Sunday, May 08, 2016

8 கேப்டன்களை உருவாக்கிய தோனி!

8 கேப்டன்களை உருவாக்கிய தோனி! 

சிலர் கிங்காக இருப்பார்கள், இன்னும் சிலர் கிங் மேக்கர்களாக இருக்கார்கள். கிங்காகவும், கிங் மேக்கராகவும் இருக்க முடியும் என்றால், அவர் இரண்டு உலகக் கோப்பையை வென்றிருக்க வேண்டும்.  இக்கட்டான சூழலில் அணியை கூலாக வெற்றிக்கு அழைத்து செல்பவராக அவர் இருக்க வேண்டும். அதற்கு அவரது பெயர் மஹேந்திர சிங் தோனியாகவும் இருக்க வேண்டும்.
கிரிக்கெட் என்ற விளையாட்டு இருக்கும் காலம்  வரை அதில் சிறந்த கேப்டன் பட்டியலில் தோனி முதல் வரிசையில் இருப்பார். ஹெலிகாப்டர் ஷாட் கிங், கடைசி பந்தில் சிக்ஸர் என எத்தனையோ சாதனைகளை அடுக்கினாலும் கோப்பையை வாங்கி இளம் வீரர்களிடம் கொடுத்து விட்டு,  ஒரு ஓரமாக நின்று அவர்களின் சந்தோசத்தை கண்டு மகிழ்வதை பார்த்தால், அவரை வெறுப்பவர் கூட விரும்புவார்கள்.  
 
ஒரு கேப்டன் சிறந்த அணியை மட்டும் உருவாக்குவதில்லை. அணியில் இருக்கும் அனைவரையும் சிறந்த வீரனாகவும், அணியை வழி நடத்தும் திறனையும் உருவாக்குவார். தான் இல்லாத காலத்திலும் அணி சிறப்பாக செயல்பட,  சிறந்த கேப்டன்களை உருவாக்குவதிலும் தோனி செஞ்சுரி அடிக்கிறார்.

விராத் கோலி, ரோஹித் ஷர்மா, முரளி விஜய், சுரேஷ் ரெய்னா, பாப் டூப்ளஸிஸ், பிராவோ, ஜாசன் ஹோல்டர், ஜார்ஜ் பெய்லி என பட்டியல் நீளுகின்றது.

விராட் கோலி


இந்திய அணியின் தற்போதைய டெஸ்ட் கேப்டன், வருங்கால இந்திய அணியின் கேப்டன், பெங்களூர் அணியின் கேப்டன், தோனியின் தளபதி என சொல்லிக் கொண்டே போகலாம். இவர் இந்திய அணிக்கு வரும் முன்னரே,  U-19 உலகக் கோப்பையை இந்தியாவிற்கு பெற்று தந்தவர். கேப்டனாக முன்னரே சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும்,  தோனியிடம் இருந்து நிதானத்தை கற்றுக்கொண்டார். தனது ஆக்ரோஷமான அணுமுறையை குறைத்து, டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தோனி குறித்து கோலி கூறுகையில், ”ஒரு அணியின் தலைவராக எல்லாவற்றிலும் சிறப்பாக பணியாற்ற கூடியவர். அவருடன் வெகு நாட்களாக இருக்கிறேன் என்ற முறையில் கூறுகிறேன், இன்னமும் நிறைய இருகின்றது அவரிடம் தெரிந்து கொள்வதற்கு, குறிப்பாக இக்கட்டான சூழ்நிலையில் நிதானமாக செயல்படுவது" என்கிறார்.

ரோஹித் ஷர்மா

இந்திய அணியின் முக்கிய தூண்களில் ரோஹித் ஷர்மாவும் ஒருவர். நடுவரிசையில் களமிறங்கி ஆடி வந்த இவரை சச்சின், ஷேவாக் காலத்திற்கு பிறகு துவக்க ஆட்டக்காரராக களம் இறக்கினார் தோனி. அதன் பிறகு இவர் செய்த சாதனைகள் பல. இரண்டு முறை இரட்டை சதம், அதிலும் இலங்கை அணிக்கு எதிராக அடித்த 264 ரன்கள் மகத்தான சாதனையாகும். ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்காக வாங்கப்பட்டபோது பாண்டிங், அந்த அணியின் கேப்டனாக இருந்தார். அவர் தொடர்ந்து பார்ம் இல்லாமல் தொடர,  கேப்டன் பதவி ரோஹித் ஷர்மாவிடம் கொடுக்கப்பட்டது. பாண்டிங், சச்சின் போன்ற ஜாம்பவான்கள் பெற்று தர முடியாத கோப்பையை மும்பை அணிக்காக இரண்டு முறை வென்று அசத்தினார். மும்பை அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட பிறகு,  “சச்சின் மற்றும் தோனியுடன் விளையாடிய அனுபவத்தைக்  கொண்டு அணியை சிறப்பாக வழி நடத்த முடியும் என்று நம்புவதாக” கூறினார் ரோஹித் ஷர்மா.

சுரேஷ் ரெய்னா 

இந்திய அணியில் தோனிக்கு கோலி தளபதி என்றால், சென்னை அணியில் டோனியின் தளபதி சுரேஷ் ரெய்னாதான். சென்னை அணிக்கு தடை விதிக்கப்பட்டபோது, சென்னை அணி வீரர்கள் புனே மற்றும் குஜராத் அணிகளில் பிரிந்து ஆடும் சூழல் ஏற்பட்டது. மெக்குலம் பிராவோ போன்ற உலக கேப்டன்கள் அணியில் இருந்த போதும், ரெய்னாவைதான் கேப்டன் பதவி தேடி வந்தது. அதற்கு முக்கிய காரணம் அவர் தோனியுடன் அதிகமாக விளையாடிய அனுபவம் கொண்டவர் என்பதால்தான் என்கிறார்கள். “சென்னை அணியில் தோனியின் தலைமையில்தான் நான் அதிகம் கற்றுக்கொண்டேன். என்னை ஒரு முதிர்ந்த வீரராக மாற்றியது சென்னை சூப்பர் கிங்க்ஸ்தான்.” என்கிறார் ரெய்னா. சென்னை அணியில் முதல் போட்டி முதல் கடைசி போட்டி வரை அனைத்து போட்டியிலும் ஆடியவர் ரெய்னா என்பது குறிப்பிடத்தக்கது.

முரளி விஜய்


சென்னை அணியில் துவக்க ஆட்டக்காரராக ஜொலித்தவர் முரளி விஜய். ஐ.பி.எல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் மட்டும் சதங்கள் அடித்து வந்த நேரத்தில்,  இந்திய வீரராக இருந்து இரண்டு சதமடித்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்த தமிழன். தற்போதைய பஞ்சாப் அணியின் கேப்டனான இவர், இதற்கு முன்னர் கேப்டனாக பெரிய தொடர்களை எதிர்கொண்ட அனுபவம் இல்லாத போதும்,  சென்னை அணியில்,  தோனி தலைமையில் ஆடியது ஒன்றையே போதுமான தகுதியாக பஞ்சாப் அணி நிர்வாகம் கருதியது போலும். 

டிவைன் பிராவோ


மே.இ தீவுகள் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர். மும்பை அணியில் இருந்து 2011 ம் ஆண்டு ஏலத்தில்,  சென்னை அணிக்கு வாங்கப்பட்டார். தோனிதான் அவரை 'டெத் ஓவர்ஸ்' என்று அழைக்கப்படும் கடைசி கட்ட ஓவர்களை போட பயன்படுத்துவார். சென்னை அணிக்காக பெரும்பாலும் தனது நான்கு ஓவர்களையும் கடைசியில்தான் வீசுவார் பிராவோ. இன்று அவர் டெத் ஓவர்களின் கிங் என்று அழைக்கப்படுகிறார். இவரும் மே.இ தீவுகள் அணியின் கேப்டனாக சிறப்பாக பணியாற்றினார். தோனியின் கேப்டன் யுக்திகள் தனக்கு எப்பொழுதும் ஆச்சர்யம் தருவதாக கூறுகிறார் பிராவோ. தற்போது இவர் ரெய்னா தலைமையிலான குஜராத் லைன்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். 

ஜாசன் ஹோல்டர்:

மேற்கு இந்திய தீவுகள் அணியின் உயரமான ஆல் ரவுண்டர். அந்த அணிக்காக அவர் அறிமுகமான இரண்டு நாட்களிலேயே, 2013 ம் ஆண்டில் சென்னை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். அந்த ஒரு தொடரில் ஆடிய அவருக்கு,  மேற்கு இந்திய தீவுகள் அணியை வழி நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. 23 வயதில் அந்த அணியின் கேப்டனாக ஆனார் ஹோல்டர். மே.இ தீவுகள் அணியின் இளம் கேப்டனாக வலம் வந்து,  2015 ம் ஆண்டு உலககோப்பை தொடரில்,   அந்த அணியை அரையிறுதி வரை அழைத்து சென்றார்.


பாப் டூப்ளஸிஸ் 

தென்னாப்பிரிக்க அணியின் டி 20 அணியின் கேப்டன். 2011 ம் ஆண்டில்,  சென்னை அணி இவரை ஏலத்தில் எடுக்கும்போது இவர் யார் என்று பலருக்கு தெரியாது. அதே பாப் டூப்ளஸிஸ்,  2013 ம் ஆண்டில்,  அந்த அணியின் முழு நேர டி 20 அணியின் கேப்டனாக அறிவிக்கப்படுகிறார். இவர் தொடர்ந்து சென்னை அணியில் 2015 வரை ஆடியவர்.  சென்னை அணி தடை செய்யப்பட்டபோது தோனி தலைமையிலான புனே அணியில் இடம்பிடித்தார். 

ஜார்ஜ் பெய்லி 

2012 ம் ஆண்டில்,  ஆஸ்திரேலிய அணியின் டி 20  கேப்டனாக ஜார்ஜ் பெய்லி  அறிவிக்கப்பட்டபோது,  பலருக்கு ஆச்சர்யம். காரணம்,  அவர் அதுவரை எந்த சர்வதேச போட்டிகளிலும் ஆடவில்லை. எந்த சர்வதேச போட்டியும் ஆடாமால் கேப்டன் ஆகும் இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை  பெற்றார். முன்னதாக 2009 முதல் 2012 வரை சென்னை அணியில் இடம் பிடித்திருந்தார் அவர். சென்னை அணிக்காக சில போட்டிகள்தான் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த நான்கு வருடங்களும் சென்னை அணியுடன் பயணம் செய்தார் ஜார்ஜ் பெய்லி. பின்னர் ஆஸ்திரேலிய அணியின்  ஒருநாள் போட்டியிலும்,  துணை கேப்டன் பதவி அவரை தேடி வந்தது. நடுவில் மூன்று ஆண்டுகள் பஞ்சாப் அணிக்காக ஆடிய ஜார்ஜ் பெய்லி, தற்போது தோனியின் புனே அணியில் உள்ளார்.   

இந்தியாவில் மட்டுமல்லாது,  உலக அரங்கிலும் தோனியின் கேப்டன் யுக்திகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதற்கு இது பெரிய சான்றாகும். தற்போது புனே அணியில் ஆடி வரும் இலங்கை அணியின் திசேரா பெரேரா,  விரைவில் இலங்கை அணியின் கேப்டனாக அறிவிக்கபட்டாலும் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. 

இத்தனை சாதனைக்கு சொந்தக்காரரான தோனியின் புனே அணி,  தற்போது ஐ.பி.எல் தொடரில் மோசமாக ஆடி வருகின்றது. இது குறித்து தோனி கூறுகையில்,”விரைவில் புதிய முறையில் இந்த தொடரை எதிர்கொண்டு வெற்றி பாதைக்கு வருவோம்” என்றார்.
இதெல்லாம் எங்க ‘தல’க்கு சாதாரணம் என ரசிகர்களும் வெற்றிக்காக காத்திருக்கிறார்கள். 

No comments: