Tuesday, August 26, 2008

மாவீரன் பண்டாரவன்னியன் ஆங்கிலேயரின் கோட்டையினை தாக்கியழித்த 205 ஆவது வெற்றிவிழா



தமிழீழத் தேசியத் தலைவரினால் 1996 ஆம் ஆண்டு முல்லைத்தீவு சிறிலங்காப் படைத்தளம் தாக்கியழிக்கப்பட்டு, மீட்கப்பட்ட முல்லைத்தீவு மண்ணில் 1803 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25 ஆம் நாள் முல்லைத்தீவு ஆங்கிலேயப் படையினரின் கோட்டையினை மாவீரன் பண்டாரவன்னியன் தாக்கியழித்ததன் 205 ஆவது வெற்றிவிழா நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கத்தில் பொதுச்சுடரினை முல்லைத்தீவு மாவட்ட தமிழீழ நிர்வாக சேவைப் பொறுப்பாளர் சர்வன், புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன், முள்ளியவளைக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் மு.உமைநேசன், ஒட்டிசுட்டான், நெடுங்கேணிக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ஞானம் ஆகியோர் ஏற்றினர்.

தமிழீழத் தேசியக் கொடியினை கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம் ஏற்றினார்.

பண்டாரவன்னியன் கொடியினை பண்டாரவன்னியன் அறங்காவலர் கழகச் செயலாளர் சி.வேதவனம் ஏற்றினார்.

பண்டாரவன்னியன் நினைவுக்கல்லுக்கான சுடரினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் ஏற்றினார்.

நினைவுக்கல்லினை தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் திரைநீக்கம் செய்தார்.

நினைவுக்கல்லுக்கான மலர்மாலையினை முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.பார்த்தீபன் சூட்டினார்.

நிகழ்வரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த பண்டாரவன்னியனின் திருவுருவப்படத்திற்கு ச.கனகரத்தினம் சுடரேற்றி, மலர்மாலை சூட்டினார்.

பண்டாரவன்னியனின் திருவுருவப்படத்திற்கு பண்டாரவன்னியன் அறங்காவல் கழக உபதலைவர் க.சரவணபவன் மலர்மாலை சூட்டினார்.

தலைமையுரையினை ஒட்டிசுட்டான் உதவி அரசாங்க அதிபர் சுபாஜினி மதியழகன் நிகழ்த்தினார்.

விழாவுரையினை க.பார்த்தீபன் நிகழ்த்தினார்.

சிறப்புரையினை தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் ஆற்றினார்.

சிறப்புரையினைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத் தலைவருக்கான மாவீரன் பண்டாரவன்னியனின் 205 ஆவது ஆண்டு வெற்றிவிழா மலர் தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளரிடம் வழங்கப்பட்டது.

மாவீரன் பண்டாரவன்னியனின் வெற்றிவிழாவை முன்னிட்டு சான்றோர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.

சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட துணுக்காய் உதவி அரசாங்க அதிபர் நாகலிங்கம் நந்தகுமாரின் துணைவியார் அம்பிகா நந்தகுமார், கலைஞர் பொன்னையா சேதுபதி, கலைஞர் சு.கணபதிப்பிள்ளை, கலைஞர் நடேசு செல்லத்தம்பி, கலைஞர் மாணிக்கம் ரூபமூர்த்தி ஆகியோர் மதிப்பளிக்கப்பட்டனர்.

அத்துடன் மாவீரன் பண்டாரவன்னியனின் வெற்றி விழாவை முன்னிட்டு மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.

பேச்சுப் போட்டியில் கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலய மாணவி ந.சாமந்தி, கிளிநொச்சி இராமநாதபுரம் கிழக்கு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவி த.அனோஜா, அ.சகாயராணி, கற்சிலைமடு அரசினர்த் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவி யோ.தீபனா, கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலய மாணவி க.சுரேந்தினி ஆகியோர் பரிசில்களைப் பெற்றனர்.

கட்டுரைப் போட்டியில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவி ப.தனோஜிகா, கற்சிலைமடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவி த.கீதா, கிளிநொச்சி தமிழ்ச்சோலை வித்தியாலய மாணவி சு.மணிமேகலை ஆகியோர் பரிசில்களைப் பெற்றனர்.

கவிதைக்கான பரிசினை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன் வே.சுதன் பெற்றார்.

தமிழினத்தின் வரலாறுதான் இனத்தின் முகவரியாக திகழ்கின்றது: பா.நடேசன்

தமிழினத்தின் வரலாறுதான் இனத்தின் முகவரியாக திகழ்கின்றது: பா.நடேசன்

தமிழினத்தின் வரலாறுதான் இனத்தின் முகவரியாக திகழ்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

வன்னி மன்னன் பண்டாரவன்னியனின் 205 ஆவது ஆண்டு சிறப்பு மலருக்கு வழங்கிய வாழ்த்தில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

வீரத்திற்கும் மானத்திற்கும் இலக்கணமாக இந்த மண்ணில் வாழ்ந்து காட்டிய மாவீரன்தான் பண்டாரவன்னியன்.

செவிவழிக் கதைகளுடன் கலந்து சொல்லப்பட்டு வந்த பண்டாரவன்னியனின் வீரவரலாற்றை ஆவண நிரூபணங்கள் கொண்ட உண்மை வரலாறாக ஆக்கும் முயற்சி என்பது காலத்தின் தேவையாகும்.

இந்த வரலாற்றுத் தேவையை நிறைவேற்றும் பணியினை முல்லைத்தீவு மாவட்ட பண்டாரவன்னியன் அறங்காவல் கழகம் தனது கடமையாக எடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது.

வரலாறு என்பது ஒரு இனத்தின் உயிரைப் போன்றது. வரலாறு ஆவணப்படுத்தாவிடின் குறித்த இனம் அடையாளம் தெரியாதபடி கால ஓட்டத்தில் அழிந்துவிடும். இதனால்தான் ஆக்கிரமித்த இனத்தின் வரலாற்றை அழித்து விடுவதில் ஆக்கிரமிப்பாளர்கள் கவனம் எடுக்கின்றனர்.

தமிழரின் வரலாற்றை அழித்து விடுவதில் சிங்களப் பேரினவாதிகள் பகீரத முயற்சிகள் எடுப்பதும் நாம் அறிந்தே தமிழரின் வாழ்விடங்களின் தொன்மைப் பெயர்களை அழித்து சிங்களப் பெயர்கள் சூட்டுவதும், தமிழரின் ஆவணக் காப்பகங்கள், நூலகங்களை எரித்து அழிப்பதும் தமிழரின் வரலாற்றை தமிழ் மாணவர்களின் பாடநூல்களில் இருந்து விலக்குவதும் என்று தமிழரின் வரலாற்றை அழிக்க சிங்களப் பேரினவாதிகள் முயற்சித்தபடியுள்ளனர்.

இதனை முறியடித்து தமிழரின் வரலாற்றை எமது சந்ததியினர் அறியும் வகையில் நூலுருவாக்கிப் பரப்புவது தமிழ் அறிஞர்களின் வரலாற்றக் கடமையாகும். ஆங்கிலேயரின் ஆயுத பலத்திற்கு அஞ்சாமல் விடுதலை உணர்வுடன் போரிட்டவன்தான் மாவீரன் பண்டாரவன்னியன்.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வீரத்துடன் அந்நியரை எதிர்த்துப் போராடிய அந்த மாவீரனது கதைகள் எம்மைப் பெருமை கொள்ள வைக்கின்றன. அந்தப்போர்கள் நடந்த ஊர்களின் பெயர்களை உச்சரிக்கும் போது மனதில் உணர்வெழுச்சி பொங்குகின்றது.

இதற்கெல்லாம் வரலாற்று உணர்வுதான் காரணம். வரலாற்று உணர்வென்பது மிகவும் சக்தி வாய்ந்தது. ஒரு இனம் தனது மண்ணின் பெருமைகளை உயர்விலை கொடுத்துக் காப்பதற்கும், வளர்ப்பதற்கும் இந்த வரலாற்று உணர்வுதான் காரணமாக இருக்கின்றது.

பண்டாரவன்னியன் போன்று இந்த மண்ணின் வீரப்புதல்வர்களது, வரலாறுகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அந்த வீரவரலாறுகள் எமது எதிர்காலச் சந்ததிக்கு விடுதலையுணர்வை ஊட்டிக்கொண்டே இருக்கும் என்றார் அவர்.

Tuesday, August 19, 2008

மக்கள் போர்க்குழு பயிற்சி

கிளிநொச்சியில் ஆயிரம் பேருக்கான மக்கள் படைக்கட்டுமான போர்ப் பயிற்சி இன்று திங்கட்கிழமை தொடங்கியுள்ளது.

