Wednesday, February 01, 2012

இழந்தது தேவிகுளம், பீரிமேடு மட்டும்தானா?

நம் அரசியல் தலைவர்கள் அக்கறை காட்டாததால் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள். அந்தப் பகுதிகள் நம்மிடம் இருந்திருந்தால் இன்று நாம் சந்திக்கும் நதி நீர்ப் பிரச்சினைகள் இருந்திருக்காது

'முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளத்தவர் நடந்துகொள்ளும் முறையைப் பார்க்கும்போது கேரளாவோடு சேர்க்கப் பட்ட தமிழ் நிலப் பகுதிகளான தேவிகுளம், பீரிமேடு போன்ற பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது’ என்று இன்று அரசியல்வாதிகள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.


ஆனால், வரலாற்றை திரும்பிப் பார்த்தால் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ்நாடு இழந்த பகுதிகள் பல. அவை தமிழ்நாட்டோடு இருந்திருந்தால் இன்று நாம் சந்திக்கும் நதி நீர்ப் பிரச்சினைகள் இருந்திருக்காது. முல்லைப் பெரியாறு மட்டுமல்ல, காவிரி, பாலாறு பிரச்சினைகள்கூட. நாம் இழந்த நிலப் பகுதிகளை ஒப்பிடுகையில் தேவிகுளம், பீரிமேடு என்பது, கஜானாவையே கொள்ளை கொடுத்து விட்டு ஒற்றை மூக்குத்தியை மட்டும் திரும்பக் கேட்பது போலத்தான். ஏனென்றால், தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள்.


அப்படி பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதிகளை தமிழகம் இழக்கக் காரணம், நமது அரசியல் கட்சிகள். இந்தக் கட்சி, அந்த இயக்கம் என்ற பேதம் இல்லாமல் எல்லோருமே அந்த இழப்புக்கு துணை போன அரசியலையே செய்தார்கள் என்பது வரலாறு முன் வைக்கும் கசப்பான உண்மை.


நாடு விடுதலை பெற்றதும் மொழிவாரி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்ற குரல்கள் அடுத்தடுத்து இந்தியா முழுக்க எழுந்தன. அப்படிக் குரல் எழுப்பியவர்கள் பிரிவினைவாதிகள் அல்ல. வெள்ளையனை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றவர்கள். அதிலும் குறிப்பாக காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தவர்கள்.


முதன் முதலில் மராத்தி மொழி பேசும் மக்களுக்கு தனியாக மராட்டிய மாநிலம் அமைக்க வேண்டும் என்று ‘சம்யுக்த மகாராஷ்டிரா சமிதி’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, போராடத் துவங்கியவர் விடுதலைப் போராட்ட தியாகியான சங்கர்ராவ் தேவ். அடுத்து, குஜராத் மாநிலத்தில் ‘மகா குஜராத் ஜனதா பரிஷத்’ என்ற அமைப்பின் மூலம் போராடத் துவங்கினார் இந்துலால் யக்னிக்.


அதன் பிறகு தென்னிந்தியாவில் தனி ஆந்திர மாநிலப் போராட்டம் எல்லாவற்றையும்விட பெரிய அளவில் விஸ்வ ரூபம் எடுத்தது. அடுத்து கர்நாடகா, கேரளாவிலும் போராட்டங்கள். ஆனால், தமிழ்நாட்டில் அப்படி ஒரு போராட்டம் எழவே இல்லை. இங்கிருந்த தேசிய உணர்வு, திராவிட உணர்வு இரண்டுமே அதற்கு காரணம்.


வெள்ளையர் ஆட்சியில், சென்னை ராஜதானி என்ற பெயரில் இன்றைய நான்கு தென் மாநிலங்களும் ஒன்றாக இருந்தன. அதனால், சென்னையும் தமிழ் மண்ணும் அரசியல் சமூகரீதியாக கேரள, ஆந்திர, கன்னடர்களும் உரிமையோடு செயல்படும் நிலமாகவே இருந்தது.


மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தென் இந்தியாவில் கேரள, கன்னட, ஆந்திர மாநிலத்தவர் காலகாலமாக தமிழ் நிலப் பகுதிகளாக இருந்த பகுதிகளை தங்கள் மாநிலத்தோடு இணைக்கக் கோரி போராடினர். அதில் முதன் முதலாக வெற்றி பெற்றவர்கள் கேரள மாநிலத்தவர்தான்.


அகஸ்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கி மாவட்டத்தின் பெரும்பகுதி, வண்டிப் பெரியாறு, தேவிகுளம், பீரிமேடு, குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு பகுதிகள் போன்றவை எல்லாம் இன, மொழி, வரலாற்று, இலக்கிய ரீதியாக தொடர்புடைய தமிழகத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை.


மொழிவாரி மாநிலப் போராட்டம் பொங்கி பிரவகித்த நிலையில் 1954ம் ஆண்டு மொழிவாரி மாநிலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர, பசல் கமிஷன் என்ற ஒரு கமிஷனை மத்திய அரசு நியமித்தது. அந்த கமிஷனிடம் கேரளத்தவர்கள் மேலே குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, நீலகிரி, கூடலூர், ஊட்டி ஆகிய பகுதிகளையும் கேட்டனர்.


அன்று (இன்று போல) கேரளத்தவர்கள் அரசியலிலும் நிர்வாகத்திலும் செல்வாக்கோடு இருந்தனர். அன்று நேருவின் அமைச்சரவையிலும் வெளிநாட்டுக் கொள்கை ரீதியான பதவிகள், அயல்நாட்டு தூதரகப் பதவிகள், சர்வதேச நெருக்கடிகளுக்கு பரிகாரம் காணும் பதவிகள், மூன்று மெய்க்காப்பாளர் பதவிகள், நேருவின் அந்தரங்கச் செயலாளர் பதவி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பதவி, பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்று பல பொறுப்புக்களில் கேரளத்தவர் இருந்தனர்.


தவிர மொழிவாரி மாநிலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர அமைக்கப்பட்ட பசல் கமிஷனிலேயே கே.எம். பணிக்கர் என்ற மலையாளி பொறுப்பில் இருந்தார். தமிழகம் சார்பில் யாரும் இல்லை. அவர், ‘தனக்கு தேவிகுளம், பீரிமேடு பகுதிகளில் நிறைய தேயிலைத் தோட்டங்கள் இருப்பதால் அவற்றை தமிழ்நாட்டுக்குத் தர முடியாது’ என்று சொன்னதாகக் கூறப்படுகிறது (காண்க: பெட்டிச் செய்தி).


ஆனால், இந்த விஷயத்தில் கேரளத்தவரை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. நம் அரசியல்கட்சிகளும், தலைவர்களும் தமிழ் மண்ணைவிடக் கட்சி விசுவாசத்திற்கே முக்கியத்துவம் அளித்தனர்.


தேவிகுளம், பீரிமேடு பகுதிகளை கேரளத்தோடு இணைப்பதற்கு எதிராகப் போராடிய பி.எஸ்.மணி என்ற தலைவர் சென்னை வந்து காமராஜரை சந்தித்து, ‘தேவிகுளம், பீரிமேடு பகுதிகள் காப்பாற்றப்பட வேண்டும்’ என வேண்டினார். அப்போது காமராஜர், ‘குளமாவது மேடாவது, இந்தியாவில்தானே இருக்கிறது மணி, காங்கிரஸ் வேலையைப் போய்ப் பார்’ எனச் சொல்லி அனுப்பினார். மணி, ‘தினமணி’ ஆசிரியர் ஏ.என்.சிவராமனைச் சந்தித்து பிரச்சினையை விளக்கினார். அவர், ‘குளமாவது மேடாவது’ என்ற தலைப்பில், ‘தினமணி’யில் தலையங்கம் ஒன்று எழுதினார். சி.சுப்ரமணியம் ஒருமுறை, ‘தேவிகுளம், பீரிமேடு நமக்கு வேண்டும்’ என சட்டமன்றத்தில் வாதிட்டவர். ஆனால், மத்திய தலைமையின் கருத்து வேறாக இருக்கிறது எனத் தெரிந்தபோது, 1956 மார்ச் 28ம் தேதி பசல் கமிஷனின் அறிக்கையை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தி அதை ஏற்குமாறு வாதிட்டவரும் அவர்தான்.


தேவிகுளம், பீரிமேடு போராட்டம் பற்றி விவாதிக்க 1956ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் அண்ணா கலந்து கொள்கிறார் என்ற காரணத்தால் பெரியார் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை (காண்க: அண்ணாவின் கடிதம்). ‘மொழிவழி பிரிந்து இனவழி ஒன்றுபட்டு சோஷலிச திராவிடக் குடியரசு கூட்டாட்சி’ காணும் கனவில் இருந்த திமுக, காங்கிரசிற்கு எதிராகக் கூட்டணி காண்பதிலும் மாநில உரிமைகள் சார்ந்த வேறு பிரச்சினையிலும் காட்டிய ஆர்வத்தை இந்தப் பிரச்சினையில் காட்டவில்லை. ‘பெரியாரும் அண்ணாவும் தட்சிணப் பிரதேசத் திட்டத்தை எதிர்ப்பதிலேதான் அதிக அக்கறை காட்டினார்கள். தேவிகுளம், பீரிமேடு பிரச்சினையில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை’ என்று, ‘எனது போராட்டங்கள்’ நூலில் எழுதுகிறார் ம.பொ.சி.


பிரச்சினை வலுவாக இருந்தபோது அந்த ஆண்டு கம்யூனிஸ்டுக் கட்சியின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடக்க வேண்டி இருந்தது. ஆனால், கேரள மாநிலத்தவர் அதை தங்கள் செல்வாக்கால் கேரளாவுக்கு மாற்றினர். அங்கு திடீர் என அந்த மாநாட்டில், ‘தேவி குளம், பீரிமேடு பகுதிகள் கேரளாவுக்கே சொந்தம்’ என்று தீர்மானம் போட, தமிழக கம்யூனிஸ்ட் தலைவர்கள் அதை எதிர்க்காமல் கட்சிக் கட்டுப்பாடு என்ற பெயரில் அதை ஏற்றுக் கொண்டனர். (ஆனால், ஜீவா எல்லைகளை மீட்கத் தொடர்ந்து போராடினார்).


அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்தவர் கேரளத்தைச் சேர்ந்தவர். தேவிகுளம், பீரிமேடு பகுதிகள் யாருக்கு சொந்தம் என்பது பற்றிப் பேச, தமிழக-கேரள மாநிலத் தலைமைச் செயலாளர்களின் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளரான வர்கீஸ் அந்தப் பகுதிகளை கேரளாவுக்குத் தர சம்மதம் தெரிவித்துக் கையெழுத்திட்டார். ‘தமிழக அரசின் தலைமைச் செயலாளரான நீங்கள் இப்படி தமிழகத்துக்கு எதிராக கையெழுத்துப் போடலாமா?’ என்று ஒரு நிருபர் கேட்டபோது, ‘அந்தப் பகுதிகள் இல்லாவிட்டால் கேரளா ரொம்பக் கஷ்டப்படும்’ என்றார் வர்கீஸ்.


இவற்றிற்கு எதிராக நேசமணி, ம.பொ.சிவஞானம் போன்றோர் செய்த சில போராட்டங்களின் விளைவாக கேரளத்தவர் தங்களுக்கு கொண்டு போக நினைத்த செங்கோட்டை, அகஸ்தீஸ்வரம், தோவாளை, கன்னியாகுமரி பகுதிகள் மட்டும் மீட்கப்பட்டன. ஆனால், தமிழகத்தோடு சேர வேண்டிய சுமார் 1,500 சதுர கிலோமீட்டர் நிலப் பகுதி கேரளாவுக்கு போயிற்று. அதில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது செங்கோட்டை தாலுகாவில் இருந்த சில பகுதிகள். 1950களிலேயே ஆண்டுக்கு சுமார் எட்டு கோடி ரூபாய் வருமானம் தந்து கொண்டிருந்த வனப் பகுதியை தமிழகம் இழந்தது.


இந்த 1,400 சதுர கிலோமீட்டர் பகுதி மட்டும் நியாயமாக தமிழகத்துக்கு வந்திருந்தால்...


இன்று முல்லைப் பெரியாறு பகுதி முழுக்க நம்மிடம் இருந்திருக்கும். பிரச்சினையே கிடையாது.


பவானி நதிப் பிரச்சினை கிடையாது.


தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய வடிவமான கண்ணகிக் கோயில் நம்மை விட்டுப் போயிருக்காது. அங்கு நாம் வழிபடப் போனாலே, கேரள போலீசாரிடம் அடிபடும் நிலைமை வந்திருக்காது.


சிறுவாணி அணையின் ஒரு பகுதியை தம்மிடம் வைத்துக்கொண்டு சிறுவாணித் தண்ணீருக்கும் கடிவாளம் போட கேரளத்தவர் போடும் நினைப்புகளுக்கே வாய்ப்பிருந்திருக்காது.


எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம், தமிழகத்துடன் சேர வேண்டிய 1,400 சதுர கிலோமீட்டர் பரப்பை நாம் இழந்ததுதான்.


கேரளாவிடம் இழந்தது இப்படி என்றால், ஆந்திராவிடம் இழந்தது இன்னும் அதிகம்.


சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு ஆந்திராவின் ராயல சீமாவே தமிழர்கள் அதிகம் வாழ்ந்த பகுதிதான். திருப்பதிக் கோயில் கருவறை சுவர் கல்வெட்டுகளில்கூட தமிழ் எழுத்துகளே உள்ளன. திருப்பதியில் இருந்த தனித்தமிழ் பள்ளிகள், அங்கு தமிழ்க் கலை காலகாலமாக வளர்ந்த விதமே அழகு.


1912ம் ஆண்டு ஆந்திரப்பிரதேச காங்கிரஸ் சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரப் பகுதிகளை பிரித்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. தமிழகத்தில் திராவிடம் பேசிக் கொண்டிருந்த நீதிக் கட்சியின் ஆந்திரப்பிரதேசக் கிளையும் அதே கோரிக்கை வைத்தபோது இங்கிருந்த நீதிக்கட்சிப் புரவலர்கள் அதைக் கண்டிக்கவில்லை.


மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டிய சித்தூர் மாவட்டம், நெல்லூர் மாவட்டம், இவற்றில் தங்கிய திருப்பதி, காளகஸ்தி, புத்தூர், நகரி, ஆரணியாறு, வடபெண்ணை ஆறு, பொன்வாணி ஆறு இவற்றின் வளமான பகுதிகள், நந்தி மலை இவை எல்லாம் ஆந்திராவோடு போயின.


இதன் பின்னால் விதியின் விளையாட்டு ஒன்றுண்டு.

மொழிவாரி மாநிலப் பிரிவினைக்காக அமைக்கப்பட்ட பசல் கமிஷன் ஒரு விதியை வரையறுத்தது. அதாவது, பிரச்சினைக்குரிய பகுதிகளில் வாழும் மக்களின் மொழி என்ன என்பது முக்கியம் இல்லை. அங்கு உள்ள நிலம் யாருக்கு அதிகம் உரிமைப்பட்டதாக உள்ளது என்பதைப் பொறுத்தே சம்பந்தப்பட்ட மாநிலத்துடன் இணைக்கப்படும் என்று முடிவு எடுத்தது. அதன்படியே கேரள எல்லையை ஒட்டிய தமிழ் நிலப்பகுதிகள் கேரளாவுடன் இணைக்கப்பட்டன.


ஆனால், தமிழ்நாடு-ஆந்திரப் பிரிவினையின்போது நடந்தது என்ன தெரியுமா?


வடக்கே இருந்து பிழைப்பு தேடி வந்த தெலுங்கு பேசும் மக்கள் நெல்லூர், சித்தூர் பகுதிகளில் குறிப்பிட்ட எண்ணிகையில் இருந்தனர். ஆனால், நிலத்தின் உரிமையாளர்கள், தமிழர்களாகவே இருந்தனர். ஆனாலும் இங்கு விதியைத் தலைகீழாக மாற்றியது அப்போது மத்திய அரசு அமைத்த படாஸ்கர் கமிஷன் என்ற கமிஷன், ‘நிலம் யாருடையது என்பது முக்கியம் அல்ல. வாழும் மக்களின் மொழிதான் முக்கியக் கூறு’ என்று சொல்லி எல்லா பகுதிகளையும் ஆந்திராவுடன் இணைத்தது.


வடபகுதியில் மங்கலங்கிழார், ம.பொ.சிவஞானம் போன்றோர் மட்டுமே இதை எதிர்த்து தீவிரமாகப் போராடினர். இராஜாஜி இவர்களுக்கு ஆதரவாக இருந்தார். ஆனாலும் தமிழத்தின் தேசிய திராவிட அரசியல் நிலவரம் இந்த அநியாயங்களை தடுக்க பெருவாரியாக முன் வராததால், முறைப்படி தமிழகத்துக்கு வர வேண்டிய நிலப் பகுதியில் திருத்தணி, வள்ளி மலை, திருவாலங்காடு போன்ற பகுதிகள் மட்டுமே தமிழகத்துக்கு கிடைத்தன.


1960ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி வரையறுக்கப்பட்ட எல்லைகள்படி தமிழ்நாட்டுடன் இருந்த 32,000 சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதி ஆந்திராவுக்கு தரப்பட்டது. சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து சுமார் 525 சதுர கிலோமீட்டர் பகுதி, ஆந்திராவுக்கு அளிக்கப்பட்டது. ஆரணியாறு அணைக்கட்டு ஆந்திராவுக்குப் போனது. திருப்பதி பறிபோனது. காளஹஸ்தி போனது. நந்தி மலை போனது. நந்தி மலை நம்மோடு இருந்திருந்தால் பாலாற்றுப் பிரச்சினை எழுந்திருக்காது.


சென்னையையே ஆந்திரர்கள் தங்களுக்குக் கேட்டார்கள். பல தமிழ் நிலப் பகுதிகளை இழந்து அதைத் தக்கவைத்துக் கொண்டார்கள் நம் அரசியல்வாதிகள்.


இந்த கேரள, ஆந்திர, சென்னை விவகாரங்களிலாவது அரசியல் கட்சிகள் சில போராட்டங்களை நடத்தின. அறிக்கைகள் விட்டன. ஆனால், கர்நாடகாவிடம் நாம் இழந்தது என்பது தூக்கத்தில் திருட்டுக் கொடுத்ததற்கு சமம்.


காவிரி எங்கே உற்பத்தி ஆகிறது என்றால், குடகு மலை என்று எல்லோருக்கும் தெரியும். பழந்தமிழில் குடக்கு என்றால், மேற்கு என்று பொருள். அங்கு வாழும் மக்கள் பேசும் மொழி கூர்க் மொழி. சுமார் முக்கால் நூற்றாண்டுக்கு முன்புவரை கன்னடர்களும் கூர்க் மக்களும் அரசியல் ரீதியாக விரோதம் பாராட்டிக் கொண்டிருந்தார்கள். அதனால், மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது இந்த கூர்க் மக்கள், ‘நாங்கள் எங்கள் மொழி மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையாக இருக்கும் தமிழ்நாட்டோடு இணைந்து விடுகிறோம்’ என்று சொன்னார்கள். அதற்காக அந்த மக்கள், கன்னடர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி சிறிய அளவில் போராடியதுகூட உண்டு. நாம் சற்றே கண் காட்டி இருந்தால்கூட அவர்கள் ஓடி வந்து ஒட்டிக் கொண்டிருப்பார்கள்.


அப்படி தமிழகத்தோடு இணைந்து இருந்தால், காவிரித்தாய் ‘தமிழகத்திலேயே’ உற்பத்தியாகி, தமிழகத்திலேயே கடலில் கலந்திருப்பாள். நமக்கு காவிரிப் பிரச்சினையே வந்திருக்காது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் பதராகி இருக்காது.


கன்னடர்கள் திட்டமிட்டுப் போராடியதால் முறைப்படி தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய பெங்களூரு, மைசூரு மாவட்டத்தின் ஒரு பகுதி, கோலார் தங்கவயல் பகுதிகள் கர்நாடகாவுக்குப் போயின.


பெங்களூரைத் தங்கள் வசமாக்கிக்கொள்ள கர்நாடகத்தினர் காய் நகர்த்திய விதம், அவர்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்பதைக் காட்டுகிறது. ஒரு மாநிலத்துடன் ஒரு பகுதி இணைக்கப்பட வேண்டும் என்றால் முதலில் நிலத் தொடர்பு, அடுத்து மொழித் தொடர்பு இருக்க வேண்டும் என்பது விதி. ஓசூரில் அப்போது தெலுங்கு பேசுவோர் 39 சதவிகிதமும் அடுத்து, கன்னடம் பேசுவோர் 35 சதவிகிதமும் இருந்தனர். தெலுங்கு பேசும் மக்களே அதிகம் இருந்தாலும் ஆந்திராவோடு நிலத்தொடர்பு இல்லை என்ற காரணத்தால், அதை ஆந்திரா கைவிட்டது. அன்று அது வறண்ட பூமி என்பது வெளியே சொல்லப்படாத காரணம். ஆந்திராவோடு அது இணைக்கப்படாத பட்சத்தில் கன்னடம் பேசுவோர் அதிகம் இருந்ததால், அதை கர்நாடகாவோடுதான் இணைத்திருக்க வேண்டும். ஆனால்-


பெங்களூரு விவகாரம் வந்தபோது, கன்னட மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் ஓசூரை தமிழகத்துக்குக் தந்துவிட்டோம். அதற்குப் பதிலாக கன்னடம் பேசும் மக்களை விட தமிழ் பேசும் மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் பெங்களூரை எடுத்துக்கொள்கிறோம் என்று கோரிக்கை வைத்தது கர்நாடகா.


தமிழகம் அதற்கு உரிமையான நிலப்பகுதிகளை இழந்ததற்கு, தமிழகத்தில் அன்று நிலவிய மண் சார்ந்த உணர்வு இல்லாத- வாய்ச்சவடால் அரசியல்தான் காரணம்.


இன்றைய தமிழகத்தின் பரப்பளவு 1,30,609 சதுர கிலோமீட்டர்கள் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள். இவையும் நம்மோடு இருந்திருந்தால் தமிழகம், கர்நாடகாவைவிட இன்னும் பெரிய மாநிலமாக இருந்திருக்கும். அப்போதும் ஆந்திராவைவிட சற்று சிறிய மாநிலமாக இருந்திருக்கும் என்றாலும்கூட, தமிழகமே மற்ற தென்னிந்திய மாநிலங்களைவிட வளமான மாநிலமாக இருந்திருக்கும்.

பெட்டி செய்தி : பணிக்கரின் ஆவேசம்

மொழி வழி மாநிலம் கோரும் கிளர்ச்சிகள் இந்தியத் துணைக்கண்டம் முழுதும் கொழுந்துவிட்டு எரிந்த பொழுது, ஜஸ்டிஸ் சையத் பசல் அலி என்பவர் தலைமையில் மாநில மறுசீரமைப்புக் கமிஷனை அமைத்தார் பிரதமர் நேரு. இக் குழுவில் சர்தார் கே.எம்.பணிக்கர், பண்டிட் எச்.என்.குன்ஸ்ரு ஆகியோர் உறுப்பினர்கள்.


தம் மாநிலமான பீகார் (பீகாருக்கும் மேற்கு வங்கம், ஒரிசாவுக்குமான எல்லைகள்) தொடர்பான விவாதங்களின் போது, நடுவர் நிலையில் இருக்கும் தான் இதில் கலந்துகொள்வது தார்மீக நியாயம் இல்லை என்று நகர்ந்தார் பசல் அலி. ஆனால், தமிழக-கேரள எல்லைகள் தொடர்பான விவாதங்களில் பங்கேற்றதோடு அல்லாமல், தேவிகுளம்-பீரிமேடு வட்டங்களைக் கேரளத்துடன்தான் இணைக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார் பணிக்கர் (1955).


ம.பொ.சி. "எனது போராட்டம்" என்ற தம் நூலில் பின்வரும் நிகழ்வைக் குறிப்பிடுவார்:


"நான் பசல் அலி கமிஷனைப் பேட்டி கண்ட போது, அக்கமிஷன் அங்கத்தினரான கே.எம்.பணிக்கர் என்னிடம் சுமார் அரைமணி நேரம் உரையாடினார், இல்லை, திரு-கொச்சி ராஜ்யத்திலுள்ள தமிழ்த் தாலுக்காக்கள் பற்றி என்னுடன் வாய்ச் சண்டை நடத்தினார். தேவிகுளம், பீரிமேடு தாலுக்காக்களைத் தமிழகத்துடன் இணைக்குமாறு தமிழரசுக் கழகம் கோருவது அநியாயமென்றும், கமிஷன் அதனை ஏற்கமுடியாது என்றும் ஆவேசமாகக் கூறினார். அவரது போக்கு எனக்கு வியப்பைத் தந்தது.


அதனால், நான் "தாங்கள் மலையாளிகள் சார்பில் என்னுடன் வழக்காடுகிறீர்களா? அல்லது கமிஷன் உறுப்பினர் என்ற வகையில் என்னை விசாரணை நடத்துகிறீர்களா?" என்று கேட்டேன். இதன் பின்னர் பணிக்கரின் ஆவேசம் தணிந்தது.


தமக்கு ஏற்பட்ட ஆவேசத்திலே தம்மை மறந்தவராகி, தேவிகுளம் - பீரிமேடு பகுதியிலே தமக்குச் சொந்தமான தோட்டங்கள் இருப்பதாகவும் பணிக்கர் கூறினார். அதை நான் எப்படி தமிழ்நாட்டிடம் விட்டுவிட முடியும் என்றும் கேட்டார். அத்துடன் நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் தாலுகாவுக்காகவும் பணிக்கர் என்னுடன் வாதாடினார்"


தம்பி, தயார் தயார்!

தமிழக எல்லைப்புறத்தில் நாம் இழந்த பகுதிகளை மீட்க 1956ம் ஆண்டு அனைத்துக் கட்சிப் போராட்டம் ஒன்று நடந்தது. அதைக் குறித்து 1956ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி (கருணாநிதி குறிப்பிட்டதுபோல் ஜனவரி 14ந்தேதி அல்ல) எழுதிய கடிதத்திலிருந்து சில பகுதிகள்...


எல்லா கிளர்ச்சியும், குண்டு கிளம்பும் வரையில்தான். முழக்கமிட்டவன் ஐயோ என்று அலறிக் கீழே விழுந்து புரண்டு, பிணமாவது கண்டால், காக்கை குருவிக் கூட்டம் கல் கண்டதும் கடுகிப்போதல் போல இந்த வீராதி வீரர்கள் வீறிட்டழுதபடி ஓடோடிச் செல்வர் என்று சர்க்கார் எண்ணிற்று! துப்பாக்கி முழங்கிற்று! எழுவது பிணங்கள், நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமுற்றனர். ஆயிரக்கணக்கானவர்களுக்குத் தடியடி, ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் சிறையில், எனினும் எதிர்ப்புணர்ச்சி மடியவில்லை. எக்காளம் குறையவில்லை. எமது உரிமையையாவது தாருங்கள் அல்லது உயிரையாவது பறித்துக் கொள்ளுங்கள் என்று கூறி மார்காட்டி நின்றனர் மக்கள்.


தம்பி, இந்தத் திங்கள், உத்தரப்பிரதேசத்தில் உருவாகியுள்ள சர்வாதிகாரத்தை எதிர்த்துக் கிளம்பிய சூறாவளி, நேருவின் கண்ணையும் திறந்திருக்கும்.


மொழி வழி அரசு என்ற திட்டத்துக்காகவே, இத்துணை பயங்கர நிலை மூண்டது.


கதர் கட்டினாலே ஆபத்து என்று எண்ணிப் பீதி கொள்ளும் நிலை இன்னமும் அங்கெல்லாம் நீங்கவில்லை.


பண்டிதரின் பவனியே சிறிதளவு தடைபட்டுப் போய் நிற்கிறது.


புதிய போலீஸ் படையும், துருப்புகளும், ‘கலகம்’ நேரிட்ட நகர்களில் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.


பம்பாயில் உத்தரப்பிரதேச போலீஸ், ஒரிசாவுக்கு மத்தியப்பிரதேச போலீஸ்!


அருந்தமிழ்நாட்டில் மட்டும். தம்பி! அற்புதமான அமைதி நிலவுகிறது! யாதும் ஊரே! யாவரும் கேளிர்! அக்கிரமத்தை உணர்ந்தோர் எத்துணை பேர் என்பதையும் அறிய முடியவில்லை. மாணவர்கள் மட்டுமே இதுபோது, நாட்டு மானங்காப்போம் என்று கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பியுள்ளனர்.


இதற்கிடையில், பெரியார், இந்தப் பிரச்சினை சம்பந்தமாகத் திருச்சியில் பேசியதாகப் பத்திரிகைச் செய்தி கண்டேன்-கண்களை அகலத் திறந்து பார்த்தேன்-ஆச்சரியத்தால் மூர்ச்கையாகிவிடக் கூடிய நிலைமை - அவர் நம்மையும் அழைத்து ஒரு பொதுத்திட்டம் தீட்டப் போவதாகப் பேசினார் என்று பத்திரிகையில் இருந்தது. நாளை எதிர்பார்த்துக் கிடந்தேன்-நானாக அவரை நாடுவது என்றாலோ, ‘வழி மறித்தான்களும், இடம் அடைத்தான்’களும் புடைசூழ அல்லவா அவர் நிற்கிறார்?


இந்நிலையில், அஞ்சற்க, அனைவரும் ஒன்று கூடுவோம், என்று கூறுவதுபோல, நண்பர் ம.பொ.சி.யின் தந்தி எனக்குக் கிடைத்தது-கலந்து பேசலாம் என்பதாக.


சென்னையில் அவர் என்னிடம் சுவையான தகவல்களைக் கூறினார்-எனக்குத் தெம்பும் நம்பிக்கையும் ஏற்படும் விதமான தகவல்கள்.


‘பெரியாரும் நானும் கலந்து பேசினோம்’ என்றார் ம.பொ.சி. ‘பரவாயில்லையே, இப்போது நாம் ம.பொ.சி.யைப் பார்ப்பது, பாபமல்ல; இதற்கு எந்தப் பழியும் பிறவாதல்லவா-முதலில் பெரியாரும் ம.பொ.சி.யுமல்லவா சந்தித்தனர்-பிறகுதானே நாம், பரவாயில்லை-என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டு அந்த மகத்தான சந்திப்பின்போது பேசப்பட்டவைகள் பற்றி அவர் கூறக்கேட்டு இன்புற்றேன்.


தமிழகத்துக்கு உரிமையான பகுதிகளை மீட்பதற்கான கிளர்ச்சி அவசியம் நடத்தப்படவேண்டும் என்ற கொள்கைக்குப் பெரியார் ஒப்புதலளித்துப் பேசினார் என்று கூறினார்-களிப்புற்றேன்-அந்தக் களிப்புப் பன்மடங்கு வளரும் வகையில், இந்தச் சந்திப்புக்குப் பிறகு, பெரியார் பல இடங்களில் பேசினார்.


எனினும், 27ம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பெரியார் கலந்து கொள்ளவில்லை; காரணம், முன்னாளே காட்டினார்.

அவர் காட்டிய காரணங்களின் தன்மை பற்றியோ, உண்மை குறித்தோ ஆராய்ச்சி நடத்துவது தேவையுமல்ல, என் வழக்கமுமல்ல-ஆனால், ஒன்றுமட்டும் கூறுவேன். அவர் காட்டிய காரணங்கள் அன்றைய கூட்டத்துக்கு அவர் வராததற்குப் போதுமானவை யாகாது.


மேலெழுந்தவாரியாக நான் கேள்விப்பட்டதும், ‘தினத்தந்தி’ ஆசிரியர் ஆதித்தன் என்னிடம் நேரில் சொன்னதும் என்னைத் தூக்கி வாரிப் போட்டது - நீ வருவதால்தான் பெரியார் வரவில்லை என்றார் - தம்மிடமே சொன்னதாகச் சொன்னார் - ஆனால், சொன்னவர் தினத்தந்தி!


நான் அவரிடம் சொன்னேன். ‘நான் இங்கு வருவதுதான் பெரியார் இங்கு வராததற்குக் காரணம் என்று எப்படிக் கூறமுடியும்? நாளைக்கு 28ல் வேறோர் இடத்தில் மற்றோர் பொதுப் பிரச்சினை குறித்து நடைபெற இருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் நான் கலந்துகொள்கிறேன்-பெரியாரும் பெருந்தன்மையுடன் அங்கு வரச் சம்மதம் தந்திருக்கிறாரே, அதுமட்டும் எப்படிச் சாத்தியமாகிறது?’ என்று கேட்டேன்.


காரணம் அதுமட்டுமல்ல, தேவிகுளம், பீரிமேடு பிரச்சினை பற்றி மட்டுமே ம.பொ.சி.யின் கூட்டத்தில் கவனித்துக் கிளர்ச்சிக்கு வகை காண முன் வருகிறார்கள். பெரியாரோ, தம்முடைய ஒத்துழைப்பும் துணையும் தரப்பட வேண்டுமானால், வேறு சில பிரச்சினைகளையும் போராட்டத்துக்குக்கானதாக உடனடியாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கருதுகிறார். அதன்படி இங்கே காரியம் நடைபெறாது என்று எண்ணியே வரவில்லை என்று, என்னையும் பெரியாரையும் ஒருசேரத் தோழமை கொள்ளும் நண்பர் கூறினார்.


இதுவும் பொருத்தமாகப் படவில்லையே! நாளைய தினம் நடைபெற இருக்கும் கூட்டத்திலும், ஒரே ஒரு பிரச்சினை மட்டும்தான் கவனிக்கப்பட இருக்கிறது. அங்கு பெரியார், தம்முடைய மற்ற பிரச்சினைகளை வலியுறுத்துவதாகக் காணோமே என்றேன். எனக்கென்ன தெரியும் என்றார் நண்பர். எனக்குப் புரிந்தது-புன்னகையும் பிறந்தது.


தம்பி! 27ம் தேதி கூட்டத்தில் கலந்துகொண்ட மாபாவிகளிலே பலர், 28ம் தேதி கூட்டத்தில் கலந்துகொண்டனர். அங்கு பெரியார், தட்டாமல் தயங்காமல் வந்திருந்து தமது சீரிய யோசனையை வழங்கினார்.


பெரியார் 27ல் வரவில்லை, 28ம் தேதிய கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார். 27ம் தேதிய கூட்டம் தேவிகுளம், பீரிமேடு சம்பந்தமாக.


28ம் தேதிய கூட்டம் ஆங்கிலமே இந்திய யூனியனின் அதிகாரப்பூர்வமான மொழியாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்துவதற்காக. இந்த ஒரு பிரச்சினைக்காக ‘இதுக’ளோடு, நான் கலந்து பேசுவதா என்று கேட்ட பெரியார், மொழிப் பிரச்சினை மட்டுந்தான் என்று 28ம் தேதிய கூட்டம் நடத்தப்பட்ட போதிலும் அதிலே ‘இதுகள்’ இருந்தபோதிலும், வந்தார்!


நான் திகைத்துப் போனேன்-உன் நிலை எப்படியோ?


ஒன்று மறந்தேனே கூற... 28ம் தேதிய கூட்டத்தில் இராஜகோபால ஆச்சாரியாரும், திருப்புகழ் மணி கிருஷ்ணசாமி ஐயரும், கே.எஸ்.ராமசாமி சாஸ்திரிகளும், வெங்கட்ராம அய்யரும் வந்திருந்தனர். 27ல் இந்த ‘ஜமா’ இல்லை!


27ல் தேவிகுளம், பீரிமேடு பிரச்சினை என்ற பெயரில், தமிழரின் உரிமைப் பிரச்சினை, மொழிவழி அரசுப் பிரச்சினை, அதை வெட்டி வீழ்த்தக் கிளம்பும் தட்சிணப்பிரதேச யோசனையை வீழ்த்தும் பிரச்சினை, சென்னைக்குத் தமிழ்நாடு என்று உரிய பெயர் பெறும் பிரச்சினை இவைகளுக்கெல்லாம்.


தி.மு.க., தமிழரசுக் கழகம், கம்யூனிஸ்ட் கட்சி, சோஷியலிஸ்ட் கட்சி, திராவிட பார்லிமெண்டரி கட்சி, ஷெட்யூல் காஸ்ட் ஃபெடரேஷன், வடக்கெல்லைப் பாதுகாப்பு கமிட்டி, திருகொச்சி இணைப்பு கமிட்டி, எழுத்தாளர் சங்கம், புதுவை முன்னணி, ஜஸ்டிஸ் கட்சி ஆகிய இத்தனை அமைப்புகளின் தலைவர்கள் ஒப்பமளித்தனர்; உடனிருந்து பணியாற்ற ஒருமனப்பட்டனர். செயலாற்றக் குழு அமைக்கப்பட்டது. பி.டி.ராஜன் அவர்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; ம.பொ.சி. அமைப்புச் செயலாளராகவும், நமது என்.வி.நடராஜன், ப.ஜீவானந்தம், அந்தோணிப் பிள்ளை, சுப்ரமணியம் ஆகியோர் செயலாளர்களாகவும் உள்ளனர்.


இதுபோன்றதோர் ‘கூட்டணி’ இதற்குமுன் எப்போதும் ஏற்பட்டதில்லை. தாயக மீட்புக்கு, அவரவர் தத்தமது கடமையைச் செய்ய, காணிக்கை தர, தயாராகி விட்டனர்.


இதிலே இடம் பெற்றுள்ள எந்தக் கட்சியின் உருவமோ முறையோ, வேலைத் திட்டமோ கொள்கைகளோ, இந்தக் கூட்டினால், குலையும் நிலையில் ஏதும் இல்லை.


தேவிகுளம், பீரிமேடு என்ற குறிச் சொல்லால் இன்று உணர்த்தப்பட்டு வரும் மொழிவழி அரசுத் திட்ட வெற்றிக்கான வரையில் கூடிப் பணியாற்றுவது என்பதே நோக்கம்.


