Friday, September 26, 2008

தியாகி திலீபன் நினைவு தினம்

1987 செப்டெம்பர் 15 அன்று திலீபன் தனது உண்ணா நோன்பினை ஆரம்பித்து நீராகாரம் கூட அருந்தாது 12 நாட்கள் பட்டினி கிடந்து அவனது கோரிக்கைகளை (காந்தி உண்ணா நோன்பிருந்து பெற்றுக் கொடுத்ததாக சொல்லப்படும்) இந்திய அரசு செவி சாய்க்காத நிலையில் செப்டெம்பர் 26 சாவினைத் தழுவிக் கொண்டான்.

திலீபன் வெள்ளையனே வெளியேறு என்பது போல இந்தியனே வெளியேறு என ஒரு போதும் கேட்டதில்லை. எதற்காக ஈழத்திற்கு வந்தீர்களோ ? என்ன உறுதிமொழிகளை தந்தீர்களோ அவற்றை அமுல்ப் படுத்துங்கள் என்று மட்டுமே கேட்டான். பசி மறந்து கிடந்த பிள்ளையின் போருக்கு பாரதம் சாவினைப் பரிசளித்துப் பல்லிளித்தது.

திலிபன் நினைவுகள்

தியாகி திலீபன்
உலக வரலாற்றிலே ஓர் புதிய அத்தியாயத்தின் ஆரம்பம் மட்டுமல்ல... தமிழீழ மக்கள் புரட்சியின் திறவுகோல். ஈழ விடுதலைப் போராட்டத்தின் அகிம்சைத் தீ. அணையா விளக்கு, அகிம்சையால் எழுந்த பாரதமெனும் நாட்டுக்கு, அகிம்சையின் அர்த்தம் கற்பித்த புலிவீரன்.இந்திய-சிறீலங்கா ஒப்பந்தமெனும் சூழ்ச்சிப் பொறியோடு, தமிழீழ மக்களின் துன்பங்களையும், வேதனைகளையும் வெட்டி வீழ்த்தி விடுவோமென்று கூறிக்கொண்டு பாரதப் படைகள் எம் மண்ணில் காலூன்றியபோது தமிழீழ மக்களின் மகிழ்ச்சி உச்சிமேவிப் பிரவாகித்தது.

ஆனால் இந்திய அரசின் கபடம் மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியபோது ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிருநாட்கள் தண்ணீருமின்றி உண்ணாநோன்பிருந்த தமிழீழ விடிவிற்காய் உயிர்த்தியாகம் செய்தான் தியாகி திலீபன்.1963.11.27 இல் ஊரேழு என்னும் கிராமத்தில் பிறந்த இராசையா பார்த்தீபன் என்னும் திலீபன் கல்வியில் சிறந்துவிளங்கி பல்கலைக்கழக மருத்துவபீட அனுமதியைப் பெற்றான்.

தமிழீழ மக்களின் இன்னல்கண்டு தனது கல்வியை உதறித்தள்ளி 1983 காலப் பகுதியில் லெப். கேணல் பொன்னம்மான் அவர்களின் தொடர்பு மூலமாக தன்னை விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டான். ஆரம்ப காலங்களில் இயக்க அரசியல் வேலைகளில் ஈடுபட்ட திலீபன், பின்னர் யாழ். மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டான்.

இக்காலப்பகுதியில் சிறீலங்காப் படைகளுடனான நேரடி மோதல்களிலும் தனது திறமையினை வெளிப்படுத்தி வந்தார். மக்கள் மத்தியில் மிக அன்பாகப் பழகியதுடன் அவர்களது முன்னேற்றத்துக்காக பல அமைப்புகளையும் நிறுவினான். விடுதலைப் புலிகள் அமைப்பையும் பல புதிய பரிணாமங்களிற்கு இட்டுச் செல்ல வழிவகுத்துச் செயற்பட்டார். களத்தில், சுதந்திரப் பறவைகள் உட்பட பல பத்திரிகைகளை ஆரம்பித்து செயற்படுத்தினான். விடுதலைப் புலிகளின் மாணவர் அமைப்பு, மகளிர் அமைப்பு, சுதந்திர பறவைகள் அமைப்பு, தேச பக்தர் அமைப்பு என்பவற்றுடன் தமிழீழ கிராமிய நீதி மன்றங்கள், விழிப்புக் குழுக்கள், சர்வதேச உற்பத்திக் குழுக்கள், தமிழீழ ஒலி ஒளி சேவைக் கட்டுப்பாட்டுச் சபை, தமிழர் கலாசார அவை என இவன் ஆரம்பித்து நெறிப்படுத்திய பலவற்றைஅடுக்கிக்கொண்டே போகலாம். இவ்வாறு விடுதலைக்காய் தீவிரமாய் உழைத்துவந்த லெப். கேணல் திலீபன் இந்திய-சிறீலங்கா ஒப்பந்தத்தை சிறீலங்கா அரசு மீறுவது கண்டு, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலிலும், சிறைகளிலும் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும், புனர்வாழ்வு என்னும் பெயரில் தமிழர் தாயகத்தில் நடாத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், இடைக்கால அரசு நிறுவப்படும் வரை ‘புனர்வாழ்வு’ என்னும் சகல வேலைகளையும் நிறுத்த வேண்டும். வடக்கு கிழக்கில் காவல் நிலையங்கள் திறக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் உள்ள ஊர்காவற் படையினரின் ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் என்பவற்றில் குடியிருக்கும் இராணுவ பொலீஸ் நிலையங்கள் அகற்றப்பட வேண்டும் என ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து பல்லாயிரக் கணக்கான மக்கள் திரள் முன் தண்ணீருமின்றி தன் பட்டினிப்போராட்டத்தை ஆரம்பித்தான் திலீபன்.

