Wednesday, October 29, 2008

சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதல்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் பாடசாலைக்கு அருகான மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். 11 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் 1,300 மாணவர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

பரந்தன் குமரபுரம் கிராமத்தில் உள்ள பரந்தன் இந்து வித்தியாலயத்துக்கு அருகான மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11:15 நிமிடமளவில் சிறிலங்கா வான்படையின் மிக் - 27 ரக வானூர்திகள் இரண்டு குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன.

மக்கள் செறிவாக வாழ்ந்து வரும் குடியிருப்பு மற்றும் போக்குவரத்து வீதியை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


[படம்: புதினம்]


[படம்: புதினம்]


[படம்: புதினம்]

சுமார் 1,300 மாணவர்கள் கல்வி கற்றுக்கொண்டிருந்த வேளையில் பரந்தன் சந்தை மற்றும் நகரம் செறிவான மக்களுடன் இயங்கிக்கொண்டிருந்த வேளையில் மக்களுக்கு அவலத்தையும் அழிவையும் ஏற்படுத்தும் வகையில் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தின.

இதில் வீதியால் சென்று கொண்டிருந்த மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பொதுமக்களின் எட்டு வீடுகள் அழிந்துள்ளதுடன் பத்து வீடுகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. வீடுகளில் இருந்த பொதுமக்கள் மூவரும், மாணவர்கள் மூவருமாக ஆறு பேர் காயமடைந்தனர்.

குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற போது பாடசாலை மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருந்தனர். வான்படையின் மிலேச்சத்தனமான குண்டுத்தாக்குதலால் மாணவர்கள் பதறி- அவலப்பட்டு- சிதறி ஓடினர்.


[படம்: புதினம்]


[படம்: புதினம்]


[படம்: புதினம்]

மாணவர் அவலப்பட்டு காப்பகழிகளுள்ளும் வெளியிலும் கதறி அழுதவாறு சிதறியோடினர். பாடசாலை வளாகத்திலும் வகுப்பறைகளிலும் குண்டுச்சிதறல்கள் வீழ்ந்துள்ளன. இதில் மாணவர்கள் காயமடைந்தனர்.

வான்படையின் குண்டுத்தாக்குதலினால் பரந்தன் நகரம் அவலப்பட்டு சிதறி ஓடியது.

திட்டமிட்டு சிறிலங்கா வான்படை மக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து இக்குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளது.

குண்டுத்தாக்குதலில் கிறிஸ்டி (வயது 16) எனும் மாணவனின் வாயில் குண்டுச்சிதறல் தாக்கியுள்ளதுடன் கனிஸ்டன், தனுசன் ஆகிய மாணவர்களும் காயமடைந்துள்ளனர்.


[படம்: புதினம்]


[படம்: புதினம்]


[படம்: புதினம்]

வீடுகளிலிருந்து காயமடைந்த சுகுமார் ரதி (வயது 47), பத்மசீலன் (வயது 37), வீ.காண்டீபன் (வயது 29) ஆகியோர் கிளிநொச்சி நகரில் இயங்கிவரும் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீதியில் சென்று கொண்டிருந்த நிலையில் கொல்லப்பட்ட மூன்று பேரும் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை. மேலும் ஐந்து பேர் பேர் சிறுகாயங்களுக்குள்ளாகினர்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் ஏற்பட்ட பெரும் எழுச்சி காரணமாக இராஜதந்திர அழுத்தங்களுக்கு அஞ்சி கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பொதுமக்கள் மீதான வான்தாக்குதலை இடைநிறுத்தி வைத்திருந்த சிறிலங்கா அரசு-

எக்காரணம் கொண்டும் மத்திய அரசுக்கு நெருக்கடியை தரமாட்டோம் என்று தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அறிக்கை விடுத்ததன் மூலம் தான் முன்னர் விதித்திருந்த பதவி விலகல் காலக்கெடுவிலிருந்து விலகியதனையடுத்து-

சிறிலங்கா அரசு பொதுமக்கள் மீதான வான் தாக்குதல்களை அதிகரித்துள்ளதாக கொழும்பு அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்।


புதினம்

Saturday, October 25, 2008

தென்னாபிரிக்காவில் ஈழத்தமிழர் ஆதரவு பேரணி

இலங்கையின் வடக்கு - கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இனப்படுகொலையை கண்டித்து தென்னாபிரிக்காவில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

பிரிட்டோரியா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உயர் பணிப்பாளர் பணிமனைக்கு முன்பாக அங்கு வாழும் தமிழர்கள் நேற்று வெள்ளிக்கிழமை இக்கண்டன கவனயீர்ப்பு நிகழ்வினை நடத்தினர்.

இந்நிகழ்வில் பல அமைப்புக்கள் சார்பாக அவற்றின் பொறுப்பளர்களும் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.





சிறிலங்கா இனவாத அரசு மேற்கொள்ளும் இனவெறிப் போரில் அப்பாவித் தமிழ் மக்கள் அநியாயமாக படுகொலை செய்யப்படுவது தொடர்பில் தென்னாபிரிக்க அரசாங்கம் அமைதிப் போக்கினைக் கையாள்வதைக் கண்டித்தும் இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மௌனப் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றமையைக் கண்டித்துமே இக்கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது.

'ஐக்கிய நாடுகள் சபையே உனது மௌனத்தைக் கலை"

'ஐநா உடனடியாகச் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவளி"

போன்ற முழக்கங்களை கவனயீர்ப்பு நிகழ்வில் பங்கேற்றோர் எழுப்பினர்.



நிகழ்வின் இறுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் பிராந்திய அதிகாரி டேவிட் ஜோன்சனிடம் மனு கையளிக்கப்பட்டது.

இரண்டாவது மனுவினை தென்னாபிரிக்க அரசாங்கத்தின் சார்பாக, வெளிவிவகாரத்துறையின் பிரதி இயக்குநர் சூஸ் இம்ரில்வாவும் வெளிவிகாரத்துறையின் தென் கிழக்காசியப் பிராந்தியத்திற்கான இணை இயக்குனர் காரி சிமித்தும் பெற்றுக்கொண்டனர்.

அங்கு கையளிக்கப்பட்ட மனுவில் கீழ் குறிப்பிட்ட நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

- ஈழத் தமிழர்களின் தாயகத்தில் றுவாண்டா போன்ற நிலைமையை உருவாகாமல் தடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை உடனடியான இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

- உடனடியான மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள வேண்டும்

- பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பிவைக்க அணுசரணை வழங்க வேண்டும்

- சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள கண்மூடித்தனமான இனப்படுகொலையை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பவேண்டும்

மனிதநேயப் பணியாளர்கள் உடடினடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுமதிக்கப்பட்டு, தங்குமிட வசதி உணவு வசதி இல்லாமல் அல்லலுறும் மக்களுக்கு உதவி மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்

என்பன மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.



நன்றி / புதினம்

கொட்டும் மழையில் லட்சக்கணக்கில் திரண்ட தமிழக உறவுகளின் "மனித சங்கிலி அணிவகுப்பு"




சிங்களப் பேரினவாதத்தால் இலங்கைத் தீவில் தமிழ் உறவுகள் இனப் படுகொலைக்குள்ளாக்கப்படுவதைக் கண்டித்து தமிழ்நாட்டுத் தலைநகர் சென்னையில் கொட்டும் மழையில் லட்சக்கணக்கான தமிழக உறவுகள் மனித சங்கிலியாக அணிதிரண்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

வடசென்னை பகுதியில் தமிழ்நாடு நிதியமைச்சரும் தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான பேராசிரியர் அன்பழகன் தலைமையில் தொடங்கிய இந்த மனித சங்கிலி அணிவகுப்பு முழுமையாக சென்னை நகரைக் கடந்து புறநகர் சென்னைப் பகுதிகளையும் கடந்து செங்கல்பட்டு மாவட்டத்தைத் தொட்டு நின்றது.

மனித சங்கிலி அணிவகுப்பு தொடங்கிய நேரத்தில் கனமழை கொட்டியது.





இயற்கையும் வடித்த கண்ணீரை தம் தேகங்களில் தாங்கிய தமிழ்நாட்டு உறவுகள்-

'இந்திய அரசே! ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடு"!

'ஈழத் தமிழர்களைக் காப்பாற்று"

என்பது உள்ளிட்ட முழக்கங்களையும்

ஈழத் தமிழர்கள் மீதான சிங்களத்தின் இனப்படுகொலைகளைச் சித்தரிக்கும் வகையிலான புகைப்படங்கள்- பதாகைகளை ஏந்தியும் கொட்டும் மழையில் உணர்வெழுச்சியாகத் திரண்டிருந்தனர்.





தமிழ்நாடு முதல்வர் கலைஞரின் குடும்பத்தினரும் இந்த உணர்வெழுச்சியான அணிவகுப்பில் பங்கேற்றிருந்தனர்.

பாட்டாளி மக்கள் கட்சி- இடதுசாரிக் கட்சிகள்- விடுதலைச் சிறுத்தைகள்- திராவிடர் கழகம்- தமிழ்த் திரை உலகத்தினர் மற்றும் பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள்- பொதுமக்கள் இந்த அணிவகுப்பில் திரண்டனர்.

நன்றி / புதினம்

மனித சங்கிலி அணிவகுப்பை முதுமையும் பாராது கொட்டும் மழையில் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி பார்வையிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டே சென்றார்.











Friday, October 24, 2008

இத்தாலியில் ஈழத்தமிழர் ஆதரவு பேரணி

இத்தாலியில் நேற்று நடைபெற்ற மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான இத்தாலி வாழ் தமிழர்கள் பங்கேற்றுள்ளனர்.

இத்தாலியில் உள்ள பலெர்மோவில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இந்த மாபெரும் கவனயீர்ப்பு பேரணியினை இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்தது.

பலெர்மோ மத்திய பகுதியில் அமைந்துள்ள பியாட்சா பொலித்தியாமத்தில் இருந்து முற்பகல் 10:30 நிமிடத்துக்கு தொடங்கிய பேரணி, இத்தாலி உள்நாட்டு அமைச்சினை நோக்கி சென்றது.



தமிழர் தாயகம் மீதான சிறிலங்கா அரசின் இனவாதப்போரை நிறுத்துமாறும்-

இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவையும் மனிதாபிமான உதவிகளையும் வழங்குமாறும்-

தன்னார்வத்தொண்டு நிறுவனங்களின் பணிகளை தடையில்லாது மேற்கொள்ள அனுமதியளிக்குமாறும்-

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்குமாறும்

கோரிக்கை விடுத்து இந்த பேரணி நடைபெற்றது.




சிறிலங்கா அரசுக்கு எதிரான கண்டனக்குரல்களை எழுப்பியும் தங்கள் உணர்வலைகளை வெளிப்படுத்தியும் மக்கள் உணர்வுபூர்வமாக பேரணியில் பங்கேற்றனர்.

நிகழ்வின் இறுதியில் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை இத்தாலி உள்நாட்டு அமைச்சின் அலுவலகத்தில் கையளித்தனர்.

நன்றி / புதினம்

ஈழப்போர்களத்தில் செப்ரெம்பர் மாதம் வரை


தமிழர்களுக்கு எதிரான போரில் சிறிலங்கா படையினர் இந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் வரை மொத்தம் 1,099 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 7 ஆயிரம் படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் சிறிலங்கா படைத்தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இத்தகவலை பாதுகாப்பு பக்கம் என்ற படை ஆய்வு ஊடகம் வெளியிட்டுள்ளது.

அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:


செப்ரெம்பர் மாதம் வரையான 9 மாதங்களில் 1,099 படையினர் போரில் கொல்லப்பட்டனர். 7,000 படையினர் காயமடைந்துள்ளனர்.


செப்ரெம்பரில் 200 படையினர் கொல்லப்பட்டனர். 997 படையினர் காயமடைந்துள்ளனர்.

சிறிலங்கா படைத்தளபதிகளைப் பொறுத்த வரை விடுதலைப் புலிகள் தம்மிடம் அடைக்கலமடைவார்கள் என்று எதிர்பார்க்கின்றனர்.

ஆனால், விடுதலைப் புலிகள் தமது போராளிகள் கொமாண்டோக்களைக் கொண்டு மிக மோசமான தாக்குதலைத்தான் நடத்துவார்கள். அதில் அவர்கள் ஆயிரக்கணக்கானவர்களை கொல்வார்கள் என்று எதிர்பார்த்தனர்.

காங்கேசன்துறையில் விடுதலைப் புலிகள் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் இரு கப்பல்கள் சேதமாகியுள்ளன.

இத்தாக்குதலில் விடுதலைப் புலிகளின் முதனிலை தளபதி நிலையினர் கரும்புலிகளாக செயற்பட்டனர்.

அக்கராயனில் 21 ஆம் நாள் படையினர் நடத்திய தாக்குதலுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் படையினர் 33 பேர் கொல்லப்பட்டனர்.

இது விடுதலைப் புலிகள் காட்டுகின்ற கடுமையான பலமான எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றது.

இப்போது பெய்கின்ற கடும் மழை படையினரின் ஊர்திகளின் பயணங்களை பலவீனப்படுத்தியுள்ளதுடன் படையினரின் வழங்கலைப் பாதித்துள்ளது.

கிளிநொச்சிக்கு சில கிலோ மீற்றர்கள் தொலைவில் சிறிலங்கா படையினர் சிலர் நிற்கின்றனர். ஆனால் பின்னாள் 10 முதல் 15 கிலோமீற்றர்கள் தொலைவில் படையினர் மழை நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர் என பாதுகாப்பு பக்கம் தெரிவித்துள்ளதாக அனைத்துலக படைத்துறை ஆய்வு ஊடகம் தெரிவித்துள்ளது.

Saturday, October 18, 2008

i

ஜெயலலிதாவை வரலாறு மன்னிக்காது! சுப.வீரபாண்டியன் கண்டனம்

சிங்கள இனவெறி அரசுக்குத் துணை போகும்
ஜெயலலிதாவை வரலாறு மன்னிக்காது!
சுப.வீரபாண்டியன் கண்டனம்

தமிழீழ மக்களுக்குச் சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்களின் விடுதலைப் போராட்டக் கோரிக்கையைப் புரிந்து ஏற்றுக் கொள்வதாகவும் சில நாள்களுக்கு முன்பு அறிக்கை விடுத்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இப்போது அதற்கு நேர் எதிராகவும், முன்னுக்குப் பின் முரணாகவும் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.


தன் ஆட்சியில் ஈழத்தமிழர்களின் ஆதரவாளர்களை விரட்டி விரட்டி வேட்டையாடிப் பொடாச் சிறையில் தள்ளிய அவர், திடீரென்று தமிழீழ மக்களுக்காகப் பொய் ஒப்பாரி வைத்து ஓலமிட்ட போதே நமக்கு ஐயம் எழுந்தது. இப்போது மீண்டும் தன் கோர முகத்தை அவரே வெளிப்படுத்தியிருக்கிறார்.

"இலங்கையில் தற்போது நடக்கும் யுத்தம் விடுதலைப்புலிகள் என்னும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான யுத்தம். போரை நிறுத்த வேண்டும் என்பதன் மூலம், கருணாநிதி விடுதலைப் புலிகள் அமைப்பைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார்" என்கிறார் ஜெயலலிதா. போரில் செத்து மடியும் ஆயிரக்கணக்கான மக்களும், அகதிகளாய்த் தெருவில் நிற்கும் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களும் அவர் கண்ணில் படவே இல்லை. தமிழினத்தில் பிறந்திருந்தால் அந்தக் கொடுந்துயரம் அவர் நெஞ்சைச் சுட்டிருக்கும். இப்போது அவரிடம் சிங்கள இனவெறிப் பாசமே மேலோங்கி நிற்கிறது.

சில நாட்களுக்குள் இப்படி ஒரு முரண்பட்ட அறிக்கையை அவர் ஏன் வெளியிட நேர்ந்தது? அக்டோபர் 6ஆம் தேதி மயிலை மாங்கொல்லையில் நடைபெற்ற தி.மு.கழகக் கூட்டத்திற்குப் பிறகே, தமிழகமெங்கும் ஒரு புத்தெழுச்சி புறப்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்தத் தலைவன் குரல் கேட்டுத்தான் தமிழகம் எழுந்தது. அனைத்துக் கட்சித்தலைவர்கள் கூட்டம் நடந்த அக்டோபர் 14க்குப் பிறகு, அந்த எழுச்சி இன்னும் பன்மடங்காகப் பெருகியது. உலகத் தமிழர்களெல்லாம் ஒவ்வொரு நாளும் தலைவர் கலைஞருக்குத் தங்கள் நன்றியைத் தெரிவிக்கின்றனர். இவை அனைத்தையும் கண்டு பொறுக்க முடியாத ஆற்றாமைதான் இப்படி அறிக்கையாய் வந்து விழுகிறது.

கலைஞருக்கு எதிராக அரசியல் நடத்துவதாய் நினைத்துக்கொண்டு, தமிழினத்திற்கு எதிராக அரசியல் நடத்தும் ஜெயலலிதாவை வரலாறும், வருங்காலமும் மன்னிக்காது.

(சுப.வீரபாண்டியன்)

Wednesday, October 15, 2008

தமிழக தீர்மானம்- சுப.வீரபாண்டியன்

தமிழக தீர்மானம்- தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்கது: சுப.வீரபாண்டியன்

தமிழ்நாட்டு அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானமானது- தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய தீர்மானம் என்று அக்கூட்டத்தில் பங்கேற்ற திராவிட இயக்க தமிழர் பேரவையின் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.


தமிழீழத் தாயக உறவுகளுக்காக அவர் விடுத்துள்ள அறிக்கை:

தமிழக முதலமைச்சர் இன்று செவ்வாய்க்கிழமை கூட்டிய அனைத்து கட்சிக்கூட்டத்தில் ஒரு அதிச்சித் தரத்தக்க-

தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தரத்தக்க

ஒரு முடிவு எடுக்கப்பட்டது.

இன்னும் இரு வாரத்துக்குள் போர் நிறுத்தம் ஏற்படவில்லையென்றால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகுவார்கள் என்னும் தீர்மானம் வரலாற்றுச் சிறப்புடையதாக அமைந்தது.

கூட்டத்தில் கலந்து கொண்ட இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் விஜய டி ராஜேந்தர், அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு வராதார்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். அவர்கள் தமிழர்களே இல்லை என்றார். ஈழ மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள் என்றார்.

உடனே இடைமறித்த முதலமைச்சர் கலைஞர், அப்படிச் சொல்லவேண்டாம் என்று கேட்டுக்கொண்டு மிக அரிய விளக்கம் ஒன்றையும் கொடுத்தார்.

அவர்கள் ஈழத் தமிழர்களுக்கு எதிர்ப்பாக இங்கு வராமல் இருக்கிறார்கள் என்று கருதவேண்டாம். எனக்கு எதிராகத்தான் வராமல் இருக்கிறார்கள். மற்றபடி அவர்கள் வெளியில் இருந்தாலும் நம்மைப் போலவே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அவர்கள் எதிராக இருப்பதைப் போலக்காட்டுவது சிங்களவர்களுக்குத்தான் நன்மை பயக்கும் என்று விளக்கம் அளித்தபோது அவருடைய பெருந்தன்மையையும் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் குறித்து அவர் கொண்டுள்ள அக்கறையையும் அறிய முடிந்தது.

எனவே முதல்வர் கலைஞர் ஆளும் காலத்திலேயெ தமிழீழம் அங்கு மலரும் நாளும் வந்து சேரும் என்ற நம்பிக்கை இப்போது பலருக்கும் ஆழமாய் வேரூன்றி இருக்கிறது என்றார் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.

நன்றி புதினம்



Tuesday, October 14, 2008

கனடாவில் மூன்றாம் நாளாக கவனயீர்ப்பு போராட்டம்

கனடாவில் மூன்றாம் நாளாக கவனயீர்ப்பு போராட்டம்- பரபரப்பை ஏற்படுத்திய வானூர்தி பதாகை

கனடாவில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற நான்கு நாடுகள் பங்குபற்றும் 20 ஓவர்கள் அடங்கிய துடுப்பாட்டப் போட்டியில் சிறிலங்கா அணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று திங்கட்கிழமை மூன்றாவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

நேற்றய நாள் மிகவும் சிறப்பான முறையில் தமிழ் மகளிர் அமைப்பினராலும் மாணவர் அமைப்பினராலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

City இல் Dufferin & Blumington சந்திப்பிற்கு அருகில் உள்ள திடலிலேயே இந்த துடுப்பாட்டப் போட்டி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது.





கடந்த சனிக்கிழமை முதல் நடைபெறும் இந்தப் போட்டியின் போது கனடா வாழ் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்குபற்றினர்.

துடுப்பாட்ட வீரரும் சிறிலங்கா படையின் பீரங்கி படையைச் சேர்ந்தவருமான அஜந்த மென்டிசுக்கு எதிரான முழக்கங்களை கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற மக்கள் குறிப்பாக கனடிய தமிழ் இளைஞர்களும், யுவதிகளும், உணர்வாளர்களும் எழுப்பினர்.

வீதியால் சென்று கொண்டிருந்த கனடிய மக்களுக்கு ஆங்கில மொழியிலான துண்டுப்பிரசுரங்களையும் விநியோகம் செய்தனர்.





தமிழ் மக்களின் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு கனடிய காவல்துறையினர் தமது ஒத்தாசையை வழங்கியிருந்ததோடு முதலுதவி காப்புப் பணியினரையும் அழைத்திருந்தனர்.

காவல்துறையினருக்கு ஒத்தாசை புரியும் வகையில் நிகழ்வின் ஏற்ப்பாட்டாளர்கள் மக்களை கட்டுப்படுத்தி வீதியின் ஒருபுறமாக மக்களை வழிநடத்தி ஒழுங்கமைப்பினை செய்திருந்தனர்

தமிழர்களை சிறிலங்கா அரசு கொல்வதை நிறுத்தவேண்டும் என்ற அங்கில மொழிப்பதாதை தாங்கியவாறு வானூர்தி ஒன்று ஒன்றரை மணிநேரத்தக்கு மேலாக மைதானத்தைச் சுற்றி பறப்பில் ஈடுபட்டு துடுப்பாட்டத்தினை பார்வையிட்டுக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியது.

இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது சிங்கள இனத்தைச் சேர்ந்த இளைஞர்களும், யுவதிகளும் போராட்டத்தில் ஈடுபட்டோரை கேலி செய்ததுடன் அங்கு வந்திருந்த ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்துவதற்கு முனைந்தனர்.

இதனை அவதானித்த காவல்துறையினர் அவர்களில் இருவரை கைது செய்து கொண்டு சென்றனர்.












Saturday, October 11, 2008

லெப். மாலதியின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு

உக்கிரமான மோதல் நடைபெறும் பகுதியில் 2 ஆம் லெப். மாலதியின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு

சிறிலங்கா படையினரின் உக்கிரமான தாக்குதல்கள் நடைபெற்று வரும் பகுதியிலிருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இரணைமடுச் சந்தியில் 2 ஆம் லெப். மாலதியின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று நடைபெற்றது.

கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை 2 ஆம் லெப். மாலதியின் 21 ஆம்அண்டு நினைவு நிகழ்வு நடைபெற்றது.

பாரதிபுரம் வட்டப் பொறுப்பாளர் திருமாறன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழீழ மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.தமிழினி பேசியதாவது:

மாலதியின் திருவுருவச்சிலை 2004 ஆம் ஆண்டு இதே நாளில் மகளிர் படையணிகளின் அணிவகுப்புடன் பேரெழுச்சியான நிகழ்வுடன் திறந்து வைக்கப்பட்டது.


[படம்: புதினம்]


[படம்: புதினம்]


[படம்: புதினம்]

கிளிநொச்சி மண்ணை கைப்பற்றி விடுவோம் என்று சிங்களப் பேரினவாதிகள் கொக்கரித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்நிகழ்வை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றோம்.

தமிழீழ பெண்களுக்கு நம்பிக்கை என்ற பெரும் ஆயுதத்தை மாலதி விதைத்து விட்டுச் சென்றிருக்கிறார். இந்தியப் படைகளுடன் மோதல்கள் தொடங்கிய போது எம்மிடம் கனரக போர்க்கலங்கள் இல்லை. இருந்தவையெல்லாம் நம்பிக்கை மட்டுமே.

போராளிகளிடம் இருந்த நம்பிக்கையும், மன உறுதியும், ஓர்மமும் அர்ப்பணிப்புமே பெரும் வல்லரசை வெல்லக் கூடிய நிலையை உருவாக்கியது.

மாலதி முதல் பெண் மாவீரராக வித்தாகியுள்ளமையால் மாலதியின் வழியில் தமிழீழப் பெண்கள் அணிவகுத்துள்ளனர் என்றார் தமிழினி.


[படம்: புதினம்]


[படம்: புதினம்]


[படம்: புதினம்]

முன்னதாக பொதுச்சுடரினை கிளிநொச்சி கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கலைவாணன் ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியினை ராதா வான்காப்புப் படையணியின் அரசியல் பொறுப்பாளர் விழியன் ஏற்றினார்.

2 ஆம் லெப். மாலதியின் திருவுருவச்சிலைக்கான ஈகைச்சுடரினை புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர்களில் ஒருவரான நாவேந்தன் ஏற்றி மலர்மாலை சூட்டினார்.

புலனாய்வுத்துறை பொறுப்பாளர்களில் ஒருவரான கானகன்

கிளிநொச்சிக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கலைவாணன்

மாவீரர் பணிமனை நிர்வாகப் பொறுப்பாளர் இனியவன்

மாவீவரர்; பணிமனை மகளிர் பொறுப்பாளர் ஆவர்த்தனா

உதயநகர் வட்டப் பொறுப்பாளர் ஜூட்

தமிழீழ மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.தமிழினி ஆகியோர் மலர்மாலைகளை சூட்டினர்.

இந்நிகழ்வில் பெருமளவு மக்கள் மற்றும் போராளிகள் கலந்து கொண்டனர்.


[படம்: புதினம்]


[படம்: புதினம்]


[படம்: புதினம்]