Wednesday, July 24, 2013

நதியோடும் பாதையில்...(5)

தமிழறிஞர்களின் அடக்கமும் ஆர்ப்பரிப்பும்



தமிழறிஞர் தமிழண்ணல், 20.07.2013 ஆம் நாளிட்ட தினமணியில், 'மொழிக் கொள்கையில் ஏற்பட்ட குழப்பங்கள்' என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அக்கட்டுரையில் தமிழ் நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்தும், பெரியார், அண்ணா ஆகியோரின் மொழிக் கொள்கை குறித்தும் விமர்சனங்கள் இடம் பெற்றுள்ளன.

தமிழண்ணல், வாழும் தமிழறிஞர்களில் குறிக்கத்தக்க ஒருவர். தமிழ் ஆய்விலும், தமிழ் உணர்விலும் மூத்த முன்னோடி. என் போன்றவர்களுக்கு ஆசிரியராகக் கருதத் தக்கவர். எனினும், அவர் கட்டுரையில் இடம்பெற்றுள்ள சில மறைப்புகளையும், வெளியாகியுள்ள கருத்துகளுக்கான சில மறுப்புகளையும் நாம் பதிவு செய்தே ஆக வேண்டியுள்ளது.


முதலில் அக்கட்டுரையில் கூறப் பெற்றுள்ள  சில செய்திகளைக் காணலாம்:
                   
"இந்தியை எதிர்த்து மாபெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தி, மாநில ஆட்சி கைப்பற்றப்பட்டது. இது ஆங்கிலத்தை ஆதரிக்கும் இயக்கமும் ஆயிற்று."
                 
"ஆரிய மாயையிலிருந்து தமிழரை விடுவிக்க  முயன்ற அண்ணாவும், ஆங்கில மாயையில் தமிழரைச் சிக்க வைக்க வேண்டியவராயினார். இதனால் ஆங்கில மோகம், திராவிட இயக்கத்தில் தொடரலாயிற்று."
                   
"பெரியாரும் ஆங்கிலத்தையே  கல்வி மொழியாக்கப் பெரிதும் வாதிட்டார்."
                   
"ஓர் இந்திய மொழிக்கு அடிமை ஆகாமல் காத்த இது, ,அயல் நாட்டு மொழிக்கு, நம்மை அடிமை ஆக்கிய மொழிக்கு, மீண்டும் அடிமை ஆக்கும் நிலைக்குத் தள்ளிவிட்டது."

- என்பன போன்ற செய்திகளைத் தன் கருத்தாகக் கட்டுரை ஆசிரியர் வெளியிட்டுள்ளார். இவற்றின் மூலம், ஒரு மறைமுகமான திராவிட இயக்க எதிர்ப்பு முன் வைக்கப்பட்டுள்ளது. அதனால்தான், தினமணி வைத்தியநாத ஐயரும் அதனைத் தன் நாளேட்டில் மகிழ்ந்து வெளியிட்டுள்ளார். 

இக்குற்றச்சாட்டுகள் மிகப் பழையன. தவறான பார்வை உடையன. ஏற்கனவே பலமுறை விடைகளால் முறியடிக்கப் பட்டன. ஆனாலும், திரும்பத் திரும்ப அவை முன்வைக்கப்படும்போது, அவற்றிக்கான விடையை நாமும் எழுத வேண்டியுள்ளது. 

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில், இந்திக்கு மாற்றாகத்தான் ஆங்கிலம் நிறுத்தப்பட்டதே அல்லாமல், ஒருநாளும் தமிழுக்கு மாற்றாக ஆங்கிலம் முன் வைக்கப்படவில்லை. அன்று எழுந்த கேள்வி, இந்தியா, ஆங்கிலமா என்பதுதான். இரண்டும் வேண்டாம், தமிழ் போதும் எனச் சொல்லும் சூழல் அன்று இல்லை. இந்திய அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து மொழிகளும் தேசிய மொழிகளாக ஏற்பிசைவு பெற வேண்டும் என்று அண்ணா பலமுறை கூறியுள்ளார். ஆனால் அதற்கான காலம் அன்று கனிந்திருக்கவில்லை. அதனால்தான் இந்திக்கு மாற்றாக ஆங்கிலத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

திராவிட இயக்கத்தை எப்போதும் குறை சொல்வதில் பேரார்வம் கொண்டுள்ள  தமிழறிஞர்களில் பலர், 1970களில், தனித்தமிழ் இயக்கத் தலைவர்கள் பலரே அக்கருத்தைத்தான் கொண்டிருந்தனர் என்பதை வெளிப்படுத்துவதில்லை. 
திரவிட மொழிநூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர், தன் இறுதிக் காலம் வரையில் (1981), இருமொழிக் கொள்கையை ஏற்பவராகவே இருந்தார்.  உலக அறிவு பெற ஆங்கில அறிவு தேவை என்பதே அவருடைய கருத்தாக இருந்தது. 'இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?' என்னும் தன் நூலில், இந்தியா முழுமைக்கும் ஆங்கிலம், ஆட்சியும், கல்வியும், இணைப்பும் பற்றிய பொது மொழியாக இருப்பது தலை சிறந்த திட்டம் ஆகும்" என்று குறிப்பிட்டுள்ளார். 

பாவலரேறு பெருஞ்சித்திரனார், 1970 ஆம் ஆண்டு தான் எழுதியுள்ள 'கோடரிக் காம்புகள்' என்னும் கவிதையில், "அறிவியலை அறிவதற்கும் அகிலமெல்லாம் சுற்றிவரற்கும்" ஆங்கிலமே தேவை என்று எழுதுகின்றார். 1967இல் எழுதிய பாடலொன்றில்,
  
"மும்மொழித் திட்டம் மூளையைக் குழப்பும்
தம்மனம் விரும்பின் தனித்தனி பயில்க!
தமிழர் தமிழையும் ஆங்கில மொழியையும் 
அமிழ்தெனக் கற்க ஆக்கம் பெறுகவே"

என்று தன் கருத்தை அழுத்தமாக எழுதியுள்ளார். 1967ஆம் ஆண்டுச் சூழல் அவ்வாறிருந்தது என்பதே உண்மை. இப்பாடல் வரிகள் பெருஞ்சித்திரனாரின் கனிச்சாறு கவிதைத் தொகுதியில் உள்ளன.

பாவாணரையும், பெருஞ்சித்திரனாரையும் யாரும் குறை கூறுவதில்லை. பெரியார், அண்ணா, கலைஞரைக் குறை கூறாமல் இருப்பதுமில்லை. 
.
தமிழ் வழிக் கல்வி பற்றி ஆயிரம் முறை பேசியும், எழுதியும், அறிவுறுத்தியும் பலன் இல்லை என்று கூறிக் கவலைப் படுகின்றார் தமிழண்ணல். ஆனால் 1970 ஆம் ஆண்டே கல்லூரி வரையில் தமிழ் வழிக் கல்வியைக் கொண்டுவர முயன்ற கலைஞர் பற்றி ஒரு குறிப்பையும் கட்டுரையில் காண முடியவில்லை. 

அறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்குப் பின், முதல்வராக இருந்த தலைவர் கலைஞர், 1970 நவம்பர் 30 அன்று, இனிமேல் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் தமிழே பயிற்று மொழி என்னும் சட்ட முன்வடிவை முன்மொழிந்தார். அதனை ம.பொ.சி வழிமொழிந்து பேசினார்.  ஆனால் அதற்குக் காங்கிரஸ் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. சட்டமன்றத்திலேயே, காங்கிரஸ் உறுப்பினர் விநாயகம், அதனைக் கேலி செய்தார். முதல்வர் கலைஞர் தமிழ் வழிக் கல்விக்காகப் பரிந்து பேசினார். அவ்விவாதங்களை இன்றும் சட்டமன்றக் குறிப்பில் நம்மால் காண முடியும். இன்றைய 'தமிழ்த் தேசியத் தலைவர்' நெடுமாறன் அவர்கள்தான், 10.12.1970 அன்று மதுரையில் மாணவர் மாநாடு கூட்டி, அச்சட்ட முன்வடிவை எதிர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் மாணவர்களைத் தூண்டினார். இவற்றை எல்லாம் யாரேனும் மறுக்க முடியுமா?

பெரியாரின் கல்விக் கொள்கை தவறு என்று தமிழண்ணல் குறிப்பிடுகின்றார். ஆனால் அன்று, தமிழ் வழிக் கல்வியை வரவேற்றுத் தலையங்கம் எழுதியவர் பெரியார்தான். 01.12.1970ஆம் நாளிட்ட 'விடுதலை' நாளேட்டில், 'நமதுகடமை' என்று தலைப்பிட்டு, அதனை வரவேற்று எழுதியுள்ளார். 

இத்தனை உண்மைகளையும் மறைத்துவிட்டு, வைத்தியநாத ஐயரின் விருப்பத்திற்கேற்ப, தமிழண்ணல் போன்ற அறிஞர்கள் கட்டுரை எழுதலாமா? சரி போகட்டும், 2006 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன், தமிழ் நாட்டுப் பள்ளிகள் அனைத்திலும் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயப் பாடம் என்று கலைஞர் அரசு அறிவித்ததே, அதனை எங்கேனும் தன் கட்டுரையில் பேராசிரியர் குறிப்பிட்டிருக்க வேண்டாமா? அரசு பொறுப்பு ஏற்றவுடன் பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட முதல் அரசு ஆணையே அதுதான் என்கிறார், அன்றைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு!

பாராட்ட வேண்டியவைகளைப் பாராட்ட ஏனோ மனம் வரவில்லை. கண்டிக்க வேண்டியவைகளையேனும் கண்டிக்க வேண்டாமா? ஜெயலலிதா ஆட்சி வந்தவுடன், திருவள்ளுவர் படத்தை ஒட்டிகளை (stickers) ஒட்டி மறைத்தார்களே, அச்செயலை எத்தனை தமிழ் அறிஞர்கள் கண்டித்தனர்? இந்தக் கட்டுரையில் கூட, அரசுப் பள்ளிகளில் ஆங்கில வகுப்புகளைத் திறந்து, மறைமுகமாகத் தமிழ்க் கல்வியை அழிக்கும் முயற்சியில் ஜெயலலிதா அரசு ஈடுபட்டுள்ளதே, அதனை எங்கேனும் தமிழண்ணல் கண்டித்துள்ளாரா?

நம் தமிழறிஞர்கள் தமிழை மட்டுமன்று, எந்த ஆட்சியை எதிர்த்து வீராவேசமாகப் பேசலாம், எந்த ஆட்சியை எதிர்த்து வாயைக் கூடத் திறக்கக் கூடாது என்பதையும் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளனர்!

Tuesday, July 23, 2013

சசிகலாவை வெளியேற்றிவிட்டுதான் சோ வந்து உட்கார்ந்துவிட்டாரே! – சுபவீ விளாசல்

ஜெயலலிதா அவர்களே… ஆறு மாத காலமாகிவிட்டது… நீங்கியதா மின்வெட்டு? – சுபவீ விளாசல்
சென்னை: நான் பதவிக்கு வந்தால் ஆறு மாதங்களில் மின்வெட்டே இல்லாத மாநிலமாக்குவேன், தமிழகத்தை என்றாரே ஜெயலலிதா. நின்றுவிட்டதா மின்வெட்டு?, என்று கேள்வி எழுப்பினார் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன்
தமிழகத்தில் பற்றி எரியும் மூன்று முக்கிய பிரச்சினைகளை முன்வைத்து,  ‘அணை – உலை – விலை விளக்கப் பொதுக்கூட்டம்’ எனத் தலைப்பில் சமீபத்தில் அம்பத்தூரில் பொதுக்கூட்டம் நடத்தியது திராவிட இயக்கத் தமிழர் பேரவை.
இந்தக் கூட்டத்தில் சுப வீரபாண்டியன் பேசியதாவது:
”தலைப்பைப் பார்த்துவிட்டு ‘இது என்ன விடுகதையா?’ என்று கேட்கிறார்கள். ‘இல்லை…. இந்த நாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டிய கதை’. பெரியாறு அணையிலே இருக்கிற நீர் நமக்கு வேண்டும் என்று கேட்கிறோம். தர மறுக்கிறார்கள். கூடங்குளத்திலே அணு உலை வேண்டாம் என்கிறோம். தந்தே தீருவோம் என்கிறார்கள்.
‘சுண்ணாம்புக் காரையால் கட்டப்பட்டதால், பெரியாறு அணை பலவீனமானது’ என்று, அதை இடிப்பதற்கு காரணம் சொல்கிறார்கள். சிமென்ட் காரையை விடவும் சுண்ணாம்புக் காரை பலவீனமானதுதான். ஆனால், ஒரு உண்மை என்ன தெரியுமா? நாள் ஆக ஆக சிமென்ட் இளகும்; சுண்ணாம்பு இறுகும்.
பொருந்த பொய் சொல்லுங்கப்பா…
‘பூகம்பம் வந்தால் பெரியாறு அணை உடைந்துவிடும். எனவே, பக்கத்திலேயே இன்னொரு அணை கட்டப் போகிறோம்’ என்றும் ஒரு காரணம் சொல்கிறார்கள். அம்பத்தூர் பேருந்து நிலையத்துக்கு வரும் பூகம்பம் அம்பத்தூர் ரயில் நிலையத்துக்கு வராதா? நான்கூட இதுகாலம்வரை கேரளச் சகோதரர்களை புத்திசாலிகள் என்றல்லவா நினைத்திருந்தேன். சொல்லுகிற பொய்யைக்கூட பொருந்தச் சொல்லத் தெரியவில்லையே!
மின்சாரத்தை பிரித்துத்தரும் மத்திய அரசு நீரை பிரித்துத் தர மறுப்பதேன்?
நெய்வேலியில் உற்பத்தி ஆகிற மின்சாரத்தை இன்றைக்கும் கர்நாடகா, கேரளாவுக்குப் பிரித்துக் கொடுக்கிறது மத்திய அரசு. மாநிலங்களுக்கு இடையே மின்சாரத்தைப் பகிர்ந்து அளிக்கும் உரிமை மத்திய அரசுக்கு இருக்கிறது என்றால், நீரைப் பகிர்ந்து அளிக்கும் உரிமை இல்லையா? இல்லை என்றால், நீ விலகிக் கொள். எங்கள் உரிமையை நாங்கள் காப்பாற்றிக் கொள்கிறோம்.
இந்தியாவின் மின்சாரத் தேவையில், வெறும் 2.7 சதவிகிதம் மட்டுமே அணு உலையில் இருந்து பெறப்படுகிறது. ஆனால், அதற்காக செலவழிக்கப்படும் தொகையோ மிகஅதிகம். அணு உலையால் வரும் ஆபத்துக்களோ அதை விடவும் அதிகம். ஆனால், ‘கூடங்குளம் அணு உலை மிகவும் பாதுகாப்பனது. 6.5 ரிக்டர் வரை பூகம்பம் வந்தாலும் ஒன்றும் ஆகாது’ என்கிறார்கள். அப்படி என்றால் ’6.6 ரிக்டர் அளவில் பூகம்பம் வந்தால், மக்கள் அழிந்து விடுவார்கள்’ என்றுதானே அர்த்தம்.
அணுக் கழிவுகளை நாடாளுமன்றத்தில் வைக்கலாமா?
மத்திய அமைச்சர் நாராயணசாமியும் ‘அது ரொம்பவும் பாதுகாப்பானது’ என்கிறார். அவ்வளவு பாதுகாப்பானது என்றால், இந்த அணு உலைக் கழிவுகளை எல்லாம் ஒரு பீப்பாயில் அடைத்து நாடாளுமன்றத்தின் நடுக்கூடத்தில் வைத்து விடலாமா? உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே… அணு உலை பாதுகாப்பானது அல்ல.
இதைத் தொடங்கிய ரஷ்யாவிலேயே இன்று அணு உலை கிடையாது. ஜெர்மனியில் அனைத்து அணு உலைகளும் மூடப்பட்டு விட்டன. ஐரோப்பிய நாடுகளிலும் இல்லை. தொழில் நுட்பம் மிகுந்த ஜப்பானின் புகுஷிமோ அணு உலை விபத்துக்குப் பிறகு ஏற்பட்ட கதிர் வீச்சின் பாதிப்பு இன்னும் பல தலைமுறைகளைப் பாதிக்கும் என்கிறார்கள். ஜப்பானை விடவா நமக்குத் தொழில் நுட்பம் தெரியும்?
மறந்து போன விலையேற்றம்
அணையிலும் உலையிலும் இந்த விலை ஏற்றத்தை கொஞ்சம் மறந்துபோய் விட்டார்கள் நம் மக்கள். செம்மொழி நூலகம், புதிய தலைமைச் செயலகம், அண்ணா நூலகம் ஆகியவற்றை எல்லாம் இந்த அம்மையார் இழுத்து மூடியபோதும் தமிழனுக்குக் கோபம் வரவில்லை.
13,000 மக்கள் நலப்பணியாளர்களை தெருவில் நிறுத்திய போதும்கூட ‘அது அவர்களது பிரச்னை’ என்றுதானே இருந்தான். எப்போது அவனுக்கு கோபம் வந்தது? காலையில் எழுந்து பால் வாங்கும்போதுதானே கை சுட்டது. பேருந்திலே ஏறி உட்காரும்போதுதானே இருக்கை சுட்டது. வாக்களித்த மக்களுக்கு விலையேற்றம், வரிச்சுமை, மின்வெட்டைத் தந்திருக்கிறது தமிழக அரசு. ஆனால், வாக்களிக்காத யானைகளுக்கு குதூகலம், கொண்டாட்டம், புத்துணர்வைத் தந்திருக்கிறது.
ஆறு மாதங்களாகிவிட்டதே…
‘நான் ஆட்சிக்கு வந்த ஆறு வார காலத்திலேயே, தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாக்குவேன்’ என்றாரே அம்மையார். ஆறு மாத காலம் ஆகிவிட்டதே…! சென்னையில் இருப்பவர்கள் ஒருமணி நேர மின்வெட்டோடு தப்பித்தீர்கள். மற்ற நகரங்களில் தினமும் ஐந்து மணி நேரம். எந்தப் பத்திரிகையாவது இதைக் கேட்டதா?
‘இந்த ஆட்சி மோசமான ஆட்சி’ என்று விஜயகாந்தே சொல்கிறார். இதிலிருந்து நமக்குப் புரிகிற ஒரே உண்மை…. விஜயகாந்துக்கே புரிந்து விட்டது என்றால், கடைசித் தமிழனுக்கும் புரிந்து விட்டது’ என்றல்லவா பொருள்!
கூடிக்கலந்து முடிவெடுக்கும் ஜனநாயகம் எல்லாம் அம்மையாருக்குத் தெரியாது. மக்கள் நலப்பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புவது என்றாலும் சசிகலாவை வெளியேற்றுவது என்றாலும் ஒரே நொடிக்குள் முடிவெடுப்பதுதான் அவரது ஜனநாயகம்.
சண்டையா சண்டைக்காட்சியா…
அவர்களுக்குள் உண்மையான சண்டையா? அல்லது சண்டைக் காட்சியா? என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அது அவர்களது உட்கட்சிப் பிரச்னை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், சசிகலாவை வெளியேற்றிவிட்டு போயஸ் தோட்டத்துக்குள் சோ வந்திருக்கிறாரே. அது கட்சிப் பிரச்னை அல்ல; இனப் பிரச்னை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!”
இவ்வாறு சுபவீ  பேசினார்.

நன்றி http://www.envazhi.com/

நதியோடும் பாதையில்...(2)



குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

மாநகரத்தில் வாழ்வோர் படித்தவர்கள், அரசியல் பார்வை உடையவர்கள் என்றும், சிற்றூர்களில் வாழும் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வோ, ஆழ்ந்த படிப்போ இருக்க முடியாது என்றும் பொதுவான ஒரு கருத்து உண்டு. எனக்குள்ளும் கூட அப்படி ஒரு எண்ணம் இருந்துள்ளது என்பதை அண்மையில் நான் அறிந்து கொண்டேன்.  அந்த எண்ணத்தை அறந்தாங்கிக்கு அருகில் உள்ள மறமடக்கி என்னும் கிராமம் சில நாள்களுக்கு முன் தகர்த்து எறிந்தது .

தலைவர் கலைஞர் அவர்களின் 90ஆவது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு எங்கும் பொதுக்கூட்டங்கள், நலத்திட்ட உதவி நிகழ்வுகள் நடந்து வருகின்றன. நானும் பல கூட்டங்களில் கலந்து கொண்டேன். அப்படித்தான், புதுக்கோட்டை மாவட்டத் தி.மு.கழகச் செயலாளர் பெரியண்ணன் அரசு அவர்களின் அழைப்பை ஏற்று, 14.06.2013 அன்று அறந்தாங்கிக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூருக்குப் பேசச் சென்றேன். அந்த ஊரின் பெயர் மறமடக்கி. அதற்கு முன் அந்த ஊருக்கு நான் சென்றதில்லை. அப்படி ஒரு ஊர் பற்றிக் கேள்விப்பட்டது கூட இல்லை. அறந்தாங்கி - ஆலங்குடிப் பாதையில், அறந்தாங்கியிலிருந்து 19 கி.மீ. தொலைவில் அந்த ஊர் உள்ளது. 


தனித்துச் செல்லும் அப்பாதையில் செல்லும்போது, அழைத்துச் சென்ற நண்பர்களிடம், இவ்வளவு உள்ளே இருக்கும் ஒரு ஊரில் கூட்டம் போட்டிருக்கின்றீர்களே, உரை கேட்க யார் வருவார்கள் என்று கேட்டேன். வந்தாலும் என் மொழி நடை அங்கு எடுபடுமா என்ற ஐயமும் இருந்தது.  நண்பர்கள் எனக்கு ஆறுதல் கூறி அழைத்துச் சென்றார்கள். 

என்ன வியப்பு! நகரங்களில் கூடக் கூடாத பெருங்கூட்டம் அங்கு கூடியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நான் ஆற்றிய உரையை ஊரே திரண்டு நின்றுகேட்டது. என் மொழி நடை அவர்களுக்கு உகந்ததாக இருந்தது. ரசித்துக் கேட்டனர். நான் வெட்கிப் போனேன்.அந்தக் கூட்டத்தை அப்பகுதியின் ஒன்றியச் செயலாளர் மெய்யநாதன் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த ஊரில் பள்ளிக்கூடம் உள்ளதா என்று கேட்டேன். உயர்நிலைப்பள்ளி உள்ளது என்றும், இந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் 172 மாணவர்கள் தேர்வு எழுதி, 172 பேரும்  வெற்றி பெற்றுள்ளனர் என்றனர். 500க்கு 450க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலருக்கு நீங்கள்தான் பரிசு கொடுக்கப் போகின்றீர்கள் என்றும் கூறினர். திராவிட இயக்கத்தின் நூற்றாண்டுக் கனவு நனவாகிக் கொண்டிருக்கிறது என்று எண்ணிப் பெருமையில் பூரித்தேன். 

நல்ல சாலையில் மகிழுந்தில் சென்ற எனக்கு உறைக்கும்படி  அய்யா அறந்தாங்கி ராசன் அவர்கள் இன்னொரு செய்தியையும் கூறினார்கள். அந்த ஊருக்கு 50 ஆண்டுகளுக்கு முன், நம் இனமானப் பேராசிரியர் மாட்டு வண்டியில் வந்து உரை ஆற்றியிருக்கிறாராம். 


அடடா, சிற்றூர் மக்களின் அரசியல் அறிவு குறித்துக் குறைத்து மதிப்பிட்டு விட்டோமே என்ற உறுத்தல் எனக்குள் நெடுநேரம் இருந்தது. 'அக்கினியில் குஞ்சென்றும், மூப்பென்றும் உண்டோ என்ற பாரதியின் வரிகளை நினைத்துக் கொண்டேன்.

                                         ■ ■ ■ ■

தமிழருவி மணியனின் 
    'வீர சபதம்'


ஈ.வே.கி சம்பத் தேசிய சிந்தனையாளர் பேரவை சார்பில் கடந்த 8ஆம் தேதி (08.06.2013) அன்று சென்னையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழருவி மணியன், டி.கே. ரங்கராஜன், நடிகர் ராதா ரவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் ஒவ்வொருவரும் என்னென்ன பேசினார்கள் என்பதைப் புகைப்படத்துடன்  நக்கீரன் (19-21, ஜூன் 2013)  இதழ் வெளியிட்டுள்ளது.

அக்கூட்டத்தில் தமிழருவி  மணியன் ஒரு புதிய செய்தியை வெளியிட்டுள்ளார். 'அ.தி.மு.க வின் முக்கியப் பொறுப்பாளர்கள் இரண்டு பேர்' அவரைப் பார்க்க வந்தனராம். அவருடைய பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் அம்மாவிற்கு ரொம்பப் பிடிக்கும் என்று கூறினார்களாம். அத்தோடு நின்றிருந்தால் சிக்கலில்லை. அ.தி.மு.க.வில் இணைந்து கொள்கிறீர்களா என்றும் கேட்டார்களாம். அவரும் உடனே சரி என்று கூறி விட்டாராம். வந்தவர்களுக்கே  அவருடைய விடை வியப்பாக இருந்ததாம். ஆனாலும் அதற்கு அவர் ஒரு நிபந்தனை விதித்தாராம். இணைந்த பின், முதலமைச்சர் இருக்கும் மேடையில் பேச நேர்ந்தால் 'செல்வி ஜெயலலிதா'  என்றுதான் கூறுவேனே தவிர, அம்மா என்று அழைக்க மாட்டேன். கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும், பெற்ற தாயைத் தவிர யாரையும் அம்மா என்று அழைக்க மாட்டேன் எனக் கூறினாராம். அதன்பின்பு அவர்கள் போய்விட்டார்களாம். 

நண்பர் மணியனின் வீர சபதம் நம்மைப் புல்லரிக்கத்தான் வைக்கிறது.  ஆனாலும் சில வினாக்கள் நமக்குள் எழுவதைத் தடுக்க முடியவில்லை.

ஆக மொத்தம், அ.தி.மு.க.வில்  இணைவதற்கு மணியன் முன்னால் உள்ள ஒரே ஒரு சிக்கல், செல்வி என்று அழைப்பதா, அம்மா என்று அழைப்பதா என்பதுதான்.  மற்றபடி, அக்கட்சியின் கொள்கை, கோட்பாடுகளில் எல்லாம் எந்தப் பிரச்சினையும் இல்லை. லஞ்சம், ஊழல் இவை குறித்தெல்லாம் மணியன் இப்போது கவலைப் படுவதில்லை போலும்! அதிகாரிகளே தெருவில் இறங்கி, இந்த ஆட்சியில் நேரடியாக லஞ்சம் கேட்கின்றனர் என்று வெளிப்படையாக ஒரு தொலைக்காட்சியில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் துரை  முருகன் கூறினார். இன்று வரை அரசு தரப்பிலிருந்து எந்த மறுப்பும் இல்லை. வேலை வாங்குவதற்கு, பணி  மாற்றம் செய்வதற்கு என எல்லாவற்றிற்கும் இப்போது எவ்வளவு 'செலவு' செய்ய வேண்டியுள்ளது என்பது சின்னக் குழந்தைக்குக் கூடத் தெரியும்போது, மெத்தப் படித்த மணியனுக்குத் தெரியாமல் இருக்காது. ஆனால் அவருக்கு அதுவெல்லாம் பெரிய  சிக்கலாக இல்லை. அம்மாவா, செல்வியா என்பதுதான் நாட்டின் மிகப் பெரிய சிக்கல் போலும். அந்த ஒரே ஒரு சிக்கலைத் தீர்த்துவிட்டால், நாளையே மணியன் அ.தி.மு.க.வில் இணைந்து விடுவார்.

நான் கூட ஒரே ஒரு நிபந்தனை என்றவுடன், கொள்கை அடிப்படையில் ஏதோ சொல்லப் போகிறார் என்று நினைத்தேன். அவருடைய காந்திய மக்கள் இயக்கம், மது விலக்கைப் பற்றி அடிக்கடி பேசுகிறது. எனவே, முதலமைச்சர் நாடு முழுவதும் மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்தினால் போதும், நான் கட்சியில் இணைந்து விடுகிறேன் என்று சொல்லியிருப்பார் என்று நினைத்தேன். நான் அவரைப் பற்றி மிகக் கூடுதலாக எடை போட்டுவிட்டேன் என்பது பிறகுதான் தெரிந்தது. அவருக்கு அம்மாவும் செல்வியும்தான் பிரச்சினையாக இருந்துள்ளது.

அவருடைய பேச்சு வழக்கமாக அவருக்குள் இருக்கும் தன்முனைப்பையே காட்டுகிறது. அவருடைய பேச்சைக் கவனித்தவர்களுக்குத் தெரியும். எந்தத் தலைப்பில் பேசினாலும், பாதி நேரம் தன்னைப் பற்றிப் பேசாமல் அவரால் இருக்க முடியாது. 'பொது வாழ்வில் ஒரு  செப்புக் காசு கூட வாங்காதவன் நான்' என்று அடிக்கடி அவர் பேசக் கேட்டிருக்கிறோம். ஏதோ நாமெல்லாம் தினமும் இரண்டு லட்சம் செப்புக் காசுகளை வாங்குவது போல. (செல்லாத செப்புக் காசுகளை வாங்கி என்ன செய்வது என்பது வேறு)

அவரைக் கேலி செய்வதற்கோ, சிறுமைப் படுத்துவதற்கோ இவற்றை எல்லாம் நான் குறிப்பிடவில்லை. அவருடைய விரிந்த படிப்பை, சிறந்த சொற்பொழிவை மிகவும் மதிப்பவன் நான்.  

அவருடைய நேர்மையிலும் கூட ஐயப்படும் அளவிற்கு ஒன்றும் நேர்ந்துவிடவில்லை. ஆனால் இவற்றையெல்லாம் அவரே சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. நம் வாழ்வு நேர்மையானதா இல்லையா என்பதைக் காலம் சொல்லும். எப்போதேனும் நம் பெருமைகளை நாமே சொல்ல வேண்டிய தேவை பொதுவாழ்வில் நேரும்தான். ஆனால் அதற்காக அதனையே அடிக்கடி பேசிக்கொண்டிருப்பது அறிஞர்களுக்கு அழகன்று.

நாம் யார் காலிலும் விழ வேண்டியதில்லை. ஆனால் 'நான் யார் காலிலும் விழாதவன்' என்று அடிக்கடி நினைவூட்ட வேண்டியதில்லை. என் தாயைத் தவிர யாரையும் அம்மா என்று அழைக்க மாட்டேன் என்று சத்தியப் பிரமாணம்' எல்லாம் எடுக்க வேண்டியதுமில்லை.

வயதில் மூத்த பெண்களை, பெரியவர்களை அம்மா என அழைப்பது அப்படியொன்றும் தவறானது இல்லை. அது நம் மரபுதான். மணியன் தன்  தாயைத் தவிர இதுவரையில் யாரையும் அம்மா என்று அழைத்தே இருக்க மாட்டாரா என்ன? இவையெல்லாம் வெற்றுப் பெருமைகள்.

நாட்டு மக்கள் அனைவருக்கும், மக்கள் தலைவர்களான கலைஞர், ஜெயலலிதா உள்ளிட்ட பலருக்கும் அடிக்கடி அறிவுரை கூறி ஆனந்த விகடனில் திறந்த மடல் எழுதும் மணியன் அவர்களே, அந்தக் கடிதங்களை நேரம் கிடைக்கும்போது நீங்களும் படியுங்கள்! கலைஞருக்கு எழுதும்போது கடிந்தும், அம்மையாருக்கு எழுதும்போது பணிந்தும் நீங்கள் எழுதும் கடிதங்களின் லாவகங்களை நீங்களும் படித்து மகிழ வேண்டாமா? 

அந்தப் பேச்சில் இன்னொன்றையும் மணியன் குறிப்பிட்டுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர ஏனைய எல்லாக் கட்சிகளிலும் தனி மனிதத் துதிபாடு உள்ளதாகக் கூறி வருத்தப்பட்டுள்ளார். ஆமாம், கலைஞர், தளபதி, புரட்சித் தலைவி என்று சொல்வதெல்லாம் தனி மனித வழிபாடுதான். போகட்டும், எங்களைப் போன்ற பாமரர்கள் அப்படித்தான். மகாத்மா, பெருந்தலைவர் என்றெல்லாம் நீங்கள் பேசுகின்றீர்களே அதற்கு என்ன பெயர்? அதுவும் போகட்டும்......இப்போதெல்லாம் அண்ணன் வைகோவுடன் பல கூட்டங்களில் நீங்கள் கலந்து கொள்கின்றீர்கள். அவரைத் தமிழ்நாட்டின் முதல்வராக்காமல் ஓய மாட்டேன் என்று வேறு பேசுகின்றீர்கள் (பாவம், இனி வாழ்வில் உங்களுக்கு ஓய்வே கிடையாது). அவரைப் 'புரட்சிப் புயல்' என உங்களையும் மேடையில் வைத்துக் கொண்டு பலரும் பேசுகின்றனரே, அப்போதெல்லாம் என்ன செய்கின்றீர்கள்? அந்தத் தனி மனிதத் துதிபாடலை நிறுத்துவதற்குக் காந்திய மக்கள் இயக்கம் என்ன திட்டத்தை வைத்திருக்கிறது?

அடுத்த வார ஆனந்த விகடனில் இது குறித்த உங்கள் அறிவுரை மடலை எதிர்பார்க்கலாமா?

நதியோடும் பாதையில்... (1)

ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒரு நதி போன்றதுதான். நாம் விரும்பினாலும்,  விரும்பாவிட்டாலும் அது ஓடிக் கொண்டே இருக்கிறது. நாம் விரும்பி மகிழும் கணங்கள் அப்படியே உறைந்து போவதுமில்லை. விரும்பாத துயரம் நிறைந்த நொடிகள் நகராமல் இருப்பதும் இல்லை. 'எல்லாம் கடந்து போகும்' என்னும் தொடர் இந்த உண்மையைத்தான் கூறுகின்றது. 

சில நதிகள் பல நாடுகளைக் கடந்து பல்லாயிரம் மைல்கள் ஓடுகின்றன. வேறு சிலவோ, புறப்பட்ட இடத்திற்கு அருகிலேயே கடலில் கலந்து விடுகின்றன. எப்படியிருந்தாலும் அவை ஓடிக் கொண்டே இருக்கின்றன என்பதுதான்  அவற்றின் சிறப்பு.

மானுட வாழ்வும் அப்படித்தான். ஓடுதல், ஓடிக் கொண்டே இருத்தல்தான் நாம் உயிரோடிருப்பதின் அடையாளம். இயங்குதல் வாழ்க்கை. தேங்குதல் மரணம்.

வாழ்க்கை என்னும் நதியோடும் பாதையில் எல்லா மனிதர்களுக்கும் எத்தனையோ அனுபவங்கள்.  ஆனால் அவற்றைச் சிலர் மட்டுமே பதிவு செய்கின்றனர்.  அத்தகைய ஒரு பதிவுதான் இத்தொடர்.

நிறையப் பொது நிகழ்வுகள், அவற்றையொட்டிப் பல பயணங்கள், பயணங்களில் பலரைச் சந்திக்கும் வாய்ப்புகள் என்று என் வாழ்க்கை நதி ஓடிக்கொண்டிருப்பதால், அந்த அனுபவங்களுள்  சிலவற்றை உங்களோடும் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது


இந்த நதியின் முதல் பகுதி  ஒரு துயரச் செய்தியோடு தொடங்குகிறது.

திரைப்பட இயக்குனர் மணிவண்ணன் 


அந்தத் துயரச் செய்தியைத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிக் கொண்டிருந்த போது  நான் திருவண்ணாமலையில் இருந்தேன். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் செயற்குழுக் கூட்டம் அன்று அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. சிறந்த நடிகரும், திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் 59 வயதில் மரணம் அடைந்து விட்டார் என்னும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

20ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் எனக்கு நட்பு இருந்தது.  திரைப்படத் துறையில் உள்ள பொதுவுடமைச் சிந்தனையாளராகத்தான் அவருடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. ஜனநாயக உரிமைப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடத்தவிருந்த ஒரு தொடர் ஓட்டத்திற்கு நன்கொடை வாங்கச் சென்றிருந்த போது , தியாகராய நகரில் இருந்த அவருடைய அலுவலகத்தில் அவரை முதன் முதலில் சந்தித்தேன். அது 1980களின் இறுதியாக இருக்க வேண்டும். தோழர்கள் நீண்ட பயணம் சுந்தரம், இல. கோவிந்தசாமி ஆகியோர் என்னை அவருக்கு அறிமுகப் படுத்தி வைத்தனர். நண்பர்  ஜீவ பாரதி அப்போது அவரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

திரைப்பட இயக்குனர் என்ற எந்தப் பகட்டும் இல்லாமல் எங்களை வரவேற்றுப் பேசி, நன்கொடையும் கொடுத்து அனுப்பி வைத்தார். அதன்பின் அவருக்கும் எனக்குமான நட்பு தொடர்ந்தது. நல்ல நண்பரைப் போல பழகுவார். நேரிலும், தொலைபேசியிலும் 'தோழர்' என்றுதான் அழைப்பார்.

1991 இறுதியில், "இனி" என்னும் மாத இதழைத் தொடங்கி நானும் நண்பர்களும் நடத்தியபோது, அவர் செய்த உதவிகள் மறக்கக்கூடியன அல்ல. வெறும் நிதி உதவி மட்டுமன்று. நண்பர்கள் பலருக்கு அந்த இதழை அறிமுகப்படுத்தினார். அவரே  சில கட்டுரைகளையும் எழுதித் தந்தார். அவரைப் பார்க்க வரும் திரைப்பட நண்பர்களிடம் எங்கள் இதழுக்கான ஆண்டுக்கட்டணம் ரூ.35 பெற்றுக் கொண்டுதான் அவர்களிடம் பேசத் தொடங்குவார். 

அவர்தான் எனக்கு நடிகர் சத்தியராஜ் அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். 'அமைதிப்படை' படத்தின் தொடக்க வேலைகள் நடந்து கொண்டிருந்த நேரத்தில், வயதான தோற்றத்தில் இருந்த சத்தியராஜைக் காட்டி, 'யாரென்று தெரிகிறதா?' என்று கேட்டார். இன்று வரை அவரும் நல்ல நண்பராக இருந்து வருகின்றார்.

அமைதிப்படையின் மூலம் மணிவண்ணன் நல்ல நடிகராகவும் மக்கள் மனங்களில் இடம்பெற்றார். இருவரும் புகழின் உச்சத்திற்குச் சென்ற நேரம் அது. அந்தத் தருணத்தில்,   வெகுமக்களிடம் அறிமுகமே இல்லாத என் வேண்டுகோளை ஏற்று இருவரும் பொள்ளாச்சியில் நடைபெற்ற 'இனி' வாசகர் வட்டக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினர். ஒரு சின்ன அரங்கத்தில் நடைபெற்ற கூட்டம் அது. புகழ் மிக்க நடிகர்கள் யாரும் அப்படி ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள். 

சில ஆண்டுகளுக்குப் பிறகு அவரே ஒரு மாத இதழ் தொடங்கினார். 'போர்வாள்' என்று பெயர். 'இனி'யிலிருந்து பிரிந்த நண்பர் விடுதலை அந்த இதழில் பணியாற்றினார். எழுத்தாளர் பிரபஞ்சன் அதன் ஆசிரியர். இனி மாதிரியே ஒரு இதழை இனி இதழுக்குப் போட்டியாகத் தொடங்குவது போன்ற ஒரு தோற்றம் இருந்தது. அதில் எனக்கும் சிறு வருத்தம் இருக்கவே செய்தது. ஆனால் அவரே என்னை அழைத்து 'அப்படியெல்லாம் கருத வேண்டாம்' என்றார். போர்வாள் வெளியீட்டு விழாவிலும்  கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் அழைப்பை ஏற்று பெரியார் திடலில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் பங்கேற்றேன். ஆசிரியர் வீரமணி, அண்ணன் வைகோ, கவிஞர் இன்குலாப்,  கலைப்புலி தாணு என்று பலரும் கலந்து கொண்டோம்.

பிறகும் பல ஆண்டுகள் எங்கள் நட்பு தொடர்ந்தது. அவரிடம் உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில்தான், நண்பர் செல்வபாரதி மூலம் தம்பி சீமான் எனக்கு அறிமுகம் ஆனார். 

அந்த அறிமுகமே பின்னால் எங்களுக்குள் ஒரு பிரிவையும் ஏற்படுத்தியது. 2010இல் சீமான் உருவாக்கிய 'நாம் தமிழர் கட்சியி ல் அவர் இணைந்து பணியாற்றினார். அக்கட்சியினர் கலைஞரை மிகக் கடுமையாக விமர்சனம் செய்தனர். அதனால் எங்களுக்குள் அரசியல் எதிர்நிலை உருவானது. அப்போதும் அரசியல் வேறுபாடுதான். தனிப்பட்ட பகை ஏதுமில்லை.

அம்பத்தூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சிக் கூட்டத்தில், "சுபவீயின் மீசை முன்பு புலிவால் போன்று இருந்தது. இப்போது எலிவால் மீசை ஆகிவிட்டது" என்று அவர் பேசியதாக நண்பர்கள் சிலர் கூறினர். தனிப்பட்ட முறையில் அப்படியெல்லாம் தரக்குறைவாகப் பேசக் கூடியவர் இல்லை அவர் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. உண்மைதான். அவர் அப்படிப் பேசவில்லை என்றும், அவர் இருந்த மேடையில் இன்னொருவர்தான் அவ்வாறு பேசினார் என்றும் பிறகு தெரிந்தது. 


திருவண்ணாமலையிலிருந்து சென்னை வந்த நானும், நண்பர்கள் மாறன், குமரன், எட்வின் ஆகியோரும் நேரே அவர் இல்லம் சென்று, அவர் உடலுக்கு மாலை வைத்து இறுதி வணக்கம் செலுத்தினோம்.


இங்கிலாந்து நாட்டின் மேற்குப் பகுதியில் ஓடும் ப்ரூக் (The brook) நதி பற்றிப் பாடிய கவிஞர் டென்னிசன்,
"Men may come and men may go
But i go on forever"
என்று பாடுவார். உண்மைதான். மனிதர்கள் வருகிறார்கள்,னிதர்கள் போகிறார்கள்........ஆனால் நல்ல மனிதர்கள் எப்போதாவதுதான் வருகிறார்கள். அவர்களும் நம்மைவிட்டு அவசரமாகப் போய்விடுகிறார்கள்.


                                         ■ ■ ■ ■

சிங்களனின் சித்தப்பன் மக்கள்!
                                 

எனக்குக் குருதி அழுத்தம் (blood pressure) இல்லையென்றுதான் மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனாலும், நான் துக்ளக் இதழைப் படித்து முடிக்கும் வேளைகளில் சோதனை செய்து பார்த்தால் ரத்த அழுத்தம்  கூடுதலாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

இந்த வாரமும் அப்படித்தான். 26.06.2013ஆம் நாளிட்ட துக்ளக் இதழில், எஸ்.ஜெ. இதயா என்பவர் எழுதியுள்ள 'இலங்கைக்குச் சென்று பாருங்கள்' கட்டுரையைப் படித்து முடித்த வேளையில் என் கோபம் கூடிப் போயிற்று.

மூன்று தலைமுறைகளாகக் களத்தில் நின்று இலட்சக்கணக்கான உயிர்களைப் பலி கொடுத்து, சொத்து சுகம் அனைத்தையும் இழந்து சொந்த தேசத்திலேயே அகதிகள் ஆகிப் போன அந்த மக்களின் ரத்தக் காயங்களை மேலும் கீறி மிளகாய்ப் பொடி தூவுவது போல இருக்கிறது அந்தக் கட்டுரை. சிங்களர்களை விட இவர்கள் கொடுமையானவர்களாக இருக்கிறார்கள்.

துக்ளக் இதழ் சார்பில் ஈழத்திற்குப் ஆறு நாள் பயணம் போய் அனைத்தையும் தெரிந்துகொண்டு வந்துவிட்டார்களாம். அங்கு எல்லாம் நன்றாக  இருக்கிறதாம் புலிகள் போய்விட்ட பின்பு, சிங்களர் ஆட்சியில் எல்லாம் ' சேமமாக' இருக்கிறதாம். எழுதுகிறார்கள்.

அத்தோடு நிற்கவில்லை. அந்த மக்களைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் இன்னும் எத்தனை இழிவாக எழுதுகின்றனர் தெரியுமா? இதோ படியுங்கள்:
            
"யாழ்ப்பாணம் பஸ் நிலையம் அருகில் உள்ள புத்தகக்
கடை ஒன்றில் இலங்கையிலிருந்து வெளியாகும்
நாளிதழ்கள், வார, மாத இதழ்கள அத்தனையையும் நான்
ஒன்று விடாமல் வாங்கினேன். 20க்கும் மேற்பட்ட அந்த
இதழ்களில் இரண்டு இதழ்கள் பச்சையான தமிழில்
எழுதப்பட்ட மஞ்சள் பத்திரிகைகள், அனுபவக் கதைகள்
என்ற பெயரில் படு ஆபாசமான சம்பவங்கள் அதில் ஈழத்
தமிழில் எழுதப்பட்டிருந்தன. அதையும்தான் யாழ்ப்பாணத்
தமிழர்கள் வாங்கி வாசிக்கிறார்கள்."
      
ஈழத்தமிழர்கள் இன்று போர்க்குணத்தோடு இல்லை.விடுதலைத் தாகம் எல்லாம் அவர்களுக்குக் கிடையாது. அவர்கள் மஞ்சள் பத்திரிகை படித்துக் கொண்டிருக்கும் காமுகர்கள் என்று உலகிற்குச் சொல்கிறது துக்ளக். பிறகு இது குறித்துத் தன் கருத்தை எழுதுகிறார் அந்த மஞ்சள் புத்தக வாசிப்பாளர்:

"அங்குள்ள மக்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு
வாழ்கிறார்கள் என்றால், சினிமா பார்ப்பதற்கும், சினிமா
கிசுகிசுக்களைக் கேட்பதற்கும், மஞ்சள் பத்திரிகை
படிப்பதற்கும் யாருக்காவது தோன்றுமா? இவையெல்லாம்
அங்கு இயல்பான மனித வாழ்க்கை துவங்கி விட்டது
என்பதற்கான அடையாளங்கள் அன்றி வேறென்ன?"

ஆக, சினிமா பார்ப்பதும், கிசுகிசுக்களைக் கேட்பதும், ஆபாச நூல்களைப் படிப்பதும்தான் இயல்பான வாழ்வின் அடையாளங்களாகத் தெரிகிறது துக்ளக் இதழுக்கு. என்ன செய்வது அவர்களின் வாழ்க்கை முறை அப்படித்தான் போலும்! 'வேண்டுமானால் நீங்கள் ஒருமுறை இலங்கைக்குச் சென்று பாருங்கள்' என்று நமக்கு இலவச அறிவுரை வேறு.

இலங்கை செல்ல எவன் நமக்கு விசா கொடுப்பான்? துக்ளக், ராஜபக்சேவுக்கு நெருக்கமான பத்திரிகை. அவர்கள் சிங்களனின் சித்தப்பா மக்கள், அவர்களுக்கு உடனே விசா கிடைக்கும். நமக்கு எப்படி?

இன்னொன்றையும் இங்கு நாம் பதிவு செய்ய வேண்டும். இன்று நேற்றன்று, இப்படித்தான் பல்லாண்டுகளாய்த் துக்ளக் ஈழ மக்களைக்  கொச்சைப் படுத்தி வருகின்றது. ஆனால் இங்குள்ள தமிழ்த் தேசியப் புலிகளோ, தமிழ் ஈழ ஆதரவாளர்களோ அது பற்றியெல்லாம் கண்டு கொள்வதில்லை. ஏனெனில், துக்ளக் சோ அம்மாவுக்கு வேண்டியவர். அது மட்டுமின்றி, அவர் கலைஞர் எதிர்ப்பாளர். எனவே அவரை எதிர்த்து எவரும் எழுவதில்லை.


புலம் பெயர்ந்த தமிழர்களில் பலரும் கூட இதனைக் கண்டு கொள்வதில்லை.இங்கே ஈழ ஆதரவு என்றால், கலைஞர் எதிர்ப்பு! கலைஞர் ஆதரவு என்றால் அது ஈழத்திற்குத் துரோகம்! இப்படிப்பட்ட மனநிலைதான் இங்கே திட்டமிட்டு வளர்க்கபடுகின்றது. இந்நிலை ஈழத்திற்கும் நல்லதில்லை.....எதிர்காலத் தமிழ்நாட்டிற்கும் நல்லதில்லை.

நன்றி-http://subavee-blog.blogspot.in