Tuesday, July 23, 2013

நதியோடும் பாதையில்...(2)



குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

மாநகரத்தில் வாழ்வோர் படித்தவர்கள், அரசியல் பார்வை உடையவர்கள் என்றும், சிற்றூர்களில் வாழும் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வோ, ஆழ்ந்த படிப்போ இருக்க முடியாது என்றும் பொதுவான ஒரு கருத்து உண்டு. எனக்குள்ளும் கூட அப்படி ஒரு எண்ணம் இருந்துள்ளது என்பதை அண்மையில் நான் அறிந்து கொண்டேன்.  அந்த எண்ணத்தை அறந்தாங்கிக்கு அருகில் உள்ள மறமடக்கி என்னும் கிராமம் சில நாள்களுக்கு முன் தகர்த்து எறிந்தது .

தலைவர் கலைஞர் அவர்களின் 90ஆவது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு எங்கும் பொதுக்கூட்டங்கள், நலத்திட்ட உதவி நிகழ்வுகள் நடந்து வருகின்றன. நானும் பல கூட்டங்களில் கலந்து கொண்டேன். அப்படித்தான், புதுக்கோட்டை மாவட்டத் தி.மு.கழகச் செயலாளர் பெரியண்ணன் அரசு அவர்களின் அழைப்பை ஏற்று, 14.06.2013 அன்று அறந்தாங்கிக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூருக்குப் பேசச் சென்றேன். அந்த ஊரின் பெயர் மறமடக்கி. அதற்கு முன் அந்த ஊருக்கு நான் சென்றதில்லை. அப்படி ஒரு ஊர் பற்றிக் கேள்விப்பட்டது கூட இல்லை. அறந்தாங்கி - ஆலங்குடிப் பாதையில், அறந்தாங்கியிலிருந்து 19 கி.மீ. தொலைவில் அந்த ஊர் உள்ளது. 


தனித்துச் செல்லும் அப்பாதையில் செல்லும்போது, அழைத்துச் சென்ற நண்பர்களிடம், இவ்வளவு உள்ளே இருக்கும் ஒரு ஊரில் கூட்டம் போட்டிருக்கின்றீர்களே, உரை கேட்க யார் வருவார்கள் என்று கேட்டேன். வந்தாலும் என் மொழி நடை அங்கு எடுபடுமா என்ற ஐயமும் இருந்தது.  நண்பர்கள் எனக்கு ஆறுதல் கூறி அழைத்துச் சென்றார்கள். 

என்ன வியப்பு! நகரங்களில் கூடக் கூடாத பெருங்கூட்டம் அங்கு கூடியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நான் ஆற்றிய உரையை ஊரே திரண்டு நின்றுகேட்டது. என் மொழி நடை அவர்களுக்கு உகந்ததாக இருந்தது. ரசித்துக் கேட்டனர். நான் வெட்கிப் போனேன்.அந்தக் கூட்டத்தை அப்பகுதியின் ஒன்றியச் செயலாளர் மெய்யநாதன் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த ஊரில் பள்ளிக்கூடம் உள்ளதா என்று கேட்டேன். உயர்நிலைப்பள்ளி உள்ளது என்றும், இந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் 172 மாணவர்கள் தேர்வு எழுதி, 172 பேரும்  வெற்றி பெற்றுள்ளனர் என்றனர். 500க்கு 450க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலருக்கு நீங்கள்தான் பரிசு கொடுக்கப் போகின்றீர்கள் என்றும் கூறினர். திராவிட இயக்கத்தின் நூற்றாண்டுக் கனவு நனவாகிக் கொண்டிருக்கிறது என்று எண்ணிப் பெருமையில் பூரித்தேன். 

நல்ல சாலையில் மகிழுந்தில் சென்ற எனக்கு உறைக்கும்படி  அய்யா அறந்தாங்கி ராசன் அவர்கள் இன்னொரு செய்தியையும் கூறினார்கள். அந்த ஊருக்கு 50 ஆண்டுகளுக்கு முன், நம் இனமானப் பேராசிரியர் மாட்டு வண்டியில் வந்து உரை ஆற்றியிருக்கிறாராம். 


அடடா, சிற்றூர் மக்களின் அரசியல் அறிவு குறித்துக் குறைத்து மதிப்பிட்டு விட்டோமே என்ற உறுத்தல் எனக்குள் நெடுநேரம் இருந்தது. 'அக்கினியில் குஞ்சென்றும், மூப்பென்றும் உண்டோ என்ற பாரதியின் வரிகளை நினைத்துக் கொண்டேன்.

                                         ■ ■ ■ ■

தமிழருவி மணியனின் 
    'வீர சபதம்'


ஈ.வே.கி சம்பத் தேசிய சிந்தனையாளர் பேரவை சார்பில் கடந்த 8ஆம் தேதி (08.06.2013) அன்று சென்னையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழருவி மணியன், டி.கே. ரங்கராஜன், நடிகர் ராதா ரவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் ஒவ்வொருவரும் என்னென்ன பேசினார்கள் என்பதைப் புகைப்படத்துடன்  நக்கீரன் (19-21, ஜூன் 2013)  இதழ் வெளியிட்டுள்ளது.

அக்கூட்டத்தில் தமிழருவி  மணியன் ஒரு புதிய செய்தியை வெளியிட்டுள்ளார். 'அ.தி.மு.க வின் முக்கியப் பொறுப்பாளர்கள் இரண்டு பேர்' அவரைப் பார்க்க வந்தனராம். அவருடைய பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் அம்மாவிற்கு ரொம்பப் பிடிக்கும் என்று கூறினார்களாம். அத்தோடு நின்றிருந்தால் சிக்கலில்லை. அ.தி.மு.க.வில் இணைந்து கொள்கிறீர்களா என்றும் கேட்டார்களாம். அவரும் உடனே சரி என்று கூறி விட்டாராம். வந்தவர்களுக்கே  அவருடைய விடை வியப்பாக இருந்ததாம். ஆனாலும் அதற்கு அவர் ஒரு நிபந்தனை விதித்தாராம். இணைந்த பின், முதலமைச்சர் இருக்கும் மேடையில் பேச நேர்ந்தால் 'செல்வி ஜெயலலிதா'  என்றுதான் கூறுவேனே தவிர, அம்மா என்று அழைக்க மாட்டேன். கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும், பெற்ற தாயைத் தவிர யாரையும் அம்மா என்று அழைக்க மாட்டேன் எனக் கூறினாராம். அதன்பின்பு அவர்கள் போய்விட்டார்களாம். 

நண்பர் மணியனின் வீர சபதம் நம்மைப் புல்லரிக்கத்தான் வைக்கிறது.  ஆனாலும் சில வினாக்கள் நமக்குள் எழுவதைத் தடுக்க முடியவில்லை.

ஆக மொத்தம், அ.தி.மு.க.வில்  இணைவதற்கு மணியன் முன்னால் உள்ள ஒரே ஒரு சிக்கல், செல்வி என்று அழைப்பதா, அம்மா என்று அழைப்பதா என்பதுதான்.  மற்றபடி, அக்கட்சியின் கொள்கை, கோட்பாடுகளில் எல்லாம் எந்தப் பிரச்சினையும் இல்லை. லஞ்சம், ஊழல் இவை குறித்தெல்லாம் மணியன் இப்போது கவலைப் படுவதில்லை போலும்! அதிகாரிகளே தெருவில் இறங்கி, இந்த ஆட்சியில் நேரடியாக லஞ்சம் கேட்கின்றனர் என்று வெளிப்படையாக ஒரு தொலைக்காட்சியில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் துரை  முருகன் கூறினார். இன்று வரை அரசு தரப்பிலிருந்து எந்த மறுப்பும் இல்லை. வேலை வாங்குவதற்கு, பணி  மாற்றம் செய்வதற்கு என எல்லாவற்றிற்கும் இப்போது எவ்வளவு 'செலவு' செய்ய வேண்டியுள்ளது என்பது சின்னக் குழந்தைக்குக் கூடத் தெரியும்போது, மெத்தப் படித்த மணியனுக்குத் தெரியாமல் இருக்காது. ஆனால் அவருக்கு அதுவெல்லாம் பெரிய  சிக்கலாக இல்லை. அம்மாவா, செல்வியா என்பதுதான் நாட்டின் மிகப் பெரிய சிக்கல் போலும். அந்த ஒரே ஒரு சிக்கலைத் தீர்த்துவிட்டால், நாளையே மணியன் அ.தி.மு.க.வில் இணைந்து விடுவார்.

நான் கூட ஒரே ஒரு நிபந்தனை என்றவுடன், கொள்கை அடிப்படையில் ஏதோ சொல்லப் போகிறார் என்று நினைத்தேன். அவருடைய காந்திய மக்கள் இயக்கம், மது விலக்கைப் பற்றி அடிக்கடி பேசுகிறது. எனவே, முதலமைச்சர் நாடு முழுவதும் மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்தினால் போதும், நான் கட்சியில் இணைந்து விடுகிறேன் என்று சொல்லியிருப்பார் என்று நினைத்தேன். நான் அவரைப் பற்றி மிகக் கூடுதலாக எடை போட்டுவிட்டேன் என்பது பிறகுதான் தெரிந்தது. அவருக்கு அம்மாவும் செல்வியும்தான் பிரச்சினையாக இருந்துள்ளது.

அவருடைய பேச்சு வழக்கமாக அவருக்குள் இருக்கும் தன்முனைப்பையே காட்டுகிறது. அவருடைய பேச்சைக் கவனித்தவர்களுக்குத் தெரியும். எந்தத் தலைப்பில் பேசினாலும், பாதி நேரம் தன்னைப் பற்றிப் பேசாமல் அவரால் இருக்க முடியாது. 'பொது வாழ்வில் ஒரு  செப்புக் காசு கூட வாங்காதவன் நான்' என்று அடிக்கடி அவர் பேசக் கேட்டிருக்கிறோம். ஏதோ நாமெல்லாம் தினமும் இரண்டு லட்சம் செப்புக் காசுகளை வாங்குவது போல. (செல்லாத செப்புக் காசுகளை வாங்கி என்ன செய்வது என்பது வேறு)

அவரைக் கேலி செய்வதற்கோ, சிறுமைப் படுத்துவதற்கோ இவற்றை எல்லாம் நான் குறிப்பிடவில்லை. அவருடைய விரிந்த படிப்பை, சிறந்த சொற்பொழிவை மிகவும் மதிப்பவன் நான்.  

அவருடைய நேர்மையிலும் கூட ஐயப்படும் அளவிற்கு ஒன்றும் நேர்ந்துவிடவில்லை. ஆனால் இவற்றையெல்லாம் அவரே சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. நம் வாழ்வு நேர்மையானதா இல்லையா என்பதைக் காலம் சொல்லும். எப்போதேனும் நம் பெருமைகளை நாமே சொல்ல வேண்டிய தேவை பொதுவாழ்வில் நேரும்தான். ஆனால் அதற்காக அதனையே அடிக்கடி பேசிக்கொண்டிருப்பது அறிஞர்களுக்கு அழகன்று.

நாம் யார் காலிலும் விழ வேண்டியதில்லை. ஆனால் 'நான் யார் காலிலும் விழாதவன்' என்று அடிக்கடி நினைவூட்ட வேண்டியதில்லை. என் தாயைத் தவிர யாரையும் அம்மா என்று அழைக்க மாட்டேன் என்று சத்தியப் பிரமாணம்' எல்லாம் எடுக்க வேண்டியதுமில்லை.

வயதில் மூத்த பெண்களை, பெரியவர்களை அம்மா என அழைப்பது அப்படியொன்றும் தவறானது இல்லை. அது நம் மரபுதான். மணியன் தன்  தாயைத் தவிர இதுவரையில் யாரையும் அம்மா என்று அழைத்தே இருக்க மாட்டாரா என்ன? இவையெல்லாம் வெற்றுப் பெருமைகள்.

நாட்டு மக்கள் அனைவருக்கும், மக்கள் தலைவர்களான கலைஞர், ஜெயலலிதா உள்ளிட்ட பலருக்கும் அடிக்கடி அறிவுரை கூறி ஆனந்த விகடனில் திறந்த மடல் எழுதும் மணியன் அவர்களே, அந்தக் கடிதங்களை நேரம் கிடைக்கும்போது நீங்களும் படியுங்கள்! கலைஞருக்கு எழுதும்போது கடிந்தும், அம்மையாருக்கு எழுதும்போது பணிந்தும் நீங்கள் எழுதும் கடிதங்களின் லாவகங்களை நீங்களும் படித்து மகிழ வேண்டாமா? 

அந்தப் பேச்சில் இன்னொன்றையும் மணியன் குறிப்பிட்டுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர ஏனைய எல்லாக் கட்சிகளிலும் தனி மனிதத் துதிபாடு உள்ளதாகக் கூறி வருத்தப்பட்டுள்ளார். ஆமாம், கலைஞர், தளபதி, புரட்சித் தலைவி என்று சொல்வதெல்லாம் தனி மனித வழிபாடுதான். போகட்டும், எங்களைப் போன்ற பாமரர்கள் அப்படித்தான். மகாத்மா, பெருந்தலைவர் என்றெல்லாம் நீங்கள் பேசுகின்றீர்களே அதற்கு என்ன பெயர்? அதுவும் போகட்டும்......இப்போதெல்லாம் அண்ணன் வைகோவுடன் பல கூட்டங்களில் நீங்கள் கலந்து கொள்கின்றீர்கள். அவரைத் தமிழ்நாட்டின் முதல்வராக்காமல் ஓய மாட்டேன் என்று வேறு பேசுகின்றீர்கள் (பாவம், இனி வாழ்வில் உங்களுக்கு ஓய்வே கிடையாது). அவரைப் 'புரட்சிப் புயல்' என உங்களையும் மேடையில் வைத்துக் கொண்டு பலரும் பேசுகின்றனரே, அப்போதெல்லாம் என்ன செய்கின்றீர்கள்? அந்தத் தனி மனிதத் துதிபாடலை நிறுத்துவதற்குக் காந்திய மக்கள் இயக்கம் என்ன திட்டத்தை வைத்திருக்கிறது?

அடுத்த வார ஆனந்த விகடனில் இது குறித்த உங்கள் அறிவுரை மடலை எதிர்பார்க்கலாமா?

No comments: