ஈழப் பிரச்னையில் தமிழக கட்சிகளிடையே ஒருமித்த கருத்து உருவாக வேண்டும்
ஈழத் தமிழர் பிரச்னையில் தீர்வு ஏற்பட தமிழக கட்சிகளிடையே ஒருமித்த கருத்து உருவாக வேண்டும் என்றார் அருள்தந்தை ஜெகத் கஸ்பர்.
திருவாரூல் சனிக்கிழமை நடைபெற்ற திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் மாநில மாநாடு- கருத்தரங்கில் அவர் பேசியது:
"ஈழத் தமிழர்களின் போராட்டம் இன்று நிர்மூலமாகியுள்ளதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
ஈழத்தில் இன அழித்தொழிப்பு கொடுமையை நிறுத்த வேண்டும் என்று தமிழகத்தில் 98 சத மக்களும், தனி ஈழம், தன்னாட்சி கொண்ட ஏற்பாடு ஆகியவற்றுக்கு 65-75 சதம் வரையிலான அரசியல் ஆதரவு இருந்தும், இந்திய அரசிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதது, நமது வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் வேண்டும் என்பதை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது.
ஈழத்தில் தமிழ் மக்களை அவரவர் வாழ்விடங்களுக்கு அனுப்ப வேண்டும்.
ஈழப் பிரச்னையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் இடையேயும் ஒருமித்த கருத்து உருவானால்தான், ஈழத் தமிழர்களுக்கு நன்மை பயக்கும். இல்லையெனில், எவ்வித நன்மையும் ஏற்படாது.
மாநில மக்களின் கருத்துகள் பின்னுக்குத் தள்ளப்படுவதைப் பார்க்கும் போது, பிராந்திய அரசியல் பின்னுக்குத் தள்ளப்பட்டு, மீண்டும் தேசிய அரசியல் முன்னெடுத்து வருவதையே தற்போதைய சம்பவங்கள் காட்டுகின்றன.
இதற்கு ஆங்கில ஊடகங்கள் சிலவும் உதவுகின்றன.
இந்தியாவில் பெரியார் உள்ளிட்டோர் வலியுறுத்திய சமூக நீதி அரசியல், இன்று பலவீனப்பட்டு நிற்கிறது. தங்கள் பணத்தைப் பாதுகாக்க அரசியலைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலை மாற வேண்டும்.
நமது அரசியல் தரத்தை உயர்த்தவில்லையெனில், இன்னும் 20 ஆண்டுகளில் சமூக நீதி அரசியல் முற்றாக அழிந்து விடும்.
ஈழப் பிரச்னையைத் தீர்க்க இனி ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும். பேரணி, ஆர்ப்பாட்டம் தேவையில்லை.
ஈழப் பிரச்னையில் யார் எதிராக இருந்தார்களோ அவர்களை நாம் தோலுரித்துக் காட்டுவோம். இனப் படுகொலையை உலக நாடுகளிடம் பதிவு செய்வோம். இதை கையெழுத்து இயக்கமாக மாற்றி உலக நாடுகளுக்கு அனுப்பிவைப்போம்.
நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் உரிய மாற்றம் வர வேண்டும் என்பதை வலியுறுத்துவோம். இலங்கையுடனான பேச்சுவார்த்தை உள்ளிட்டவைகளில் தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படும் வகையில் அதிகாரிகளை நியமித்து, அவர்களை அனுப்பிவைக்க வேண்டுமெனக் கோருவோம். இதுதான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக அமையும்' என்றார் ஜெகத் கஸ்பர்.
கருத்தரங்குக்கு மாநிலத் திட்டக் குழு துணைத் தலைவர் மு. நாகநாதன் தலைமை வகித்தார். நன்றி - Dinamani