Wednesday, November 03, 2010

தேவநாதன் தொட்டால்…. ஆகாதா?

அனைத்து சாதியரும் அர்ச்சராகலாம் – அரசியலாக்கப்பட்ட விதம் தமிழகத்தில்தான்!

தேவநாதன் தொட்டால்…. தீட்டு ஆகாதா?
2006-ஆம் ஆண்டில் 5 ஆம் முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த கலைஞர் அவர்கள் அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் முதல் முடிவே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பதற்கானதுதான். அதைத் தொடர்ந்து மீண்டும் சட்டமன்றத்தில் (22.8.2006) நிறைவேற்றப்பட்டது. வழக்கம்போல பார்ப்பனர்கள் உச்சநீதி மன்றத்திற்கு படையெடுத்துச் சென்று முட்டுக்கட்டை போட்டுள்ளனர். ஆனந்த விகடனில் (6.10.2010) வெளிவந்த கட்டுரையை படிக்கும்முன் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல் இது.

பெரியாரின் நெஞ்சில் தைத்திருந்த முள்ளை எடுத்திருக்கிறேன்! முதல்வர் கருணாநிதி 2006ஆம் ஆண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டத்தைக் கொண்டு வந்தபோது, இப்படிப் பெருமிதத்துடன் அறிவித்தார். ஆனால், அந்த முள் இன்னும் பெரியாரின் நெஞ்சில்தான் தைத்து இருக்கிறது!

அர்ச்சகர் படிப்பு முடித்த 206 மாணவர்கள், அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்து நிற்கின்றனர். அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, பல போராட்டங்களை நடத்தியும் தீர்வு கிடைத்தபாடு இல்லை.

2006ஆம் ஆண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டம் கொண்டுவரப்பட்டது. சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, பழநி, மதுரை, திருந்செந்தூர் ஆகிய ஊர்களில் தமிழக அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கியது.
இதை எதிர்த்து, மதுரையைச் சேர்ந்த ஆதி சிவாச்சாரியார்கள் நலச் சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. பிராமண சாதியில் பிறந்த சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் தவிர, வேறு யாருக்கும் சாமி சிலையைத் தொட்டு பூஜை செய்யும் தகுதி கிடையாது. பூஜை முறைகளையும் மந்திரங்களையும் கற்றிருந்தாலும் கூட, பிராமணர் அல்லாதவர்களால் அர்ச்சகர் ஆக முடியாது. அவர்கள் சாமி சிலையைத் தொட்டால் கோயில் தீட்டாகிவிடும். அந்தச் சிலையில் இருந்து கடவுள் வெளியேறிவிடுவார். இதன் காரணமாக, கோயிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதிக்கப் படுவார்கள் என்பது அவர்கள் அளித்த மனுவின் சாராம்சம். இதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட், தமிழக அரசின் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கும் நிலையில்… படிப்பு முடித்த 206 மாணவர்களும் திக்கற்று நிற்கின்றனர். அரசும், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மேற்கொண்டு நடத்தாமல் மூடிவிட்டது.

அர்ச்சகர் சங்கத்தின் தலைவரான ரெங்கநாதனிடம் பேசினேன். மொத்தம் 240 மாணவர்கள் சேர்ந்தோம். இடையில் படிப்பை நிறுத்தியவர்கள் போக, மீதம் உள்ளவர்கள் 206 பேர், இன்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளை விட்டுவிட்டு வந்தவர்கள் எனப் பல வகையினர் உண்டு. எல்லா சாதிகளைச் சேர்ந்தவர்களும் இருக்கிறோம். இந்த நாட்டில், பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களும் கலெக்டர் ஆகலாம், முதலமைச்சர் ஆகலாம், நீதிபதி ஆகலாம், குடியரசுத் தலைவர் ஆகலாம். ஆனால், அர்ச்சகர் மட்டும் ஆகக் கூடாதா? நாங்கள் 206 பேரும் சைவ, வைணவ ஆகமங்களில் முறைப்படி பயிற்சி பெற்றிருக்கிறோம். தமிழிலும் சமஸ்கிருதத்திலும் மந்திரங்கள் ஓதவும், அபிஷேகம், ஆராதனைகள் செய்யவும் தெரியும். எங்கள் ஒழுக்கத்தைச் சோதித்து, சைவ, வைணவ பெரியோர்கள் தீட்சை வழங்கி இருக்கிறார்கள். ஆனாலும், நீங்கள் பிறப்பால் பிராமணர் அல்ல.அதனால் சாமி சிலையைத் தொட்டு பூஜை செய்யக் கூடாது என்று முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

காஞ்சிபுரத்தில் கருவறையில் வைத்துப் பல பெண்களுடன் சல்லாபத்தில் ஈடுபட்ட தேவநாதன் ஒரு பிராமணர்தான். இதற்கு என்ன பதில்?
மாநிலம் முழுக்க இருக்கும் மாரியம்மன், அய்யனார் கோயில்களில் பிராமணர் அல்லாத பிற சாதியினர்தான் சாமி சிலையைத் தொட்டு பூஜை செய்கிறார்கள். அங்கெல்லாம் கடவுள் வெளியேறிவிட்டாரா? மீனாட்சியம்மனையும், பெருமாளையும் தொட்டால் மட்டும் தீட்டாகி விடுமா? எங்களுக்கு வேலை கிடைப்பதும், கிடைக்காமல் போவதும் அடுத்த பிரச்சினை. ஆனால், இது எங்கள் மானத்தோடும் சுயமரியாதையோடும் தொடர்புடையது. நாங்கள் அர்ச்சகர் வேலையில் சேர முடியவில்லை எனில், பிறப்பால் கீழ்ச் சாதி என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பதாகப் பொருள். சமூகத்தில் தொட்டால் தீட்டு என்றால், அதன் பெயர் தீண்டாமை. இதையே கோயிலுக்குள் செய்தால், அது ஆலயத் தீண்டாமை இல்லாமல் வேறென்ன? சுப்ரீம் கோர்ட் தடையாணையின் முக்கியமான அம்சம், பக்தர்கள் மனம் புண்படும் என்பதுதான். அந்த பக்தர்-களில் நீங்களும் அடக்கம். நாங்கள் அர்ச்சகர் ஆவதால், உங்கள் மனம் புண்படுமா? இல்லை என்றால், இந்த உத்தரவை எதிர்த்து எங்களுக்காக நீங்களும் குரல் கொடுக்க வேண்டும்! என்கிறார் ரெங்கநாதன்.

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் எனச் சொல்லி, வாழ்நாள் முழுவதும் நாத்திகத்தை வலியுறுத்தியவர் தந்தை பெரியார். அவரது சிலைக்கு அர்ச்சகர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து போராட்டத்தைத் தொடர்கின்றனர்.

அர்ச்சகர் மாணவர்களுக்கான சங்கத்தை உருவாக்கிய மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜுவிடம் இன்னமும் ஆவேசம். வழக்கு போட்டுள்ள பிராமணர்கள், தீர்ப்புக் கொடுத்த நீதிமன்றம் எல்லோரும் ஆகம விதி… ஆகம விதி என்கிறார்கள். அது என்ன ஆகமம்? வைணவத்தில் 2, சைவத்தில் 28 என 30 ஆகமங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்து மதத்தைக் கட்டுப்படுத்துவதாகச் சொல்லப்படும் இந்த ஆகமங்களைப் பெரும்பான்மையான இந்துக்கள் கண்ணால் பார்த்ததே கிடையாது. இவற்றை எழுதியது யார், அச்சிட்டவர்கள் யார், எங்கு விற்கப்படுகின்றன? எதுவும் தெரியாது. ஆனாலும், அதன் பெயரால்தான் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. கேட்டால், எல்லோரும் இந்து என்கிறார்கள். அப்படியானால், வா, ரெண்டு பேரும் சேர்ந்து சுடலைமாடன் கோயிலில் ஒற்றுமையா சாமி கும்பிடுவோம். இல்லையா, பெருமாள் கோயிலில் சேர்ந்து பூஜை பண்ணுவோம். இரண்டுமே முடியாது. ஆனால், நீயும் நானும் இந்து என்றால், இது மோசடி இல்லையா?

சாதியாகப் பிரிந்துகிடக்கும் நம் சமூகத்தில் அனைத்துச் சாதியினரையும் கோயில் கருவறைவரை கொண்டு சேர்க்கும் இந்தச் சட்டம், புரட்சி கரமானதுதான். அது நடைமுறைக்கு வரும்போது தான் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் நிஜமாகவே அகற்றப்படும்!.
நன்றி 6.10.2010. ஆனந்தவிகடன்

Wednesday, August 25, 2010

தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் பெண் மரணம்

ச்சையாலும், அரசு பொது மருத்துவமனையின் மெத்தன போக்காலும் ஏழை இளம்பெண் ஒருவர் உயிர் இழந்தார்,

சென்னை பழவந்தாங்கலை சேர்ந்தவர் ராம்நாத் (வயது 30), டெய்லர் தொழில் செய்கிறார். இவரது மனைவி குணசுந்தரி (21). இவர்களுக்கு 2 மாத ஆண் கைக்குழந்தை உள்ளது. குணசுந்தரி கடந்த மாத இறுதியில் காய்ச்சல், இருமல், சளித்தொல்லையால் அவதிப்பட்டார். இதற்காக நங்கநல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை பெற்றார்.

பின்னர் அங்கு பணிபுரியும் டாக்டர்கள் எழுதி கொடுத்த மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டார். அந்த மருந்து, மாத்திரைகளை சாப்பிட்ட பிறகு குணசுந்தரிக்கு வியாதி அதிகமாகிவிட்டது. அவரது உடல் முழுவதும் சிறிய, சிறிய கொப்புளங்கள் உண்டாகியது. உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டதுபோல புண்களாகிவிட்டன. இதனால் அவரது முகம் கோரமாக மாறியது. கண்பார்வையும் மங்கிவிட்டது.

பின்னர் குணசுந்தரியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்கள். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, ஏற்கனவே சாப்பிட்ட மருந்து, மாத்திரையினால் ஏற்பட்ட அலர்ஜி (டிரக் அலர்ஜி) காரணமாக இவ்வாறு உடல் முழுக்க கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளது என்றும், அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் குணமாகிவிடும் என்றும் தெரிவித்தனர்.

உடனே குணசுந்தரி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் தற்போது சிகிச்சை பெறுகிறார்.

இந்த நிலையில், தவறான சிகிச்சை கொடுத்த தனியார் மருத்துவமனைமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு பொது மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து குணசுந்தரியின் கணவர் நேற்று முன்தினம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தார்.

ஆனால், சம்பவம் நடந்தது நங்கநல்லூர் என்பதால் புறநகர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கும்படி கமிஷனர் அலுவலக போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். ஆனால் ஏற்கனவே பழவந்தாங்கல் போலீசில் புகார் கொடுத்து பார்த்தோம், சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, தான் இங்கு புகார் கொடுக்க வந்தேன் என்று குணசுந்தரியின் கணவர் கூறினார். மறுநாள் வரும்படி போலீசார் தெரிவித்தனர். இதன்படி நேற்று குணசுந்தரியின் கணவர் ராம்நாத், தனது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 50 பேருடன் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து அதிகாரிகளிடம் முறையிட்டார்.

குணசுந்தரிக்கு தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் அளித்த தவறான சிகிச்சை காரணமாகத்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அந்த ஆஸ்பத்திரி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு பொது மருத்துவமனையிலும் குணசுந்தரிக்கு அவ்வளவு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படவில்லை. அவரது கண்பார்வை மங்கிக்கொண்டே போகிறது. கண் டாக்டர் ஒருவரை வரவழைத்து சிகிச்சை அளிப்பதாக 3 நாட்களாக சொல்லுகிறார்கள். கண் டாக்டர் வந்தபாடில்லை.

உடல் முழுக்க புண்ணாக இருப்பதால் குணசுந்தரியால் அவரது கைக்குழந்தைக்குக்கூட தாய்ப்பால் கொடுக்க முடியாத பரிதாப நிலையில் உள்ளார். எனவே இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு குணசுந்தரிக்கு உரிய நியாயம் கிடைக்க வழிவகை காணவேண்டும் என்று பொதுமக்கள் பரபரப்பாக பேட்டி கொடுத்தனர்.

Tuesday, March 23, 2010

தியாகிகள் பகத்சிங். சுகதேவ். ராஜகுருவிற்கு வீரவணக்கம்


இந்திய விடுதலைப் போராட்டத்தில் வெள்ளையர்களை எதிர்த்து தீவிரமாக போராடியவர்களில் குறிப்பிடத்தக்கவர் பகத்சிங். 1907 ஆம் ஆண்டு பிறந்த பகத்சிங், தனது பள்ளி, கல்லூரி நாட்களிலேயே சுதந்திர வேட்கையுடன் செயல்பட்டார்.

இந்திய விடுதலைக்காக தனது இளமையை அர்ப்பணித்து உயிர்த் தியாகம் செய்த அந்த மாவீரர்களின் நினைவுநாள் இன்று.


அந்த வீரனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் அவர்கள் வகித்த பங்கை இங்கு அளித்துள்ளோம்.

விடுதலைப் புரட்சியாளர்கள் பகத்சிங், ராகுரு, சுகதேவ் (1919 - 1937)

1919 ஆம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையால் உந்தப்பட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட பல்லாயிரக்கணக்கான இளைஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்.

நமது நாட்டை அடிமைப்படுத்திய வெள்ளையரை ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் விரட்ட வேண்டும் என்று உறுதியுடன் முடிவெடுத்த இந்த இளைஞர்கள், 1924 ஆம் ஆண்டு சச்சின்தரா நாத் சன்யால் என்ற தேச பற்றாளர் துவக்கிய இந்துஸ்தான் விடுதலை அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்த அமைப்பைச் சேர்ந்த ராம்விகார் ராம் பிரசாத் மிஸ்மில், ராஜேந்திரநாத் லஹரி, அஷ்பஹூல்லா கான், மன்மந்த்நாத் குப்தா, சந்திரசேகர் ஆசாத் ஆகியோர் 1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி காக்வோரி ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலை நிறுத்தி அரசு கஜானாவிற்கு கொண்டு செல்லப்பட்ட பணத்தைக் கொள்ளையடித்தனர். இச்சம்பவம் வெள்ளைய அரசிற்கு பெரும் தலைக் குனிவையும், சவாலையும் ஏற்படுத்தியது.
இதில் ஈடுபட்டவர்களில் சந்திரசேகர ஆசாத் தவிர, மற்ற அனைவரும் பிடிபட்டனர். இதனால் அந்த இயக்கம் முடங்கிவிட்ட நிலையில், நவ ஜவான் பாரத் சபா என்ற அமைப்பை பகத்சிங், பகவதி சரண் வோரா, சுகதேவ், யாஷ்பால் ஆகியோர் 1926ல் லாகூரில் துவக்கினர். மக்களிடையே விடுதலை உணர்வைத் தூண்டும் பொதுக் கூட்டங்களை இவ்வமைப்பு நடத்தியது.

இதற்காக ராஜ துரோக குற்றம் சாற்றப்பட்ட ராம்பிரசாத் பிஸ்மில், ராஜேந்திரநாத் லஹரி, அஷ்பகுல்லா கான் ஆகியோர் 1927ல் தூக்கிலிடப்பட்டனர்.

சாண்டர்ஸை சுட்டுக் கொன்ற பகத் சிங் (1928)

1928 ஆம் ஆண்டு சைமன் கமிஷனை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம் அறிவித்த போது அதில் பகத்சிங்கின் நவ ஜவான் பாரத் அமைப்பும் ஈடுபட்டது. அந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதியன்று சைமன் கமிஷனைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பஞ்சாப சிங்கம் லாலா லஜபதிராய் கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதில் இந்திய விடுதலைப் போராட்டத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான லாலா லஜபதிராய் படுகாயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் நவமபர் 17 ஆம் தேதி மரணமடைந்தார். இச்சம்பவம் நாட்டில் பெரும் கொந்தளிப்பை உருவக்கியது.

லாலா லஜபதிராய் மீது தடியடி நடத்திய வெள்ளைய காவல் அதிகாரியான சாண்டர்ஸ், காவல் கண்காணிப்பாளரான ஸ்காட் ஆகியோர் மீது பகத் சிங்கும் அவருடைய தோழர்களும் குறிவைத்தனர். லஜபதிராய் இறந்து சரியாக ஒரு மாதம் கழித்து, டிசம்பர் 17 ஆம் தேதியன்று பகத்சிங்கும், ராஜகுருவும் சாண்டர்ஸை சுட்டுக் கொன்றனர்.

சாண்டர்ஸை ஏன் கொன்றோம் என்பதனை விளக்கி லாகூர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. பகத்சிங்கும், ராஜகுருவும் தலைமறைவாயினர்.
லாகூர் சதி வழக்கு!

இந்த காலகட்டத்தில் தொழிலாளர்களும் வெள்ளைய அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளையும், சட்டங்களையும் எதிர்த்து தீவிரமாகப் போராடினர். அவர்களை ஒடுக்க தொழில் தகராறு சட்ட வரைவு ஆங்கில அரசு கொண்டு வந்தது.

இச்சட்ட வரைவு நிறைவேற்றப்படும் நாளில் டெல்லி மத்திய சபையில் குண்டு வீசுவது என்று பகத்சிங் கூறிய திட்டம் ஏற்கப்பட்டு 1929 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி தொழில் தகராறு சட்ட வரைவு நிறைவேறியதை அறிவிக்க ஜென்ரல் சுஸ்டர் என்ற வெள்ளைய அதிகாரி எழுந்தபோது, பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த பகத்சிங்கும், பி.கே. தத்தும், உறுப்பினர்கள் யாரும் அற்ற இருக்கைகளை நோக்கி குண்டுகளை வீசினர். செவிடர்களை கேட்கச் செய்வதற்காக நாங்கள் குண்டு வீசுகின்றோம் என்று எழுதப்பட்ட கைப்பிரதிகளையும் வீசினர்.

பகத்சிங்கும், தத்தும், ராஜகுருவும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு சாண்டர்ஸ் கொலை வழக்கில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

1931 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி இவர்கள் மூவரும் தூக்கிலிடப்பட்டனர்.

உயிர் துறந்த அவர்களின் உடல்களைக் கூட உறவினர்களிடம் ஒப்படைக்காமல் சட்லஜ் நதிக்கரையில் எரித்தனர். பகத்சிங்கும் அவரது தோழர்களும் மூட்டிய விடுதலைத் தீ நாடு முழுவதும் பற்றி எரிந்தது.

தங்களது இன்னுயிரை ஈந்து அவர்கள் மூட்டிய விடுதலைத் தீ நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்தது. சுதந்திர இயக்கத்திற்கு இன்னுயிரை ஈந்து உந்து சக்தியாகத் திகழ்ந்த அம்மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்.
நன்றி / வெப்துனியா,தமிழ்

pakathchin , சுகதேவ். ராஜகுருவிற்கு வீரவணக்கம்

பகத்சிங் users online