லெப். சங்கர்
(செல்வச்சந்திரன் சத்தியநாதன்-கம்பர்மலை)
வீரப்பிறப்பு 19-06-1961 வீரச்சாவு 27-11-1982
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்த மாவீரன். இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் கூர்ந்து கவனிக்கப் படுவதற்கு முதலாவது அத்திவாரக் கல்லாய் அமைந்த உறுதி மிக்க போராளி லெப்.சங்கர். சத்தியநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட லெப். சங்கர் 1961ஆண்டு பிறந்தவர். 1977ஆம் ஆண்டு. வீட்டில் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு அவர் பண்ணை ஒன்றில் இயங்கிக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் பாசறையை அடைந்தார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பண்டிதருடன் வந்த அவரைக் கூர்ந்து நோக்கினார். இளைஞன் ஆனால் தோற்றத்தில் சிறியவன். தலைமறைவுப் போராட்டம் என்பது மிகவும் கடினமானது. குறிவைத்த எதிரியை வீழ்த்துவதற்காக எதிரியின் கண்களில் மண்ணைத் தூவி பல நாட்கள் அலைந்து திரிய வேண்டும். நிரந்தரமாக ஓரிடத்தில் தங்க முடியாது. நேரத்திற்கு உணவு கிடையாது. அல்லது பல நாட்கள் உணவின்றியே இருக்க வேண்டும். இவற்றை எல்லாம் தாங்கும் மனோபலம் சிறுவனுக்கு இருக்குமா?
தலைவர் பிரபாகரன் கூற்றுப்படி படிப்பைத் தொடர்வதற்காக வீடு திரும்புகிறான் சத்தியநாதன். 'ஏதோ அறியாதவன். சில நாட்கள் சுற்றி விட்டு வீடு வந்து விட்டான். இனி ஒழுங்காகப் படிப்பைத் தொடர்வான்" என இவரது பெற்றோர் எண்ணினர். ஆனால்இ சத்தியநாதனின் உள்ளத்து உறுதி கலையவில்லை. தானும் ஒரு போராளியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்கிறான். இடைப்பட்ட காலத்தில் போராட்டத்திற்கு உறுதுணையாக சாரதிப் பயிற்சி பெறத் தீர்மானித்து அதில் வெற்றியும் பெற்று விடுகிறான்.
1978ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நாள் இரவு மீண்டும் தம்முன் வந்து நின்ற சத்தியநாதனை ஏறிட்டனர் ஏனைய போராளிகள். அவர்கள் முகங்களில் புன்னகை. அதில் சத்தியநாதனின் உறுதி புலப்படுகிறது. சத்தியநாதனுக்கு தலைமறைவு வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் புனைப்பெயர் சூட்டப்படுகிறது. சத்தியநாதன் சங்கராக விடுதலைப் புலியாக மாறினான். சங்கரின் உள்ளத்தைப் போலவே உடலும் உறுதி பெற்றது. ஓயாது உழைத்தான். எதிலும் ஆர்வம் எப்போதும் சுறுசுறுப்பு. தோழர்கள் ஒன்றுகூடி கருத்தரங்குகள் வைப்பதும்இ திட்டங்கள் தீட்டுவதும்இ விவாதிப்பதுமாக... சங்கரின் அரசியல் அறிவு விரிந்தது. வளர்ச்சி பெற்றது.
இயக்கத்தில் ஆரம்பகாலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலருக்கு மட்டுமே ஆயுதப் பயிற்சி வழங்கப் பட்டது. ஓய்வு நேரங்களில் ரிவோல்வரில் குறி பார்ப்பதிலும் ஆங்கில சினிமாப் படங்கள் மூலம் தன் ஆயுத அறிவை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டினான் சங்கர். 1979இல் சிறிய ஆயுதங்களில் குறிபார்த்துச் சுடும் பயிற்சி சங்கருக்கு வழங்கப் பட்டது. சங்கருக்கு குறி பார்த்துச் சுடும் பயிற்சியிலிருந்த திறமையால் தலைவரிடமிருந்து வெகுமதியாக 0-45 ரிவோல்வர் ஒன்று கிடைத்தது.
அது சங்கருக்கு கிடைத்த பின் அதை வைத்து மேலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டான். இரு கரங்களாலும் குறி பார்த்துச் சுடுவதில் தன்னிகரற்றவனாயினான். சிறந்த ஆயுதப் பராமரிப்புஇ தினசரி துப்பரவாக்கப் பட்டு பளபளத்தது ரிவோல்வர். 1979 வைகாசியிலே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வதாக அறிவித்திருந்த அரசுஇ விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்குடன் தேடுதல் வேட்டைகளை விஸ்தரித்தது. சங்கரின் பெயரும் எதிரிக்குத் தெரிந்து விட்டது. அவனும் தேடப் பட்டான். 1981ஆம் ஆண்டு நவீன ரக ஆயுதங்களை இயக்கும் பயிற்சி சங்கருக்கு வழங்கப் பட்டது. சங்கர் தாக்குதல் படைப் பிரிவில் ஒருவனானான்.
1982ஆடி 2ஆம் நாள் முதல் முதலாக எதிரியுடன் ஆயுதம் தாங்கிய மோதலில் சங்கர் ஈடுபடப் போகும் நாள்இ திட்டமிட்டபடி போராளிகள் எழுவர் நெல்லியடியில் ரோந்து வந்த பொலிஸ் ஜீப் மீது தாக்குதல் தொடுத்தனர். சங்கரிடம் ஒரு ரிவோல்வர்இ வேறொரு போராளியிடம் ஒரு இயந்திரத் துப்பாக்கி இதைத்தவிர வேறு ஆயுதங்கள் இல்லை புலிகளிடம். முதலில் எதிரி வாகனச் சாரதி சுட்டு வீழ்த்தப்பட்டான். சங்கரின் நீண்ட காலக் கனவு நனவாகத் தொடங்கியது. வெற்றிகரமான தாக்குதலில் எதிரிகளில் நால்வர் கொல்லப் பட்டனர். அவர்களின் ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டன. விடுதலைப் புலிகள் எந்தவித இழப்புக்களுமின்றி வெற்றியுடன் மீண்டனர்.
1982இல் தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பிற்காக முதன் முதலாக இரு மெய்ப் பாதுகாவலர்கள் தெரிவு செய்யப் படுகின்றனர். அவர்களில் ஒருவனாக சங்கரும் தெரிவு செய்யப் பட்டிருந்தான். இக் காலகட்டத்தில் நவீனரக ஆயுத வரிசையில் இரண்டு ஜீ-3க்கள் மட்டுமே இயக்கத்திடம் இருந்தன. இவற்றில் ஒன்று சங்கருக்கு வழங்கப் படுகின்றது. இராணுவத் தாக்குதல்களில் மட்டுமல்ல மக்களை அரசியல் மயப்படுத்தும் நடவடிக்கைகளிலும் சங்கர் ஈடுபட்டான். புலிகளை வலை வீசித் தேடும் நடவடிக்கைகளுக்கு ஊடாகவே இவற்றையெல்லாம் மேற்கொள்ள வேண்டியிருந்தது.
கூலிப்படைகளின் தேடுதல் வேட்டை மும்முரமாகின்றது. புலிகள் இயக்க ஆதரவாக இருந்த விரிவுரையாளர் ஒருவரின் வீட்டில் சங்கர் இதை மோப்பம் பிடித்து விடுகிறது கூலிப்படை.... வீடு முற்றுகை இடப்படுகிறது. முற்றுகை முற்று முழுதான முற்றுகை. சங்கரின் கை இடுப்பிலிருந்த ரிவோல்வரின் பிடியை இறுகப் பிடிக்கின்றது. தப்பியோடத் தீர்மானிக்கின்றான் சங்கர். கூவிப் பாய்ந்த ரவைகளில் ஒன்று சங்கரின் வயிற்றைப் பதம் பார்த்து விடுகிறது. தரையை நனைக்கின்றது குருதி. உடல் சோர்ந்தாலும் உள்ளம் சோரவில்லை. எதிரியின் கையில் தனது ரிவோல்வர் கிடைத்து விடக்கூடாது. எப்படியும் தன் தோழர் கையில் அதனை ஒப்படைத்து விட வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தை உறுதியாக்க கிட்டத்தட்ட இரண்டு மைல் ஓடியிருப்பான். தெரிந்த ஒருவரின் உதவியுடன் நண்பர்கள் இரகசியமாகக் கூடும் இடத்தை அடைந்தான். ரிவோல்வரை தோழர்களிடம் கையளித்து விட்டு உணர்விழந்தான் சங்கர். தோழர்கள் அவனைத் தாங்கிக் கொள்கிறார்கள்.
முற்றுகையில் அகப்பட்ட புலி கைநழுவி விட்டது என்ற ஆத்திரம் அரச படையினருக்கு. ஆதரவாளர் கைது செய்யப்பட்டார். தேடுதல் முடுக்கி விடப்பட்டது. தெருவெங்கும் இராணுவம். காயமுற்றவனை வெளியில் கொண்டு செல்ல முடியாத நிலை. இரத்த வாந்தி எடுத்த சங்கர் துவண்டு போனான். ஐந்து நாட்கள் கடந்தன. சங்கரை இந்தியா கொண்டு செல்வதற்காக மோட்டார் படகு தயார் செய்யப்பட்டது. பலத்த சிரமத்தின் மத்தியில் சங்கர் ஒருவாறு கரை சேர்க்கப்பட்டான். அங்கும் போதிய வைத்தியம் செய்ய முடியாத நிலை. உடல்நிலை நாளுக்கு நாள் நலிவடைந்தது.
27-11-1982 அன்று விடுதலைப் புலிகளால் மறக்கவே முடியாத நாள். தமிழீழ மக்கள் மனதில் உத்வேகத்தை ஊட்டிய நாள். ஆயிரமாயிரம் போராளிகளைத் தன்னகத்தே கொண்டு விடுதலைப் போர் வீறுநடை போட வித்திட்ட நாள் அன்றுதான். தலைவர் பிரபாகரனின் மடியில் அவர் கைகளை இறுகப்பற்றி 'தம்பி" என்றவாறே சங்கர் உயிர் துறந்தான். தலைவரின் விழிகளை நிறைத்த கண்ணீர் விழுந்து தெறித்து அவ் வீரனுக்கு அஞ்சலி செலுத்தியது.தாயக மீட்புக்கான உரிமைப் போரில் வீரச்சாவடைந்த முதற்புலி லெப். சங்கரின் உடல் தமிழீழத்திற்கு வெளியே இந்தியாவில் தகனம் செய்யப் பட்டது. இவனது வீரச்சாவு கூட மக்களுக்கும் புலிகளுக்கும் இடையே இருந்த இணைப்பு இறுகிய பின்னரே வெளியே தெரியப் படுத்தப்பட்டது.
இம் மாவீரனின் வழித்தடத்தில் நடந்த ஆயிரக்கணக்கான போராளிகளில் 16000க்கு மேற்பட்ட போராளிகள் விடுதலைப் போருக்கு தம்மை வித்தாக்கி உள்ளனர். இம் மாவீரர்களை எல்லாம் நினைவு கூரும் நாளாக லெப். சங்கர் வீரச்சாவடைந்த தினம் மாவீரர் நாளாக தமிழீழ மக்களால் அனுட்டிக்கப் பட்டு வருவதுடன் அவர்களின் இலட்சியப் பயணம் பல வெற்றிகளைப் பெற்று உறுதியுடன் தொடர்கின்றது.
நன்றி : மண்ணோசை
நன்றி எரிமலை நவம்பர் 2000