பன்னிரு நாட்கள் தன்பாராமுகத் தன்மையினால் திலீபன் என்னும் தியாக வீரனை சாவின் வாய்க்குத் தீனியாக்கியது பாரத அரசு.

‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும்’ என்று கூறி மரணித்த அந்த மாவீரனின் 21ஆம் ஆண்டு நினைவுடன் ஒன்றுபட்ட மக்கள் சக்தியாய் எழுந்து நின்று, தினம் தினம் தீக்குளித்து போராடி நிற்கிறது எம்மினம்.

Monday, September 22, 2008

கனடா தமிழர்களின் கவன ஈர்ப்பு நிகழ்வு

சரிந்து செல்லும் சிறிலங்காவின் அந்நியச் செலாவாணியை ஈட்டிக்கொடுக்கும் துறைகளான உல்லாசப் பயணத்துறை, தேயிலை ஏற்றுமதி போன்றவற்றை தூக்கி நிறுத்தும் விதமாக கனடாவில் மேற்கொள்ளப்பட்ட சிறிலங்கா அரசின் முயற்சியொன்று தமிழ் மகளிர் அமைப்பும் கனடியத் தமிழ் இளையோர் அமைப்பும் இணைந்து நடத்திய கவனயீர்ப்பு நிகழ்வினால் பெரும் சவால்களை எதிர்கொண்டது.

உக்கிரமடைந்து வரும் போரினால் பெரும் சரிவைச் சந்தித்துள்ள சிறிலங்காவின் உல்லாசப்பயணத்துறை மற்றும் ஏற்றுமதித்துறைகளை வெளிநாடுகளில் ஊக்குவிக்கும் முகமாக, கனடா ரொறன்ரோவில் உள்ள "ஹாபர் ஃபுரொன்ட் சென்டரில்" (Harbour Front Centre) இல் "சிறிலங்கா நாள்" என்னும் நிகழ்வு இந்த வார இறுதி நாட்களில் (20-21.09.08) ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இங்கு இலங்கையின் உண்மை நிலையினை மறைத்து உல்லாசத்துறை மற்றும் தேயிலை போன்ற ஏற்றுமதித்துறைகளை ஊக்குவிக்கும் முகமாக பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



ஆனால், அங்கு எமது தமிழர்கள் படும் அவலங்களை வெளி உலகுக்கு எடுத்துக்கூறி சிறிலங்காவின் உண்மை முகத்தை தெரிவிக்கும் வகையில் தமிழ் மகளிர் அமைப்பினராலும் கனடிய தமிழ் இளையோர்களாலும் எதிர்ப்பு நிகழ்வு ஒன்று "சிறிலங்கா நாள்" நடைபெற்ற மண்டபத்துக்கு முன்பாக நடைபெற்றது.

இதில் இலங்கையில் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளைச் சித்தரிக்கும் படங்கள் மற்றும் வாசகங்கள் என்பனவற்றை தாங்கியவாறு வீதிக்கு இரு புறங்களிலும் திரண்டிருந்த மக்கள் அமைதியான முறையில் தமது எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

அத்துடன் இது மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதும், உல்லாசப் பயணிகள் பெருமளவில் பார்வையிடும் நகரின் மத்திய பகுதி என்பதனால், இங்கு வழங்கப்பட்ட சிறிலங்காவின் முகத்திரையைக் கிழித்துக்காட்டும் ஆதாரங்களுடன் கூடிய சிறு பிரசுரங்களை வேற்றின மக்கள் படித்துவிட்டு தம்முடன் கொண்டு சென்றதையும், அது பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டதுடன் தமது ஆதரவினையும் கவனயீர்ப்பு நிகழ்விற்கு தெரிவித்துக் கொண்டதையும் காணக்கூடியதாக இருந்தது.



இந்நிகழ்வினை கனடிய ஊடகங்களும் பதிவு செய்தன.

நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் "சிறிலங்காவே, தமிழர்களைக் கொலை செய்யாதே" (Sri Lanka, Stop Killing Tamils) என்ற வாசகத்தினைக் கட்டியிழுத்தபடி வானூர்தி ஒன்று சுமார் இரண்டு மணித்தியாலங்களாக ரொறன்ரோ நகர் முழுவதினையும் வலம் வந்ததாகும்.

ரொறன்ரோ நகரின் பெரும்பாகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் அனைத்திலும் இருந்து பார்க்கக்கூடியதாகப் பறந்த இந்த வானூர்தியின் பின்னால் எழுதப்பட்டிருந்த வாசகம் அனைத்து மக்களுக்கும் ஒரு செய்தியைத் தெரிவித்திருக்கும்.



அதாவது, நடக்கும் உண்மைகளை வெளித்தெரிய விடாது தடுத்து தனது போலி முகத்தினை வெளிக்காட்டும் சிறிலங்காவின் உண்மை முகத்தினை தோலுரித்துக் காட்டுவதாக இச்செய்தி அமைந்திருந்தது.

இதேவேளை, அங்கு வருகை தந்திருந்த வேற்றினச் சுற்றுலாப் பிரயாணிகளுக்கு அந்த வானூர்தி அந்த வாசகத்துடன் சுற்றி வந்ததன் காரணம் பற்றி சுற்றுலாப் பிரயாண வழிகாட்டிகள் எடுத்துக்கூறியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்தும் இந்த அமைதி வழியிலான எதிர்ப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமையும் இதே இடத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நன்றி புதினம்

Wednesday, September 17, 2008

பெரியார் 130


பெரியார்
130 ஆவது பிறந்த நாள்


விளக்கை ஏற்றி
வெளிச்சம் தந்தவர்கள் உண்டு
நீயோ
உன்னையே எரித்து
வெளிச்சம் தந்தாய்

எங்களுக்கு நீதான்
எழுதவும் படிக்கவும்
அடித்தளமிட்டாய்
நாங்களோ இன்னும்
நன்றி சொல்லவே
கற்றுக்கொள்ளவில்லை

எங்களுக்காகவே
நீ வாழ்ந்தாய்
மன்னித்துவிடு
தந்தையே
நாங்களும்
எங்களுக்காகவே வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.

- சுபவீ.
(தென்செய்தி 1/15 அக்டோபர் 2004

Thursday, September 11, 2008

அன்பளிப்பு ராடார்

புலிகளின் வானூர்தி தாக்குதலில் காயமடைந்த இந்திய தொழில்நுட்ப நிபுணர்களுக்கு கொழும்பில் தொடர்ந்து சிகிச்சை


வவுனியாவில் உள்ள வன்னிப் பிராந்திய கூட்டு நடவடிக்கைகளுக்கான தலைமையகத்தின் மீது நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய மும்முனைத் தாக்குதலில் காயமடைந்து கொழும்புக்குக் கொண்டுவரப்பட்ட இரண்டு இந்திய தொழில்நுட்பவியலாளர்களும் தொடர்ந்தும் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்கா வான்படையின் ராடர் பிரிவில் பணிபுரிந்த இந்த இந்த இருவரும் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்து உடனடியாகவே கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டனர்.

இருந்தபோதிலும், வவுனியா முகாமில் வெளிநாட்டவர்கள் எவரும் பணிபுரியவில்லை என சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல நேற்று முன்நாள் தெரிவித்திருந்தார்.

"இவ்வாறான நிலைமைகளைக் கையாள்வதற்கு எம்மிடம் போதியளவு ஆட்கள் உள்ளார்கள். வெளிநாட்டவர்கள் எமது படைகளுடன் இணைந்து பணியாற்றுகின்றார்கள் எனக்கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை" எனவும் அமைச்சர் நேற்று முன்நாள் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது தெரிவித்திருந்தார்.

காயமடைந்த இரண்டு இந்திய தொழில்நுட்ப நிபுணர்களான ஏ.கே.தாகூர், சிந்தமாணி ராவுட் ஆகிய இருவரும் ஓகஸ்ட் மாதத்திலிருந்து வவுனியா முகாமில் வைக்கப்பட்டுள்ள இந்திய ராடர் சாதனத்தை பராமரிப்பதற்காகவும், அதன் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் வந்து தங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

2005 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தினால் இந்த ராடர் சாதனம் சிறிலங்காவுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. கடந்த 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் விடுதலைப் புலிகள் தமது முதலாவது வான் தாக்குதலை மேற்கொண்டதையடுத்து இதன் தரம் மேம்படுத்தப்பட்டது. இதற்கான உதவிகளையும் இந்தியாவே வழங்கியது.

வவுனியா முகாமில் இந்திய தொழில்நுட்ப நிபுணர்கள் பணியாற்றியதை ஏற்றுக்கொள்ளும் இந்திய தூதரக அதிகாரி ஒருவர், "காயமடைந்த இருவரும் தொழில்நுட்ப நிபுணர்களாகப் பணிபுரிந்தவர்கள். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த ராடர் சாதனத்தைப் பராமரிப்பதற்காக இவர்கள் காலத்துக்குக் காலம் கிரமமான முறையில் சிறிலங்காவுக்கு வந்து செல்கின்றார்கள்" எனவும் குறிப்பிட்டார்.

காயமடைந்த இந்த இருவரும் தீவிரமான மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வன்னி கூட்டுப் படைத் தலைமையகத்தின் மீது விடுதலைப் புலிகளில் தரை மற்றும் வான் வழியாக நேற்று முன்நாள் தொடுத்த கடுமையான தாக்குதலில் படையினர் குறைந்தபட்சம் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முகாமிலிருந்த இந்தியா வழங்கிய ராடர் சாதனம் தாக்கியழிக்கப்பட்ட போது அதற்கான தொழில்நுட்பவியலாளர்களாகப் பணிபுரிந்த இரண்டு இந்தியர்கள் காயமடைந்து கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டமை தெரிந்ததே.

நன்றி புதினம்

முகமூடியை கிழித்துள்ள வவுனியா ரா அதிகாரி பாராட்டு

சிறிலங்கா இராணுவத்தின் பிரசார முகமூடியை கிழித்துள்ள வவுனியா தாக்குதல்: பி.இராமன்


சிறிலங்கா படையினரின் வவுனியா தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நேர்த்தியாக திட்டமிட்டு நடத்திய தாக்குதல் சிறிலங்கா இராணுவத்தின் பொய்ப்பிரசார முகமூடியை கிழித்தெறிந்திருக்கின்றது என்று இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பான றோவின் முன்னாள் பிரதிச்செயலரும் அனைத்துலக விவகார ஆய்வாளருமான பி.இராமன் தெரிவித்துள்ளார்.

வவுனியா தளம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் குறித்து அவர் எழுதியுள்ள பத்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

வடக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சிறிலங்கா இராணுவத்தினர், தமது தாக்குதல்களால் புலிகளின் ஒட்டுமொத்த மன உறுதியையும் சிதைத்துவிட்டதாக பிரசாரம் செய்து வருகிறாரகள்.

ஆனால், வவுனியா தாக்குதலை பார்க்கப்போனால் புலிகளின் மூத்த தளபதிகளோ போராளிகளோ எள்ளளவும் தமது உறுதியில் குலைந்துவிட்டதாக கணிப்பிடமுடியாது என்று அடித்துக்கூறவேண்டியுள்ளது.

புலிகளது மனஉறுதி தொடர்ந்து உச்ச நிலையிலேயே காணப்படுகிறது. அவர்களின் தளபதிகளின் நேர்த்தியான திட்டமிடலும் குறைந்த ஆள்பலத்துடனும் ஆயுத பலத்துடனும் படையினருக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தும் வியூகங்களும் அவர்களின் வீரத்தின் வீச்சை வெளிப்படுத்தியிருக்கின்றன.

விடுதலைப் புலிகளின் மரபுரீதியான போராட்ட வலுவை முற்றாக அழித்து போராளிகளின் மனஉறுதியை சிதைத்து விட்டதாக சிறிலங்கா இராணுவம் அண்மையில் கூறியிருந்தது.

இராணுவம் கூறியதைப்போல உண்மையிலேயே நடைபெற்றிருந்தால், புலிகளின் தளபதிகளினதும் போராளிகளதும் ஓர்மம் குறைந்திருக்கும். புலிகள் அமைப்பு பல பிரிவுகளாக உடைந்து அதன் உறுப்பினர்கள் அந்த அமைப்பிலிருந்து தப்பியோடியிருப்பர்.

அவ்வாறு ஏதாவது நடைபெற்றதா?

அதற்குரிய எந்த அறிகுறியும் புலிகள் அமைப்பிலிருந்து தென்படவில்லை.

பாகிஸ்தான், சீனா, இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகியவற்றிடமிருந்து தொடர்ந்து ஆயுதங்களை பெற்று ஓயாது சண்டையிடும் சிறிலங்கா படைகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் சளைக்காது சமரிட்டு வருகின்றனர்.

வன்னி மீது எத்தனை தடவைகள் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் சென்று தாக்குதல்களை நடத்தினாலும் அங்கிருந்து புலிகள் தொடர்ந்தும் போராடிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

புலிகளின் இந்த தாக்குதல்களினால் - சிறிலங்கா அரசு ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கூட - இராணுவம் பாரிய இழப்புக்களை சந்தித்து வருகின்றது.

ஈரானிடமிருந்து பெறும் பணத்தினால் பெருந்தொகையான ஆயுதங்களை தனது நேச நாடுகளிடம் பெற்று அவற்றை போரில் பயன்படுத்துவதில் மட்டும்தான் சிறிலங்கா படைகள் ஆசுவாசப்பட்டுக்கொள்கின்றன். இந்த வசதி புலிகளுக்கு இல்லை என்பது உண்மை.

விடுதலைப் புலிகளினது நேர்த்தியான திட்டமிடலையும் அரச படையினருக்கு எதிரான அவர்களது ஓர்மத்தையும் அண்மையில் இடம்பெற்ற வவுனியா தாக்குதல் தெளிவாக காண்பித்திருக்கின்றது.

கடந்த ஆண்டு ஒக்டோபரில் அனுராதபுரம் படைத்தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் போன்று - ஒரு படி மேலே சென்று - வான் வழியாகவும் தரை வழியாகவும் - ஆட்லறி மூலமும் மிகவும் கவனமாக திட்டமிட்டு வெற்றிகரமான தாக்குதல் நடவடிக்கையை விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருக்கின்றனர்.

தாக்குதல் மேற்கொண்ட புலிகளின் வானூர்திகளை கொழும்பிலிருந்து சென்ற தமது சிறப்பு தாக்குதல் வானூர்திகள் சுட்டு வீழ்த்தியதாக சிறிலங்கா வான்படை தெரிவித்திருக்கிறது. ஆனால், அதற்குரிய ஒளிப்பட ஆவணம் தம்மிடம் இல்லை என்று வான்படை பேச்சாளர் கூறியுள்ளார்.

அனுராதபுர படைத்தளம் மீதான புலிகளின் வான் தாக்குதலின்போதும் அது ஒரு கண்துடைப்பு தாக்குதல் என்றும் புலிகள் தமது இலக்கை அடையவில்லை என்றும் சிறிலங்கா அரசு முதலில் கூறியிருந்தது. ஆனால், பின்னர் வெளிவந்த சுயாதீன அறிக்கைகள் இராணுவத்துக்கு ஏற்பட்ட பாரிய இழப்பை வெளிக்கொண்டு வந்தது.

வவுனியா படைத்தளத்தின் மீது தாக்குதல் நடத்திய புலிகளின் வானூர்திகள் ஆறு நிமிடங்கள் மாத்திரமே வவுனியா வான் பரப்பின் மேல் பறப்பில் ஈடுபட்டிருக்கின்றன. ஆகவே, அவ்வளவு நேரத்திற்குள் கொழும்புக்கு தகவல் போய், அங்கிருந்து வந்து புலிகளின் வானூர்தியை தாக்கியழிக்க வல்ல வேகமான வானூர்திகள் எவையும் சிறிலங்காவிடம் இல்லை.

சிறிலங்கா இராணுவம் தாம் ஈட்டிய வெற்றிகளை பூதாகாரப்படுத்தி வெளியிட்டுவிட்டு தமது தரப்பு இழப்புக்களை மூடி மறைத்துவரும் வேளையில், விடுதலைப் புலிகள் ஆதாரங்களுடன் இழப்பு விவரங்களை வெளியிட்டு வருகின்றனர்.

தாம் போரில் பாரிய இழப்புக்களை சந்தித்தாலும் கூட அதனை புலிகள் ஒருபோதும் மூடிமறைக்க முயற்சிப்பதில்லை.

இதனால்தான், விடுதலைப் புலிகளின் அறிக்கைகளை போராளிகளும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களும் நம்பகத்தன்மை உடையவையாக பார்க்கின்றனர்.

வவுனியா தாக்குதலை பொறுத்த வரையில் விடுதலைப் புலிகள் விடுத்த அறிக்கை, சிறிலங்கா அரசு விடுத்த அறிக்கையிலும் பார்க்க கூடுதல் நம்பகத்தன்மை உடையது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி புதினம்