அனைத்து சாதியரும் அர்ச்சராகலாம் – அரசியலாக்கப்பட்ட விதம் தமிழகத்தில்தான்!
தேவநாதன் தொட்டால்…. தீட்டு ஆகாதா?
2006-ஆம் ஆண்டில் 5 ஆம் முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த கலைஞர் அவர்கள் அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் முதல் முடிவே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பதற்கானதுதான். அதைத் தொடர்ந்து மீண்டும் சட்டமன்றத்தில் (22.8.2006) நிறைவேற்றப்பட்டது. வழக்கம்போல பார்ப்பனர்கள் உச்சநீதி மன்றத்திற்கு படையெடுத்துச் சென்று முட்டுக்கட்டை போட்டுள்ளனர். ஆனந்த விகடனில் (6.10.2010) வெளிவந்த கட்டுரையை படிக்கும்முன் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல் இது.
பெரியாரின் நெஞ்சில் தைத்திருந்த முள்ளை எடுத்திருக்கிறேன்! முதல்வர் கருணாநிதி 2006ஆம் ஆண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டத்தைக் கொண்டு வந்தபோது, இப்படிப் பெருமிதத்துடன் அறிவித்தார். ஆனால், அந்த முள் இன்னும் பெரியாரின் நெஞ்சில்தான் தைத்து இருக்கிறது!
அர்ச்சகர் படிப்பு முடித்த 206 மாணவர்கள், அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்து நிற்கின்றனர். அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, பல போராட்டங்களை நடத்தியும் தீர்வு கிடைத்தபாடு இல்லை.
2006ஆம் ஆண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டம் கொண்டுவரப்பட்டது. சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, பழநி, மதுரை, திருந்செந்தூர் ஆகிய ஊர்களில் தமிழக அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கியது.
இதை எதிர்த்து, மதுரையைச் சேர்ந்த ஆதி சிவாச்சாரியார்கள் நலச் சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. பிராமண சாதியில் பிறந்த சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் தவிர, வேறு யாருக்கும் சாமி சிலையைத் தொட்டு பூஜை செய்யும் தகுதி கிடையாது. பூஜை முறைகளையும் மந்திரங்களையும் கற்றிருந்தாலும் கூட, பிராமணர் அல்லாதவர்களால் அர்ச்சகர் ஆக முடியாது. அவர்கள் சாமி சிலையைத் தொட்டால் கோயில் தீட்டாகிவிடும். அந்தச் சிலையில் இருந்து கடவுள் வெளியேறிவிடுவார். இதன் காரணமாக, கோயிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதிக்கப் படுவார்கள் என்பது அவர்கள் அளித்த மனுவின் சாராம்சம். இதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட், தமிழக அரசின் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கும் நிலையில்… படிப்பு முடித்த 206 மாணவர்களும் திக்கற்று நிற்கின்றனர். அரசும், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மேற்கொண்டு நடத்தாமல் மூடிவிட்டது.
அர்ச்சகர் சங்கத்தின் தலைவரான ரெங்கநாதனிடம் பேசினேன். மொத்தம் 240 மாணவர்கள் சேர்ந்தோம். இடையில் படிப்பை நிறுத்தியவர்கள் போக, மீதம் உள்ளவர்கள் 206 பேர், இன்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளை விட்டுவிட்டு வந்தவர்கள் எனப் பல வகையினர் உண்டு. எல்லா சாதிகளைச் சேர்ந்தவர்களும் இருக்கிறோம். இந்த நாட்டில், பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களும் கலெக்டர் ஆகலாம், முதலமைச்சர் ஆகலாம், நீதிபதி ஆகலாம், குடியரசுத் தலைவர் ஆகலாம். ஆனால், அர்ச்சகர் மட்டும் ஆகக் கூடாதா? நாங்கள் 206 பேரும் சைவ, வைணவ ஆகமங்களில் முறைப்படி பயிற்சி பெற்றிருக்கிறோம். தமிழிலும் சமஸ்கிருதத்திலும் மந்திரங்கள் ஓதவும், அபிஷேகம், ஆராதனைகள் செய்யவும் தெரியும். எங்கள் ஒழுக்கத்தைச் சோதித்து, சைவ, வைணவ பெரியோர்கள் தீட்சை வழங்கி இருக்கிறார்கள். ஆனாலும், நீங்கள் பிறப்பால் பிராமணர் அல்ல.அதனால் சாமி சிலையைத் தொட்டு பூஜை செய்யக் கூடாது என்று முட்டுக்கட்டை போடுகிறார்கள்.
காஞ்சிபுரத்தில் கருவறையில் வைத்துப் பல பெண்களுடன் சல்லாபத்தில் ஈடுபட்ட தேவநாதன் ஒரு பிராமணர்தான். இதற்கு என்ன பதில்?
மாநிலம் முழுக்க இருக்கும் மாரியம்மன், அய்யனார் கோயில்களில் பிராமணர் அல்லாத பிற சாதியினர்தான் சாமி சிலையைத் தொட்டு பூஜை செய்கிறார்கள். அங்கெல்லாம் கடவுள் வெளியேறிவிட்டாரா? மீனாட்சியம்மனையும், பெருமாளையும் தொட்டால் மட்டும் தீட்டாகி விடுமா? எங்களுக்கு வேலை கிடைப்பதும், கிடைக்காமல் போவதும் அடுத்த பிரச்சினை. ஆனால், இது எங்கள் மானத்தோடும் சுயமரியாதையோடும் தொடர்புடையது. நாங்கள் அர்ச்சகர் வேலையில் சேர முடியவில்லை எனில், பிறப்பால் கீழ்ச் சாதி என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பதாகப் பொருள். சமூகத்தில் தொட்டால் தீட்டு என்றால், அதன் பெயர் தீண்டாமை. இதையே கோயிலுக்குள் செய்தால், அது ஆலயத் தீண்டாமை இல்லாமல் வேறென்ன? சுப்ரீம் கோர்ட் தடையாணையின் முக்கியமான அம்சம், பக்தர்கள் மனம் புண்படும் என்பதுதான். அந்த பக்தர்-களில் நீங்களும் அடக்கம். நாங்கள் அர்ச்சகர் ஆவதால், உங்கள் மனம் புண்படுமா? இல்லை என்றால், இந்த உத்தரவை எதிர்த்து எங்களுக்காக நீங்களும் குரல் கொடுக்க வேண்டும்! என்கிறார் ரெங்கநாதன்.
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் எனச் சொல்லி, வாழ்நாள் முழுவதும் நாத்திகத்தை வலியுறுத்தியவர் தந்தை பெரியார். அவரது சிலைக்கு அர்ச்சகர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து போராட்டத்தைத் தொடர்கின்றனர்.
அர்ச்சகர் மாணவர்களுக்கான சங்கத்தை உருவாக்கிய மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜுவிடம் இன்னமும் ஆவேசம். வழக்கு போட்டுள்ள பிராமணர்கள், தீர்ப்புக் கொடுத்த நீதிமன்றம் எல்லோரும் ஆகம விதி… ஆகம விதி என்கிறார்கள். அது என்ன ஆகமம்? வைணவத்தில் 2, சைவத்தில் 28 என 30 ஆகமங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்து மதத்தைக் கட்டுப்படுத்துவதாகச் சொல்லப்படும் இந்த ஆகமங்களைப் பெரும்பான்மையான இந்துக்கள் கண்ணால் பார்த்ததே கிடையாது. இவற்றை எழுதியது யார், அச்சிட்டவர்கள் யார், எங்கு விற்கப்படுகின்றன? எதுவும் தெரியாது. ஆனாலும், அதன் பெயரால்தான் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. கேட்டால், எல்லோரும் இந்து என்கிறார்கள். அப்படியானால், வா, ரெண்டு பேரும் சேர்ந்து சுடலைமாடன் கோயிலில் ஒற்றுமையா சாமி கும்பிடுவோம். இல்லையா, பெருமாள் கோயிலில் சேர்ந்து பூஜை பண்ணுவோம். இரண்டுமே முடியாது. ஆனால், நீயும் நானும் இந்து என்றால், இது மோசடி இல்லையா?
சாதியாகப் பிரிந்துகிடக்கும் நம் சமூகத்தில் அனைத்துச் சாதியினரையும் கோயில் கருவறைவரை கொண்டு சேர்க்கும் இந்தச் சட்டம், புரட்சி கரமானதுதான். அது நடைமுறைக்கு வரும்போது தான் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் நிஜமாகவே அகற்றப்படும்!.
நன்றி 6.10.2010. ஆனந்தவிகடன்
No comments:
Post a Comment