Saturday, April 16, 2016

வாய்க்காலில் மூழ்கி மளிகை வியாபாரி– மனைவி–மகள் உள்பட 4 பேர் பலி

கோபி அருகே வாய்க்காலில் மூழ்கி மளிகை வியாபாரி– மனைவி–மகள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
கோபி அருகே வாய்க்காலில் மூழ்கி மளிகை வியாபாரி– மனைவி–மகள் உள்பட 4 பேர் பலி
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த கடத்தூர் குடக்கரையை பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 42). மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வேதவள்ளி (40). இவர்களது மகள் பவித்ரா (15).
இந்த நிலையில் குடக்கரையை அடுத்த சலசலப்பு என்ற இடத்தில் கீழ்பவானி வாய்க்காலுக்கு சரவணகுமார், அவரது மனைரி வேதவள்ளி , மகள் பவித்ரா மற்றும் வேதவள்ளியின் தங்கை மகள் நர்மதா ஆகிய 4 பேரும் இன்று குளிக்க சென்றனர்.
தற்போது பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கீழ்பவானி வாய்க்காலில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் நிரம்பி செல்கிறது.
இந்த நிலையில் சரவணகுமார், வேதவள்ளி ஆகியோர் வாய்க்காலில் துணிகளை துவைத்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பவித்ரா, நர்மதா ஆகியோரை தண்ணீர் அடித்து சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணகுமார், வேதவள்ளி ஆகியோர் விரைந்து வாய்க்காலில் குதித்து 2 பேரையும் காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் பவித்ரா, நர்மதா ஆகியோர் தண்ணீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டனர். இதேபோல் காப்பாற்ற சென்ற கணவன்–மனைவி இருவரையும் தண்ணீர் இழுத்து சென்றது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கடத்தூர் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் காந்திமதி விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
மேலும் கோபி தீயணைப்பு நிலைய வீரர்களும் விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கி பலியான சரவணகுமார், வேதவள்ளி , பவித்ரா, நர்மதா ஆகிய 4 பேரின் உடல்களையும் தேடி வருகிறார்கள்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வாய்க்காலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை அதிமுக வேட்பாளரை மாற்ற பதவி இழந்தவர்களின் ஆதரவாளர்கள் போர்க்கொடி

திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று பதவி இழந்தவர்களின் ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்ட (தெற்கு) அதிமுக செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன். இவருக்கும், தி.மலை நகர அதிமுக செயலாளர் கனகராஜ் மற்றும் மாவட்ட அவைத் தலைவர் பவன்குமார் ஆகியோருக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. அது, தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் எதிரொலித்தது.
இந்நிலையில், திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக பெருமாள் நகர் ராஜன் அறிவிக்கப்பட்டார். அவருக்கு எதிராக கனகராஜ் மற்றும் பவன்குமார் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் இருவரும் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இது குறித்து பெருமாள் நகர் ராஜன் ஆதரவாளர்கள் கூறும்போது, ‘கட்சிக்கு எதிராகவும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த வேட்பாளரான ராஜனை தோற்கடிக்கும் நோக்கத்தில் செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ராஜனுக்கு எதிராக கடந்த வாரம் துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டதில் அவர்களுக்கு தொடர்பு உள்ளது’ என்றனர்.
இதற்கிடையில், தங்களது ஆதரவாளர்களுடன் கனகராஜ், பவன் குமார் ஆகியோர் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். அவர்களுடன், கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மாவட்ட இளைஞரணி செயலாளர் தொப்புளானும் கலந்துகொண்டார். நீண்ட நேர ஆலோசனைக்குப் பிறகு, தலைமையிடத்தில் மனு கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் நேற்று அதிகாலை சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர்.
முதல்வரின் போயஸ் இல்லத்துக்கு சென்றவர்களை காவல்துறையினர் தடுத்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்பினர். அங்கிருந்த பொறுப் பாளரிடம் மனு கொடுத்தனர். இதை யடுத்து, போயஸ் கார்டனுக்கு கனகராஜ் மற்றும் பவன்குமார் ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அங்கு இருந்த முதல்வரின் உதவியாளர் பூங்குன்றனிடம் தனித்தனியே மனுக்களை கொடுத்தனர்.
அந்த மனுவில், “கட்சிக்கு எதிராக எந்த செயல்களிலும் ஈடுபடவில்லை. தனிப்பட்ட வெறுப்பு காரணமாக, எங்களை கட்சியில் இருந்து நீக்க இருந்து மாவட்டச் செயலாளர் ராஜன் காரணமாக இருந்துள்ளார். இது குறித்து முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்களது ஆதர வாளர்கள் கூறும்போது, “கட்சியில் நீண்ட காலமாக உள்ளவர் களிடம் இணைந்து மாவட்டச் செயலாளர் பெருமாள் நகர் ராஜன் செயல்படவில்லை.
20 ஆண்டுகளாக நகரச் செயலாளர் பதவியில் இருந்தவரை, எந்த முகாந்திரமும் இல்லாமல் நீக்கி இருப்பதை ஏற்க முடியாது. இருவருக்கும் மீண்டும் பதவி வழங்க வேண்டும். திருவண்ணாமலையில் அதிமுக வேட்பாளரை மாற்ற வேண்டும்” என்றனர்.