Saturday, July 08, 2006


திராவிட இயக்கம் ஊட்டிய உணர்வுகள்
சுப.வீரபாண்டியன்
தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து பாராட்டுகளும், அவதூறுகளும் சேர்ந்தே வந்து கொண்டிருக்கின்றன. தி.மு.க. அணி பெற்ற வெற்றிக்குப் பாராட்டு, பதவிக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டுத் தேர்தல் அரசியலுக்குப் போய்விட்டதாக அவதூறு.தி.மு.க அணியின் வெற்றியில் என் பங்கு ஒன்றும் பெரியதில்லை என்பதையும், பல்லாயிரக்கணக்கான மக்களின் வாக்குகளை ஈர்த்துவிடக்கூடிய அளவிற்கு, எனக்குப் புகழோ, ஆற்றலோ, தனித்துவமோ இல்லை என்பதையும் நான் நன்கு அறிவேன்.ஒருமுறை கலைஞர் குறிப்பிட்டதைப் போல, "செய்ய வேண்டிய கடமையை, செய்ய வேண்டிய நேரத்தில் செய்தேன் என்னும் மனநிறைவு எனக்கு இப்போதும் இருக்கிறது.பொதுவாழ்வில் சில வேளைகளில், பொருத்த மற்ற பாராட்டுகள் வருவதைப் போல், பொருத்தமற்ற அவதூறுகளும் பரவத்தான் செய்யும். அவற்றைப் புறந்தள்ளுவதே நம் உடல் நலத்திற்கும், மனநலத்திற்கும் நல்லது. புறந்தள்ளி விட்டேன்.ஆனால் அடுத்து என்ன செய்யப் போகின்றீர்கள் என்னும் வினாவை எதிர்ப்படும் பலரும் கேட்கின்றனர். எனக்குள்ளும் அவ்வினா எழாமலில்லை.தமிழர் தேசிய இயக்கத்தை விட்டு விலகிவிட்ட நிலையில், தனியாக நிற்கின்றேன். தனிமரம் தோப்பாகாது என்பதையும் உணர்கின்றேன். எனவே ஏதாவது ஒரு கட்சி / இயக்கத்தில் இணைவது அல்லது புதிய அமைப்பை உருவாக்குவது என இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் என் முன்னே உள்ளது.என்ன செய்யலாம்?இரண்டிலுமே எனக்குத் தயக்கம் உள்ளது. அல்லது இப்போதைக்கு இரண்டுமே வேண்டாம் என்று தோன்றுகிறது.ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது, தனி ஆளாகவே நின்றுகொண்டு சில பணிகளைத் திட்டமிட்டுச் செய்யலாம் என்னும் எண்ணம் வலுப்பெறுகின்றது.அவற்றுள் முதல் பணியாக நான் கருதுவது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, என் போன்றோரிடம் திராவிட இயக்கம் ஊட்டிய உணர்வுகளை, இன்றைய இளைய தலைமுறைக்கு ஊட்ட வேண்டும் என்பதே. அந்த நோக்கத்தை நெஞ்சில் நிறுத்தி, இளைஞர்களிடம் குறிப்பாக மாணவர்களிடம் செல்லவேண்டும் என்ற முனைப்பு என்னுள் கூடிக் கொண்டே இருக்கிறது. வரும் சூன் மாதம் முதல், என் பெரும்பகுதி நேரத்தை அதற்காகவே செலவிடுவது என் திட்டம். அந்தத் திசை நோக்கிய பயணத்தில், சில அடிகளை இப்போது வைத்திருக்கிறேன்.தமிழ் உணர்வு, சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு, பெண் விடுதலை ஆகிய நான்கு இலட்சியங்களை நோக்கி இளைஞர் படை ஒன்றைக் கட்ட முடியுமானால், அது என் வாழ்க்கையைப் பொருளுடையதாக ஆக்கும்.இன்னொரு பெரும்பணியும் நமக்கு முன்னால் இருப்பதாக உணர்கிறேன்.இன்று மலர்ந்துள்ள, கலைஞர் தலைமை யிலான தி.மு.க ஆட்சி, செயல்பாடுகளில் காட்டும் விரைவு நம்மை வியப்புக்குள்ளாக்குகின்றது.மலிவு விலையில் அரிசி, எளிய உழவர்களுக்கு நிலம், ஏழைக் குழந்தைகளுக்கு ஊட்ட உணவு, உழவர்சந்தை என மக்கள் நலம் நாடும் திட்டங்கள் ஒரு புறம். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், ஆலயங்களில் எவருக்கும் இனிப் பரிவட்டம் இல்லை போன்ற பகுத்தறிவுத் திட்டங்கள் மறுபுறம். தமிழ் இனி மேல் கட்டாயப்பாடம், மீண்டும் அதே இடத்தில் கண்ணகி சிலை எனத் தமிழ் மானம் காக்கும் திட்டங்கள் இன்னொரு புறம். எல்லாம் நெஞ்சில் இனிக்கின்றன.எனினும், இந்த ஆட்சியை எப்படியும் கவிழ்த்தே தீருவது, அதற்கு முதல்படியாகச் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைப்பது, கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துவது என்று அ.தி.மு.க தன் பணிகளைத் தொடங்கியுள்ளது.பதவியை இழந்தவர்கள் பதறுவதும், அடாவடித் தனங்களின் மூலம் அதை மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என்று துடிப்பதும் உலக இயற்கைதான். ஆனாலும் இன்றைய எதிர்க்கட்சியின் பதற்றமும், துடிப்பும் அளவுக்கு மிகுதியாகவே உள்ளன. இந்தச் சூழலில், தேர்தலுக்கு வாக்குக் கேட்டதோடு நம் பணி முடிந்துவிட்டது என்று நாம் இருந்துவிட முடியாது.மக்கள் நலம் கருதும் ஆட்சியின் மாண்புகளை, மக்களிடம் சென்று எடுத்துரைக்க வேண்டிய இன்றியமையாத பணியும் இருக்கிறது நம் முன்னால்!அதையும் செய்தாக வேண்டும். அதனாலும் சில அவதூறுகள் எழும். எழட்டும்! கவனம் சிதறாமல் கடமைகள் ஆற்றுவோம். காலம் மற்றவற்றைப் பார்த்துக் கொள்ளும்.மூன்று தொலை பேசிகள்2006 மே 11 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அனைத்தும் ஏறத்தாழ வெளிவந்துவிட்ட மாலை நேரத்தில் அந்த முதல் தொலைபேசி வந்தது. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு இன்னொன்றும், இரவு 10 மணியளவில் மற்றொன்றுமாக மொத்தம் மூன்று தொலைபேசிகள் வந்தன.மூன்று தொலைபேசிக் குரல்களும் வெவ்வேறானவையாக இருந்த போதிலும், பேசப்பட்டது ஒரே செய்தி பற்றித்தான். இன்னொரு ஒற்றுமை, மூவருமே தங்கள் பெயர்களைச் சொல்லவில்லை என்பது."காட்டுமன்னார்கோயில்ல ரவிக்குமார் ஜெயிச்சுட்டாரு... தெரியுமா?'' என்ற வினாவோடு முதல் தொலைபேசி தொடங்கியது. "அப்படியா, நீங்கள் யார்?'' என்றேன். அதற்கு விடை சொல்லாமல்,'' நீங்க எல்லாம் அங்க வந்து எதிர்த்துப் பேசினதுனாலதான் அவருக்குக் கூடுதல் ஓட்டு விழுந்திருக்கு'' என்றார் அவர். அடடா, நம் பேச்சுக்கு இப்படி ஒரு பயன்பாடு உள்ளது போலிருக்கிறதே என்று நினைத்துக் கொண்ட நான், "சரி, ரொம்ப மகிழ்ச்சி, வாழ்த்துகள்'' என்று கூறினேன்.இரண்டாவது தொலைபேசியை என்னால் காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. "டேய் நாயே....'' என்று தொடங்கி, ஏராளமான கெட்ட வார்த்தைகள் இடையிடையே வந்து விழுந்த சில நல்ல சொற்கள், "ரவிக்குமார்..... காட்டு மன்னார்குடி ... வெற்றி'' போன்றவை மட்டுமே. இப்போது இணைப்பை நான் துண்டித்துவிட்டேன்.இரவு வந்த தொலைபேசி, ஒரு வினாவும் விடையுமாக முடிந்து போனது. "தேர்தல்ல எங்க ரவிக்குமார் ஜெயிச்சு, ஒன் மூஞ்சியில கரியப் பூசிட்டாரே, எப்படித் தொடைச்சுக்கப் போறே?'' இது வினா."150க்கும் மேற்பட்ட தொகுதிகள்ல ஒங்க முகத்தில் பூசப்பட்ட கரிய நீங்க எப்படித் தொடைச்சுக்குவீங்களோ, அப்படித்தான்'' இது என் விடை.ரவிக்குமார் மீது எனக்குத் தனிப்பட்ட சினம் ஏதுமில்லை. தனிப்பட்ட நட்புக்கோ, தனிப் பட்ட பகைக்கோ அரசியலில் எப்போதும் இடமில்லை.இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் உழைத்த மாமனிதர் தந்தை பெரியாரைக் கொச்சைப்படுத்தும் வகையில், ரவிக்குமார் அவதூறுகளை அள்ளிவீசி வந்ததை அனைவரும் அறிவோம். அதன் எதிர்விளைவே என் போன்றவர்களின் எதிர்ப்பு.சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிட்ட, இக்காலகட்டத்திற்குப் பிறகாவது, பெரியார் குறித்த தன் பொய்களையும், புனைந்துரைகளையும் புறந்தள்ளிவிட்டுத் தன் தொகுதி மக்களின் நலப்பணிகளில் அவர் ஈடுபடுவாரெனில், நமக்கு மகிழ்ச்சியே!சட்டமன்றத்தில், ஈழத்தமிழ் மக்கள் குறித்தும், அயோத்திதாசப் பண்டிதர், சிலப் பதிகார மாதவி ஆகியோருக்குச் சிலை வைக்க வேண்டும் என்பது குறித்தும் அவர் பேசி யுள்ளது, பாராட்டத்தக்கதாக உள்ளது. இவ்வழியில் அவர் போக்குத் தொடரு மானால், அவர் கோரிக்கைகளுக்குத் துணை நிற்க நாமும் தயங்கமாட்டோம்.மீண்டும் சொல்கிறேன் தனிப்பட்ட நட்புக்கும், தனிப்பட்ட பகைக்கும் அரசியலில் இடமில்லை.அதே வேளையில், போயஸ் தோட்டத்தை நட்பாகவும், பெரியார் தொண்டர்களைப் பகையாகவும் அவரோ, அவர் நண்பர்களோ கருதுவார்களேயானால், அந்தத் தொலைபேசி நண்பர்களைப் பொறுத்துக் கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

No comments: