தமிழறிஞர்களின் அடக்கமும் ஆர்ப்பரிப்பும்
தமிழறிஞர் தமிழண்ணல், 20.07.2013 ஆம் நாளிட்ட தினமணியில், 'மொழிக் கொள்கையில் ஏற்பட்ட குழப்பங்கள்' என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அக்கட்டுரையில் தமிழ் நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்தும், பெரியார், அண்ணா ஆகியோரின் மொழிக் கொள்கை குறித்தும் விமர்சனங்கள் இடம் பெற்றுள்ளன.
தமிழண்ணல், வாழும் தமிழறிஞர்களில் குறிக்கத்தக்க ஒருவர். தமிழ் ஆய்விலும், தமிழ் உணர்விலும் மூத்த முன்னோடி. என் போன்றவர்களுக்கு ஆசிரியராகக் கருதத் தக்கவர். எனினும், அவர் கட்டுரையில் இடம்பெற்றுள்ள சில மறைப்புகளையும், வெளியாகியுள்ள கருத்துகளுக்கான சில மறுப்புகளையும் நாம் பதிவு செய்தே ஆக வேண்டியுள்ளது.
முதலில் அக்கட்டுரையில் கூறப் பெற்றுள்ள சில செய்திகளைக் காணலாம்:
"இந்தியை எதிர்த்து மாபெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தி, மாநில ஆட்சி கைப்பற்றப்பட்டது. இது ஆங்கிலத்தை ஆதரிக்கும் இயக்கமும் ஆயிற்று."
"ஆரிய மாயையிலிருந்து தமிழரை விடுவிக்க முயன்ற அண்ணாவும், ஆங்கில மாயையில் தமிழரைச் சிக்க வைக்க வேண்டியவராயினார். இதனால் ஆங்கில மோகம், திராவிட இயக்கத்தில் தொடரலாயிற்று."
"பெரியாரும் ஆங்கிலத்தையே கல்வி மொழியாக்கப் பெரிதும் வாதிட்டார்."
"ஓர் இந்திய மொழிக்கு அடிமை ஆகாமல் காத்த இது, ,அயல் நாட்டு மொழிக்கு, நம்மை அடிமை ஆக்கிய மொழிக்கு, மீண்டும் அடிமை ஆக்கும் நிலைக்குத் தள்ளிவிட்டது."
- என்பன போன்ற செய்திகளைத் தன் கருத்தாகக் கட்டுரை ஆசிரியர் வெளியிட்டுள்ளார். இவற்றின் மூலம், ஒரு மறைமுகமான திராவிட இயக்க எதிர்ப்பு முன் வைக்கப்பட்டுள்ளது. அதனால்தான், தினமணி வைத்தியநாத ஐயரும் அதனைத் தன் நாளேட்டில் மகிழ்ந்து வெளியிட்டுள்ளார்.
இக்குற்றச்சாட்டுகள் மிகப் பழையன. தவறான பார்வை உடையன. ஏற்கனவே பலமுறை விடைகளால் முறியடிக்கப் பட்டன. ஆனாலும், திரும்பத் திரும்ப அவை முன்வைக்கப்படும்போது, அவற்றிக்கான விடையை நாமும் எழுத வேண்டியுள்ளது.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில், இந்திக்கு மாற்றாகத்தான் ஆங்கிலம் நிறுத்தப்பட்டதே அல்லாமல், ஒருநாளும் தமிழுக்கு மாற்றாக ஆங்கிலம் முன் வைக்கப்படவில்லை. அன்று எழுந்த கேள்வி, இந்தியா, ஆங்கிலமா என்பதுதான். இரண்டும் வேண்டாம், தமிழ் போதும் எனச் சொல்லும் சூழல் அன்று இல்லை. இந்திய அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து மொழிகளும் தேசிய மொழிகளாக ஏற்பிசைவு பெற வேண்டும் என்று அண்ணா பலமுறை கூறியுள்ளார். ஆனால் அதற்கான காலம் அன்று கனிந்திருக்கவில்லை. அதனால்தான் இந்திக்கு மாற்றாக ஆங்கிலத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
திராவிட இயக்கத்தை எப்போதும் குறை சொல்வதில் பேரார்வம் கொண்டுள்ள தமிழறிஞர்களில் பலர், 1970களில், தனித்தமிழ் இயக்கத் தலைவர்கள் பலரே அக்கருத்தைத்தான் கொண்டிருந்தனர் என்பதை வெளிப்படுத்துவதில்லை.
திரவிட மொழிநூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர், தன் இறுதிக் காலம் வரையில் (1981), இருமொழிக் கொள்கையை ஏற்பவராகவே இருந்தார். உலக அறிவு பெற ஆங்கில அறிவு தேவை என்பதே அவருடைய கருத்தாக இருந்தது. 'இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?' என்னும் தன் நூலில், இந்தியா முழுமைக்கும் ஆங்கிலம், ஆட்சியும், கல்வியும், இணைப்பும் பற்றிய பொது மொழியாக இருப்பது தலை சிறந்த திட்டம் ஆகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பாவலரேறு பெருஞ்சித்திரனார், 1970 ஆம் ஆண்டு தான் எழுதியுள்ள 'கோடரிக் காம்புகள்' என்னும் கவிதையில், "அறிவியலை அறிவதற்கும் அகிலமெல்லாம் சுற்றிவரற்கும்" ஆங்கிலமே தேவை என்று எழுதுகின்றார். 1967இல் எழுதிய பாடலொன்றில்,
"மும்மொழித் திட்டம் மூளையைக் குழப்பும்
தம்மனம் விரும்பின் தனித்தனி பயில்க!
தமிழர் தமிழையும் ஆங்கில மொழியையும்
அமிழ்தெனக் கற்க ஆக்கம் பெறுகவே"
என்று தன் கருத்தை அழுத்தமாக எழுதியுள்ளார். 1967ஆம் ஆண்டுச் சூழல் அவ்வாறிருந்தது என்பதே உண்மை. இப்பாடல் வரிகள் பெருஞ்சித்திரனாரின் கனிச்சாறு கவிதைத் தொகுதியில் உள்ளன.
பாவாணரையும், பெருஞ்சித்திரனாரையும் யாரும் குறை கூறுவதில்லை. பெரியார், அண்ணா, கலைஞரைக் குறை கூறாமல் இருப்பதுமில்லை.
.
தமிழ் வழிக் கல்வி பற்றி ஆயிரம் முறை பேசியும், எழுதியும், அறிவுறுத்தியும் பலன் இல்லை என்று கூறிக் கவலைப் படுகின்றார் தமிழண்ணல். ஆனால் 1970 ஆம் ஆண்டே கல்லூரி வரையில் தமிழ் வழிக் கல்வியைக் கொண்டுவர முயன்ற கலைஞர் பற்றி ஒரு குறிப்பையும் கட்டுரையில் காண முடியவில்லை.
அறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்குப் பின், முதல்வராக இருந்த தலைவர் கலைஞர், 1970 நவம்பர் 30 அன்று, இனிமேல் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் தமிழே பயிற்று மொழி என்னும் சட்ட முன்வடிவை முன்மொழிந்தார். அதனை ம.பொ.சி வழிமொழிந்து பேசினார். ஆனால் அதற்குக் காங்கிரஸ் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. சட்டமன்றத்திலேயே, காங்கிரஸ் உறுப்பினர் விநாயகம், அதனைக் கேலி செய்தார். முதல்வர் கலைஞர் தமிழ் வழிக் கல்விக்காகப் பரிந்து பேசினார். அவ்விவாதங்களை இன்றும் சட்டமன்றக் குறிப்பில் நம்மால் காண முடியும். இன்றைய 'தமிழ்த் தேசியத் தலைவர்' நெடுமாறன் அவர்கள்தான், 10.12.1970 அன்று மதுரையில் மாணவர் மாநாடு கூட்டி, அச்சட்ட முன்வடிவை எதிர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் மாணவர்களைத் தூண்டினார். இவற்றை எல்லாம் யாரேனும் மறுக்க முடியுமா?
பெரியாரின் கல்விக் கொள்கை தவறு என்று தமிழண்ணல் குறிப்பிடுகின்றார். ஆனால் அன்று, தமிழ் வழிக் கல்வியை வரவேற்றுத் தலையங்கம் எழுதியவர் பெரியார்தான். 01.12.1970ஆம் நாளிட்ட 'விடுதலை' நாளேட்டில், 'நமதுகடமை' என்று தலைப்பிட்டு, அதனை வரவேற்று எழுதியுள்ளார்.
இத்தனை உண்மைகளையும் மறைத்துவிட்டு, வைத்தியநாத ஐயரின் விருப்பத்திற்கேற்ப, தமிழண்ணல் போன்ற அறிஞர்கள் கட்டுரை எழுதலாமா? சரி போகட்டும், 2006 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன், தமிழ் நாட்டுப் பள்ளிகள் அனைத்திலும் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயப் பாடம் என்று கலைஞர் அரசு அறிவித்ததே, அதனை எங்கேனும் தன் கட்டுரையில் பேராசிரியர் குறிப்பிட்டிருக்க வேண்டாமா? அரசு பொறுப்பு ஏற்றவுடன் பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட முதல் அரசு ஆணையே அதுதான் என்கிறார், அன்றைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு!
பாராட்ட வேண்டியவைகளைப் பாராட்ட ஏனோ மனம் வரவில்லை. கண்டிக்க வேண்டியவைகளையேனும் கண்டிக்க வேண்டாமா? ஜெயலலிதா ஆட்சி வந்தவுடன், திருவள்ளுவர் படத்தை ஒட்டிகளை (stickers) ஒட்டி மறைத்தார்களே, அச்செயலை எத்தனை தமிழ் அறிஞர்கள் கண்டித்தனர்? இந்தக் கட்டுரையில் கூட, அரசுப் பள்ளிகளில் ஆங்கில வகுப்புகளைத் திறந்து, மறைமுகமாகத் தமிழ்க் கல்வியை அழிக்கும் முயற்சியில் ஜெயலலிதா அரசு ஈடுபட்டுள்ளதே, அதனை எங்கேனும் தமிழண்ணல் கண்டித்துள்ளாரா?
நம் தமிழறிஞர்கள் தமிழை மட்டுமன்று, எந்த ஆட்சியை எதிர்த்து வீராவேசமாகப் பேசலாம், எந்த ஆட்சியை எதிர்த்து வாயைக் கூடத் திறக்கக் கூடாது என்பதையும் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளனர்!
No comments:
Post a Comment