழக மீனவர்கள் தாயகம் வந்து சேர்ந்தனர்.

ராமேஸ்வரம், மண்டபம், ஜெகதாபட்டினம், நாகபட்டினம் மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் இருந்து மீன் பிடிக்க சென்ற 127 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சிறை பிடித்து சென்றனர். இலங்கை கடற்படையினரின் விசாரணைக்கு பின் மன்னார், ஊர்காவல்துறை, பருத்திதுறை மற்றும் புத்தளம் ஆகிய நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் 126 பேர் சிறை வைக்கப்பட்டனர். இவர்களில் நாகபட்டினத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரை நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது.


இதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது. இதனால், சிறையில் இருந்த மீனவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் இருந்தனர். இதன்படி தீபாவளிக்கு முந்தைய தினம் மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்தது. ஆனால், கடல் சீற்றத்தின் காரணமாக மீனவர்கள் தீபாவளியன்று நாடு திரும்ப முடியவில்லை. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருந்த மீனவர்களை சந்தித்த இந்திய தூதரக அதிகாரிகள் அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளியை கொண்டாடினர்.

இதன்படி விடுவிக்கப்பட்ட 126 மீனவர்களில் ராமேஸ்வரம் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த 48 மீனவர்கள் ராமேஸ்வரத்திற்கும், எஞ்சிய 78 மீனவர்கள் காரைக்கால் துறைமுகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் 17 பேரும் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள்தான். இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட நீதிமன்றம் ஊர்காவல்துறை நீதிமன்றம் என்பதால் அங்கிருந்து காரைக்கால் துறைமுகத்திற்கு அனுப்பி வைககப்பட்டனர்.


நவம்பர் 13 அன்று இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட 126 மீனவர்களில் 48 பேர் இரவு 7 மணியளவில் ராமேஸ்வரம் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தனர். ராமேஸ்வரம் துறைமுகத்தில் மீன்துறை அதிகாரிகள், மீனவர் சங்க தலைவர்கள் தேவதாஸ், சேசுராஜ், எமரிட் மற்றும் சிறையில் இருந்து மீண்டு வந்த மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் வரவேற்றனர். 

No comments: