Tuesday, September 22, 2015

சுபிக்சா உரிமையாளரின் முன் ஜாமின் மனு தள்ளுபடி

அதிக வட்டி தருவதாக 900 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த நிதி நிறுவன அதிபர் ஆர்.சுப்ரமணியத்தின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னையை சேர்ந்த விஸ்வபிரியா முதலீட்டு நிறுவனம் அதிக வட்டி தருவதாக உத்தரவாதம் அளித்து ஆயிரக்கணக்கான பொதுமக்களிடமிருந்து 900 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடுகளை பெற்று ஏமாற்றியதாக நிறுவனங்களின் பதிவாளருக்கு கடந்த 2013ஆம் ஆண்டு புகாரளிக்கப்பட்டது. அதேபோல சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாரிடமும் பணத்தை பறிகொடுத்த பொதுமக்கள் புகாரளித்தனர். 18 மாதங்களுக்கு பிறகு ஒரு பெண் உள்ளிட்ட 6 நிர்வாகிகள் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 8-ஆம் தேதி ஜாமின் பெற்றனர்.

இந்நிலையில், விஸ்வப்பிரியா, சுபிக்ஷா உள்ளிட்ட 49 நிறுவனங்களை தோற்றுவித்து தலைமறைவாகியுள்ள ஆர்.சுப்ரமணியம் முன் ஜாமின் கோரி வழக்கு தொடர்ந்தார். அவரது கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என வேதாந்தகுமார் என்ற முதலீட்டாளர் இணைப்பு மனுத்தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின்போது, வேதாந்தகுமார் மற்றும் காவல்துறையில் சுப்ரமணியத்துக்கு முன் ஜாமின் கொடுக்கக்கூடாது என்றும், கைது செய்து விசாரித்தால் தான் முழுமையான தகவல்கள் கிடைக்கும் என்றும் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி வி.ராமசுப்ரமணியன், முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

No comments: