Tuesday, November 29, 2016

நாடும் மாடும் - சுபவீ

இன்றைக்கு நம் பிள்ளைகள் அனைவரும் படித்தவர்களாக இருப்பதைப்
பார்க்கின்றோம். ஆனால் இந்நிலையை அடைவதற்கு நாட்டில் நடந்த போராட்டங்கள்
எண்ணிறந்தன. ஒரு கால கட்டத்தில் நம்மை எல்லாம் பள்ளியில் சேர்க்கவே
மாட்டார்கள். அப்படியே பெரு  முயற்சி செய்து சேர்ந்தாலும்,
உங்களுக்கெல்லாம் படிப்பு வராது, நீங்களெல்லாம் மாடு மேய்க்கத்தான்
லாயக்கு என்பார் ஆசிரியர். என்ன வேடிக்கை என்றால், நம் நாட்டிற்குள்
மாடுகளையும் ஆடுகளையும் மேய்த்துக் கொண்டு உள்ளே வந்தவர்கள்தாம், நம்மைப்
பார்த்து 'நீங்கள் மாடு மேய்க்கத்தான் லாயக்கு' என்றனர்.

 ஆப்ரிக்கக் கவிதை ஒன்று உண்டு. ஆங்கிலேயர்கள் அவர்கள் நாட்டைக்
கைப்பற்றிக்கொண்டது பற்றியது அது!  அந்தக் கவிதை சொல்லும், "அவர்கள்
உள்ளே வரும்போது அவர்கள் கைகளில் பைபிள் இருந்தது, எங்கள் கைகளில் நாடு இருந்தது. பிறகு  அவர்கள் கைகளுக்கு நாடு போய்விட்டது. எங்கள் கைகளுக்கு
பைபிள் வந்துவிட்டது" என்று. நம் கதையும் அதுதான். "அவர்கள் உள்ளே
வரும்போது அவர்கள் கைகளில் மாடு இருந்தது நம் கைகளில் நாடு இருந்தது.
பிறகு நாடு அவர்கள் கைகளுக்குப் போய்விட்டது. மாடு நம் கைகளுக்கு வந்து விட்டது.


இந்நிலையை மாற்ற இம்மண்ணில் திராவிட இயக்கம் போராடியது. திராவிட
இயக்கத்தால் பயன் பெற்று, படிப்பைப் பெற்ற பலர் இன்று திராவிட
இயக்கத்தைக் குறி வைத்துத் தாக்கிக் கொண்டுள்ளனர்.

(02.02.2015 அன்று, சென்னை, ராணி சீதை அரங்கில், திராவிட முன்னேற்றக் கழக
இலக்கிய அணி சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய சுபவீ உரையிலிருந்து) 

Tuesday, September 27, 2016

ஈரோடு - சென்னை - ஈரோடு பகல் நேர சிறப்பு ரயில்

சேலம், ஈரோடு செல்ல ரயில் மற்றும் பேருந்துகளில் இடம் கிடைக்காமல் தொல்லை படுபவர்களுக்கு ஒரு நற்செய்தியாக பகல் நேர ரயில் அறிவிப்பு வந்துள்ளது.
சேலத்தில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் விருத்தாசலம் மார்க்கமாக புதிய ரயில் இயக்க வேண்டும் என நீண்ட நாட்களாக பயணிகள் கோரிக்கை நனவாகி உள்ளது.
சென்னை எழும்பூர் -
ஈரோடு சிறப்பு ரயில் (06028) பிற்பகல் 3 மணிக்கு எழும்பூரில் புறப்படுகிறது


ஈரோடு - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06027) அதிகாலை 4.45 மணிக்கு ஈரோட்டில் புறப்படுகிறது


இந்த சிறப்பு ரயில், வரும் 25, 26, 27, 28, 29, 30, அக்டோபர் 2, 3, 4, 5, 7, 9, 10, 11, 12, 14ம் தேதிகளில் இயக்கப்படுகிறது. பயணிகளிடம் கிடைக்கும் வரவேற்பைபொருத்து, இயக்க நீட்டிப்பு வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த ரயிலில் எப்போது இடம் கிடைக்கிறது, சேலம், ஈரோடு, நாமக்கல் பகுதியை சேர்ந்த நண்பர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்

Monday, July 18, 2016

மனோஜ்குமார் சொந்தாலியா இல்ல திருமண விழாவில் முதலமைச்சர்


ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள்

ஏற்காட்டில் விடுமுறை நாட்கள் என்பதால் சுற்றூலா பயணிகளின் எண்னிக்கை அதிகமாக காணப்பட்டது. இன்று காலை முதல் வானம் மேகமுடமாக காணப்பட்டது. அதற்கு பிறகு வெப்பம் அதிகரித்தது . இன் நிலையில் ரோஜா பூக்கள் ரோஜா தோட்டம் மற்றும் அண்ணாபூங்கா ஆகிய இடங்களில் பூத்து குலுங்கியதால் சுற்றூலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

திமுக - மக்கள் தேமுதிக இணைப்பு விழா

மக்கள் தேமுதிக என்கிற கட்சி தாய் கழகமாக இருக்கக் கூடிய தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் பீடு நடைப்போட்டுக் கொண்டு இருக்கக் கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையக்கூடிய விழாவாக இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இது இணையும் கூட்டமா அல்லது இணையக்கூடிய மாநாடா என்று எண்ணக் கூடிய அளவிற்கு மிகுந்த எழுச்சியோடு, ஏற்றத்தோடு, உணர்ச்சியோடு, உத்வேகத்தோடு, ஆர்வத்தோடு, ஆராவாரத்தோடு, நாமெல்லாம் பெருமை கொள்ளத்தக்க வகையிலே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதை எழுச்சியோடு நடத்திட வேண்டும் என்று நமது அன்புக்கினிய நண்பர்கள் சந்திரகுமார், பார்த்திபன், சேகர், சிவா உள்ளிட்ட சகோதரர்கள் தலைவர் கலைஞரிடத்தில் நேரடியாக வந்து சந்தித்து, நாங்கள் உங்கள் தலைமையை ஏற்று திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்துக் கொள்ள தயாராக இருக்கிறோம், எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று 15 அல்லது 20 தினங்களுக்கு முன் தலைவர் கலைஞரிடம் எடுத்து வைத்து, அதனை தலைவர் கலைஞரும் ஏற்றுக்கொண்டு, ஆக ஏற்கனவே இவர்கள் தங்களை திமுகவில் இணைத்து கொண்டிருந்தாலும், தமிழகம் முழுவதும் இருக்கக் கூடிய பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தேமுதிக மற்றும் தேமுதிகவில் இருக்கக் கூடிய தோழர்கள் இன்னும் பலர் இந்த இயக்கத்தில் இணைய ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள், அதற்காக ஒரு நிகழ்ச்சியை நடத்த எங்களுக்கு அனுமதி தர வேண்டும் என்று அவர்கள் கேட்டு, அதன் பிறகு அவர்களுக்கு தேதி வழங்கப்பட்டு, அந்த நிலையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

ஆகவே, தொடக்கமே இவ்வளவு பெரிய எழுச்சியாக இருக்கின்ற நேரத்தில் நிச்சயமாக உறுதியாக எங்களுக்கு வந்திருக்கக் கூடிய நம்பிக்கை என்னவென்றால் இதைவிட இன்னும் மென்மேலும் திராவிட முன்னேற்ற கழகம் தன்னுடைய பணிகளை தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையில் தொடர்ந்து நிறைவேற்றும், தலைவர் கலைஞர் அவர்களின் கரத்தை பலப்படுத்தும் வகையிலே உங்களுடைய வரவு அமைந்திருப்பதை நான் எண்ணிப் பார்க்கின்றேன். அப்படி வருகை தந்து இந்த இயக்கத்தில் சேர்ந்திருக்கக் கூடிய அத்தனை பேரையும் நான் வரவேற்க விரும்புகிறேன். ஒட்டுமொத்த திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பிலும், தலைவர் கலைஞர் அவர்களின் சார்பிலும் உங்களை எல்லாம் நான் வருக வருக வருக என்று இன்முகத்தோடு, பூரிப்போடு, மகிழ்ச்சியோடு, புளகாங்கித உணர்வோடு வரவேற்க கடமைப்பட்டு இருக்கின்றேன்.

இங்கே பேசியபோது சேகர், சிவா, பார்த்திபன், சந்திரகுமார் ஆகிய அனைவரும் சில விளக்கங்களை எல்லாம் எடுத்து சொன்னார்கள். நான் நேற்றைக்கு இரவு சேலத்திற்கு வந்தபோது அவர்களை சந்தித்த நேரத்திலே அவர்களிடத்தில் ஒரு அன்பான வேண்டுகோளை உரிமையோடு எடுத்து வைத்தேன். அது என்னவென்றால் பிரச்சினைகளை சுட்டிக்காட்டுங்கள், தனிப்பட்ட முறையிலே யாரையும் விமர்சித்து பேச வேண்டிய அவசியம் நமக்கில்லை என்று தெளிவாக எடுத்து சொன்னேன். அதனை அவர்களும் உணர்ந்து மக்கள் தேமுதிக என்ற அமைப்பு எப்படி உருவானது, அப்படி உருவாக என்ன காரணம் உள்ளிட்ட நிலைமைகளை எல்லாம் அடக்கத்துடன், விளக்கமாக இங்கு எடுத்து உரைத்தார்கள். எனவே அந்த பிரச்சினைக்குள் நான் அதிகம் செல்ல விரும்பவில்லை. காரணம் மக்கள் தேமுதிக இன்றைக்கு திராவிட முன்னேற்றத்துடன் சங்கமித்து விட்டது.

திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்தவர்கள் யார் என்பதை பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய அவசியமே கிடையாது. அதைப்பற்றி விளக்கமாக பேச வேண்டிய அவசியமும் நமக்கில்லை. அதற்கு யார் காரணமாக இருந்தார்கள் என்பதை பற்றியெல்லாம் பேசி அவர்களுக்கு ஒரு விளம்பரத்தை தேடி தர நான் விரும்பவில்லை. அவர்களை பற்றி பேசி என்னுடைய தரத்தை தாழ்த்திக் கொள்ள நான் தயாராக இல்லை. இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்று சொன்னால் இந்த மேடைக்கென்று ஒரு வரலாறு இருக்கிறது. இந்த நாட்டில் இருக்கக் கூடிய பல அரசியல் தலைவர்களுக்கு பதில் சொல்லியிருக்கக் கூடிய மேடை இந்த மேடை. ஜனநாயகரீதியில் கருத்துகளை எடுத்துச் சொல்லக் கூடிய மேடை இந்த மேடை. இந்த மேடைக்கென்று இருக்கக் கூடிய தன்மானத்தை, சுயமரியாதையை என்றைக்கும் நான் இழக்க தயாராக இல்லை. அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயிருக்கிறார்களே தவிர கழகம் அழிந்ததாக வரலாறு கிடையாது. திராவிட இயக்கத்தை அழித்திட வேண்டும், ஒழித்திட வேண்டும் என்று திட்டங்களை தீட்டி, அதற்கென அணிகளை அமைத்து என்னென்ன முயற்சிகளில் ஈடுபட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.

ஆனால் இன்றைக்கு என்ன நிலை ? பொதுவாக ஒரு கட்சியில் இருந்து வேறு ஒரு கட்சிக்கு வருகிறார்கள் என்றால் அது கிடைக்குமா, இது கிடைக்குமா என்ற எதிர்ப்பார்ப்பில், ஏதாவது ஆதாயம் இருக்க வேண்டும். அதற்காக ஆளும் கட்சிக்குதான் செல்வார்கள். எப்படி நமக்கு நாமே பயணத்தில் காலை முதல் மாலை வரை சுற்றி வந்தோமோ அதுவும் தேர்தலுக்கு முன் நடத்தினோமோ அதுபோல இப்போது காலை முதல் மாலை வரை மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சிக்கு நேரம் கொடுக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதுவும் தேர்தல் முடிந்த கையோடு, ஓரிரு மாதத்தில் இந்த நிலை. இன்றைக்கு ஆட்சியில் இல்லாத, எதிர்க்கட்சியாக உள்ள திமுகவிற்கு வந்து சேர்ந்தபடியே இருக்கிறார்கள் என்றால் எந்த ஆதாயத்திற்காகவும் இல்லை. ஒரே ஒரு எதிர்ப்பார்ப்பு என்னவென்றால் இன்றைக்கு தமிழ்நாட்டை காப்பாற்ற தலைவர் கலைஞர் அவர்களை விட்டால் வேறு நாதியில்லை என்ற நிலை.

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை ஆளும்கட்சி ஒன்று இருந்தால் பல எதிர்க்கட்சிகள் அவையில் இருக்கும். இன்றைக்கு ஆளும்கட்சி எந்தளவுக்கு பலமாக இருக்கிறதோ அதற்கு சில எண்ணிக்கை குறைவான எதிர்க்கட்சியாக திமுக உள்ளது. அந்த நிலைமையில் நாம் பணியாற்றி வருகிறோம். தேர்தலின்போது மக்கள் நலக்கூட்டணி என்ற ஒரு கூட்டணி உருவானபோது, அது அதிமுகவின் பி-டீம் என்று சொன்னார்களே. அதிமுகவிற்கு பலன் அளிக்கக் கூடிய அணி என்று சொன்னார்களா இல்லையா ?

ஆக, அந்த பீ-டீம் அமைந்த பிறகுதானே நமது சகோதரர்களுக்கு கோபம் வந்தது, ஆத்திரம் வந்தது, வீறு கொண்டு எழுந்தார்கள். சந்திரகுமாராக இருந்தாலும் சரி, பார்த்திபன், சேகர், சிவா என அனைவரும் இணைந்து ஒரு முடிவெடுத்தார்கள். திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட ஜெயலலிதா ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் தான் இவர்கள் உறுதியாக இருந்தார்கள் என்பதை மறுத்துவிட முடியுமா ? ஆனால் அதற்கு விலை போனார்களே, அது நியாயமா ? எனவே அங்கிருந்து விலகினார்கள். பிறகு மக்கள் தேமுதிக என்ற கட்சியை தொடங்கினார்கள். அதன் பிறகு தேர்தல் களத்தில் நம்மோடு கைகோர்த்து, நம் கூட்டணியில் இணைந்தார்கள். தலைவர் அவர்கள் 3 இடம் தந்து சந்திரகுமார், பார்த்திபன், சிவா ஆகியோருக்கு வேட்பாளராகும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெறும் வாய்ப்பை இழந்தார்கள். தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பை நீங்கள் இழந்து இருக்கலாம், ஆனால் உங்களது லட்சியம், கொள்கை ஆகியவை வெற்றி பெற்றுள்ளன என்பதுதான் உண்மை.
எப்படி என்று கேட்டால், பீ-டீமாக இருந்தவர்கள் ஜீரோ டீமாக இப்போது மாறி விட்டார்கள். ஆனால் இங்கு கம்பீரமாக உட்கார்ந்து இருக்கும் இவர்கள் ஹீரோ டீமாக மாறியிருக்கிறார்கள். அவங்க ஜீரோ. இவர்கள் ஹீரோ. ஆக, தமிழக மக்களின் ஹீரோவாக திமுகவில் இடம்பெற்று இருக்கிறார்கள். நான் இன்னொன்றையும் நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

திமுகவை பொறுத்தவரையில் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று, 1971-ல் 184 இடங்களில் வென்று ஆட்சியமைத்தது. இதுவரை வேறு எந்த கட்சியும் அத்தனை இடங்களில் வென்றதில்லை. அதேபோல இப்போது 89 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக இருக்கும் வரலாறும் திமுகவை தவிர வேறு யாருக்கும் இல்லை. 3 நாட்களாக இந்த கொங்கு மண்டலத்தில் நான் பயணம் நடத்தி வருகிறேன். திடீர் திடீரென ஏராளமானோர் பல கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஆக, திராவிட முன்னேற்ற கழகத்தின் சேவை என்பது இன்றைக்கு தமிழக மக்களுக்கு தேவை. திராவிட இயக்கம் நூற்றாண்டை கண்டு இருக்கிறது. ஆக இன்னொரு நூற்றாண்டை கண்டால்தான் தமிழ்நாட்டு மக்களை நாம் வாழ வைக்க முடியும் என்ற நிலை இப்போது வந்திருக்கிறது.

திராவிட இயக்கத்தின் முதல் நூற்றாண்டை பொறுத்தவரையிலே, திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கிய தலைவர் நமது பேரறிஞர் அண்ணா அவர்கள். ஈராயிரம் ஆண்டுகள் அன்னை தமிழகம் தவமிருந்து பெற்றெடுத்த தலைமகன். சிங்க நடையும், சிங்கார தெள்ளு நடையும், புரட்சி கவி நடையும் தனது உரை நடையால் கண்ட கோமான். தம்பிமார் படைமீது விழி நோக்கி வெற்றி கொண்ட கோமான், பூமிப்பந்தில் தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, அங்கெல்லாம், அவர்களுடை மனதில் தங்க சிங்காசனம் போட்டு வீற்றிருக்கும் நமது இதய மன்னன், வங்கக் கடலோரத்தில் ஆறடி சந்தனப் பேழையில் உறங்கியும், உறங்காமலும் உறங்கிக் கொண்டு இருக்கக் கூடிய அறிவுலக மேதை பேரறிஞர் அண்ணா.

அதைத்தொடர்ந்து, அவர் விட்டுச் சென்ற பணிகளை அவரது இதயத்தை இரவலாக பெற்று இருக்கக் கூடிய நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். 67 ஆண்டுகாலமாக திராவிட முன்னேற்ற கழகம் தன்னுடைய பணியை, கடமையை நிறைவேற்றி வந்து கொண்டு இருக்கிறது. தமிழகர்களுக்கு ஏற்பட்டு இருக்கக் கூடிய அநீதிகளுக்கு எதிர்ப்புக் குரலை தந்து கொண்டிருக்க்க் கூடிய கழகம் நம்முடைய திமுகழகம். தமிழர்களின் தன்மானத்திற்கு இழுக்கு நேருகின்ற போதெல்லாம் தன்னுடைய சிம்மக்குரலை எழுப்பும் இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம். இங்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாக விளங்கி கொண்டிருக்கும் ஒரே கழகம் திமுகழகம் என்பதை யாரும் மறுத்திட, மறைத்திட முடியாது.

தமிழர்களுக்கு சமூக நீதி கிடைத்திட, ஏன் இதே தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி கிடைத்திட பல தொழிற்சாலைகளை உருவாக்கியது திமுகழகம்.

ஆட்சிப்பொறுப்பில் இருந்த காலகட்டங்களில் இந்த தமிழகத்தின் வளர்ச்சிக்காக எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றியது திமுக.
உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தந்த ஆட்சி திமுக ஆட்சி.
இப்படி எத்தனையோ சாதனைகளை படைத்த திமுகவில் இன்றைக்கு சங்கமித்து உங்களை இணைத்துக் கொள்ள வந்திருக்கின்றீர்களே, உங்களை எல்லாம் நான் மகிழ்ச்சியோடு, இன்முகத்தோடு வரவேற்க விரும்புகிறேன்.

இதே சேலம் மாவட்டத்தில் சேலம் உருக்காலை திட்டத்தை உருவாக்கியது எந்த ஆட்சி ? கலைஞர் தலைமையில் இருந்த திமுக ஆட்சி.

சேலத்தில் பெரியார் பல்கலைக் கழகத்தை அமைத்து தந்த ஆட்சி திமுக ஆட்சி.

ரூ.120 கோடி மதிப்பில் சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை உருவாக்கிய ஆட்சியும் திமுக ஆட்சிதானே.
இதே கொங்கு மண்டலத்தில் கைத்தறி நெசவுத்தொழிலை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சென்வாட் வரியை நீக்க துணை நின்ற ஆட்சியும் திமுக ஆட்சிதான் என்பதை இந்த நேரத்தில் உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
13-வது முறையாக சட்டமன்ற தேர்தலில் நின்று தோல்வி என்பதே வராத நிலையில் தான் நின்ற அத்தனை தேர்தல்கள் அத்தனையிலும் வெற்றி பெற்ற ஒரே தலைவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

இன்றைக்கு எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள். தோற்றாலும் பரவாயில்லை, டெபாசிட் இழந்த தலைவர்கள் நாட்டிலே இருந்திருக்கிறார்களா ? அதைத்தானே இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டு சொன்னார்கள். ஆக 13 முறை தோல்வியே காணாமல் வெற்றி பெற்றுள்ள தலைவர் கலைஞர் தலைமையில் உங்களை இணைத்து கொள்ள வந்துள்ள உங்களை இன்முகத்தோடு, மகிழ்ச்சியோடு வரவேற்க நான் கடமைப்பட்டுள்ளேன்.

2016 –ல் இரண்டு மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த தேர்தலைப் பற்றி இங்கு சொன்னார்களே, நாமல்ல மக்கள் முடிவு செய்து வைத்திருந்தார்கள், திமுகதான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைத்தார்கள். கலைஞர் தான் ஆறாவது முறையாக முதலமைச்சராக வந்து அமருவார் என்ற நம்பிக்கையோடு இருந்தார்கள். ஆனால் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு நமக்கு கிடைக்கவில்லை. 1.1% வாக்கு வித்தியாசம் தான். ஆட்சிக்கு வரவில்லை என்ற காரணத்தால் இன்றைக்கு அரசியலை விட்டு நாம் ஒதுங்கி விட்டோமா ? தோல்வியை கண்டு துவங்கி மூலையில் சென்று முடங்கி விட்டோமா ? பதவிக்கு வரமுடிய வில்லையே என்று பெருமூச்சு விட்டபடி வீட்டில் தூங்கிக் கொண்டு இருக்கிறோமா ? கிடையாது. ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்று சொன்னாலும் நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் தொண்டன் தான் திமுக என்பதை நாம் தொடர்ந்து நிலை நிறுத்தி வருகிறோம்.

எத்தனையோ தேர்தல் களத்தை நாம் சந்தித்து இருக்கிறோம். 1949-ம் ஆண்டு வடசென்னை பகுதியில், ராயபுரம் பகுதியில் உள்ள ராபின்சன் பூங்காவில் பேரறிஞர் அண்ணா அவர்கள் கொட்டும் மழையில் இந்த இயக்கத்தை தொடங்கி வைத்த நேரத்திலே மிகத் தெளிவாக எடுத்து சொன்னார், இந்த கழகம் ஆட்சிக்கு வருவதற்காக மட்டும் தொடங்கப்பட வில்லை, நாட்டு மக்களுக்காக, ஏழை எளியவர்களுக்காக, விவசாயப் பெருங்குடி மக்களுக்காக, நெசவாளர்களுக்காக, தொழிலாளர் தோழர்களுக்காக, அடித்தளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த மக்களுக்காக, ஒட்டுமொத்த தமிழ் இனமக்களுக்காக இந்த கழகம் உருவாக்கப்படுகிறது”, என்ற அறைகூவல் விடுத்துதான் அண்ணா அவர்கள் இந்த இயக்கத்தை ஏற்படுத்தி தந்தார்கள்.

ஆக அப்படிப்பட்ட கழகம் தொடங்கிய உடனே தேர்தல் களத்திற்கு வந்ததா என்றால் இல்லை. எட்டு ஆண்டு காலம் பொறுத்திருந்தோம். முதன்முதலில் சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் இரண்டும் சேர்ந்து நடந்த தேர்தல் களத்தில் இறங்கிய ஆண்டு எதுவென்றால் 1957-ம் ஆண்டு.

அந்த தேர்தலில் இறங்குவதற்கு முன் திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில் ஒரு பெட்டியை வைத்து, தேர்தலில் நிற்பதா, வேண்டாமா என்று இங்கு வந்திருக்கக்கூடிய தோழர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் சொல்லட்டும் என்று அண்ணா அவர்கள் ஆணையிட்டார்.

எப்படி தேர்தலில் வாக்கு சீட்டில் ஓட்டளிக்கின்றீர்களோ அதே போல திமுக தேர்தலில் நிற்பதா வேண்டாமா என்று எழுதி அந்த பெட்டியில் போடுங்கள் என்று தெரிவித்தார்.

அதன் பிறகு அந்த பெட்டியை உடைத்து, எண்ணியதில் 100 க்கு 90% தேர்தலில் நிற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து 1957 –ல் தேர்தலில் நின்றோம். 15 இடங்களில் வெற்றி பெற்று முதன்முதலில் சட்டமன்றத்திற்குள் நுழைந்தோம்.

அதன் பிறகு நடந்த தேர்தலில் 50 இடங்களில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் அமர்ந்தோம்.

பிறகு 1967 –ம் ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்று அண்ணா அவர்கள் தலைமையில் ஆட்சிக்கு வருகிறோம்.

ஆட்சிக்கு வந்த அண்ணா அவர்கள் ஓராண்டு காலம்தான் நம்மிடத்தில் வாழ்ந்தார். ஒரு கடுமையான நோய்க்கு உள்ளாகி அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை பெற்று தாயகம் திரும்பிய அவர் நம்மிடையே நீண்ட நாட்கள் வாழவில்லை. அனைவரையும் மீளாத்துயரில் ஆழ்த்தி விட்டு மறைந்து விட்டார்.

அவரது மறைவிற்கு பிறகு அவரது இதயத்தை இரவலாக பெற்ற நமது தலைவர் கலைஞர் அவர்கள் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார்.

அதன் பிறகு 1971-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்தித்தோம். தலைவர் கலைஞர் தலைமையில் களத்தில் இறங்கினோம். 184 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருகிறோம்.
அதற்கு பிறகு 1975-ம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்படுகிறது.

அதனை எதிர்த்து அன்றைக்கு ஆட்சியில் இருந்த திமுக ஆட்சியை பற்றி கவலைப்படாமல் நெருக்கடியை எதிர்த்து தீர்மானம் போட்டோம்.

அந்த காரணத்தால் 1976-ம் ஆண்டு ஜனவரி 31-ம் நாள் நம்முடைய ஆட்சி கலைக்கப்பட்டது. கவிழ்க்கப்பட்டது.

அதன் பிறகு 13 ஆண்டுகாலம் நாம் ஆட்சிக்கு வரமுடியவில்லை. அதற்காக கவலைப்பட்டோமா என்றால் இல்லை.

1989 –ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தோம். 1991-ல் ஒரு சதி செய்யப்பட்டு, மறைந்த ராஜீவ்காந்தி அவர்களின் படுகொலைக்கு திமுகதான் காரணம் என்று ஒரு களங்கத்தை திமுக மீது திட்டமிட்டு ஏற்படுத்தி, அந்த தேர்தலில் மிக மோசமான நிலையில் தோற்றொம். ஒரேயொரு இடத்தில் கலைஞர் மட்டும் துறைமுகம் தொகுதியில் அன்றைக்கு வெற்றி பெற்றார்.

பிறகு மீண்டும் 1996-ல் வெற்றி பெற்று கலைஞர் தலைமையில் ஆட்சிக்கு வருகிறோம். 2001-ல் தோற்றோம். 2006-ல் மறுபடியும் ஆட்சிக்கு வருகிறோம். 2011-ல் தோற்றோம். இப்போது 2016-லும் தோற்று இருக்கிறோம். ஆக வெற்றி, தோல்வி என்பது ஜனநாயக அடிப்படையில் மாறி மாறி இருக்கக் கூடிய நிதர்சனமான நிலை. எனவே வெற்றி பெற்ற நேரத்தில் வெறி கொண்டு அலைந்து கொண்டிருப்பதும், தோல்வியுற்ற நேரத்தில் துவங்கி போய் மூலையில் முடங்கி விடுவதுமான அரசியலை தலைவர் கலைஞர் நமக்கு கற்றுத்தந்திட வில்லை.

இன்னும் வெளிப்படையாக சொல்வதெனில், நம்மைப் போல வெற்றி பெற்ற கட்சி ஒன்று இந்த நாட்டில் இருந்ததுண்டா என்றால் இல்லை. அதேபோல நம்மைப் போல தோல்வியைக் கண்ட கட்சி இந்த நாட்டில் உண்டால் என்றால் இல்லை. அதனால் தான் வெற்றி, தோல்வி இரண்டையும் ஒன்றாகவே கருதுகிறோம்.
இன்றைக்கு திமுக ஆட்சியில் இல்லை என்ற ஏக்கத்தை நம்மை விட, நமது தோழர்களை விட, நமது நிர்வாகத்தில் இருப்பவர்களை விட அதிகமாக பொதுமக்களிடம் தான் அந்த ஏக்கத்தை காண முடிகிறது. தொழிலாளர்கள், நெசவாளர்கள், விவசாயிகள், ஆசிரியர்கள் என அத்தனை தரப்பினரும் இன்று ஒரு ஏக்கத்துடன், வேதனை பெருமூச்சுடன் தேர்தல் முடிவை எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆக, என்னைப் பொறுத்தவரையிலே சொல்ல விரும்புவது வெற்றி பெற்ற அதிமுக மகிழ்ச்சியில் இல்லை, தோல்வியுற்ற திமுக அதைப்பற்றி கவலைப்படவில்லை என்பதுதான் உண்மை. இன்றைக்கு சட்டமன்றத்தில் நான் எதிர்க்கட்சி தலைவராக இருந்து 3-4 மணி நேரம் இருந்து பேசுகிறேன், விவாதிக்கிறேன், பிரச்சினைகளை எதிர்கொள்கிறேன் என்று பெருமையோடு எடுத்து சொல்கிறார்களே, அதற்கு காரணம் யார் ? 89 சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக சார்பில் என்னுடன் சட்டமன்றத்தில் எனக்கு பின்புலமாக, பக்கபலமாக அமர்ந்து இருக்கிறார்கள். இது கடந்தமுறை சாத்தியமானதா ? இல்லை. நினைத்த நேரத்தில் வெளியில் கொண்டு வந்து போட்டு விடுவார்கள். இல்லை என்று சொன்னால் பேச விடாமல் தடுத்து தலைவர் கலைஞரை, திமுகவை கொச்சைப்படுத்தி பேசுவது. அமைச்சர்கள் உள்பட அனைவரும் செய்தார்கள். சில ஊடகங்கள் திட்டமிட்டு திமுக வெளி நடப்பு செய்வதாக செய்தி வெளியிடுவார்கள். இப்போது கூட பல ஊடகங்கள் அறிவுரை, ஆலோசனை சொல்கின்றன. இனி அவையில் உட்கார்ந்து பிரச்சினைகளை பேசாமல் நாங்கள் அவையில் இருந்து வெளியே வரமாட்டோம். அது ஜனநாயக கடமை.

2 -வது முறையாக ஜெயலலிதா தொடர்ந்து ஆட்சிக்கு வந்து 2 மாதம் ஆகியுள்ளது. தமிழ்நாட்டில் எங்காவது ஒரு தொழிற்சாலை தொடங்க வேண்டாம், ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமாவது போட்டதுண்டா ? அது சம்பந்தமாக யாரையாவது அழைத்து பேசியதாக ஒரு செய்தியாவது வந்துள்ளதா ? ஏற்கனவே ஆட்சியில் இருந்தபோது 110 விதியில் பல அறிவிப்புகள் வந்ததே, அதில் ஏதாவது நிறைவேறியதா ? அதேபோல தேர்தல் அறிக்கையில் அறிவித்தவை, பட்ஜெட்டில் அறிவித்தவை என எதாவது நடந்ததா ? எல்லாம் ஊறுகாய் பானையில் ஊறுகிறது. அவற்றை நிறைவேற்றும் முயற்சியில் இந்த ஆட்சி ஈடுபட்டதா ?
கொங்கு மண்டலத்தில் பல தொழிற்சாலைகள், சிறு-குறு நிறுவனங்கள் நலிவடைந்து போனதை பற்றி சிந்திக்கிற நிலையில் இந்த ஆட்சி உள்ளதா ? எதுவுமில்லை.

அதிலும் கொங்கு மண்டலத்தில் உள்ள தென்னை விவசாயிகள் கொப்பறைகளை விற்க முடியாமல் தவிக்கிறார்களே. பதவியேற்றதும் கோட்டைக்கு சென்ற ஜெயலலிதா 5 கையெழுத்துகள் போட்டார். 500 டாஸ்மாக் கடைகளை மூடியதாக சொல்கிறார்களே, நான் கேட்கிறேன் கோயில்கள், மசூதிகள், பள்ளிகள், மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் இருந்த கடைகளை மூடி இருக்கிறார்களா ? இல்லையே. இந்த சேலம் மாவட்டத்தை நினைத்ததும், மறைந்த சசிபெருமாள் அவர்களை நினைக்காமல் இருந்துவிட முடியாது.

மதுவிலக்கிற்காக போராடி வந்த இதே சேலம் பகுதியை சேர்ந்த சசிபெருமாள் எப்படி இறந்தார் ? அவர் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பல போராட்டங்களை நடத்தியவர். தலைவர் கலைஞர் அவர்கள் மதுவிலக்கை அமுல்படுத்துவேன் என்று அறிவித்ததும், கோபாலபுரத்திற்கு நேரில் வந்து நான் எத்தனையோ போராட்டங்களை நடத்தி இருக்கிறேன், ஆனால் இப்போது நீங்கள் அறிவித்த பிறகுதான் நம்பிக்கை வந்திருக்கிறது, ஏனென்றால் நீங்கள் சொன்னதைத்தான் செய்வீர்கள், செய்வதை மட்டுமே சொல்வீர்கள், எனவே மதுவிலக்கை அமுல்படுத்துவீர்கள் என்று தெரிவித்தார். இந்த தகவல் ஜெயலலிதாவிற்கு சென்றதால், மார்த்தாண்டம் அருகே அவர் செல்போன் டவர் மீது ஏறி போராடி இறந்தபோது, அங்கிருந்த அதிகாரிகள் வேடிக்கைப் பார்த்தார்கள்.

இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், இன்றைக்கு 500 மதுக்கடைகளை மூடியதாக இந்த அரசு சொல்கிறதே, நீதிமன்றம் உத்தரவிட்டு மூடவில்லை என்று சசிபெருமாள் போராடி இறந்தாரே அந்த உண்ணாமலை பேரூராட்சியில் இருந்த டாஸ்மாக் கடையை மூடினார்களா என்று கேட்டால், இல்லை.
அதுமட்டுமல்ல, நேற்றைக்கு ஒரு செய்தியை நீங்கள் பார்த்திருப்பீர்கள், மதுரை அவனியாபுரம் பகுதியில் ஒரு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறான். எதற்காக, அவன் வங்கியில் கல்விக்காக 1,90,000 கடன் வாங்கி இருக்கிறான். அந்த கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. அதனால் அந்த மாணவனும், அவனது பெற்றோர்களும் அந்த தேசிய வங்கியின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள ஏஜென்சியால் மிரட்டப்படுகிறார்கள். உடனே கடனை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்று மிரட்டியதுடன், அந்த மாணவனின் கல்வி சான்றிதழ்களை பறித்து சென்றதால் அந்த மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

உச்ச நீதிமன்றம் என்ன சொல்லி இருக்கிறது என்று கேட்டால், யாராவது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்கி இருந்தால், அவர்கள் படிப்பு முடிகிற வரையில் அவர்களை யாரும் கட்டாயப்படுத்த கூடாது, பறிமுதல் செய்யக்கூடாது என்று தெளிவாக தீர்ப்பு தந்துள்ளது. அதன்படி ரிசர்வ் வங்கி தாக்கீது அனுப்பி உள்ளது. இந்த நிலையில் ஒரு தனியார் ஏஜென்சி கல்வி சான்றிதழ்களை பறிமுதல் செய்ததால் ஒரு மாணவன் இறந்து போயிருக்கிறானே, அதற்கு இந்த ஆட்சி என்ன பதில் சொல்ல போகிறது ?

இதனை நான் குறிப்பிட என்ன காரணம் என்றால், தேர்தலுக்கு முன்பாக நான் தமிழகம் முழுவதும் எல்லா பகுதிகளிலும் மேற்கொண்ட நமக்கு நாமே பயணத்தின் போது நெசவாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில் முனைவோர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் என அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்தேன். அப்போது ஒவ்வொரு பகுதியிலும் என்னை சந்தித்த மாணவர்கள், எங்கள் கல்விக்காக வங்கிகளில் கடன் வாங்கி விட்டு செலுத்த முடியாத நிலையில் வட்டி அதிகரித்து, வட்டிக்கு வட்டி செலுத்தும் நிலை ஏற்படுகிறது. ஆகவே நீங்கள் ஆட்சிக்கு வந்தால் மாணவர்கள் வங்கிகளில் பெற்றுள்ள கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அதனை தலைவர் கலைஞரிடம் எடுத்து சொன்னபோது, வட்டியை மட்டுமல்ல கல்விக்கடனை ஒட்டுமொத்தமாக தள்ளுபடி செய்வதாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார். இன்றைக்கு என்ன நிலைமை. இன்றைக்கு இதே ஜெயலலிதா தலைமையில் உள்ள ஆட்சி என்ன அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள், படித்து முடித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் மாணவர்களுக்கு வங்கிக்கடனை தள்ளுபடி செய்வதாக சொல்லி இருக்கிறார்கள். ஆகவே நேற்று நான் எனது அறிக்கையில் மிகவும் தெளிவாக குறிப்பிட்டு சொல்லியிருக்கிறேன். எனவே இந்த அரசு மாணவர்கள் தேசிய வங்கிகளில் பெற்றுள்ள கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். அதை நீங்கள் தள்ளுபடி செய்யாவிட்டாலும், கடனை செலுத்தாவிட்டாலும், அந்த கடனை கட்டாயப்படுத்தி வசூல் செய்கிற, ஜப்தி செய்கிற, பறிமுதல் செய்கிற நிலையை தடுத்திட வேண்டும் என்று இங்கேயும் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.

அதேபோல, சிறு,குறு விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்வோம் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்கள். திமுக தேர்தல் அறிக்கையிலும் அப்படி குறிப்பிட்டு இருந்தாலும், சிறு, குறு விவசாயிகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த விவசாயக்கடனை தள்ளுபடி செய்வேன் என்று திருவாரூரில் அறிவித்தார். இதைத்தான் சுட்டிக்காட்டி நான் சட்டமன்றத்தில் கேட்டபோது முறையான பதில் எதுவும் கிடைக்கவில்லை. ஏதோதோ விளக்கங்களை சொன்னார்கள். நான் கேட்கிறேன், கடந்தமுறை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்வோம் என்று 2006 தேர்தலின்போது அறிவித்தார். ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து போட்டு தள்ளுபடி செய்தார். ஒன்றல்ல இரண்டல்ல 7000 கோடி ரூபாய் தள்ளுபடி செய்தார். அப்போது நாங்கள் கூட கேட்டோம் அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள், நிர்வாகிகள் தான் பலகோடி தள்ளுபடி பெற்று பயன்பெறுகிறார்கள். காரணம் திட்டமிட்டு கடனை வாங்கி இருக்கிறார்கள் என்றும், திமுகவினர் பணத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்ற அச்சத்துடன் குறைவாக 5-10 லட்சம் மட்டும் வாங்கியுள்ளார்கள் என்றோம். அப்போது கலைஞர் சொன்னார், நான் அவர்களை திமுக அதிமுக என்று பார்க்கவில்லை, தமிழ்நாட்டின் விவசாயிகளாக பார்க்கிறேன் என்றார். ஆனால் இன்றைக்கு சட்டமன்றத்தில், மக்கள் மன்றத்தில் திமுக எடுத்து வைக்கும் கோரிக்கைகளை இந்த ஆட்சி நிறைவேற்றுகிறதா என்று கேட்டால் இல்லையே.

89 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ள நாம், சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டவுடன், எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் அவருடைய இருக்கையில் உட்கார வைத்து விட்டு, திமுக சார்பில் கலைஞரின் குரலாக பேசியபோது என்னவென்று குறிப்பிட்டேன், நாங்கள் எதிர்க்கட்சியாக செயல்படுவோம், ஆனால் எதிரி கட்சியாக செயல்பட மாட்டோம், நீங்கள் ஆளும் கட்சிக்கு உரிய உணர்வோடு உங்கள் கடமையை ஆற்றுங்கள் என்று நான் எடுத்து சொன்னேன். ஆனால், அப்படி செய்கிறார்களா ? இல்லையே.

அதுபோகட்டும், இன்றைக்கு இருக்கக் கூடிய நிர்வாகத்தின் நிலை என்ன ? ஆட்சி பொறுப்பேற்று இரண்டு மாதம் ஆகிறது, அதிலும் ஒரு காலத்திற்குள் சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு தீர்ப்புகள் வந்ததை நீங்கள் மறந்து இருக்க மாட்டீர்கள். இந்த ஆட்சியின் மீது, காவல்துறை மீது நம்பிக்கையில்லை, எனவே நாங்கள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுகிறோம் என்று சொன்னால், இதை விட வெட்கக்கேடு உண்டா ?

திருச்செங்கோட்டில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய விஷ்ணுபிரியா என்ற ஒரு பெண் டி.எஸ்.பி. தற்கொலை செய்து கொண்டு இறந்து இருக்கிறார். அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர். அதே அருந்ததியர்களுக்கு 3% உள் ஒதுக்கீட்டை தலைவர் கலைஞர் ஆட்சியில் தான் பெற்று கொடுத்தோம். அந்த அடிப்படையில் அவர் படித்து பட்டம் பெற்று, காவல்துறையில் பணி பெற்று, டி.எஸ்.பி. என்ற அந்தஸ்தையும் பெற்று இருக்கிறார் என்று சொன்னால், அதற்கு காரணம் தலைவர் கலைஞர் பெற்று தந்த இட ஒதுக்கீடு. ஆக, அப்படிப்பட்ட பெண் டி.எஸ்.பி. தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேர்தலுக்கு முன்பே நடந்தது. அவரது தந்தை தலைவர் கலைஞரை வீட்டுக்கு வந்து சந்தித்து, நீங்கள் தான் ஆட்சிக்கு வரப்போகிறீர்கள், எனவே விஷ்ணுபிரியா தற்கொலைக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும், நீதி வேண்டும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். நிச்சயம் ஆட்சிக்கு வந்ததும் உரிய நடவடிக்கை எடுப்போம், ஆனால் இப்போது ஜெயலலிதா ஆட்சி நடக்கிறது என்று சொல்லி, எனவே சட்டப் பிரச்சினைகளுக்கு உதவிக்கு ஏற்பாடு செய்தார். இன்றைக்கு காவல்துறையை நம்பவில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறது என்று சொன்னால், இதைவிட வெட்கக்கேடான ஒன்று இந்த அரசுக்கு இருக்கிறதா ?

அதுபோலவே, தேர்தலின் போது திருப்பூரில் 3 கண்டெயினரில் கடத்தப்பட்டு சிக்கிய பணம். நான் சட்டமன்றத்தில் இதுபற்றி பேச முயன்றேன். முதலிலேயே பேசி இருந்தால், என்னை பேச விட்டிருக்க மாட்டார்கள். எனவே, எல்லா பிரச்சினைகளையும் பேசிவிட்டு, இறுதியாக பொறுமையாக 3 கண்டெயினர் என்று பேசினேன். உடனே எல்லா அமைச்சர்களும்,அதிமுக உறுப்பினர்களும் எழுந்து இதையெல்லாம் பேசக்கூடாது என்றார்கள். சபாநாயகர் நான் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார். ஆக, கண்டெயினர் என்பது பேசக்கூடாத ஒரு கெட்ட வார்த்தையா ? 3 கண்டெயினர்களில் ரூ.570 கோடி ரூபாயை ஒரு மரப்பெட்டியில் வைத்து எடுத்துக்கொண்டு சென்று இருக்கிறார்கள். அதற்கு முன்பாகவே கிட்டதட்ட 18 கண்டெயினர்களில் 5000 கோடிக்கு மேல் சென்றதாக செய்திகள் வந்துள்ளன. ஆக தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் இந்த 3 கண்டெயினர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் பிடிபட்டன. அவர்கள் தடுத்தபோது நிறுத்தாமல் சென்று, 7 கிலோமீட்டர் விரட்டி சென்று பிடித்திருக்கிறார்கள். இன்றைக்கு கூட தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதை படித்தாலே உண்மையான குற்றவாளி யார் என்பது தெரிந்து விடும்.

ஆக, பணம் பிடிபட்டு பல மணி நேரம் கழித்து ஒரு மத்திய அமைச்சரின் தலையீட்டில் அது வங்கிக்கு சொந்தமான பணம் என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள் என்றால், வாதத்திற்காக ஏற்றுக் கொள்வதானாலும் எப்படி எடுத்து செல்வார்கள். திருப்பூரில் முறைப்படி இரும்பு பெட்டியில் வைத்து சீல் வைக்க வில்லை. மரப்பெட்டியில் கொண்டு சென்று இருக்கிறார்கள். இன்னும் 18 கண்டெயினர்கள் சிறுதாவூரில் நிற்கும் படங்கள் தொலைக்காட்சிகள், பத்திரிகைகளில் வந்தன. முதலமைச்சர் ஓய்வெடுக்க அடிக்கடி சென்று தங்கும் பங்களா அது. அதன் தொடர்ச்சியாக இந்த 3 கண்டெயினர்கள் சிக்கியுள்ளன.

அதுவும் ஆர்பிஐ விதிப்படி ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு இவ்வளவு பணம் மாற்றுவதாக இருந்தால் ரயிலில் கொண்டு செல்ல வேண்டும். இங்கு சேலத்தில் ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு செல்வதாக இருந்தால் காவல்துறை பாதுகாப்புடன், சீல் வைத்த வாகனங்களில் செல்வதை பார்க்கிறோம். ஆனால் அந்த லாரிகளில் லுங்கி கட்டிய ஒருவர் பாதுகாப்பாக வந்திருக்கிறார். அப்படி கொண்டு செல்லப்பட்ட பணம் 1000, 500, 100 அல்லது 50 ரூபாய் கட்டுகளா ? கிட்டதட்ட 5000 கோடி ரூபாய் சென்றதாக செய்திகள் வந்துள்ளது. அதுவும் தேர்தலுக்கு முன் வெள்ளிக்கிழமையன்று சென்றுள்ளது. அதுவும் அடுத்த நாள் இரண்டாவது சனிக்கிழமை, தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. வங்கி விடுமுறை நாட்கள். சென்னையில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு 1260 கிலோமீட்டர் தூரம். வேடிக்கை என்னவென்றால், கோவையில் இருந்து விசாகப்பட்டினம் செல்ல சம்பந்தமே இல்லாமல் திருப்பூர் வழியாக சென்று செங்கப்பள்ளியில் இருந்து செல்லும் வழியில் சிக்கி இருக்கிறது. இன்னொரு செய்தி என்னவென்றால் லாரியின் பதிவெண் லாரிக்கான பதிவெண் இல்லை. ஏ.டி.0எக்ஸ்.5204 என்பது வேறொருவரின் காரின் எண். அதுமட்டுமல்ல ஆர்சி புக் உரிமையாளர் பெயரே வேறாக உள்ளது. இந்த விவகாரங்கள் எல்லாம் வெளிப்படும்போது உண்மை வெளிச்சத்துக்கு வரும். அதனால் தான் இன்றைக்கு காவல்துறை மீது நம்பிக்கையில்லை, சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது என்றால் இந்த ஆட்சிக்கு வேறு என்ன அவமான வேண்டும்.

இதையெல்லாம் விட ரத்தம் சிந்தும் பூமியாக இன்று தமிழகம் மாறி வருவது மிகவும் வேதனையானது. எவ்வளவோ செய்திகள் வந்து விட்டன. சினிமாவிற்கு டிக்கெட் புக் செய்ய செல்போனில் புக் செய்வது போல, போன் செய்து பீட்ஸா போல உணவுக்கு ஆர்டர் தருவது போல, முதலமைச்சர் ஜெயலலிதா ஆரம்பித்த உதவி மையத்திற்கு போன் செய்ய ஒரு எண்ணை அளித்துள்ளார். ஆனால் யாராவது போன் கிடைத்துள்ளதா ? ஆக, இப்போது யாரையாவது கொலை செய்ய கூலிக்கு ஆட்கள் வேண்டும் என்றால் அதற்கும் ஒரு செல்போன் எண்ணில் அழைத்தால் போதும் என்ற நிலை இன்று தமிழகத்தில் ஏற்பட்டு ஒரு அராஜக பூமியாகி இருக்கிறது. ஆக, சென்னையில் மட்டுமல்ல இன்றைக்கு தமிழகம் முழுவதும் கூலிப்படையினர் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம் என்ற நிலையில் நாடு போய்க்கொண்டு இருக்கிறது.

ஆக, இந்த நாட்டை காப்பாற்ற நீங்கள் அனைவரும் உறுதியெடுத்து கொள்ளும் வகையில் இந்த இணைப்பு விழாவில் பங்கேற்றுக் கொண்டு, இன்றைக்கு திமுகவில் தங்களை ஒப்படைத்துக் கொண்டு இருக்கக் கூடிய உங்களை எல்லாம் நான் விரும்பி, வேண்டி கேட்டுக் கொள்ள விரும்புவது, இந்த கழகத்தை, கழகத்தை வழி நடத்தும் தலைவர் கலைஞரின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் என்றைக்கும் துணை நிற்க வேண்டும் என்று தெரிவித்து, உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை வருக, வருக, வருக என்று வரவேற்று விடைப்பெறுகிறேன். நன்றி. வணக்கம்.

Friday, May 13, 2016

'போட்டோகிராபர் ஹரிபாபு உயிரோடு இருக்கிறார்!'

'ராஜீவ்காந்தி கொலையின் நேரடி சாட்சி 'போட்டோகிராபர் ஹரிபாபு உயிரோடு இருக்கிறார்!' -ஆவணப்பட அதிர்ச்சி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. 'படுகொலைக்குக் காரணமானவர்கள்' என சி.பி.ஐயால் சொல்லப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர், தங்களது விடுதலையை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கிறார்கள்.
ராஜீவ்காந்தி படுகொலையின் மிக முக்கிய ஆவணம் என ஜெயின், வர்மா கமிஷன் விசாரணைகளில் குறிப்பிடப்பட்டது சம்பவ இடத்தில் போட்டோகிராபர் ஹரிபாபு எடுத்த புகைப்படங்களைத்தான். சர்வதேச அரங்கையும் இந்தப் புகைப்படங்கள் உலுக்கியது. " ஸ்ரீபெரும்புதூர் குண்டுவெடிப்பில் ஹரிபாபு இறந்துவிட்டாலும், அவர் எடுத்த புகைப்படங்களால்தான் குற்றவாளிகளை நெருங்க முடிந்தது" என பெருமைப்பட்டுக் கொண்டார் சி.பி.ஐ இயக்குநராக இருந்த கார்த்திகேயன்.

இந்நிலையில், " போட்டோகிராபர் ஹரிபாபு இறந்துவிட்டார் என அதிகாரிகள் சொல்வது சுத்தப் பொய். அவர் உயிரோடுதான் இருக்கிறார். அவரை வேண்டுமென்றே அதிகாரிகள் தப்ப வைத்தார்கள். சம்பவ இடத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது அவருடைய கேமராவும் அல்ல. அத்தனையும் நாடகம்" என அதிர வைக்கிறார்கள் இரண்டு மருத்துவர்கள். தடய அறிவியல் ஆய்வு அறிக்கை, ஹரிபாபுவின் போஸ்ட்மார்ட்டம் அறிக்கை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் ஆவணங்கள் என எட்டு ஆண்டுகளாக இதற்காகப் பயணித்து, பல புது தகவல்களைக் கண்டறிந்திருக்கிறார்கள்.
வருகிற மே 21-ம் தேதி ராஜீவ்காந்தி படுகொலை தினத்தன்று 'பைபாஸ்'  என்ற தலைப்பில்,  ஆவணப்படத்தை வெளியிட இருக்கிறார்கள். கோவையைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ் மற்றும் கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி ஆகிய இருவரும்தான், ஹரிபாபுவை நோக்கிக் காய்களை நகர்த்தியவர்கள். 

கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தியிடம் பேசினோம்... 

ஹரிபாபுவை நோக்கிப் பயணிக்கும் யோசனை எப்படித் தோன்றியது? 

" எங்களுக்குத் தொடக்கம் முதலே ராஜீவ்காந்தி படுகொலையின் தடய அறிவியல் அறிக்கை, போஸ்ட்மார்ட்டம் உள்ளிட்ட பல விஷயங்களில் சந்தேகம் இருந்தது. கோவையைச் சேர்ந்த என்னுடைய நண்பர் மருத்துவர் ரமேஷ், படுகொலை வழக்கின் ஆவணங்களைத் தேடும் முயற்சியில் இறங்கினார். ஜெயின் கமிஷன், வர்மா கமிஷன் ஆகிய இரண்டிலும், 'குற்றத்தைப் பற்றிய விடை தெரிவதற்கு மிக முக்கியமான காரணம், ஹரிபாபு எடுத்த கேமராவும் படங்களும்தான் முழு வழக்கையும் முடிவுக்குக் கொண்டு வந்தது' என்றது.
எங்களுடைய கேள்வியெல்லாம், 'ஹரிபாபு இறந்துவிட்டார். ஆனால், அவருடைய கேமரா மட்டும் எப்படி பாதிப்படையாமல் போனது?' என்பதுதான். 'தாமரை பூ வடிவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது' என்கிறது புலனாய்வு அறிக்கை. அப்படி வெடிக்கும்போது கேமரா பாதிப்படையாமல் இருக்காது என சந்தேகப்பட்டோம். அப்போது எங்களுடைய சந்தேகங்களுக்கு விடை கிடைக்கவில்லை. இதுதொடர்பான ஆவணங்களைப் பெறுவதற்கே மிகவும் கஷ்டப்பட்டோம். 

2008-ம் ஆண்டு ராஜீவ் படுகொலை வழக்கைக் கையாண்ட தடய அறிவியல் துறை பேராசிரியர் சந்திரசேகர், 'ஃபர்ஸ்ட் ஹியூமன் பாம்' என்ற புத்தகத்தை எழுதினார். அதில் பல கேள்விகளுக்கு விடை கிடைத்தன. 'கேமரா எப்படி பாதிப்படையாமல் கிடைத்தது?' என்ற கேள்விக்கு பதில் சொல்லும் சந்திரசேகர், ' பூகம்பம் நடக்கும்போது அதிர்ஷ்டவசமாக சிலர் இடிபாடுகளுக்கு நடுவிலும் பாதுகாப்பாக வெளிவந்திருக்கிறார்கள். அதைப் போலத்தான் கேமராவும் கிடைத்தது' என்கிறார்.
ஆனால், ' கிரைம் சீன் இன்வெஸ்டிகேஷன்களில் இதுபோன்ற உவமைகள் எடுபடாது, சம்பவ இடத்தின் நிலவரத்தைப் பொறுத்து அறிவியல்ரீதியாகப் பேச வேண்டும்' என அமெரிக்காவின் டாபெர்ட் வழக்கின் புலனாய்வு வழிமுறைகள் சொல்கிறது. டாபெர்ட் வழக்கின் புலனாய்வு முறைகளைச் சரியாகக் கையாண்டிருந்தால், இந்த வழக்கின் போக்கே திசைமாறியிருக்கும். அப்படி எதையும் புலனாய்வுத் துறை செய்யவில்லை. நாங்கள் டாபெர்ட் நடைமுறைகளைக் கையாண்டு விசாரணையைத் தொடங்கினோம்." 

ஹரிபாபு சாகவில்லை என்பதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்? 

" ஹரிபாபுவின் போஸ்ட்மார்ட்டம் அறிக்கையைத் தேடினோம். அந்த அறிக்கையில், 'இறந்த நபருக்கு சுன்னத் செய்யப்பட்டிருக்கிறது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 'வன்னிய சமூகத்தைச் சேர்ந்த ஹரிபாபு எப்படி சுன்னத் செய்வார்?' தவிர, 'அந்த சடலத்தின் வயது 30' என்கிறார்கள். ஹரிபாபுவுக்கு 22 வயதுதான் ஆகிறது. ராஜீவ் காந்தியை படம் எடுக்கும்போது, அவர் நடந்துவரும் கார்பெட்டின் இடதுபக்க மூலையில் இருந்திருக்கிறார் ஹரிபாபு. அங்கிருந்துதான் போட்டோ எடுத்தார். ஆனால், அவரது உடலை வலது பக்கம் இருந்து எடுத்ததாகச் சொல்கிறார்கள். குண்டு வெடித்தாலும் உடல் வலது பக்கம் வந்து விழுவதற்கு வாய்ப்பே இல்லை.
'உங்கள் மகனின் உடல் இது' என போலீஸார் சொன்னதைக் கேட்டு, அவரது அப்பா சுந்தரமணி உடலைக் கையெழுத்து போட்டு வாங்கியிருக்கிறார். 'சடலத்தை எரிக்கக் கூடாது, புதைக்க வேண்டும்' எனப் போலீஸார் கூறியிருக்கிறார்கள். ஆனாலும், ஹரிபாபு குடும்பத்தினர் அன்றைக்கே உடலை எரித்துவிட்டார்கள். மருத்துவர்கள் அந்த சடலத்தில் இருந்து தலையை வெட்டி எடுத்திருக்கிறார்கள். அவர் முகம் முற்றிலும் சிதைந்துவிட்டது எனச் சொல்கிறார்கள். சடலத்தில் இருந்து கை ரேகை மட்டும் எடுத்தவர்கள், டி.என்.ஏ சாம்பிள் எடுக்கவில்லை. மருத்துவர்களும், 'ஏன் சுன்னத் செய்யப்பட்டிருக்கிறது?' எனவும் கேள்வி எழுப்பவில்லை. ஹரிபாபுவின் அக்கா விஜய ரேவதி சொல்லும்போது, 'கிரீம் கலர் சட்டை அணிந்திருந்தான்' என்கிறார். ஆனால், போலீஸோ, ' பச்சை கலர் முழுக்கை சட்டை' எனச் சொல்கிறார்கள். இதையெல்லாம் யாரும் கேள்வி எழுப்பவில்லை." 

அப்படியானால், போலீஸார் காட்டும் சடலம் யாருடையது? 

" அதற்கும் எங்களுக்கு விடை கிடைத்தது. ஸ்ரீபெரும்புதூரில் சுலைமான் சேட் என்று ஒருவர் இருக்கிறார். அவர்தான் ராஜீவ்காந்தி நடந்து வரும்போது பூ தூவுவதற்காக இருவரை ஏற்பாடு செய்திருந்தார். அவர்கள் இருவரும் முஸ்லிம்கள். கண்டிப்பாக இந்த இருவரில் ஒருவரைத்தான் ஹரிபாபு எனக் காட்டியிருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தோன்றுகிறது. இரண்டு பூக்கூடைகள் சம்பவ இடத்தில் இருந்தது என புலனாய்வு அறிக்கை சொல்கிறது. சுப்ரமணியன் சுவாமியும் இரண்டு பூக்கூடை இருந்ததாகச் சொல்கிறார். "

இந்த விவகாரத்தில் தவறு செய்தது யார்? 

"கிரைம் சீன் இன்வெஸ்டிகேசன் என்பதே இந்த வழக்கில் முற்றிலும் மீறப்பட்டிருக்கிறது. முன்னுக்குப்பின் முரணான தகவல்களைச் சொல்கிறார் தடய அறிவியல் பேராசிரியர் சந்திரசேகர். சம்பவ இடத்திற்கு மறுநாள் காலை 11 மணிக்குப் போனதாகச் சொல்லியிருக்கிறார்.
ஆனால், கே.ராமசுந்தரம் என்ற ஃப்ரீலான்ஸ் நிருபர், தன்னுடைய பிளாக்கில், 'மே 22-ம் தேதி எனக்குப் பேட்டி கொடுத்தார் சந்திரசேகர்.ராஜீவ்காந்தியின் ஷூ, மனித வெடிகுண்டு தனுவின் தலையில் இருந்த கனகாம்பரம், பச்சை கலர் சல்வார், ஆரஞ்ச் கலர் பாட்டம், வெடிகுண்டுக்கு பயன்படுத்திய சுவிட்ச் ஆகியவற்றைக் காட்டினார் சந்திரசேகர். நான் அதை வீடியோ எடுத்தேன். சம்பவ இடத்திற்கு முதல்நாள் இரவே சந்திரசேகர் போய்விட்டார்' என எழுதியுள்ளார்.  இந்த வீடியோப் பதிவுகள் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் மற்றும் கனடாவின் டோரண்டோ ஸ்டார் ஆகியவற்றில் வெளியானது."

இப்படிச் செய்ய வேண்டிய அவசியம் என்ன? 

"இந்த வழக்கின் மிக முக்கியமான கேள்வி இது. சம்பவ இடத்தில் இருந்து காயத்தோடு ஹரிபாபுவை மீட்டவர்கள், அவரைத் தப்பியோட வைத்துவிட்டார்கள். இதற்குப் பின்னால் ஏராளமான மர்மங்கள் இருக்கின்றன." 

அப்படியானால், ஹரிபாபு இப்போது எங்கே இருக்கிறார்? 

"அவர் இப்போது பக்கத்து மாநிலம் ஒன்றில் சாமியார் வேடத்தில் இருக்கிறார். அவரைத் தப்பவிட்டது யார்? என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு அவரிடம் விடை இருக்கிறது. அவரது குடும்பத்தினர் சென்னையில் குடியிருந்தார்கள். இப்போது வேறு இடத்திற்குப் போய்விட்டார்கள்."

ஆவணப்படம் எப்போது வெளியாகும்? 

" ராஜீவ்காந்தி படுகொலை தினத்தன்று வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். தவறான நீதியால் ஏற்பட்ட விளைவுகளைச் சொல்லும் சிலப்பதிகாரக் கதை நடந்த பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம். ஒரு மணி நேரம் ஓடக் கூடிய படம் இது. வழக்கின் பல மர்மங்களை அவிழ்க்கும் மிக முக்கியமான ஆவணப்படமாகவும் இது இருக்கும்!" என விரிவாகப் பேசி முடித்தார் மருத்துவர் புகழேந்தி. 

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு பற்றிய விவாதம் வரும்போதெல்லாம், 'உண்மைக் குற்றவாளிகள் அரசு பதவிகளில் அமர்ந்து கொண்டு உலா வருகிறார்கள். தவறே செய்யாதவர்கள் இளமையைத் தொலைத்துவிட்டு, நோயோடு சிறைகளில் வாடுகிறார்கள்' என்பார்கள். அது உண்மைதானோ!? 

- ஆ.விஜயானந்த்

ஜீரோ பட்ஜெட் வனம்

ஒரு ஏக்கர் நிலத்தில் இரண்டரை லட்சம்... செலவில்லா வருமானம்!

காவிரிக்கரையில் ஒரு ஜீரோ பட்ஜெட் வனம்தூரன் நம்பி, ஜி.பழனிச்சாமி, படங்கள்: தி.விஜய்
காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை... ‘பத்மஸ்ரீ’ சுபாஷ் பாலேக்கரிடம் பயிற்சி பெற்ற பல்லாயிரம் விவசாயிகள் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தைக் கையிலெடுத்து சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். அதிலும் சில முன்னோடி விவசாயிகள் தங்கள் வயலையே மாதிரிப் பண்ணையாக்கி, நேரடி களப்பயிற்சி கொடுத்து, மேலும் பல புதிய ஜீரோ பட்ஜெட் விவசாயிகளை உருவாக்கியும் வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ‘பன்னூர்’ கிருஷ்ணப்பா. 

கர்நாடகா மாநிலம், மைசூரூ மாநகரிலிருந்து 52 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, பன்னூர். அங்கு, நீர் பெருக்கெடுத்து ஓடும் காவிரிக்கரையின் ஓரத்தில் உள்ளது, கிருஷ்ணப்பாவின் 5 ஏக்கர் நிலம். நெல்லும், கரும்பும்தான் பிரதானப் பயிர்கள். அதனுள் 3 ஏக்கர் நிலத்தில் ஜீரோ பட்ஜெட் வனத்தை உருவாக்கியுள்ளார், கிருஷ்ணப்பா. அது, மழையீர்ப்பு மையமாக மட்டுமல்லாமல், வருமானம் கொடுக்கும் வனமாகவும் விளங்குகிறது.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அறுவடை முடிந்த வயல்வெளிகள். அதில் மேய்ந்து வலம் வரும் கிடை ஆடுகள். இடையிடையே தோகை சாய்த்து ஆடும் கரும்புத்தோட்டங்கள். வரப்பில் வரிசை கட்டிப் போகும் விவசாயப்பெண்கள். முகம் பார்க்கும் தெளிவில் ஓடும் வாய்க்கால் தண்ணீர். இப்படியான இயற்கை கொஞ்சும் இடத்தில் இருக்கிறது, அந்த ஜீரோ பட்ஜெட் வனம்.

பச்சைத்துண்டு முண்டாசு தலையில் கட்டி, ஜீவாமிர்தம் தயாரிப்பில் மும்முரமாக இருந்த கிருஷ்ணப்பாவைச் சந்தித்தோம். இடையிடையே தமிழ் கலந்த கன்னடத்தில் பேசினார், கிருஷ்ணப்பா. 

“என் முழுப்பெயர், கிருஷ்ணப்பா தாசே கவுடா. பன்னூர்தான் சொந்த ஊர். பரம்பரை விவசாயக்குடும்பம். நல்ல வண்டல் மண்வளம், நீர்வளம் இரண்டும் நிறைந்த ஊர். நெல், கரும்பு, வாழை... என பணப்பயிர் சாகுபடி செய்யும் வளமான பூமி. மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு இங்குள்ள விவசாயிகள் வசதியாக இருப்பது மாதிரிதான் தெரியும். ஆனால், உண்மை அதுவல்ல. கடன் தொல்லை, ஜப்தி, தற்கொலை போன்ற சம்பவங்கள் அடிக்கடி இங்கும் நடக்கத்தான் செய்கின்றன. எல்லா வளமும் இருந்தும் தற்கொலையை மட்டும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
கர்நாடக மாநிலத்தில் விவசாயிகளுக்கு எங்கு பிரச்னை என்றாலும், பச்சைத்துண்டை தோளில் போட்டபடி போராடக் கிளம்பி விடுவேன். கர்நாடக மாநில விவசாய சங்கத்திலும் பொறுப்பில் இருக்கிறேன். மாதத்தில் பாதி நாள் ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டம் என்று போய் விடுவேன். அப்படி போகும்போதுதான் 2003-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம், ஹுப்ளியில் நடந்த சுபாஷ் பாலேக்கரின் ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு, பயிற்சி எடுத்தேன். அப்போதுதான், எல்லா வளமும் இருந்தும், ரசாயன விவசாயத்தால்தான் எங்கள் ஊர் விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்கிற விஷயம் பொட்டில் அடித்தது போல உறைத்தது” என்று நிறுத்திய கிருஷ்ணப்பா, ஒரு சிரிப்பை உதிர்த்தபடி தொடர்ந்தார்.  

“கண்டபடி ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் வயலில் கொட்ட ஆரம்பித்து, உற்பத்திச் செலவை அதிகப்படுத்திக் கொண்டு... அறுவடையான பொருளைக் கட்டுப்படியாகாத விலைக்கு விற்று, கடைசியில் கடனாளியானதுதான் மிச்சம். அந்தச் சிக்கலில் இருந்து அவர்களை மீட்டெடுக்கும் ஒரே வழி ஜீரோ பட்ஜெட் விவசாயம் மட்டும்தான் என்பது தெளிவாகப் புரிந்தது. தொடர்ந்து ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்புக்களில் கலந்து கொண்டேன். விவசாயிகள் சங்கக் கூட்டங்களிலும் ஜீரோ பட்ஜெட் விவசாயம் குறித்து வலியுறுத்தினேன். ஒரு சிலரைத் தவிர யாரும் இதைக் காது கொடுத்து கேட்கவில்லை. ‘இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியப்படாது. யூரியா, பொட்டாஷ் என்று போட்டோமா... வெள்ளாமையை எடுத்தோமா? என்று இருப்பதுதான் நிம்மதி’ என்றனர்.

இதுகுறித்து பாலேக்கரிடம் புலம்பினேன். ‘எதையும் பேசுவதை விட செய்து காட்டுவதுதான் நல்ல பதிலாக இருக்கும். நேரத்தை ஒதுக்கி ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை உடனே ஆரம்பியுங்கள்’ என்று ஆலோசனை சொன்னார், பாலேக்கர். உடனே, விவசாய சங்க வேலைகளைக் குறைத்துக் கொண்டு, ஜீரோ பட்ஜெட் பண்ணை உருவாக்கும் வேலையில் இறங்கினேன். 2006-ம் ஆண்டு, மூன்று ஏக்கர் நிலத்தில் ஜீரோ பட்ஜெட் முறையைத் தொடங்கினேன். இடையில் பலமுறை பாலேக்கரைத் தொடர்புகொண்டு எனக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டேன்.
பாலேக்கர் சொன்ன வன விவசாயம்!

ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் இரண்டு முறைகள் உண்டு. ஒன்று மகசூல் விவசாயம். இன்னொன்று வன விவசாயம். நெல், கரும்பு, வாழை என ஆண்டுப் பயிர்கள் சாகுபடி செய்தால், மகசூல் விவசாயம் மேற்கொள்ளலாம். வன விவசாயம் என்பது, ‘டூ நத்திங் ஃபார்மிங்’. அதாவது, எதுவும் செய்யாத விவசாயம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் செய்யப்படுவது. இதை ‘சுயச்சார்பு விவசாயம்’ என்று பாலேக்கர் சொல்வார். இந்த வன விவசாயத்தில், குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு மண் தன்னைத்தானே வளப்படுத்திக் கொள்ளும். செடிகளுக்குத் தேவையான அனைத்து ஊட்டங்களும் வனத்தில் இருந்தே கிடைக்கும். அந்த வன விவசாயத்துக்கு ‘பாலேக்கர் மாடல்’ என்று பெயர். நான் மூன்று ஏக்கர் நிலத்தில் வன விவசாயத்தை மேற்கொண்டேன்.
தினமும் 6 லிட்டர் தண்ணீர்!

என்னுடைய வன விவசாயத்தில் மூடாக்குகளின் மூலம்... கார்பன், நைட்ரஜன் உற்பத்தி ஆகிறது. மண்ணின் ஹியூமஸ், பூமியில் கார்பன் அளவைக் கூட்டுகிறது. இதனால், தினமும் 6 லிட்டர்  தண்ணீர் அளவுக்கு ஆவியாதல் தடுக்கப்படுகிறது. இது தினமும் ஆறு லிட்டர் மழை நீரைச் சேமிப்பதற்குச் சமம். இப்படி ஒன்றை ஒன்று சார்ந்து எதுவும் செய்யாத தானியங்கு விவசாயமாக எனது வன விவசாயம் மாறியுள்ளது. இந்த மூன்று ஏக்கர் வன விவசாயத்தில், அறுவடை செய்ய மட்டுமே நாங்கள் உள்ளே செல்கிறோம். மற்ற வேலைகளை எல்லாம் இயற்கை செய்து கொள்கிறது. 10-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எனது வன விவசாயத்தில் தென்னை, பாக்கு, மிளகு, காபி, ஆரஞ்சு, சாத்துக்குடி ஆகியவற்றில் இருந்து இப்போதைக்கு வருமானம் வருகிறது” என்ற கிருஷ்ணப்பா, பண்ணையைச் சுற்றிக் காட்டிக் கொண்டே பேசினார்.
பாலேக்கரின் பாராட்டு!

“சில ஆண்டுகளுக்கு முன் பண்ணையைப் பார்வையிட்ட பாலேக்கர், சில திருத்தங்கள் சொன்னார். அதில் முக்கியமானது இரண்டடுக்கு உயிர்வேலி. எனது பண்ணையைச் சுற்றிலும் சில்வர் ஓக், தேக்கு, மலைவேம்பு மரங்கள் ஒரு அணியாகவும், அடுத்த வரிசையில் அகத்தி, சீத்தா, முருங்கை என்று உயிர் வேலிகளை அமைக்குமாறு சொன்னார். அதன்படியே நடவு செய்தேன். அவை இப்போது வளர்ந்து உயிர்வேலியாக நிற்கின்றன. சமீபத்தில் பண்ணைக்கு வந்த பாலேக்கர், ‘முழுமையான ஜீரோ பட்ஜெட் வன விவசாயம் என்பதற்கான மாதிரிப்பண்ணையாக மாறிவிட்டது’ என்று பாராட்டிச் சென்றார். பள்ளி, கல்லூரி மாணவர்கள் இயற்கை ஆர்வலர்கள் என்று பலரும் எனது வன விவசாயப் பண்ணைக்கு வந்து பல விஷயங்களைத் தெரிந்து செல்கிறார்கள்” என்று பெருமையுடன் சொன்ன கிருஷ்ணப்பா நிறைவாக,
“2007-ம் ஆண்டு ‘பசுமை விகடன்’ மூன்றாவது இதழில் என்னைப்பற்றிய கட்டுரை வந்துள்ளது. அன்று சாதாரண ஜீரோ பட்ஜெட் பண்ணையாக இருந்த நிலம், இந்த 9 ஆண்டுகளில் மகசூல் விவசாயத்துடன் வன விவசாயம் அடங்கிய மாதிரிப்பண்ணையாக மாறியுள்ளது. இந்த பத்து ஆண்டுகளில் மைசூரூ மாவட்டத்தில் மட்டும் 500 விவசாயிகள் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் இறங்கியுள்ளனர். நான் பிறந்த இந்த மாவட்டத்தை முழுமையான ஜீரோ பட்ஜெட் விவசாய மாவட்டமாக மாற்ற முயற்சி எடுத்து வருகிறேன். இன்னும் சில ஆண்டுகளில் அது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. என்னைத் தமிழக விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தி ‘ஜீரோ பட்ஜெட் ஹீரோ’வாக ஆக்கியது, பசுமை விகடன்தான். அதன் வாயிலாக தமிழ்நாட்டில் பல விவசாயிகள் நண்பர்களாகக் கிடைத்துள்ளனர். பசுமை விகடனுக்கு நன்றி”  என்று நெகிழ்ச்சியாகச் சொல்லி விடைகொடுத்தார்.

இந்த கிருஷ்ணப்பா தன் அனுபவங்களை, திருச்சியில் பிப்ரவரி 12 அன்று துவங்க இருக்கும் ‘பசுமைவிகடன்’ அக்ரி எக்ஸ்போ-2016 நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தன் அனுபவங்களை நேரடியாக பகிர இருக்கிறார்.
தொடர்புக்கு,
கிருஷ்ணப்பா,
செல்போன்: 098805 87545.

Sunday, May 08, 2016

சோழர்களின் நீர் மேலாண்மை...

சோழர்களின் நீர் மேலாண்மையும், நதி நீர் இணைப்பு திட்டமும்...!


பெரிய திட்டங்களை கண்டு எப்போதும் வியப்பது, அந்த பெரிய திட்டங்கள் நமக்கு வேண்டும் என்று கேட்பது நம் பொதுவான இயல்பு. நீர் மேலாண்மை விஷயத்தில் எடுத்துக் கொண்டால் கூட, நமது கோரிக்கைகள் எப்போதும் பெரிய அணைகளாக, நதி நீர் இணைப்பாக இருந்துகிறது. இந்த இயல்பினால் தான் உலகின் பழமையான அணையை கட்டியவன் சோழன்  என்று பெருமை கொள்கிறோம். ஆனால், அதே சோழர்கள் வெட்டிய லட்சக்கணக்கான குளங்கள், ஏரிகளை  பற்றி பேச மறுக்கிறோம். 

கரிகாலனின் கல்லணை குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும்தான். இப்போது கட்டப்படும் அணைகள் போலானது அல்ல, சோழன் கட்டிய கல்லணை. சூழலுக்கு அதிகம் தீங்கிழைக்க்காமல், கல், மண் மற்றும் களிமண் கொண்டு கட்டப்பட்ட அணை அது. அதனால்தான், இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சர் ஆர்தர் காட்டன், கல்லணையின் பொறியியலை கண்டு வியந்து கல்லணைக்கு ‘கிரான்ட் அணைகட்’ என்று பெயர் சூட்டினார். இது பெருமைக்குரிய விஷயம்தான். ஆனால், சோழர்கள்  அணைகளை மட்டும் கட்டவில்லை. கல்லணைக்கு நிகரான தொழிற் நுட்பம் அவர்கள் வெட்டிய ஏரிகளிலும் இருந்தது. 

ராஜகேசரி பெருவழியும், நொய்யல் ஆறும்:
பிற்காலச் சோழர்கள் நாகப்பட்டினம் முதல் கேரள மாநிலம் கோழிக்கோடு வரை ஒரு பெரும் பாதையை உண்டாக்கி இருந்தார்கள். இந்த பாதை ராஜகேசரி பெருவழி என்று அழைக்கப்பட்டது. இந்த பெருவழியின் பக்கமாக ஏராளமான ஏரிகள் வெட்டப்பட்டு இருக்கிறது. இந்த ஏரிகள்தான் நொய்யலாற்றின் உயிர் நாடி.  

எழுத்தாளர் இரா. முருகவேளிடம் இந்த பெருவழி குறித்து பேசியபோது, “இந்த பெருவழியில் பெரும் வணிக குழுக்கள் பயணித்தன. வணிக குழுக்கள் என்றால் பத்து இருபது பேர் அல்ல. குறைந்தது 1000 மாட்டு வண்டிகளில் தானியங்கள், பஞ்சுகள் மற்றும் பிறச் செலவங்களை ஏற்றிக் கொண்டு வணிகர்கள் பயணித்து இருக்கிறார்கள். கொடுமுடி முதல் பாலக்காடு வரை இந்த பெருவழியை ஒட்டிய பகுதிகள் மிகவும் வறட்சியானதாக இருந்து இருக்கிறது. அதனால், அந்த பாதையில் பயணிப்பவர்களின் நலனுக்காக கோவை பகுதியில் மட்டும் 32 நீர் நிலைகளை உண்டாக்கி இருக்கிறார்கள். இது குறித்த கல்வெட்டு இன்றும் இருக்கிறது. 

கோவை மாநகரத்தில் உள்ள அல்லிக்குளம், குறிச்சி குளம், நாகராஜபுர குளம், முத்தனங்குளம், பனங்காட்டு குளம், வாலாங்குளம் எல்லாம் அவர் வெட்டியதுதான். இந்த நீர் நிலைகள் ஒன்றோடு ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டவை. நொய்யலாற்றிலிருந்து வரும் நீர் இந்த ஏரிகளை எல்லாம் நிரப்பிவிட்டு மீண்டும் நொய்யலாற்றோடு கலந்துவிடும்.

கோவை மாவட்டம் பீடபூமி பகுதி. அதனால் மற்ற ஆறுகளைவிட நொய்யலாற்றின் வேகம் அதிகமாக இருக்கும். பெரும் மழை பெய்தால் கூட வேகமாக பயணித்து காவிரி உடன் விரைவாக கலந்துவிடும். அதனால், இந்த ஆற்றின் பயன்களை அந்த பகுதி மக்கள், முழுவதுமாக பயன்படுத்த முடியாத நிலை இருந்து இருக்கிறது. இந்த நிலையில், அந்த பகுதியில் வெட்டபட்ட இந்த ஏரிகள், ஆற்றின் வேகத்தை ஆற்றுப்படுத்தியது மட்டும் இல்லாமல்,  அந்த பகுதியையும் எப்போதும் செழிப்பாக வைத்து இருந்து இருக்கிறது.

ஆனால், நாம் நம் மோசமான நீர் மேலாண்மையால், அந்த ஏரிகளையும் மெல்ல கொன்று வருகிறோம். அதன் மூலமாக நொய்யலையும். ஆம் நொய்யல் அழிவிற்கு சாயப்பட்டறைகள் மட்டும் காரணம் அல்ல. இந்த ஏரிகளின் அழிவும்தான். முன்பு ஒரு காலத்தில் நொய்யலில் ஏராளமான நீர் நாய்கள் இருந்து இருக்கின்றன. ஆனால், இப்போது ஒன்றை கூட பார்க்க முடியவில்லை. அந்த நிலை நாளை அதனை ஒட்டி வாழும் நமக்கும் ஏற்படலாம்...” என்கிறார் முருகவேள்.  

நதிநீர் இணைப்பு திட்டம் மக்களை ஏமாற்றும் வேலையா...?
இந்த நீர் நிலைகளை காக்க வக்கற்ற இந்த அரசும் நாமும்தான் இப்போது நதி நீர் இணைப்பை பற்றி அதி தீவிரமாக பேசி வருகிறோம்.  அனைத்து கட்சிகளும் நம்மை கவர்வதற்காக நதி நீர் இணைப்பு திட்டத்தையும் தம் தேர்தல் அறிக்கையில் முன் வைத்து இருக்கிறது. உண்மையில் இந்த நதி நீர் இணைப்பு சாத்தியமா...பயன் தருமா...? என்ற நம் கேள்விக்கு ‘இல்லை’ என்பதுதான் சூழலியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்களின் பதிலாக இருக்கிறது. 

சூழலியலாளர் பியூஷ், “நதி நீர் இணைப்பு நன்மைகளை தருவதை விட மாநிலங்களுக்கிடையே  பிரச்னையைதான் உண்டாக்கும். இது போல் பெரிய திட்டங்களை நாம் யோசிப்பது மூலமாக, தீர்வை நோக்கி பயணிக்காமல் பிரச்னைகளை மேலும் மேலும் நாம் சிக்கலாக்குகிறோம்.” என்கிறார். 

“ஒரு வேளை இந்த நதிகள் இணைக்கப்படும் பட்சத்தில், நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது அளவுக்கு மக்கள் இடம்பெயரும் சூழ்நிலை ஏற்படும். அவர்கள் வாழ்வாதாரத்திற்கு அரசு என்ன திட்டத்தை வைத்து இருக்கிறது. அது மட்டுமல்லாமல், டன் கணக்கில் கான்கீரீட் கலவைகள் ஆற்றில் கொட்ட்டப்படும். இது மேலும் மேலும் ஆற்றை மாசுப்படுத்துமே தவிர, எந்த நல் பயன்களையும் தராது...” என்கிறார் பியூஷ். 

ஏற்கெனவே, மேட்டூர் அணை கட்டப்படுவதற்காக அப்புறப்படுத்தப்பட்ட மக்கள் இன்றும் கர்நாடக வனப்பகுதிகளில் அகதிகளாக அலைந்து கொண்டிருக்கும் இந்த சூழலில், பியூஷின் கருத்து கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. 

ஏறத்தாழ இதே கருத்தை வழிமொழியும், பூவுலகு அமைப்பைச் சேர்ந்த சுந்தராஜன்,  “இன்றைய மதிப்பில், இந்த திட்டத்தை செயல்படுத்த 20 லட்சம் கோடி தேவை. பராமரிக்க வருடத்திற்கு 2 லட்சம் கோடி தேவை. இவ்வளவு நிதி எங்கு இருக்கிறது. இது முழுக்க முழுக்க மக்களை திசை திருப்பி ஏமாற்றும் திட்டம்”  என்கிறார். 

அரசின் வாதம்:
இந்தியாவில் சில நதிகளில் மிகவும் செழிப்பாக வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கிறது. சில நதிகளில் பருவகாலத்தில் மட்டும் தண்ணீர் இருக்கிறது. இந்த இரண்டையும் இணைக்கும் போது, அனைத்து நதிகளிலும் வருடம் முழுவதும் தண்ணீர் இருக்க செய்து விட முடியும். அதனால் நமது விவசாய பரப்பு 175 மில்லியன் ஹெக்டேர் அளவிற்கு விரிவடையும்,  34000 மெகாவாட் புனல் மின்சாரம் தயாரிக்க முடியும். -  இது அரசின் வாதம்.

ஆனால், இந்த அடிப்படை புரிதலே தவறு என்கிறார் இந்திய நீர் நிலைகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் டெல்லி ஐஐடி பேராசிரியர் கோசைன்.
“பருவநிலை மாற்றத்தை கணக்கில் கொள்ளாமல் இந்த திட்டத்தை முன்வைக்கிறார்கள். வற்றாத நதிகள் அனைத்திற்கும் ஜீவனாக இருப்பது இமயமலை பனிப்பாறைகள். ஆனால், பருவநிலை மாற்றத்தால் இந்த பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இன்னும் சில காலத்தில்  முழுவதுமாக உருகிவிடும் பட்சத்தில், வற்றாத நதிகள் என்று ஒன்று இல்லாமலேயே ஆகிவிடும். பின்பு, நதிகளை இணைத்து என்ன பயன்...?” என்று அவர் வைக்கும் கேள்விகளை நாம் புறந்தள்ளிவிட முடியாது. 

நதிகள் இணைப்பிற்கு அரசு சொல்லும் இன்னொரு காரணம், தேவையில்லாமல் கடலில் கலக்கும் நீரை தடுக்க முடியும் என்பது. ஆனால், இந்த வாதமும் தவறு என்கிறார் பூவுலகு சுந்தராஜன்.

சுந்தராஜன், ”கடல் உயிருடன் இருக்க வேண்டுமென்றால் நதிகள் அதன் இயல்பில் கடலில் கலக்க வேண்டும். அதை தடுத்தால் கடல் மரணித்துவிடும். அதற்கு நம் சமகால உதாரணம்  'Dead Sea'. ஜோர்டான் நதியை கடலில் கலக்க விடாமல் செய்ததுதான் அந்த கடல் மெல்ல இறக்க காரணம். அது மட்டுமல்லாமல், நதி கடலில் கலக்கும் கழிமுகத்தில்தான், மீன்கள் குஞ்சு பொறிக்கும், அந்த பகுதியில்தான் அலையாத்தி காடுகள் உண்டாகும். நாம் நதி, கடலில் கலப்பதை தடுக்கிறோமென்றால், இவை அனைத்தையும் அழிக்கிறோம் என்று அர்த்தம்”


பிரச்னைகளுக்கு உள்ளூர் அளவிலேயே தீர்வு காணுங்கள்...?
சரி நம் நீர் பிரச்னைக்கு தீர்வென்ன...? நம் வரலாற்றை மீள்வாசிப்பது மூலமே நம் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுவிட முடியும். ஆம். சோழர்களின் நீர் மேலாண்மை.  

இவர்கள் பெரிய அணைகள், நதிகள் இணைப்பு ஆகியவற்றுக்காக திட்டமிடும் பணத்தில் பத்து சதவீதத்தைக் கொண்டே, நம் அனைத்து குளங்கள், ஏரிகளையும் மீட்டுவிட முடியும் மற்றும் ஆயிரக்கணக்கில் புது நீர் நிலைகளையும் உண்டாக்கிவிட முடியும். அதன்  மூலம் அந்தந்த பகுதியில் நீர் வளம் பெருகும். அந்த பகுதி பிரச்னை அந்த பகுதியிலேயே தீர்க்கப்படும்.

நாம் ஒரு பொருளை ஒரு இடத்தில் தொலைக்கிறோமேன்றால், தொலைத்த இடத்தில் தேடுவோமா அல்லது நமக்கு விருப்பமான இடத்தில் தேடுவோமா...? அது போலதான் நீர் பிரச்னையும். ஒரு இடத்தில் தண்ணீர் சிக்கலென்றால், அதே இடத்தில் அதிக நீர் நிலைகளை உண்டாக்கி தீர்க்க வேண்டுமே தவிர, இன்னொரு இடத்திலிந்து நீர் எடுக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. இது சிக்கலை மேலும் மேலும் அதிகமாக்குமே தவிர, நிரந்திர தீர்வை தராது.
 

ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் நான்கு ஆண்டுகளுக்கு  முன் சென்னையில் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சம் வந்தது. அப்போது திருவள்ளூரிலிரிந்து தண்ணீர் எடுக்க அரசு முடிவு செய்கிறது. இரண்டு, மூன்று முறை தண்ணீர் எடுக்க அந்த பகுதி விவசாயிகளும் அனுமதித்தார்கள். ஆனால், அதன் பின் எதிர்ப்பு தெரிவித்து, தண்ணீர் எடுக்க சென்ற வண்டியை சிறைப்பிடித்து வைத்து விட்டார்கள். பக்கத்து பக்கத்து மாவட்டத்திலேயே இவ்வளவு சிக்கல் உண்டென்றால், பல மாநிலங்களின் சம்மதம் கோரும் இந்த திட்டத்தில் எவ்வளவு சிக்கல் இருக்கும்....?

இவர்கள் பெரிய அணைகள், நதி நீர் இணப்புகளை முன் வைக்க இன்னொரு காரணம் அதில் விளையாடும் பெரும் பணம் மற்றும் அதை ஒட்டிய ஊழல். அதனால்தான் சுலபமான தீர்வை கண்டு கொள்ள ஆட்சியாளர்கள் மறுக்கிறார்கள். நாம் எளிய தீர்வை முன் வைத்து, அதை செயல்படுத்த அரசை நிர்பந்திக்கும் போது, இவர்களின் ஊழல்களையும் தடுத்து விட முடியும். இனியாவது நாம், கங்கையையும் காவிரியையும் இணைக்க கோராமல், நம் வசிக்கும் பகுதியில் இருக்கும் குளங்களையும், ஏரியையும், கண்மாயையும் மீட்க, புனரமைக்க, புதுப்பிக்க அரசை நிர்பந்திப்போம்.

தீர்வு எளிமையான ஒன்றாக இருக்கிறது. நாம் எந்த பாதையில் பயணிக்க போகிறோம்...
?