Friday, November 30, 2007

மலேசியத் தமிழர்கள் கொதித்தெழுந்ததன் பின்னணி:


பிரித்தானியார்களால் 150 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிலிருந்து வேலைக்காக அழைத்து வரப்பட்டவர்கள் மலேசியத் தமிழர்கள்.

1957 ஆம் ஆண்டு பிரித்தானியர்கள் மலேசியாவிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக ரீட் ஆணையம் என்ற சுதந்திர மலாயாவின் புதிய அரசியல் அமைப்புக் குழுவை ஏற்படுத்தினர். அக்குழுவிடம் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க என்ன என்ன வழிமுறைகள் ஏற்படுத்த வேண்டும் என்று தமிழர்கள் சார்பாக ஆர்.என்.வீரப்பன், 1956 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரீட் ஆணையத்துக்கு மனு கொடுத்தார்.

ஆனால் மலேசியாவின் அரசமைப்புச் சட்டத்தை அந்த ஆணையம் உருவாக்கும்போது, அதில் தமிழர்களைப் பாதுகாக்க போதுமான வழிமுறைகளை உண்டாக்கத் தவறிவிட்டது.

கடந்த 50 ஆண்டுகளாக அதாவது மலேசியா விடுதலையடைந்த நாள் முதல் தமிழர்கள் ஓர் இனவாத ஆட்சிமுறையில் புறக்கணிக்கப்பட்டும், ஒதுக்கப்பட்டும் வாழ வேண்டிய சூழ்நிலை உருவாக்கப்பட்டது.

ரீட் ஆணையத்துக்கு தமிழர்கள் கொடுத்த ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டன.

இந்நிலையில் தொடர்ந்தும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.

மலேசிய அரசாங்கத்தில் தமிழர்களுக்கான வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. தமிழர்களின் கல்வி கலாசார உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஓராண்டுக்கு முன்பாக 20-க்கும் மேற்பட்ட தமிழர்களின் சமய, கலாச்சார அமைப்புக்கள் ஒன்று கூடி இந்து உரிமைச் செயற்பாட்டுப் படை (ஹிண்ட்ராப்) என்ற கூட்டமைப்பை உருவாக்கினர்.

இதில் வழக்கறிஞர்கள் வேதமூர்த்தி, உதயகுமார், மனோகரன் உள்ளிட்டோர் முக்கியமானவர்களாக செயற்பட்டு வருகின்றனர்.





வழக்கறிஞர் உதயகுமார், லண்டனுக்குச் சென்று 1956 ஆம் ஆண்டு ரீட் ஆணையத்திடம் தமிழர்கள் சார்பாக வீரப்பன் அளித்திருந்த கோரிக்கை மனுவை லண்டன் ஆவணக் காப்பகத்திலிருந்து பெற்று வந்தார்.

அதன் பின்னர் ஈப்போவைச் சேர்ந்த வேதமூர்த்தி பொன்னுசாமி என்ற வழக்கறிஞர் நட்ட ஈடாக பிரித்தானிய அரசாங்கம் ஒவ்வொரு மலேசியத் தமிழருக்கும் தலா ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ் 10 லட்சம் வழங்க வேண்டும் என்று கடந்த 30.08.2007 ஆம் நாள் லண்டனில் உள்ள றோயல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

10 லட்சம் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ் என்பது சுமார் ரிங்கிட் 70 லட்சத்திற்கு சமமாகும். இதன்வழி சுமார் 20 லட்ச மலேசிய தமிழர்களுக்காகத் தொடுக்கப்பட்டிருக்கும் மொத்த நட்ட ஈட்டின் மதிப்பு ரிங்கிட் 14 லட்சம் கோடியாகும். (ரிங்கிட் 14,000,000,000,000).

இக்கோரிக்கையை வலியுறுத்தித்தான் பிரித்தானிய தூதரகத்திடம் மனு அளிக்க மலேசியத் தமிழர்கள் தீர்மானித்திருந்தனர்.

ஆனால் தமிழர்களை பாரபட்சமாக நடத்தும் மலேசிய அரசாங்கம் மலேசிய வரலாற்றிலேயே முதல் முறையாக நீதிமன்றத்துக்குப் போய் பேரணிக்குத் தடை வாங்கியது.

ஆனாலும் மலேசியத் தமிழர்கள் மனம் தளரவில்லை. 50 ஆயிரத்துக்கும் அதிகமாக தமிழர்கள் ஒன்று திரண்டு ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

மலேசியத் தமிழர்களின் உரிமைகளை மீட்பதற்காக தாய்த் தமிழகத்தின் முதல்வர் கலைஞர், எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஜெயலலிதா, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே குரல் கொடுத்து உலகத் தமிழினத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

உலகத் தமிழினம் தமது உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய அளவில் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விரைவில் வரும் என்கிற நம்பிக்கையையைத் தருகிறது மலேசியத் தமிழர்களின் பேரெழுச்சி.

1 comment:

Unknown said...

கண்ணன், மிக அழகாக இப்போராட்டத்துக்கு பின்புலமான காரணங்களை கூறியுள்ளீர்கள்.

போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்!