தமிழர் தாயக நிலங்களை வல்வளைப்புச் செய்து தமிழ் மக்களை துயரநிலைக்கு ஆளாக்கிக்கொண்டிருக்கும் சிறிலங்காப் படைகளிடமிருந்து தாய்நிலத்தை காக்கவும் மீட்கவும் மக்கள் படை தயாராகி கொண்டிருக்கின்றது.

இதன் முதற்கட்டமாக இன்று திங்கட்கிழமை கிளிநொச்சியில் ஆயிரம் பேருக்கான மக்கள் கட்டுமானப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.



இதில் அரச, அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள், வணிகர்கள், கூட்டுறவாளர்கள் எனப் பெருமளவான மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் போராளிகள் தாய் மண்ணை காக்கும் பணிக்காக வந்து இணையுமாறு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய பெருமளவானவர்கள் தம்மை மீள இணைத்து வருகின்றனர்.

சிறிலங்காப் படையினரின் வல்வளைப்பிலிருந்து தாய் மண்ணை காக்கவும் மீட்கவுமாக முன்னாள் போராளிகளை மீள வருமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை அவசரமான வேண்டுகோளினை விடுத்திருந்தது.



இந்த வேண்டுகோளுக்கு இணங்க பெருமளவான முன்னாள் போராளிகள் வட்ட கோட்டச் செயலகங்களில் தம்மை இணைத்து வருகின்றனர்.

இன்றைய நிகழ்வின் தொடக்கத்தில், தமிழீழ தேசியக் கொடியினை தமிழீழ நீதி நிர்வாகத்துறைப்
பொறுப்பாளர் பரா ஏற்றி வைக்க, தொடர்ந்து மக்களுக்கன மக்கள் கட்டுமானப் பயிற்சிகள் நடைபெற்றன.

நிகழ்வில் சிறப்புரையினை புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் நிகழ்த்தினார்.

நன்றி - புதினம்.

Friday, August 01, 2008

சென்னையில் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு 02.08.2008

பேரா. சுப.வீரபாண்டியன்

நூல் பெற்றுக் கருத்துரை
பொள்ளாச்சி மா.உமாபதி

போர்க்குரல்கள்
சி.மகேந்திரன்
கொளத்தூர் மணி
திரைப்பட இயக்குநர் சீமான்
தியாகு
தமிழச்சி
சாவல்பூண்டி சுந்தரேசன்
வழக்குரைஞர் அஜிதா
மருத்துவர் வேலாயுதம்

கவிதை முழக்கம்
கவிஞர் தணிகைச்செல்வன்
கவிஞர் ஜெயபாஸ்கரன்
கவிஞர் பச்சியப்பன்

நன்றியுரை மு. மாறன்

ஈழத் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு - பா.நடேசன் நன்றி

"விகடன்" கருத்துக்கணிப்பில் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி: பா.நடேசன்

தமிழீழம் மற்றும் விடுதலைப் புலிகள் போராட்டம் நியாயம் என்று தமிழ்நாட்டின் முன்னணி ஏடான "ஆனந்த விகடன்" நடத்திய கருத்துக்கணிப்பில் தமது உணர்வுகளை வெளிப்படுத்திய அத்தனை தமிழ் உள்ளங்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.
"ஆனந்த விகடன்" (06.08.08 பதிப்பு) ஏட்டில் வெளியாகியுள்ள பா.நடேசனின் பேட்டி வருமாறு:

இலங்கையில் இப்போதைய நிலவரம் என்ன?

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிறிலங்கா அரசு, தனது இராணுவத்தின் உதவியுடன் தமிழ் மக்கள் மீதும் தமிழீழத் தேசத்தின் மீதும் மோசமான இனப் படுகொலையை மேற்கொண்டு வருகிறது. தமிழர்களின் வாழ்விடங்கள் மீது வான்குண்டு வீச்சுக்கள், பீரங்கித் தாக்குதல்கள் எனப் பல்வேறு வடிவங்களில் தாக்கி வருகிறது. தினமும் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். உணவுப் பொருட்களுக்கும் மருந்துப் பொருட்களுக்குமே இங்கே இப்போது பெரும் தட்டுப்பாடு. மக்களைப் பட்டினி போட்டுக் கொன்றொழிப்பதன் மூலம் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என சிறிலங்கா அரசு எண்ணுகிறது. அண்மைக்காலத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தமது வாழ்விடங்களைவிட்டு இடம்பெயர்ந்துள்ளனர். இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியில், இந்த மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காக விடுதலைப் புலிகள் வீராவேசத்துடன் போராடி வருகின்றனர்!

ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு புலிகளின் போராட்டத்துக்கு இந்தியாவின் ஆதரவு இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில் குறிப்பாக, தமிழக மக்களின் ஆதரவை எந்த வகையில் எதிர்பார்க்கிறீர்கள்?

இதைப் புலிகளின் போராட்டம் என்று குறிப்பிடுவதைவிட தமிழ் மக்களின் போராட்டம் என்று சொல்வதுதான் பொருத்தமானதாகும். எமது விடுதலைப் போராட்டத்துக்கான தமிழக மக்களின் ஆதரவு நீறுபூத்த நெருப்பாகவே இருந்து வருகின்றது. இதனைப் பிழையாக மதிப்பிட வேண்டாம். வரலாற்று ரீதியாக, இன, கலாசார ரீதியாக தமிழக மக்களுக்கும் எமக்கும் தொப்புள் கொடி உறவு இருந்து வருகின்றது. அவர்களின் ஆதரவு எமக்கு எப்போதும் இருந்தே வரும்.

தனி ஈழம் மற்றும் விடுதலைப் புலிகள் போராட்டம் நியாயமென்று கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்கள் தங்கள் கருத்துக்களை எங்கள் நிருபர்களிடமும் எங்கள் இணையத்தளத்திலும் எடுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதில் எழுப்பப்பட்டிருக்கிறது. இதுபற்றி தங்கள் கருத்து என்ன?

உணர்வை வெளிப்படுத்திய அத்தனை தமிழ் உள்ளங்களுக்கும் நன்றி. எமது விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் இவர்கள், எமது தலைவர் தொடர்பாகத் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தவறானவையாகும். வெகுவிரைவில் இவர்களது கருத்துக்களில் மாற்றம் ஏற்படும் என உறுதியாகச் சொல்கின்றேன்.

இன்னும் எத்தனை காலத்துக்கு இந்தப் போராட்டம்?

விடுதலைப் போராட்டங்களுக்கு கால எல்லைகள் வகுத்துப் போராடுவதில்லை. ஆனால், முழுமக்கள் பலத்தோடு எமது விடுதலையை விரைவாக வென்றெடுப்போம்!

அனைத்துலக சமூகம் உங்களையும் சிறிலங்கா அரசையும் எப்படிப் பார்க்கிறது?

அனைத்துலக சமூகம் சிறிலங்கா அரசு பற்றி நன்றாகவே புரிந்தித்திருக்கிறது. அண்மையில்கூட ஐக்கிய நாடுகள்
சபையின் மனித உரிமை சபையிலிருந்து சிறிலங்கா நீக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தீவில் தொடர்ந்து நிகழும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உலக நாடுகள், மனித உரிமை அமைப்புகள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. அனைத்துலக சமூகம் எமது போராட்டத்தைப் பற்றியும் இயக்கத்தைப் பற்றியும் நன்றாகப் புரிந்து வைத்துள்ளார்கள். எமது விடுதலைப் போராட்டம் அதர்மத்தை எதிர்த்து, தர்மத்துக்காக நடத்தும் போராட்டம் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்!

இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாறியிருக்கிறதா?

சிறிலங்கா அரசின் இராஜதந்திர நகர்வுகள் எப்போதுமே இந்திய வெளியுறவுக் கொள்கைக்குப் பாதகமாகவே இருந்து வந்துள்ளன. இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடனேயே அவர்கள் வரலாற்று ரீதியான உறவுகளையும் தொடர்புகளையும் பேணி வருகின்றனர். சிங்களக் கட்சிகளின் இந்தியா தொடர்பான அரசியல் கொள்கைகள் என்பன எப்போதுமே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானவையே. தற்போதைய போர்ச்சூழ்நிலையில் அது உச்சகட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. இந்த நிலையில் இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்படும் என்பதை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றோம்.

விடுதலைப்புலிகளை என்றும் ஆதரிப்போம் - தமிழ்நாட்டுத் தமிழர்கள் - ஆனந்தவிகடன் கருத்துகணிப்பு முடிவு

விடுதலைப்புலிகளை என்றும் ஆதரிப்போம் - தமிழ்நாட்டுத் தமிழர்கள் - ஆனந்தவிகடன் கருத்துகணிப்பு முடிவு

நன்றி ஆனந்த விகடன், புதினம்




ஆனந்த விகடன் இதழில் (06.08.08) இது தொடர்பில் இடம்பெற்றுள்ள கருத்துக் கணிப்பு விவரம்: