Friday, May 13, 2016

'போட்டோகிராபர் ஹரிபாபு உயிரோடு இருக்கிறார்!'

'ராஜீவ்காந்தி கொலையின் நேரடி சாட்சி 'போட்டோகிராபர் ஹரிபாபு உயிரோடு இருக்கிறார்!' -ஆவணப்பட அதிர்ச்சி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. 'படுகொலைக்குக் காரணமானவர்கள்' என சி.பி.ஐயால் சொல்லப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர், தங்களது விடுதலையை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கிறார்கள்.
ராஜீவ்காந்தி படுகொலையின் மிக முக்கிய ஆவணம் என ஜெயின், வர்மா கமிஷன் விசாரணைகளில் குறிப்பிடப்பட்டது சம்பவ இடத்தில் போட்டோகிராபர் ஹரிபாபு எடுத்த புகைப்படங்களைத்தான். சர்வதேச அரங்கையும் இந்தப் புகைப்படங்கள் உலுக்கியது. " ஸ்ரீபெரும்புதூர் குண்டுவெடிப்பில் ஹரிபாபு இறந்துவிட்டாலும், அவர் எடுத்த புகைப்படங்களால்தான் குற்றவாளிகளை நெருங்க முடிந்தது" என பெருமைப்பட்டுக் கொண்டார் சி.பி.ஐ இயக்குநராக இருந்த கார்த்திகேயன்.

இந்நிலையில், " போட்டோகிராபர் ஹரிபாபு இறந்துவிட்டார் என அதிகாரிகள் சொல்வது சுத்தப் பொய். அவர் உயிரோடுதான் இருக்கிறார். அவரை வேண்டுமென்றே அதிகாரிகள் தப்ப வைத்தார்கள். சம்பவ இடத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது அவருடைய கேமராவும் அல்ல. அத்தனையும் நாடகம்" என அதிர வைக்கிறார்கள் இரண்டு மருத்துவர்கள். தடய அறிவியல் ஆய்வு அறிக்கை, ஹரிபாபுவின் போஸ்ட்மார்ட்டம் அறிக்கை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் ஆவணங்கள் என எட்டு ஆண்டுகளாக இதற்காகப் பயணித்து, பல புது தகவல்களைக் கண்டறிந்திருக்கிறார்கள்.
வருகிற மே 21-ம் தேதி ராஜீவ்காந்தி படுகொலை தினத்தன்று 'பைபாஸ்'  என்ற தலைப்பில்,  ஆவணப்படத்தை வெளியிட இருக்கிறார்கள். கோவையைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ் மற்றும் கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி ஆகிய இருவரும்தான், ஹரிபாபுவை நோக்கிக் காய்களை நகர்த்தியவர்கள். 

கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தியிடம் பேசினோம்... 

ஹரிபாபுவை நோக்கிப் பயணிக்கும் யோசனை எப்படித் தோன்றியது? 

" எங்களுக்குத் தொடக்கம் முதலே ராஜீவ்காந்தி படுகொலையின் தடய அறிவியல் அறிக்கை, போஸ்ட்மார்ட்டம் உள்ளிட்ட பல விஷயங்களில் சந்தேகம் இருந்தது. கோவையைச் சேர்ந்த என்னுடைய நண்பர் மருத்துவர் ரமேஷ், படுகொலை வழக்கின் ஆவணங்களைத் தேடும் முயற்சியில் இறங்கினார். ஜெயின் கமிஷன், வர்மா கமிஷன் ஆகிய இரண்டிலும், 'குற்றத்தைப் பற்றிய விடை தெரிவதற்கு மிக முக்கியமான காரணம், ஹரிபாபு எடுத்த கேமராவும் படங்களும்தான் முழு வழக்கையும் முடிவுக்குக் கொண்டு வந்தது' என்றது.
எங்களுடைய கேள்வியெல்லாம், 'ஹரிபாபு இறந்துவிட்டார். ஆனால், அவருடைய கேமரா மட்டும் எப்படி பாதிப்படையாமல் போனது?' என்பதுதான். 'தாமரை பூ வடிவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது' என்கிறது புலனாய்வு அறிக்கை. அப்படி வெடிக்கும்போது கேமரா பாதிப்படையாமல் இருக்காது என சந்தேகப்பட்டோம். அப்போது எங்களுடைய சந்தேகங்களுக்கு விடை கிடைக்கவில்லை. இதுதொடர்பான ஆவணங்களைப் பெறுவதற்கே மிகவும் கஷ்டப்பட்டோம். 

2008-ம் ஆண்டு ராஜீவ் படுகொலை வழக்கைக் கையாண்ட தடய அறிவியல் துறை பேராசிரியர் சந்திரசேகர், 'ஃபர்ஸ்ட் ஹியூமன் பாம்' என்ற புத்தகத்தை எழுதினார். அதில் பல கேள்விகளுக்கு விடை கிடைத்தன. 'கேமரா எப்படி பாதிப்படையாமல் கிடைத்தது?' என்ற கேள்விக்கு பதில் சொல்லும் சந்திரசேகர், ' பூகம்பம் நடக்கும்போது அதிர்ஷ்டவசமாக சிலர் இடிபாடுகளுக்கு நடுவிலும் பாதுகாப்பாக வெளிவந்திருக்கிறார்கள். அதைப் போலத்தான் கேமராவும் கிடைத்தது' என்கிறார்.
ஆனால், ' கிரைம் சீன் இன்வெஸ்டிகேஷன்களில் இதுபோன்ற உவமைகள் எடுபடாது, சம்பவ இடத்தின் நிலவரத்தைப் பொறுத்து அறிவியல்ரீதியாகப் பேச வேண்டும்' என அமெரிக்காவின் டாபெர்ட் வழக்கின் புலனாய்வு வழிமுறைகள் சொல்கிறது. டாபெர்ட் வழக்கின் புலனாய்வு முறைகளைச் சரியாகக் கையாண்டிருந்தால், இந்த வழக்கின் போக்கே திசைமாறியிருக்கும். அப்படி எதையும் புலனாய்வுத் துறை செய்யவில்லை. நாங்கள் டாபெர்ட் நடைமுறைகளைக் கையாண்டு விசாரணையைத் தொடங்கினோம்." 

ஹரிபாபு சாகவில்லை என்பதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்? 

" ஹரிபாபுவின் போஸ்ட்மார்ட்டம் அறிக்கையைத் தேடினோம். அந்த அறிக்கையில், 'இறந்த நபருக்கு சுன்னத் செய்யப்பட்டிருக்கிறது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 'வன்னிய சமூகத்தைச் சேர்ந்த ஹரிபாபு எப்படி சுன்னத் செய்வார்?' தவிர, 'அந்த சடலத்தின் வயது 30' என்கிறார்கள். ஹரிபாபுவுக்கு 22 வயதுதான் ஆகிறது. ராஜீவ் காந்தியை படம் எடுக்கும்போது, அவர் நடந்துவரும் கார்பெட்டின் இடதுபக்க மூலையில் இருந்திருக்கிறார் ஹரிபாபு. அங்கிருந்துதான் போட்டோ எடுத்தார். ஆனால், அவரது உடலை வலது பக்கம் இருந்து எடுத்ததாகச் சொல்கிறார்கள். குண்டு வெடித்தாலும் உடல் வலது பக்கம் வந்து விழுவதற்கு வாய்ப்பே இல்லை.
'உங்கள் மகனின் உடல் இது' என போலீஸார் சொன்னதைக் கேட்டு, அவரது அப்பா சுந்தரமணி உடலைக் கையெழுத்து போட்டு வாங்கியிருக்கிறார். 'சடலத்தை எரிக்கக் கூடாது, புதைக்க வேண்டும்' எனப் போலீஸார் கூறியிருக்கிறார்கள். ஆனாலும், ஹரிபாபு குடும்பத்தினர் அன்றைக்கே உடலை எரித்துவிட்டார்கள். மருத்துவர்கள் அந்த சடலத்தில் இருந்து தலையை வெட்டி எடுத்திருக்கிறார்கள். அவர் முகம் முற்றிலும் சிதைந்துவிட்டது எனச் சொல்கிறார்கள். சடலத்தில் இருந்து கை ரேகை மட்டும் எடுத்தவர்கள், டி.என்.ஏ சாம்பிள் எடுக்கவில்லை. மருத்துவர்களும், 'ஏன் சுன்னத் செய்யப்பட்டிருக்கிறது?' எனவும் கேள்வி எழுப்பவில்லை. ஹரிபாபுவின் அக்கா விஜய ரேவதி சொல்லும்போது, 'கிரீம் கலர் சட்டை அணிந்திருந்தான்' என்கிறார். ஆனால், போலீஸோ, ' பச்சை கலர் முழுக்கை சட்டை' எனச் சொல்கிறார்கள். இதையெல்லாம் யாரும் கேள்வி எழுப்பவில்லை." 

அப்படியானால், போலீஸார் காட்டும் சடலம் யாருடையது? 

" அதற்கும் எங்களுக்கு விடை கிடைத்தது. ஸ்ரீபெரும்புதூரில் சுலைமான் சேட் என்று ஒருவர் இருக்கிறார். அவர்தான் ராஜீவ்காந்தி நடந்து வரும்போது பூ தூவுவதற்காக இருவரை ஏற்பாடு செய்திருந்தார். அவர்கள் இருவரும் முஸ்லிம்கள். கண்டிப்பாக இந்த இருவரில் ஒருவரைத்தான் ஹரிபாபு எனக் காட்டியிருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தோன்றுகிறது. இரண்டு பூக்கூடைகள் சம்பவ இடத்தில் இருந்தது என புலனாய்வு அறிக்கை சொல்கிறது. சுப்ரமணியன் சுவாமியும் இரண்டு பூக்கூடை இருந்ததாகச் சொல்கிறார். "

இந்த விவகாரத்தில் தவறு செய்தது யார்? 

"கிரைம் சீன் இன்வெஸ்டிகேசன் என்பதே இந்த வழக்கில் முற்றிலும் மீறப்பட்டிருக்கிறது. முன்னுக்குப்பின் முரணான தகவல்களைச் சொல்கிறார் தடய அறிவியல் பேராசிரியர் சந்திரசேகர். சம்பவ இடத்திற்கு மறுநாள் காலை 11 மணிக்குப் போனதாகச் சொல்லியிருக்கிறார்.
ஆனால், கே.ராமசுந்தரம் என்ற ஃப்ரீலான்ஸ் நிருபர், தன்னுடைய பிளாக்கில், 'மே 22-ம் தேதி எனக்குப் பேட்டி கொடுத்தார் சந்திரசேகர்.ராஜீவ்காந்தியின் ஷூ, மனித வெடிகுண்டு தனுவின் தலையில் இருந்த கனகாம்பரம், பச்சை கலர் சல்வார், ஆரஞ்ச் கலர் பாட்டம், வெடிகுண்டுக்கு பயன்படுத்திய சுவிட்ச் ஆகியவற்றைக் காட்டினார் சந்திரசேகர். நான் அதை வீடியோ எடுத்தேன். சம்பவ இடத்திற்கு முதல்நாள் இரவே சந்திரசேகர் போய்விட்டார்' என எழுதியுள்ளார்.  இந்த வீடியோப் பதிவுகள் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் மற்றும் கனடாவின் டோரண்டோ ஸ்டார் ஆகியவற்றில் வெளியானது."

இப்படிச் செய்ய வேண்டிய அவசியம் என்ன? 

"இந்த வழக்கின் மிக முக்கியமான கேள்வி இது. சம்பவ இடத்தில் இருந்து காயத்தோடு ஹரிபாபுவை மீட்டவர்கள், அவரைத் தப்பியோட வைத்துவிட்டார்கள். இதற்குப் பின்னால் ஏராளமான மர்மங்கள் இருக்கின்றன." 

அப்படியானால், ஹரிபாபு இப்போது எங்கே இருக்கிறார்? 

"அவர் இப்போது பக்கத்து மாநிலம் ஒன்றில் சாமியார் வேடத்தில் இருக்கிறார். அவரைத் தப்பவிட்டது யார்? என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு அவரிடம் விடை இருக்கிறது. அவரது குடும்பத்தினர் சென்னையில் குடியிருந்தார்கள். இப்போது வேறு இடத்திற்குப் போய்விட்டார்கள்."

ஆவணப்படம் எப்போது வெளியாகும்? 

" ராஜீவ்காந்தி படுகொலை தினத்தன்று வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். தவறான நீதியால் ஏற்பட்ட விளைவுகளைச் சொல்லும் சிலப்பதிகாரக் கதை நடந்த பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம். ஒரு மணி நேரம் ஓடக் கூடிய படம் இது. வழக்கின் பல மர்மங்களை அவிழ்க்கும் மிக முக்கியமான ஆவணப்படமாகவும் இது இருக்கும்!" என விரிவாகப் பேசி முடித்தார் மருத்துவர் புகழேந்தி. 

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு பற்றிய விவாதம் வரும்போதெல்லாம், 'உண்மைக் குற்றவாளிகள் அரசு பதவிகளில் அமர்ந்து கொண்டு உலா வருகிறார்கள். தவறே செய்யாதவர்கள் இளமையைத் தொலைத்துவிட்டு, நோயோடு சிறைகளில் வாடுகிறார்கள்' என்பார்கள். அது உண்மைதானோ!? 

- ஆ.விஜயானந்த்

ஜீரோ பட்ஜெட் வனம்

ஒரு ஏக்கர் நிலத்தில் இரண்டரை லட்சம்... செலவில்லா வருமானம்!

காவிரிக்கரையில் ஒரு ஜீரோ பட்ஜெட் வனம்தூரன் நம்பி, ஜி.பழனிச்சாமி, படங்கள்: தி.விஜய்
காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை... ‘பத்மஸ்ரீ’ சுபாஷ் பாலேக்கரிடம் பயிற்சி பெற்ற பல்லாயிரம் விவசாயிகள் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தைக் கையிலெடுத்து சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். அதிலும் சில முன்னோடி விவசாயிகள் தங்கள் வயலையே மாதிரிப் பண்ணையாக்கி, நேரடி களப்பயிற்சி கொடுத்து, மேலும் பல புதிய ஜீரோ பட்ஜெட் விவசாயிகளை உருவாக்கியும் வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ‘பன்னூர்’ கிருஷ்ணப்பா. 

கர்நாடகா மாநிலம், மைசூரூ மாநகரிலிருந்து 52 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, பன்னூர். அங்கு, நீர் பெருக்கெடுத்து ஓடும் காவிரிக்கரையின் ஓரத்தில் உள்ளது, கிருஷ்ணப்பாவின் 5 ஏக்கர் நிலம். நெல்லும், கரும்பும்தான் பிரதானப் பயிர்கள். அதனுள் 3 ஏக்கர் நிலத்தில் ஜீரோ பட்ஜெட் வனத்தை உருவாக்கியுள்ளார், கிருஷ்ணப்பா. அது, மழையீர்ப்பு மையமாக மட்டுமல்லாமல், வருமானம் கொடுக்கும் வனமாகவும் விளங்குகிறது.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அறுவடை முடிந்த வயல்வெளிகள். அதில் மேய்ந்து வலம் வரும் கிடை ஆடுகள். இடையிடையே தோகை சாய்த்து ஆடும் கரும்புத்தோட்டங்கள். வரப்பில் வரிசை கட்டிப் போகும் விவசாயப்பெண்கள். முகம் பார்க்கும் தெளிவில் ஓடும் வாய்க்கால் தண்ணீர். இப்படியான இயற்கை கொஞ்சும் இடத்தில் இருக்கிறது, அந்த ஜீரோ பட்ஜெட் வனம்.

பச்சைத்துண்டு முண்டாசு தலையில் கட்டி, ஜீவாமிர்தம் தயாரிப்பில் மும்முரமாக இருந்த கிருஷ்ணப்பாவைச் சந்தித்தோம். இடையிடையே தமிழ் கலந்த கன்னடத்தில் பேசினார், கிருஷ்ணப்பா. 

“என் முழுப்பெயர், கிருஷ்ணப்பா தாசே கவுடா. பன்னூர்தான் சொந்த ஊர். பரம்பரை விவசாயக்குடும்பம். நல்ல வண்டல் மண்வளம், நீர்வளம் இரண்டும் நிறைந்த ஊர். நெல், கரும்பு, வாழை... என பணப்பயிர் சாகுபடி செய்யும் வளமான பூமி. மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு இங்குள்ள விவசாயிகள் வசதியாக இருப்பது மாதிரிதான் தெரியும். ஆனால், உண்மை அதுவல்ல. கடன் தொல்லை, ஜப்தி, தற்கொலை போன்ற சம்பவங்கள் அடிக்கடி இங்கும் நடக்கத்தான் செய்கின்றன. எல்லா வளமும் இருந்தும் தற்கொலையை மட்டும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
கர்நாடக மாநிலத்தில் விவசாயிகளுக்கு எங்கு பிரச்னை என்றாலும், பச்சைத்துண்டை தோளில் போட்டபடி போராடக் கிளம்பி விடுவேன். கர்நாடக மாநில விவசாய சங்கத்திலும் பொறுப்பில் இருக்கிறேன். மாதத்தில் பாதி நாள் ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டம் என்று போய் விடுவேன். அப்படி போகும்போதுதான் 2003-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம், ஹுப்ளியில் நடந்த சுபாஷ் பாலேக்கரின் ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு, பயிற்சி எடுத்தேன். அப்போதுதான், எல்லா வளமும் இருந்தும், ரசாயன விவசாயத்தால்தான் எங்கள் ஊர் விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்கிற விஷயம் பொட்டில் அடித்தது போல உறைத்தது” என்று நிறுத்திய கிருஷ்ணப்பா, ஒரு சிரிப்பை உதிர்த்தபடி தொடர்ந்தார்.  

“கண்டபடி ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் வயலில் கொட்ட ஆரம்பித்து, உற்பத்திச் செலவை அதிகப்படுத்திக் கொண்டு... அறுவடையான பொருளைக் கட்டுப்படியாகாத விலைக்கு விற்று, கடைசியில் கடனாளியானதுதான் மிச்சம். அந்தச் சிக்கலில் இருந்து அவர்களை மீட்டெடுக்கும் ஒரே வழி ஜீரோ பட்ஜெட் விவசாயம் மட்டும்தான் என்பது தெளிவாகப் புரிந்தது. தொடர்ந்து ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்புக்களில் கலந்து கொண்டேன். விவசாயிகள் சங்கக் கூட்டங்களிலும் ஜீரோ பட்ஜெட் விவசாயம் குறித்து வலியுறுத்தினேன். ஒரு சிலரைத் தவிர யாரும் இதைக் காது கொடுத்து கேட்கவில்லை. ‘இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியப்படாது. யூரியா, பொட்டாஷ் என்று போட்டோமா... வெள்ளாமையை எடுத்தோமா? என்று இருப்பதுதான் நிம்மதி’ என்றனர்.

இதுகுறித்து பாலேக்கரிடம் புலம்பினேன். ‘எதையும் பேசுவதை விட செய்து காட்டுவதுதான் நல்ல பதிலாக இருக்கும். நேரத்தை ஒதுக்கி ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை உடனே ஆரம்பியுங்கள்’ என்று ஆலோசனை சொன்னார், பாலேக்கர். உடனே, விவசாய சங்க வேலைகளைக் குறைத்துக் கொண்டு, ஜீரோ பட்ஜெட் பண்ணை உருவாக்கும் வேலையில் இறங்கினேன். 2006-ம் ஆண்டு, மூன்று ஏக்கர் நிலத்தில் ஜீரோ பட்ஜெட் முறையைத் தொடங்கினேன். இடையில் பலமுறை பாலேக்கரைத் தொடர்புகொண்டு எனக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டேன்.
பாலேக்கர் சொன்ன வன விவசாயம்!

ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் இரண்டு முறைகள் உண்டு. ஒன்று மகசூல் விவசாயம். இன்னொன்று வன விவசாயம். நெல், கரும்பு, வாழை என ஆண்டுப் பயிர்கள் சாகுபடி செய்தால், மகசூல் விவசாயம் மேற்கொள்ளலாம். வன விவசாயம் என்பது, ‘டூ நத்திங் ஃபார்மிங்’. அதாவது, எதுவும் செய்யாத விவசாயம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் செய்யப்படுவது. இதை ‘சுயச்சார்பு விவசாயம்’ என்று பாலேக்கர் சொல்வார். இந்த வன விவசாயத்தில், குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு மண் தன்னைத்தானே வளப்படுத்திக் கொள்ளும். செடிகளுக்குத் தேவையான அனைத்து ஊட்டங்களும் வனத்தில் இருந்தே கிடைக்கும். அந்த வன விவசாயத்துக்கு ‘பாலேக்கர் மாடல்’ என்று பெயர். நான் மூன்று ஏக்கர் நிலத்தில் வன விவசாயத்தை மேற்கொண்டேன்.
தினமும் 6 லிட்டர் தண்ணீர்!

என்னுடைய வன விவசாயத்தில் மூடாக்குகளின் மூலம்... கார்பன், நைட்ரஜன் உற்பத்தி ஆகிறது. மண்ணின் ஹியூமஸ், பூமியில் கார்பன் அளவைக் கூட்டுகிறது. இதனால், தினமும் 6 லிட்டர்  தண்ணீர் அளவுக்கு ஆவியாதல் தடுக்கப்படுகிறது. இது தினமும் ஆறு லிட்டர் மழை நீரைச் சேமிப்பதற்குச் சமம். இப்படி ஒன்றை ஒன்று சார்ந்து எதுவும் செய்யாத தானியங்கு விவசாயமாக எனது வன விவசாயம் மாறியுள்ளது. இந்த மூன்று ஏக்கர் வன விவசாயத்தில், அறுவடை செய்ய மட்டுமே நாங்கள் உள்ளே செல்கிறோம். மற்ற வேலைகளை எல்லாம் இயற்கை செய்து கொள்கிறது. 10-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எனது வன விவசாயத்தில் தென்னை, பாக்கு, மிளகு, காபி, ஆரஞ்சு, சாத்துக்குடி ஆகியவற்றில் இருந்து இப்போதைக்கு வருமானம் வருகிறது” என்ற கிருஷ்ணப்பா, பண்ணையைச் சுற்றிக் காட்டிக் கொண்டே பேசினார்.
பாலேக்கரின் பாராட்டு!

“சில ஆண்டுகளுக்கு முன் பண்ணையைப் பார்வையிட்ட பாலேக்கர், சில திருத்தங்கள் சொன்னார். அதில் முக்கியமானது இரண்டடுக்கு உயிர்வேலி. எனது பண்ணையைச் சுற்றிலும் சில்வர் ஓக், தேக்கு, மலைவேம்பு மரங்கள் ஒரு அணியாகவும், அடுத்த வரிசையில் அகத்தி, சீத்தா, முருங்கை என்று உயிர் வேலிகளை அமைக்குமாறு சொன்னார். அதன்படியே நடவு செய்தேன். அவை இப்போது வளர்ந்து உயிர்வேலியாக நிற்கின்றன. சமீபத்தில் பண்ணைக்கு வந்த பாலேக்கர், ‘முழுமையான ஜீரோ பட்ஜெட் வன விவசாயம் என்பதற்கான மாதிரிப்பண்ணையாக மாறிவிட்டது’ என்று பாராட்டிச் சென்றார். பள்ளி, கல்லூரி மாணவர்கள் இயற்கை ஆர்வலர்கள் என்று பலரும் எனது வன விவசாயப் பண்ணைக்கு வந்து பல விஷயங்களைத் தெரிந்து செல்கிறார்கள்” என்று பெருமையுடன் சொன்ன கிருஷ்ணப்பா நிறைவாக,
“2007-ம் ஆண்டு ‘பசுமை விகடன்’ மூன்றாவது இதழில் என்னைப்பற்றிய கட்டுரை வந்துள்ளது. அன்று சாதாரண ஜீரோ பட்ஜெட் பண்ணையாக இருந்த நிலம், இந்த 9 ஆண்டுகளில் மகசூல் விவசாயத்துடன் வன விவசாயம் அடங்கிய மாதிரிப்பண்ணையாக மாறியுள்ளது. இந்த பத்து ஆண்டுகளில் மைசூரூ மாவட்டத்தில் மட்டும் 500 விவசாயிகள் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் இறங்கியுள்ளனர். நான் பிறந்த இந்த மாவட்டத்தை முழுமையான ஜீரோ பட்ஜெட் விவசாய மாவட்டமாக மாற்ற முயற்சி எடுத்து வருகிறேன். இன்னும் சில ஆண்டுகளில் அது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. என்னைத் தமிழக விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தி ‘ஜீரோ பட்ஜெட் ஹீரோ’வாக ஆக்கியது, பசுமை விகடன்தான். அதன் வாயிலாக தமிழ்நாட்டில் பல விவசாயிகள் நண்பர்களாகக் கிடைத்துள்ளனர். பசுமை விகடனுக்கு நன்றி”  என்று நெகிழ்ச்சியாகச் சொல்லி விடைகொடுத்தார்.

இந்த கிருஷ்ணப்பா தன் அனுபவங்களை, திருச்சியில் பிப்ரவரி 12 அன்று துவங்க இருக்கும் ‘பசுமைவிகடன்’ அக்ரி எக்ஸ்போ-2016 நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தன் அனுபவங்களை நேரடியாக பகிர இருக்கிறார்.
தொடர்புக்கு,
கிருஷ்ணப்பா,
செல்போன்: 098805 87545.

Sunday, May 08, 2016

சோழர்களின் நீர் மேலாண்மை...

சோழர்களின் நீர் மேலாண்மையும், நதி நீர் இணைப்பு திட்டமும்...!


பெரிய திட்டங்களை கண்டு எப்போதும் வியப்பது, அந்த பெரிய திட்டங்கள் நமக்கு வேண்டும் என்று கேட்பது நம் பொதுவான இயல்பு. நீர் மேலாண்மை விஷயத்தில் எடுத்துக் கொண்டால் கூட, நமது கோரிக்கைகள் எப்போதும் பெரிய அணைகளாக, நதி நீர் இணைப்பாக இருந்துகிறது. இந்த இயல்பினால் தான் உலகின் பழமையான அணையை கட்டியவன் சோழன்  என்று பெருமை கொள்கிறோம். ஆனால், அதே சோழர்கள் வெட்டிய லட்சக்கணக்கான குளங்கள், ஏரிகளை  பற்றி பேச மறுக்கிறோம். 

கரிகாலனின் கல்லணை குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும்தான். இப்போது கட்டப்படும் அணைகள் போலானது அல்ல, சோழன் கட்டிய கல்லணை. சூழலுக்கு அதிகம் தீங்கிழைக்க்காமல், கல், மண் மற்றும் களிமண் கொண்டு கட்டப்பட்ட அணை அது. அதனால்தான், இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சர் ஆர்தர் காட்டன், கல்லணையின் பொறியியலை கண்டு வியந்து கல்லணைக்கு ‘கிரான்ட் அணைகட்’ என்று பெயர் சூட்டினார். இது பெருமைக்குரிய விஷயம்தான். ஆனால், சோழர்கள்  அணைகளை மட்டும் கட்டவில்லை. கல்லணைக்கு நிகரான தொழிற் நுட்பம் அவர்கள் வெட்டிய ஏரிகளிலும் இருந்தது. 

ராஜகேசரி பெருவழியும், நொய்யல் ஆறும்:
பிற்காலச் சோழர்கள் நாகப்பட்டினம் முதல் கேரள மாநிலம் கோழிக்கோடு வரை ஒரு பெரும் பாதையை உண்டாக்கி இருந்தார்கள். இந்த பாதை ராஜகேசரி பெருவழி என்று அழைக்கப்பட்டது. இந்த பெருவழியின் பக்கமாக ஏராளமான ஏரிகள் வெட்டப்பட்டு இருக்கிறது. இந்த ஏரிகள்தான் நொய்யலாற்றின் உயிர் நாடி.  

எழுத்தாளர் இரா. முருகவேளிடம் இந்த பெருவழி குறித்து பேசியபோது, “இந்த பெருவழியில் பெரும் வணிக குழுக்கள் பயணித்தன. வணிக குழுக்கள் என்றால் பத்து இருபது பேர் அல்ல. குறைந்தது 1000 மாட்டு வண்டிகளில் தானியங்கள், பஞ்சுகள் மற்றும் பிறச் செலவங்களை ஏற்றிக் கொண்டு வணிகர்கள் பயணித்து இருக்கிறார்கள். கொடுமுடி முதல் பாலக்காடு வரை இந்த பெருவழியை ஒட்டிய பகுதிகள் மிகவும் வறட்சியானதாக இருந்து இருக்கிறது. அதனால், அந்த பாதையில் பயணிப்பவர்களின் நலனுக்காக கோவை பகுதியில் மட்டும் 32 நீர் நிலைகளை உண்டாக்கி இருக்கிறார்கள். இது குறித்த கல்வெட்டு இன்றும் இருக்கிறது. 

கோவை மாநகரத்தில் உள்ள அல்லிக்குளம், குறிச்சி குளம், நாகராஜபுர குளம், முத்தனங்குளம், பனங்காட்டு குளம், வாலாங்குளம் எல்லாம் அவர் வெட்டியதுதான். இந்த நீர் நிலைகள் ஒன்றோடு ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டவை. நொய்யலாற்றிலிருந்து வரும் நீர் இந்த ஏரிகளை எல்லாம் நிரப்பிவிட்டு மீண்டும் நொய்யலாற்றோடு கலந்துவிடும்.

கோவை மாவட்டம் பீடபூமி பகுதி. அதனால் மற்ற ஆறுகளைவிட நொய்யலாற்றின் வேகம் அதிகமாக இருக்கும். பெரும் மழை பெய்தால் கூட வேகமாக பயணித்து காவிரி உடன் விரைவாக கலந்துவிடும். அதனால், இந்த ஆற்றின் பயன்களை அந்த பகுதி மக்கள், முழுவதுமாக பயன்படுத்த முடியாத நிலை இருந்து இருக்கிறது. இந்த நிலையில், அந்த பகுதியில் வெட்டபட்ட இந்த ஏரிகள், ஆற்றின் வேகத்தை ஆற்றுப்படுத்தியது மட்டும் இல்லாமல்,  அந்த பகுதியையும் எப்போதும் செழிப்பாக வைத்து இருந்து இருக்கிறது.

ஆனால், நாம் நம் மோசமான நீர் மேலாண்மையால், அந்த ஏரிகளையும் மெல்ல கொன்று வருகிறோம். அதன் மூலமாக நொய்யலையும். ஆம் நொய்யல் அழிவிற்கு சாயப்பட்டறைகள் மட்டும் காரணம் அல்ல. இந்த ஏரிகளின் அழிவும்தான். முன்பு ஒரு காலத்தில் நொய்யலில் ஏராளமான நீர் நாய்கள் இருந்து இருக்கின்றன. ஆனால், இப்போது ஒன்றை கூட பார்க்க முடியவில்லை. அந்த நிலை நாளை அதனை ஒட்டி வாழும் நமக்கும் ஏற்படலாம்...” என்கிறார் முருகவேள்.  

நதிநீர் இணைப்பு திட்டம் மக்களை ஏமாற்றும் வேலையா...?
இந்த நீர் நிலைகளை காக்க வக்கற்ற இந்த அரசும் நாமும்தான் இப்போது நதி நீர் இணைப்பை பற்றி அதி தீவிரமாக பேசி வருகிறோம்.  அனைத்து கட்சிகளும் நம்மை கவர்வதற்காக நதி நீர் இணைப்பு திட்டத்தையும் தம் தேர்தல் அறிக்கையில் முன் வைத்து இருக்கிறது. உண்மையில் இந்த நதி நீர் இணைப்பு சாத்தியமா...பயன் தருமா...? என்ற நம் கேள்விக்கு ‘இல்லை’ என்பதுதான் சூழலியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்களின் பதிலாக இருக்கிறது. 

சூழலியலாளர் பியூஷ், “நதி நீர் இணைப்பு நன்மைகளை தருவதை விட மாநிலங்களுக்கிடையே  பிரச்னையைதான் உண்டாக்கும். இது போல் பெரிய திட்டங்களை நாம் யோசிப்பது மூலமாக, தீர்வை நோக்கி பயணிக்காமல் பிரச்னைகளை மேலும் மேலும் நாம் சிக்கலாக்குகிறோம்.” என்கிறார். 

“ஒரு வேளை இந்த நதிகள் இணைக்கப்படும் பட்சத்தில், நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது அளவுக்கு மக்கள் இடம்பெயரும் சூழ்நிலை ஏற்படும். அவர்கள் வாழ்வாதாரத்திற்கு அரசு என்ன திட்டத்தை வைத்து இருக்கிறது. அது மட்டுமல்லாமல், டன் கணக்கில் கான்கீரீட் கலவைகள் ஆற்றில் கொட்ட்டப்படும். இது மேலும் மேலும் ஆற்றை மாசுப்படுத்துமே தவிர, எந்த நல் பயன்களையும் தராது...” என்கிறார் பியூஷ். 

ஏற்கெனவே, மேட்டூர் அணை கட்டப்படுவதற்காக அப்புறப்படுத்தப்பட்ட மக்கள் இன்றும் கர்நாடக வனப்பகுதிகளில் அகதிகளாக அலைந்து கொண்டிருக்கும் இந்த சூழலில், பியூஷின் கருத்து கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. 

ஏறத்தாழ இதே கருத்தை வழிமொழியும், பூவுலகு அமைப்பைச் சேர்ந்த சுந்தராஜன்,  “இன்றைய மதிப்பில், இந்த திட்டத்தை செயல்படுத்த 20 லட்சம் கோடி தேவை. பராமரிக்க வருடத்திற்கு 2 லட்சம் கோடி தேவை. இவ்வளவு நிதி எங்கு இருக்கிறது. இது முழுக்க முழுக்க மக்களை திசை திருப்பி ஏமாற்றும் திட்டம்”  என்கிறார். 

அரசின் வாதம்:
இந்தியாவில் சில நதிகளில் மிகவும் செழிப்பாக வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கிறது. சில நதிகளில் பருவகாலத்தில் மட்டும் தண்ணீர் இருக்கிறது. இந்த இரண்டையும் இணைக்கும் போது, அனைத்து நதிகளிலும் வருடம் முழுவதும் தண்ணீர் இருக்க செய்து விட முடியும். அதனால் நமது விவசாய பரப்பு 175 மில்லியன் ஹெக்டேர் அளவிற்கு விரிவடையும்,  34000 மெகாவாட் புனல் மின்சாரம் தயாரிக்க முடியும். -  இது அரசின் வாதம்.

ஆனால், இந்த அடிப்படை புரிதலே தவறு என்கிறார் இந்திய நீர் நிலைகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் டெல்லி ஐஐடி பேராசிரியர் கோசைன்.
“பருவநிலை மாற்றத்தை கணக்கில் கொள்ளாமல் இந்த திட்டத்தை முன்வைக்கிறார்கள். வற்றாத நதிகள் அனைத்திற்கும் ஜீவனாக இருப்பது இமயமலை பனிப்பாறைகள். ஆனால், பருவநிலை மாற்றத்தால் இந்த பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இன்னும் சில காலத்தில்  முழுவதுமாக உருகிவிடும் பட்சத்தில், வற்றாத நதிகள் என்று ஒன்று இல்லாமலேயே ஆகிவிடும். பின்பு, நதிகளை இணைத்து என்ன பயன்...?” என்று அவர் வைக்கும் கேள்விகளை நாம் புறந்தள்ளிவிட முடியாது. 

நதிகள் இணைப்பிற்கு அரசு சொல்லும் இன்னொரு காரணம், தேவையில்லாமல் கடலில் கலக்கும் நீரை தடுக்க முடியும் என்பது. ஆனால், இந்த வாதமும் தவறு என்கிறார் பூவுலகு சுந்தராஜன்.

சுந்தராஜன், ”கடல் உயிருடன் இருக்க வேண்டுமென்றால் நதிகள் அதன் இயல்பில் கடலில் கலக்க வேண்டும். அதை தடுத்தால் கடல் மரணித்துவிடும். அதற்கு நம் சமகால உதாரணம்  'Dead Sea'. ஜோர்டான் நதியை கடலில் கலக்க விடாமல் செய்ததுதான் அந்த கடல் மெல்ல இறக்க காரணம். அது மட்டுமல்லாமல், நதி கடலில் கலக்கும் கழிமுகத்தில்தான், மீன்கள் குஞ்சு பொறிக்கும், அந்த பகுதியில்தான் அலையாத்தி காடுகள் உண்டாகும். நாம் நதி, கடலில் கலப்பதை தடுக்கிறோமென்றால், இவை அனைத்தையும் அழிக்கிறோம் என்று அர்த்தம்”


பிரச்னைகளுக்கு உள்ளூர் அளவிலேயே தீர்வு காணுங்கள்...?
சரி நம் நீர் பிரச்னைக்கு தீர்வென்ன...? நம் வரலாற்றை மீள்வாசிப்பது மூலமே நம் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுவிட முடியும். ஆம். சோழர்களின் நீர் மேலாண்மை.  

இவர்கள் பெரிய அணைகள், நதிகள் இணைப்பு ஆகியவற்றுக்காக திட்டமிடும் பணத்தில் பத்து சதவீதத்தைக் கொண்டே, நம் அனைத்து குளங்கள், ஏரிகளையும் மீட்டுவிட முடியும் மற்றும் ஆயிரக்கணக்கில் புது நீர் நிலைகளையும் உண்டாக்கிவிட முடியும். அதன்  மூலம் அந்தந்த பகுதியில் நீர் வளம் பெருகும். அந்த பகுதி பிரச்னை அந்த பகுதியிலேயே தீர்க்கப்படும்.

நாம் ஒரு பொருளை ஒரு இடத்தில் தொலைக்கிறோமேன்றால், தொலைத்த இடத்தில் தேடுவோமா அல்லது நமக்கு விருப்பமான இடத்தில் தேடுவோமா...? அது போலதான் நீர் பிரச்னையும். ஒரு இடத்தில் தண்ணீர் சிக்கலென்றால், அதே இடத்தில் அதிக நீர் நிலைகளை உண்டாக்கி தீர்க்க வேண்டுமே தவிர, இன்னொரு இடத்திலிந்து நீர் எடுக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. இது சிக்கலை மேலும் மேலும் அதிகமாக்குமே தவிர, நிரந்திர தீர்வை தராது.
 

ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் நான்கு ஆண்டுகளுக்கு  முன் சென்னையில் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சம் வந்தது. அப்போது திருவள்ளூரிலிரிந்து தண்ணீர் எடுக்க அரசு முடிவு செய்கிறது. இரண்டு, மூன்று முறை தண்ணீர் எடுக்க அந்த பகுதி விவசாயிகளும் அனுமதித்தார்கள். ஆனால், அதன் பின் எதிர்ப்பு தெரிவித்து, தண்ணீர் எடுக்க சென்ற வண்டியை சிறைப்பிடித்து வைத்து விட்டார்கள். பக்கத்து பக்கத்து மாவட்டத்திலேயே இவ்வளவு சிக்கல் உண்டென்றால், பல மாநிலங்களின் சம்மதம் கோரும் இந்த திட்டத்தில் எவ்வளவு சிக்கல் இருக்கும்....?

இவர்கள் பெரிய அணைகள், நதி நீர் இணப்புகளை முன் வைக்க இன்னொரு காரணம் அதில் விளையாடும் பெரும் பணம் மற்றும் அதை ஒட்டிய ஊழல். அதனால்தான் சுலபமான தீர்வை கண்டு கொள்ள ஆட்சியாளர்கள் மறுக்கிறார்கள். நாம் எளிய தீர்வை முன் வைத்து, அதை செயல்படுத்த அரசை நிர்பந்திக்கும் போது, இவர்களின் ஊழல்களையும் தடுத்து விட முடியும். இனியாவது நாம், கங்கையையும் காவிரியையும் இணைக்க கோராமல், நம் வசிக்கும் பகுதியில் இருக்கும் குளங்களையும், ஏரியையும், கண்மாயையும் மீட்க, புனரமைக்க, புதுப்பிக்க அரசை நிர்பந்திப்போம்.

தீர்வு எளிமையான ஒன்றாக இருக்கிறது. நாம் எந்த பாதையில் பயணிக்க போகிறோம்...
?

8 கேப்டன்களை உருவாக்கிய தோனி!

8 கேப்டன்களை உருவாக்கிய தோனி! 

சிலர் கிங்காக இருப்பார்கள், இன்னும் சிலர் கிங் மேக்கர்களாக இருக்கார்கள். கிங்காகவும், கிங் மேக்கராகவும் இருக்க முடியும் என்றால், அவர் இரண்டு உலகக் கோப்பையை வென்றிருக்க வேண்டும்.  இக்கட்டான சூழலில் அணியை கூலாக வெற்றிக்கு அழைத்து செல்பவராக அவர் இருக்க வேண்டும். அதற்கு அவரது பெயர் மஹேந்திர சிங் தோனியாகவும் இருக்க வேண்டும்.
கிரிக்கெட் என்ற விளையாட்டு இருக்கும் காலம்  வரை அதில் சிறந்த கேப்டன் பட்டியலில் தோனி முதல் வரிசையில் இருப்பார். ஹெலிகாப்டர் ஷாட் கிங், கடைசி பந்தில் சிக்ஸர் என எத்தனையோ சாதனைகளை அடுக்கினாலும் கோப்பையை வாங்கி இளம் வீரர்களிடம் கொடுத்து விட்டு,  ஒரு ஓரமாக நின்று அவர்களின் சந்தோசத்தை கண்டு மகிழ்வதை பார்த்தால், அவரை வெறுப்பவர் கூட விரும்புவார்கள்.  
 
ஒரு கேப்டன் சிறந்த அணியை மட்டும் உருவாக்குவதில்லை. அணியில் இருக்கும் அனைவரையும் சிறந்த வீரனாகவும், அணியை வழி நடத்தும் திறனையும் உருவாக்குவார். தான் இல்லாத காலத்திலும் அணி சிறப்பாக செயல்பட,  சிறந்த கேப்டன்களை உருவாக்குவதிலும் தோனி செஞ்சுரி அடிக்கிறார்.

விராத் கோலி, ரோஹித் ஷர்மா, முரளி விஜய், சுரேஷ் ரெய்னா, பாப் டூப்ளஸிஸ், பிராவோ, ஜாசன் ஹோல்டர், ஜார்ஜ் பெய்லி என பட்டியல் நீளுகின்றது.

விராட் கோலி


இந்திய அணியின் தற்போதைய டெஸ்ட் கேப்டன், வருங்கால இந்திய அணியின் கேப்டன், பெங்களூர் அணியின் கேப்டன், தோனியின் தளபதி என சொல்லிக் கொண்டே போகலாம். இவர் இந்திய அணிக்கு வரும் முன்னரே,  U-19 உலகக் கோப்பையை இந்தியாவிற்கு பெற்று தந்தவர். கேப்டனாக முன்னரே சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும்,  தோனியிடம் இருந்து நிதானத்தை கற்றுக்கொண்டார். தனது ஆக்ரோஷமான அணுமுறையை குறைத்து, டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தோனி குறித்து கோலி கூறுகையில், ”ஒரு அணியின் தலைவராக எல்லாவற்றிலும் சிறப்பாக பணியாற்ற கூடியவர். அவருடன் வெகு நாட்களாக இருக்கிறேன் என்ற முறையில் கூறுகிறேன், இன்னமும் நிறைய இருகின்றது அவரிடம் தெரிந்து கொள்வதற்கு, குறிப்பாக இக்கட்டான சூழ்நிலையில் நிதானமாக செயல்படுவது" என்கிறார்.

ரோஹித் ஷர்மா

இந்திய அணியின் முக்கிய தூண்களில் ரோஹித் ஷர்மாவும் ஒருவர். நடுவரிசையில் களமிறங்கி ஆடி வந்த இவரை சச்சின், ஷேவாக் காலத்திற்கு பிறகு துவக்க ஆட்டக்காரராக களம் இறக்கினார் தோனி. அதன் பிறகு இவர் செய்த சாதனைகள் பல. இரண்டு முறை இரட்டை சதம், அதிலும் இலங்கை அணிக்கு எதிராக அடித்த 264 ரன்கள் மகத்தான சாதனையாகும். ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்காக வாங்கப்பட்டபோது பாண்டிங், அந்த அணியின் கேப்டனாக இருந்தார். அவர் தொடர்ந்து பார்ம் இல்லாமல் தொடர,  கேப்டன் பதவி ரோஹித் ஷர்மாவிடம் கொடுக்கப்பட்டது. பாண்டிங், சச்சின் போன்ற ஜாம்பவான்கள் பெற்று தர முடியாத கோப்பையை மும்பை அணிக்காக இரண்டு முறை வென்று அசத்தினார். மும்பை அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட பிறகு,  “சச்சின் மற்றும் தோனியுடன் விளையாடிய அனுபவத்தைக்  கொண்டு அணியை சிறப்பாக வழி நடத்த முடியும் என்று நம்புவதாக” கூறினார் ரோஹித் ஷர்மா.

சுரேஷ் ரெய்னா 

இந்திய அணியில் தோனிக்கு கோலி தளபதி என்றால், சென்னை அணியில் டோனியின் தளபதி சுரேஷ் ரெய்னாதான். சென்னை அணிக்கு தடை விதிக்கப்பட்டபோது, சென்னை அணி வீரர்கள் புனே மற்றும் குஜராத் அணிகளில் பிரிந்து ஆடும் சூழல் ஏற்பட்டது. மெக்குலம் பிராவோ போன்ற உலக கேப்டன்கள் அணியில் இருந்த போதும், ரெய்னாவைதான் கேப்டன் பதவி தேடி வந்தது. அதற்கு முக்கிய காரணம் அவர் தோனியுடன் அதிகமாக விளையாடிய அனுபவம் கொண்டவர் என்பதால்தான் என்கிறார்கள். “சென்னை அணியில் தோனியின் தலைமையில்தான் நான் அதிகம் கற்றுக்கொண்டேன். என்னை ஒரு முதிர்ந்த வீரராக மாற்றியது சென்னை சூப்பர் கிங்க்ஸ்தான்.” என்கிறார் ரெய்னா. சென்னை அணியில் முதல் போட்டி முதல் கடைசி போட்டி வரை அனைத்து போட்டியிலும் ஆடியவர் ரெய்னா என்பது குறிப்பிடத்தக்கது.

முரளி விஜய்


சென்னை அணியில் துவக்க ஆட்டக்காரராக ஜொலித்தவர் முரளி விஜய். ஐ.பி.எல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் மட்டும் சதங்கள் அடித்து வந்த நேரத்தில்,  இந்திய வீரராக இருந்து இரண்டு சதமடித்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்த தமிழன். தற்போதைய பஞ்சாப் அணியின் கேப்டனான இவர், இதற்கு முன்னர் கேப்டனாக பெரிய தொடர்களை எதிர்கொண்ட அனுபவம் இல்லாத போதும்,  சென்னை அணியில்,  தோனி தலைமையில் ஆடியது ஒன்றையே போதுமான தகுதியாக பஞ்சாப் அணி நிர்வாகம் கருதியது போலும். 

டிவைன் பிராவோ


மே.இ தீவுகள் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர். மும்பை அணியில் இருந்து 2011 ம் ஆண்டு ஏலத்தில்,  சென்னை அணிக்கு வாங்கப்பட்டார். தோனிதான் அவரை 'டெத் ஓவர்ஸ்' என்று அழைக்கப்படும் கடைசி கட்ட ஓவர்களை போட பயன்படுத்துவார். சென்னை அணிக்காக பெரும்பாலும் தனது நான்கு ஓவர்களையும் கடைசியில்தான் வீசுவார் பிராவோ. இன்று அவர் டெத் ஓவர்களின் கிங் என்று அழைக்கப்படுகிறார். இவரும் மே.இ தீவுகள் அணியின் கேப்டனாக சிறப்பாக பணியாற்றினார். தோனியின் கேப்டன் யுக்திகள் தனக்கு எப்பொழுதும் ஆச்சர்யம் தருவதாக கூறுகிறார் பிராவோ. தற்போது இவர் ரெய்னா தலைமையிலான குஜராத் லைன்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். 

ஜாசன் ஹோல்டர்:

மேற்கு இந்திய தீவுகள் அணியின் உயரமான ஆல் ரவுண்டர். அந்த அணிக்காக அவர் அறிமுகமான இரண்டு நாட்களிலேயே, 2013 ம் ஆண்டில் சென்னை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். அந்த ஒரு தொடரில் ஆடிய அவருக்கு,  மேற்கு இந்திய தீவுகள் அணியை வழி நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. 23 வயதில் அந்த அணியின் கேப்டனாக ஆனார் ஹோல்டர். மே.இ தீவுகள் அணியின் இளம் கேப்டனாக வலம் வந்து,  2015 ம் ஆண்டு உலககோப்பை தொடரில்,   அந்த அணியை அரையிறுதி வரை அழைத்து சென்றார்.


பாப் டூப்ளஸிஸ் 

தென்னாப்பிரிக்க அணியின் டி 20 அணியின் கேப்டன். 2011 ம் ஆண்டில்,  சென்னை அணி இவரை ஏலத்தில் எடுக்கும்போது இவர் யார் என்று பலருக்கு தெரியாது. அதே பாப் டூப்ளஸிஸ்,  2013 ம் ஆண்டில்,  அந்த அணியின் முழு நேர டி 20 அணியின் கேப்டனாக அறிவிக்கப்படுகிறார். இவர் தொடர்ந்து சென்னை அணியில் 2015 வரை ஆடியவர்.  சென்னை அணி தடை செய்யப்பட்டபோது தோனி தலைமையிலான புனே அணியில் இடம்பிடித்தார். 

ஜார்ஜ் பெய்லி 

2012 ம் ஆண்டில்,  ஆஸ்திரேலிய அணியின் டி 20  கேப்டனாக ஜார்ஜ் பெய்லி  அறிவிக்கப்பட்டபோது,  பலருக்கு ஆச்சர்யம். காரணம்,  அவர் அதுவரை எந்த சர்வதேச போட்டிகளிலும் ஆடவில்லை. எந்த சர்வதேச போட்டியும் ஆடாமால் கேப்டன் ஆகும் இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை  பெற்றார். முன்னதாக 2009 முதல் 2012 வரை சென்னை அணியில் இடம் பிடித்திருந்தார் அவர். சென்னை அணிக்காக சில போட்டிகள்தான் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த நான்கு வருடங்களும் சென்னை அணியுடன் பயணம் செய்தார் ஜார்ஜ் பெய்லி. பின்னர் ஆஸ்திரேலிய அணியின்  ஒருநாள் போட்டியிலும்,  துணை கேப்டன் பதவி அவரை தேடி வந்தது. நடுவில் மூன்று ஆண்டுகள் பஞ்சாப் அணிக்காக ஆடிய ஜார்ஜ் பெய்லி, தற்போது தோனியின் புனே அணியில் உள்ளார்.   

இந்தியாவில் மட்டுமல்லாது,  உலக அரங்கிலும் தோனியின் கேப்டன் யுக்திகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதற்கு இது பெரிய சான்றாகும். தற்போது புனே அணியில் ஆடி வரும் இலங்கை அணியின் திசேரா பெரேரா,  விரைவில் இலங்கை அணியின் கேப்டனாக அறிவிக்கபட்டாலும் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. 

இத்தனை சாதனைக்கு சொந்தக்காரரான தோனியின் புனே அணி,  தற்போது ஐ.பி.எல் தொடரில் மோசமாக ஆடி வருகின்றது. இது குறித்து தோனி கூறுகையில்,”விரைவில் புதிய முறையில் இந்த தொடரை எதிர்கொண்டு வெற்றி பாதைக்கு வருவோம்” என்றார்.
இதெல்லாம் எங்க ‘தல’க்கு சாதாரணம் என ரசிகர்களும் வெற்றிக்காக காத்திருக்கிறார்கள். 

மைதானத்திலேயே உயிரிழந்த கால்பந்து வீரர்


விளையாட்டு மைதானத்திலேயே உயிரிழந்த கால்பந்து வீரர்! (கடைசி நிமிட வீடியோ)

                                              மாற்று போட்டியாளராக களமிறங்கும் பேட்ரிக்
கேமரூன் நாட்டை சேர்ந்த கால்பந்து நடுகள வீரர் பேட்ரிக் எகெங்,  தனது அணிக்காக விளையாடிய
போது  மைதானத்திலேயே சுருண்டு விழுந்து, பின் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

டினாமோ புக்காரெஸ்ட் அணியை சேர்ந்த கால்பந்து வீரர்  பேட்ரிக் எகெங்  (26).  இவர், வீடொரல் கான்ஸ்டன்டா அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில்,  தனது அணி சார்பில் 62வது நிமிடத்தில் மாற்று போட்டியாளராக களமிறங்கினார்.
 
                                             மைதானத்திலேயே சுருண்டு விழுந்த பேட்ரிக்

ஆனால் போட்டி நடந்தபோது மைதானத்திலேயே அவர் சுருண்டு விழுந்துள்ளார்.  அதன்பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்,  2 மணிநேரத்தில் உயிரிழந்துள்ளார்.  அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இது பற்றி புக்காரெஸ்ட் அணி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கால்பந்து வீரர் பேட்ரிக் கிளாட் எகெங்கை இன்றிரவு (நேற்று) இழந்து விட்டோம். எங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவரின் சார்பிலும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தி அடைய கடவுள் அருள் புரியட்டும்" என தெரிவித்துள்ளது.

அவரது மறைவுக்கு எகெங்கின் முன்னாள் அணியான கார்டோபாவும் ட்விட்டரில், பேட்ரிக் எகெங்கின் மரணத்திற்கு எங்களது சோகத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என தெரிவித்துள்ளது.