இல்லையேல் பி.டி.இராஜன் தலைவர், ம.பொ.சி.யும் ஜீவானந்தமும் செயலாளர்கள் என்று ஓர் அமைப்பு ஏற்பட்டிருக்க முடியுமா?


தம்பி! அன்று நான் அனைவரிடத்திலும் கண்ட உள்ளத் தூய்மை என்னை உவகைக் கடலில் ஆழ்த்திற்று! ஒருவரை ஒருவர் பகைத்துக் கொண்டிருந்தவர்கள் எவ்வளவோ ஏசினோம். ஏசப்பட்டிருக்கிறோம் எனினும், அன்று நாட்டுக்கு வந்துற்ற பெருங்கேட்டினை நீக்கிட நாமனைவரும், ஓர் அணியில் நின்றாக வேண்டும் என்று ஒவ்வொருவரும் பேசியது கேட்டு, உளம் பூரித்தேன்.


புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என் உள்ளத்தில் எப்போதும் இருந்து வருபவர். நீண்ட நாட்களாகக் காணாதிருந்தேன். அவருக்குக்கூட அல்லவா என்னிடம் கோபம், கசப்பு- அவர் அன்று அங்கு அமர்ந்து, அரசோச்சும் மன்னருக்குப் பழந்தமிழ்ப் புலவர்கள் பேராண்மையுடன் அறிவுறுத்திய பான்மை போல், அவையினருக்கு, ‘செயல்! செயல்! உடனடியாகச் செயல்! உரிமை காத்திடும் செயல்’ என்று பேசினதை நான் என்றும் மறந்திட முடியாது!


இந்தக் கூட்டு முயற்சியைக் குறைகூறிப் பேசுவோரும் எழக்கூடும் நாட்டிலே எதற்குத்தான் வாய்ப்பு ஏற்படவில்லை?


இந்தக் கூட்டணி அமைந்ததால் தத்தமது கட்சி கலைக்கப்பட்டு, கொடி அகற்றப்பட்டுக் கொள்கை தகர்க்கப்பட்டுப் போகும் என்பதல்ல. ஏமாளியும் அங்ஙனம் எண்ணத் துணியமாட்டான், ஒவ்வோர் கட்சியும் இந்தப் பொதுப் பிரச்சினையைப் பொறுத்தமட்டில் தத்தமது சக்திக்கேற்ற வகையிலும் அளவிலும் பணியாற்றி, அந்தக் கூட்டுச் சக்தியின் பலனாக, நாட்டுக்கு வந்துற்ற கேட்டினை நீக்குவர் என்பதுதான் பொருள்.


தம்பி, ஏற்பட்டுள்ள உறவு, முன்னாளில் இருந்து வந்த கசப்புகளையும் மறந்திடச் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது.


அப்படிச் செய்தவர்! இப்படிப் பேசியவர்! என்று இரு தரப்பிலும் பேசிடுவது. அவரவர்க்கு தத்தமது அமைப்பினிடம் உள்ள பாசத்தை முன்னிட்டுத்தானே! இனிக் கூட்டுமுயற்சி மூலம், பல்வேறு அமைப்புகளும், பகையின்றிப் பூசலற்று, ஏசலை விடுத்துக் கூடுமானபோதெல்லாம் ஒன்றுபட்டுச் செயலாற்றவும், கருத்து வேறுபாடு எழும் பிரச்சினைகளில் தனித்து நின்று, ஆனால் ஓர் அமைப்பை மற்றோர் அமைப்புத் தாழ்த்திக் கொள்ளாமலும், அவரவர் துறை நின்று பணியாற்றுதலே பண்புடைமை, அறிவுடைமை என்பது பற்றி, நானும் நண்பர் ம.பொ.சி.யும் பேசியபோது, ஏன் அத்தகைய அன்புச் சூழ்நிலையை அமைத்தல் கூடாது? நீண்டகாலப் பகையும் ஒன்றை ஒன்று அழித்திடத்தக்க முறையும் கொண்ட திராவிடர் கழகமும் கம்யூனிஸ்ட்டும், கடந்த பொதுத் தேர்தலிலே, காங்கிரசை முறியடிக்க ஒன்றுபட்டுப் பாடுபடவில்லையா? இன்று காமராஜர் நமது இனப் பாதுகாவலர் என்று காரணம் காட்டிப் பெரியார் அவருக்குப் பெருந்துணைவராக இல்லையா? அதேபோல, மற்றவர்கள் பண்பறிந்து நடந்துகொள்ளவா முடியாது - நிச்சயம் முடியும் என்றே எனக்கும் தோன்றிற்று. 27ம் தேதி ஆச்சாரியாரும் பெரியாரும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்ட ‘அன்பினைப்’ பார்த்தபோது இஃதன்றோ, தமிழம் காண வேண்டிய காட்சி என்று தோன்றிற்று.


‘உலகத்திலே உள்ள அவ்வளவு பேதங்களும் எங்கள் இருவருக்கிடையில் உண்டு; மறைத்துப் பயனில்லை; என்றாலும் இந்த ஒரு விஷயத்தில் நானும் அவரும் ஒத்துப் போகிறோம்; ஒரே அபிப்பிராயம்தான்’ என்று பேசினார்.


பார்ப்பனச் சூழ்ச்சி என்று கூறிவிடலாம், அவர் மட்டுமே இப்படிப் பேசி இருந்தால், பெரியார் பேசியது என்ன தெரியுமா, தம்பி!


‘என் அன்புக்குரிய ஆச்சாரியார்.


நண்பர்;


தலைவரென்றே சொல்லலாம்.’


‘இந்த ஒரு விஷயத்தில் நானும் அவர் கருத்தைப் பூரணமாக ஆதரிக்கிறேன்’ என்றார்.


28ல் ஏற்பட்ட கூட்டு, ஆங்கிலமே பொதுமொழியாக இருத்தல் வேண்டும் என்று மத்திய சர்க்காருக்குப் பல கட்சியினர் கூறிக் கூறி, அதைப் பெறுவதற்கு வழி காண ஏற்பட்டது.


27ல் ஏற்பட்ட கூட்டு, நாம் பெற வேண்டிய எல்லைகளைப் பெறவும். சென்னைக்கு உரிய தமிழ்நாடு என்ற பெயர் கிடைக்கவும், தட்சிணப்பிரதேசம் என்ற பேய்த் திட்டத்தை ஒழித்துக் கட்டவும் ஏற்பட்டது.


28ன் உடனடி விளைவு, ஆங்கிலமே பொதுமொழியாதல் வேண்டும் என்று மத்திய சர்க்காருக்குத் தெரிவிப்பது.


அதில் நாங்கள் அனைவரும் இசைவு தந்திருக்கிறோம்.


27ம் தேதி செய்த முடிவு, தேவிகுளம், பீரிமேடு பிரச்சினை சம்பந்தமாக மத்திய சர்க்கார் மேற்கொண்ட போக்கினைக் கண்டிக்கும் வகையில் பிப்ரவரி 20ல் நாடெங்கும் பொது வேலைநிறுத்தம் செய்வது என்பதாகும்.


தம்பி! சர்க்கார் எத்தகைய கடுமையான முறைகொண்டும் நம்மை ஒடுக்கத் தயாராக இருக்கிறது. இப்போதே அறிவகத்தைச் சுற்றி போலீஸ் வட்டமிட்ட வண்ணம் இருக்கிறது.


அந்தத் ‘தட்டும் குவளையும்’ துடியாய்த் துடிக்கின்றனவோ என்னவோ யார் கண்டார்கள் - சிறையில்! எது எப்படி நேரிடினும் பிப்ரவரி 20, வெற்றிகரமாக, அமைதியாக, பலாத்காரமற்ற வகையில் நடைபெற்றாக வேண்டும்.


தம்பி, தயார்! தயார்!


அண்ணன்
அண்ணாதுரை

நள்ளிரவில்... நடுரோட்டில்... பசியோடு...

தமிழக - கேரள எல்லை குறித்த போராட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒருவர் நாடக, சினிமா கலைஞரும், எழுத்தாளருமான ‘பாரதி’ மணி. அவர் அந்த சம்பவத்தை இங்கு நினைவு கூர்கிறார்:

"1954ல் நான் நாகர்கோயில் சேது லஷ்மிபா உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்துக் கொண்டிருந்தேன். எங்க ஊருக்கு மாசத்துகொருமுறை ம.பொ.சி., சின்ன அண்ணாமலை, ந.சஞ்சீவி, கே.விநாயகம் தமிழரசு கழகம் சார்பா பொதுக்கூட்டம் பேச வருவாங்க. நான் ரொம்ப ஆர்வமா அவர்கள் பேச்சையெல்லாம் போய்க் கேட்பேன். பள்ளித்தோழன் தாணுப்பிள்ளை என்பவன், ஸ்டூடண்ட் லீடர். போராட்டம், மறியல் எல்லாத்துக்கும் சட்டாம்பிள்ளை மாதிரி முன்னாடி நிப்பான். ஒரு ஞாயிற்றுக்கிழமை அவனைப் பாக்கப் போயிருந்தப்ப, ‘டேய்! இன்னிக்கு ஒரு மறியல் இருக்குடா, நீயும் வா’ன்னு என்னையும் கூட்டிட்டுப் போயிட்டான். முனிசிபல் கோர்ட் வாசல்ல நிறையப்பேர் நின்னுக்கிட்டு, ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்றும் ‘பட்டம் தாணுப்பிள்ளை ஒழிக’ என்றும் கோஷம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்தான் அப்போது ஆளுங்கட்சியான பி.எஸ்.பி. பார்ட்டி சார்பில் திருவிதாங்கூர், கொச்சிக்கு முதல்வர். தமிழர்கள் மீது மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்தவர். ‘கண்டால் அறியுன் நபர்’ அப்படிங்கிற எழுதப்படாத சட்டம் மூலம் தமிழர்களின்மீது போலீஸைக் கொண்டு அராஜகம் செய்து வந்தவர். எஃப்.ஐ.ஆர். இல்லாமலே யாரை வேண்டுமானாலும் ஒரு மாதம் உள்ளே வைக்கலாம் என்பது அப்போது வழக்கில் இருந்தது.


மொத்தம் அறுபது பேரோடு நானும் கலந்துகொண்டு கோஷம் போட ஆரம்பித்தேன். கொஞ்ச நேரத்தில் ஒரு வேனில் வந்த போலீஸ், எங்களையெல்லாம் அதில் அள்ளிப் போட்டுக்கொண்டு கோட்டாறு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டுபோய், ஒரு சிறிய அறையில் மொத்தமாக அடைத்துப் போட்டார்கள். மதியம் மூணு மணியிலேர்ந்து ராத்திரி மூணு மணி வரைக்கும் அந்த ரூமுக்குள்ளேயே தண்ணீர்கூட கொடுக்க மறுத்து, எங்களை அடைத்து வைத்திருந்தார்கள். ஏற்கெனவே அழுக்கடைந்திருந்த அந்த அறையில், மற்றவர்களின் வியர்வை நாற்றமும் சேர்ந்து கொள்ள, சுவாசிப்பதே மிக சிரமமாக இருந்தது. ஒருவழியாக இரவு மூன்று மணிக்குமேல் எங்களையெல்லாம் திறந்துவிட்டு, அதே வேனில் ஏற்றினார்கள். அந்த வேன் எங்கே போகிறது என்றே தெரியவில்லை. கடைசியில், நாகர்கோயிலிலிருந்து பதினான்கு கிலோமீட்டர் தொலைவில் நடுரோட்டில் எங்களை இறக்கிவிட்டு, அந்த வேன் போய்விட்டது. கும்மிருட்டில் மரத்தடியில் பசியோடு படுத்திருந்தோம். விடிந்ததும் தான் நாங்கள் அழகிய பாண்டியபுரத்தின் அருகில் இருக்கிறோம் என்றே தெரிந்தது. அங்கிருந்து டவுன் பஸ் பிடித்து, ஊர் வந்து சேர்ந்தோம்.


அப்படி அந்தச் சம்பவத்தில் கைதானவர்களில், நான் ஒருவன்தான் அக்ரஹாரத்தைச் சேர்ந்தவன். தெருவுக்குள் நுழைந்ததுமே ஒருவர் மாலையோடு ஓடி வந்தார். இன்னும் நான்கு பேர், என்னை தங்கள் தோளில் தூக்கிவைத்துக் கொண்டு வீடுவரைக்கும் கொண்டு போனார்கள்.’ ‘நேற்று வகுப்புத் தோழனைப் பார்க்கப்போன உன் மகன் இன்றைக்கு போராட்டத் தியாகியாக வீடு திரும்பி இருக்கிறான், வந்து பார்’ என்று என் அப்பா, அம்மாவிடம் பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தார்."